privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஒரு வரிச் செய்திகள் - 17/04/2013

ஒரு வரிச் செய்திகள் – 17/04/2013

-

செய்தி: ஈரான் – பாகிஸ்தான் எல்லையில் நடந்த நிலநடுக்கம் காரணமாக பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாநிலத்தில் இருபதுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

நீதி: எப்போதாவது வரும் நிலநடுக்கத்தை விட வகாபியிச தீவிரவாதிகளால் அன்றாடம் கொல்லப்படும் ஷியா பிரிவு மக்களைக் காப்பாற்ற, சாந்தியும் சமாதானமும் நிலவ அல்லா ஏதும் வழி சொல்வாரா?

______

செய்தி: பாகிஸ்தான் – ஈரான் எல்லை நிலநடுக்கத்தின் அதிர்வுகள் ராஜஸ்தான், சண்டிகர், பஞ்சாப், ஹரியானா, குஜராத், டெல்லியிலும் உணரப்பட்டன.

நீதி: ஒருவேளை இந்தியா-பாக் போர் ஏற்பட்டு அது அணு ஆயுதப் போராக மாறும் போதும் இந்தப் பகுதிகள்தான் பாதிக்கப்படும் என்பதால் இதை அழிவைச் சந்திக்கும் ஒரு ஒத்திகையாக எடுத்துக் கொள்ளுமாறு தேசபக்தியை ஹோல்சேல் எடுத்திருக்கும் ஆர்.எஸ்.எஸ் அம்பிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

______

செய்தி: ஐபிஎல் போட்டிகளுக்கு இடையூறு ஏற்படாமல் இருப்பதற்கு ஈழ ஆதரவு இயக்கங்கள், தலைவர்களது தொலைபேசியை சில தனியார் துப்பறியும் நபர்கள் ஒட்டுக் கேட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை தமிழக போலிசார் விசாரிக்கின்றனர்.

நீதி: இதற்கு ஏன் தனியார் துப்பறிவாளர்கள்? ஏர்செல், ரிலையன்ஸ், ஏர்டெல், வோடோஃபோன் இன்ன பிற செல்பேசி முதலாளிகள் போட்டியை நடத்துபவர்களாகவோ, புரவலர்களாகவோ இருக்கும் போது ஒட்டுக் கேட்பதும், காட்டிக் கொடுப்பதும் சுலபமில்லையா?

_______

செய்தி: சட்டீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் போலீசுக்கும் நக்சல்களுக்கும் இடையே கடந்த செவ்வாயன்று நடந்த மோதலில் பத்து நக்சலைட்டுகள் கொல்லப்பட்டும் பலர் காயமடைந்தும் இருக்கின்றனர்.

நீதி: கொல்லப்பட்ட 10 நக்சலைட்டுகளும் 10 அப்பாவி பழங்குடி மக்கள் என்பது 10 நாட்களில் தெரியவரும்.

______

செய்தி: இரு இளைஞர்கள் தன்னை பாலியல் வன்முறை செய்ததை தண்டிக்க நினைத்த 16 வயதுப் பெண், பெற்றோருடன் உ.பி மாநில அப்சல்கார் போலிஸ் நிலையத்தில் புகார் கொடுக்கும் போது போலீசாரால் தாக்கப்பட்டதாக தெரிவித்தார்.

நீதி: அதானே, ‘ரேப்’பை கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் செய்து வரும் அக்கியூஸ்ட்டுகளிடமே புகார் செய்தால் அவர்களுக்கு கோபம் வருமா, வராதா?

_______

செய்தி: வெளிச்சந்தையில் அரிசியின் விலையைக் கட்டுப்படுத்தும் விதமாக அமுதம், கூட்டுறவு மற்றும் சிறப்பு அங்காடிகளில் 20 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஜெயலலிதா துவக்கி வைக்கிறார்.

நீதி: வெளிச்சந்தையை கட்டுப்படுத்தும் விதமாக டாஸ்மாக், அம்மா உணவகம், இப்போது அரிசி எல்லாம் செய்த தங்கத் தாரகை விரைவிலேயே தற்கொலை செய்வதற்கு உதவும் முகமாக பாலிடாலை மலிவு விலைக்கு கிடைக்கச் செய்வார்.

