privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஒரு வரிச் செய்திகள் - 19/04/2013

ஒரு வரிச் செய்திகள் – 19/04/2013

-

செய்தி: தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்துவது குறித்து, டில்லியில், காங்., துணைத் தலைவர் ராகுல், முக்கிய ஆலோசனை நடத்தினார். தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் மற்றும் சட்டசபை காங். தலைவர் கோபிநாத், காங். மேலிடத் தலைவர்கள் அகமது படேல், குலாம்நபி ஆசாத், ஜனார்த்தன் திவேதி ஆகியோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.

நீதி: தமிழகத்தில் காங்கிரசுக் கட்சியின் கருமாதி நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டமெல்லாம் ஒரு செய்தி!
_____

செய்தி: கர்நாடகா சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, 29 வயது, திருமணமாகாத பிரியகிருஷ்ணனுக்கு, ரூ 910 கோடி சொத்து இருப்பதாக, வேட்பு மனுத் தாக்கலின் போது தெரிவித்துள்ளார்.

நீதி: லோக்கலில் ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் ஒரு எம்.எல்.ஏ கொசுவிடமே இத்தனை கோடி என்றால் நாட்டையே பிரித்து மேயும் காங்கிரசின் தேசிய பெருச்சாளிகளிடம் எவ்வளவு இருக்கும்?
_____

செய்தி: நிலம் கையகப்படுத்துதல் மசோதாவுக்கு, எதிர்க்கட்சியான, பா.ஜ., சம்மதம்தெரிவித்து விட்டதால், பார்லிமென்டின் இரண்டாம் கட்ட பட்ஜெட் கூட்டத்தொடரில், மசோதாவை நிறைவேற்ற, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

நீதி: பன்னாட்டு நிறுவனங்களுக்காக விவசாயிகள் நிலத்தை கைப்பற்றுவதற்கு பங்காளி பாஜகவே தோள் கொடுக்கும் போது பெருச்சாளி காங்கிரசுக்கு என்ன கவலை?

_____

செய்தி: மாயாவதி, லோக்சபா தேர்தலில், தன் கட்சி சார்பில் போட்டியிடும், 36 வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்தார். இதில், பிராமண வகுப்பைச் சேர்ந்த, 18 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

நீதி: பலிப்பது வரை பார்ப்பனியம். பிழைப்பது வரை தலித்தியம்.

_____

செய்தி: எதிர்க்கட்சி துணைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன்: “சட்டசபை பொது விவாதங்களில், தே.மு.தி.க.வுக்கு மீண்டும் வாய்ப்பு அளித்ததற்காக, சபாநாயகருக்கு நன்றி. தே.மு.தி.க.,வுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கத் தூண்டுதலாக இருந்த முதல்வரின் பெருந்தன்மையை பாராட்டுகிறேன்.”

நீதி: பண்ருட்டியின் சரண்டரை ஒப்பிடும் போது வேனில் தொங்கிய எஸ்.டி.எஸ்ஸும், காலில் விழும் ஓ.பியும் எவ்வளவோ மேல்!

_____

செய்தி: பொதுப் பணித் துறை அமைச்சர் ராமலிங்கம்: காவிரி நீர் பங்கீடு தொடர்பான வழக்கு, விசாரணையில் இருந்ததால், பாசன மேம்பாட்டு பணிகளைச் செய்யமுடியவில்லை. இப்போது, வழக்குகள் முடிந்து விட்டதால், புதிய அணைகள் கட்டுதல், ஏரிகளை தூர் வாருதல் ஆகிய பணிகளுக்கு, ரூ 11 ஆயிரம் கோடியில், திட்டம் தயார் செய்யப்பட்டு, மத்திய அரசின் அனுமதிக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

நீதி: தண்ணி வரவில்லையென்றால் வழக்கு மேல் வழக்கு போட்டு வக்கீலுக்கு காசு! நிலம் காய்ந்து போனால் காண்ட்ராக்ட் மேல் காண்ட்ராக்ட் போட்டு கட்சிக்காரனுக்கு காசு!