_______

செய்தி: கோதாவரி பேசினில் உற்பத்தி இழப்பிருந்தாலும் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ் லிமிடெட் மார்ச் 31ல் முடிந்த நிதியாண்டில் 20,040 கோடி ரூபாயை நிகர இலாபமாக ஈட்டியிருக்கிறது. இது சென்ற ஆண்டை விட9.2% அதிகமாகும்.

நீதி: மின்வெட்டு, மூலப்பொருள் விலையேற்றம், விலைவாசி உயர்வு, சூதாட்டச் சந்தை முதலியவற்றால் சிறு தொழில் முனைவோரெல்லாம் சிங்கி அடிக்கையில் அம்பானி மட்டும் அள்ளுவதன் மர்மம் என்ன?

______

செய்தி: அமெரிக்காவில் வசிக்கும் என்ஆர்ஐ முதலாளியான ராமலிங்க ராஜூ, திருப்பதி வெங்டாசலபதி கோவிலுக்கு 16 கோடி ரூபாயை காணிக்கையாக செலுத்தினார்.

நீதி: கடனை அடைக்க முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்யும் நாட்டில் கடவுளுக்கு கோடிகளில் காணிக்கை! மத்திய அரசே திருப்பதி வெங்கட்டுக்கும், வெங்கியிடம் பக்தியால் பொங்கி வழியும் முதலாளி பக்தர்களுக்கும் இனி பக்தி ஸ்பெஷல் வருமான வரியைக் கட்டச் சொல்!

______

செய்தி: 1993ஆம் ஆண்டு குண்டு வெடிப்பு வழக்கில், சட்டத்துக்கு விரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்த குற்றத்துக்காக சிறைத் தண்டனை பெற்றுள்ள ஹிந்தி நடிகர் சஞ்சய் தத், சரணடைய 6 வார கால அவகாசம் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், சஞ்சய் தத்துக்கு மேலும் 4 வார கால அவகாசம் அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

நீதி: இதே வழக்கில் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்ட 70, 80 வயது முதியவர்கள் இதே போன்று கால அவகாசம் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. நியாயத் தராசா, திருட்டு தராசா?

_______

செய்தி:  கர்நாடக மாநிலம் பெங்களூர் பா.ஜ.க அலுவலகம் அருகே குண்டு வெடித்ததில் 8 பேர் காயம் அடைந்தனர்.

நீதி: எத்தனை அப்பாவி முசுலீம் இளைஞர்கள் இதனால் கைது செய்யப்படப் போகிறார்களோ!

_______

செய்தி: இந்தியா வரும் 2017ஆம் ஆண்டுக்குள் இரட்டை முறைகளில் எரிசக்தியை உற்பத்தி செய்து தன்னிறைவை அடைந்துவிடும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

நீதி: அந்த இரட்டை முறை தன்னிறைவு யாதெனில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு 100 சதவீத மின்சாரம், மக்களுக்கும், சிறு-நடுத்தர-உள்நாட்டு தொழில்களுக்கும் 100 சதவீத மின்வெட்டு!

_______

செய்தி: தமிழக முதல்வர் ஜெயலலிதா பற்றி அவதூறாகப் பேசிய வழக்கில் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு நெல்லை நீதிமன்றம் கைது உத்தரவு பிறப்பித்துள்ளது.

நீதி: ஏதோ கேப்டன் என்று சினிமாத்தனமாக பட்டப்பெயர் சூட்டிய புரட்சிக் கலைஞரை, புரட்சித்தலைவி இந்த அளவுக்கு பந்தாடக்கூடாது. பிறகு பந்து அழுது கிழிந்து விடும், பாவம்!

_______

செய்தி: கொல்கத்தாவில், மார்க்சிஸ்ட் கட்சி மாணவர் அணியின் உள்ளூர் தலைவர், மருத்துவமனயில் கால் விலங்குடன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நீதி: இதுதான் முப்பது ஆண்டுகளாக மேற்கு வங்கத்தில் ஆட்சி செய்த சிபிஎம் கட்சி போலிசாரை பயிற்றுவித்த மனித உரிமை அழகு!