_____

செய்தி: “எலிகளை ஒழிக்கும் பயிற்சி, மூன்று மண்டலங்களில், 30 ஹெக்டேர் பரப்பில் செயல்படுத்த, அரசு திட்டமிட்டுள்ளது,” என, அமைச்சர், தாமோதரன்தெரிவித்தார்.

நீதி: ஓட்டுக்கட்சி பெருச்சாளிகளை நாடு முழுவதும் ஒழிக்க அரசு திட்டமிடாது. மக்கள்தான் முடிக்க வேண்டும்.

_____

செய்தி: தில்லி சுற்றுலாவை பிரபலப்படுத்தும் வகையில் “தில்தார் தில்லி’ என்ற புதிய வாசகம் பயன்படுத்தப்படும் என்று முதல்வர் ஷீலா தீட்சித் கூறினார்.

நீதி: முதலில் “ரேப் தில்லி” பெயருக்கு விடை கொடுக்க முடியுமா, முதல்வர் அவர்களே?

_____

செய்தி: புனே நகரில் உள்ள ஜெர்மன் பேக்கரி குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய குற்றவாளி மிர்ஸா ஹிமாயத் பெய்க்குக்கு மரண தண்டனை விதித்து செஷன்ஸ்நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.

நீதி: மோடி சிரிக்கிறார். நீதி அழுது வடிகிறது!

_____

செய்தி: 2ஜி அலைக்கற்றை தொடர்பான கொள்கையில் திருத்தம் செய்த விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும், மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்துக்கும் தொடர்பு இல்லை என்று நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜே.பி.சி) தயாரித்துள்ள வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நீதி: நாடாளுமன்ற கூட்டுக்களவாணிக் குழு களவாணிகளை காட்டிக் கொடுக்குமா என்ன?

_____

செய்தி:  கர்நாடகத்தில் 49 சுரங்க ஒதுக்கீடுகளை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

நீதி: சுரங்கங்களிலிருந்து ஏற்கனவே சுருட்டப்பட்ட இரும்புத் தாதுவை பொருளாகவோ, பணமாகவோ மீட்டுக் கொண்டு வரும் கெத்து, ரத்து செய்த நீதிமன்றத்திற்கு  உண்டா?

______

செய்தி: “தண்ணீரையும் பெட்ரோலையும் வீணாக்கக் கூடாது” என, மாதா அமிர்தானந்தமயி அறிவுரை வழங்கினார்.

நீதி: இதனால் மாயியை பார்க்க வருபவர்கள் இனி குளிக்காமலும், கால்நடையிலும் வரவேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

______

செய்தி:  துப்பாக்கி விற்பனை, பயன்பாடு தொடர்பான கட்டுப்பாடுகளை கடுமையாக்க வகை செய்யும் மசோதாவை அமெரிக்க செனட் சபை நிராகரித்துள்ளது.

நீதி: சரி, சரி, படம் பார்க்கையிலோ, பங்குச் சந்தை ஏற்ற இறக்கத்திலோ, பள்ளி கூட்டங்களிலோ அமெரிக்க மக்கள் சாகவேண்டும் என்று செனட் சபை விரும்பியிருப்பதை யார் என்ன செய்ய முடியும்?

______

செய்தி: புல்லருக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை மறுபரிசீலனை செய்யும்போது, ராஜீவ் காந்தி வழக்கில் தொடர்புடைய பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தண்டனையையும் பரிசீலனை செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

நீதி: ஆட்சியில் இருக்கும் போது பருப்பாய் பேசுவது, ஆட்சியில் இல்லை எனும் போது ‘பொறுப்பாய்’ பேசுவது! தனக்கு மிஞ்சிதான் தானமும், தர்மமும்!