_______

செய்தி:  அண்மையில் மதுரையில் சுற்றுப் பயணம் செய்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், திமுகவின் தென்மாவட்ட அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரியை சந்திக்காமலேயே புறக்கணித்துச் சென்ற விவகாரம் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் நிலையில், இன்று அதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அதுபற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை என்று முணுமுணுத்தபடியே செய்தியாளர்களைத் தவிர்த்துச் சென்றார்.

நீதி: ஆமா, நீங்க சொல்லவில்லை என்றாலும் பத்திரிகைகளே ஒன்று விடாமல் அனைத்தையும் எழுதும் போது நீங்கள் சொல்வதற்கு தேவையில்லையே!

_______

செய்தி: “பார்லிமென்ட் கூட்டத் தொடரில், காமன்வெல்த் மாநாடு, கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக, கவன ஈர்ப்பு தீர்மானமாக, தி.மு.க., கொண்டு வருவது குறித்து, டெசோ கலந்துரையாடல் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது’ என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நீதி: கடுதாசி, இல்லையென்றால் காலணா பெறாத தீர்மானம், இதை விட்டால் திமுகவிற்கு நாதி ஏது?

_______

செய்தி: “லோக்சபா எம்.பி., யும், பாலிவுட், “மாஜி’ நடிகையுமான, ஜெயப்பிரதாவுக்கு, போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்’ என, சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் பொதுச் செயலர், அமர்சிங், மத்திய உள்துறை அமைச்சர், சுஷில் குமார் ஷிண்டேயை சந்தித்து, வலியுறுத்தினார்.

நீதி: விட்டால் சிஐஏ, இன்டர் போல், ஒபாமா வரை வலியுறுத்துவார்.

________

செய்தி: குஜராத் கலவரங்களுக்கு மோடி பொறுப்பல்ல என்று சிவசேனா தெரிவித்துள்ளது.

நீதி: ஒரு கொலைகாரனுக்கு இன்னொரு கொலைகாரன் நன்னடத்தை சர்ட்டிபிகெட் அளிக்கிறான்.

_______

செய்தி:  “பிரதான எதிர்க் கட்சியான தே.மு.தி.க.,வை, பொது விவாதங்களில், முதலில் பேச அனுமதிக்கும் வரை, சட்டசபை நிகழ்ச்சிகளை புறக்கணிப்போம்,” என, எதிர்க்கட்சி துணைத் தலைவர், பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்.

நீதி: செத்த பாம்பு சண்டை போடுமென பண்ருட்டி பீலா விடுகிறார்.

_______

செய்தி: சமூக இணைய தளமான, “பேஸ்புக்’கில், தமிழக காங்கிரஸ் கட்சி இணைந்த ஒரே நாளில், ஆயிரம் பேர், “கமென்ட்’ எழுதியுள்ளனர்.

நீதி: ஆயிரம் பேரில் தொள்ளாயிரம் பேர் காங்கிரசுக் கட்சியை தொங்க விட்டு உரித்திருப்பதை சாதனை என்கிறது தினமலர்! எவ்வளவு அடிச்சாலும் தாங்கறாங்களே, ரொம்ப நல்லவங்களோ!

_______

செய்தி: திருவள்ளூர், மணவாள நகரில், சாலையை ஆக்கிரமித்தது தொடர்பாக கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, தே.மு.தி.க., – எம்.எல்.ஏ., அருண் சுப்பிரமணியனை, இன்று நேரில் சந்திக்க, கட்சி தலைவர் விஜயகாந்த் திட்டமிட்டுள்ளார்.

நீதி: நாளையே புரட்சித் தலைவி கைது செய்து சிறைக்கு அனுப்பினால், புழலில் வசதிகள் எப்படி என்று இப்போதே பார்த்து வைத்துக் கொள்வது சாலச்சிறந்ததல்லவா?

_______

செய்தி: “தமிழகத்தில், மனிதநேயம் பட்டுப்போகாமல் பாதுகாக்க, மதுக்கடைகளை மூடவேண்டும்,” என, ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ பேசினார்.

நீதி: அப்போது கூட இந்தக் கோரிக்கையை அவர் ஜெயலலிதாவிடம் வைக்கவில்லை, டாஸ்மாக் கதவிடம்தான் வைக்கிறார், அவ்வ்வளவு அப்பாவி!