Monday, August 15, 2022
முகப்பு உலகம் ஈழம் தேசிய இனப் பிரச்சினை குறித்து லெனின்!

தேசிய இனப் பிரச்சினை குறித்து லெனின்!

-

ன்று தோழர் லெனின் பிறந்த நாள். மனித குல வரலாற்றிலேயே முதல் முறையாக உழைக்கும் மக்களை, ஒடுக்கப்படும் மக்களை ஒன்று திரட்டி ஆளும் வர்க்கங்களை வீழ்த்தி மக்களுக்காக அரசு அதிகாரத்தைக் கைப்பற்றி ரஷ்யப் புரட்சிக்குத் தலைமை தாங்கியவர் லெனின். தனது 40 ஆண்டு கால போராட்ட வரலாற்றில் உழைக்கும் மக்களின் நலனோடு தொடர்புடைய அனைத்து பிரச்சனைகளைப் பற்றியும் விரிவாகவும், முழுமையாகவும் விளக்கியிருக்கிறார் லெனின்.

தோழர் லெனின் முதலாளித்துவ தேசிய இனவாதத்துக்கு எதிராக முன் வைக்கும் சில குறிப்புகளை பார்ப்போம்.

லெனின்

தொழிலாளி வர்க்க ஜனநாயகத்தின் கோஷம் “தேசிய இனக் கலாச்சாரம்” அல்ல; ஜனநாயகத்தின், உலகு தழுவிய தொழிலாளி வர்க்க இயக்கத்தின் சர்வ தேசியக் கலாச்சாரம் ஆகும். எல்லா விதமான “நேர்முக” தேசிய இன வேலைத் திட்டங்களையும் கொண்டு முதலாளி வர்க்கம் மக்களை ஏமாற்றட்டும். வர்க்க உணர்வு படைத்த தொழிலாளி அதற்குக் கூறும் பதில் இதுதான்: தேசிய இனப் பிரச்சினைக்குரிய தீர்வு (முதலாளித்துவ உலகில், இலாபத்துக்கும் சண்டை சச்சரவுக்கும் சுரண்டலுக்குமான உலகில், பொதுவாக இப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும்படியான அளவுக்கு) ஒன்றே ஒன்றுதான்; முரணற்ற ஜனநாயகம் ஒன்றேதான் அந்தத் தீர்வு.தொழிலாளி வர்க்க ஜனநாயகத்தின் தேசிய இன வேலைத்திட்டம் வருமாறு:

எந்த தேசிய இனத்துக்கும் எந்த மொழிக்கும் எந்தவிதமான தனியுரிமைகளும் இல்லவே இல்லை; தேசிய இனங்களது அரசியல் சுயநிர்ணயப் பிரச்சினை, அதாவது அவை அரசுகளாகப் பிரிந்து செல்லும் பிரச்சினை, முழு அளவுக்குச் சுதந்திரமான, ஜனநாயகமான வழியில் தீர்க்கப்படுதல்; எந்த ஒரு தேசிய இனத்துக்கும் எந்த விதமான சிறப்புரிமையும் அளிப்பதாகவோ, தேசிய இனங்களது சமத்துவத்துக்கு அல்லது தேசிய இனச் சிறுபான்மையினரது உரிமைகளுக்கு ஊறு செய்வதாக இருக்கும்படியான எந்த நடவடிக்கையும் சட்ட விரோதமானதென்றும் செயலுக்கு வர முடியாததென்றும் பிரகடனம் செய்து, இம்மாதிரியான நடவடிக்கை அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானதாக அறிவிக்கப்பட்டு நீக்கப்பட வேண்டும் என்றும், இதனைச் செயல்படுத்த முயலுவோர் குற்றவாளிகள் எனத் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கோருவதற்கு எந்தக் குடிமகனுக்கும் உரிமை அளித்திடும் சட்டம் ஒன்றை அனைத்து அரசுக்குமாகப் பிறப்பித்தல்.

மொழிப்பிரச்சினை குறித்தும் இதையொத்த பிற பிரச்சினைகள் குறித்தும் பல்வேறு பூர்ஷ்வாக் கட்சிகளும் நடத்தும் தேசியவாதச் சச்சரவுகளுக்கு எதிராகத் தொழிலாளி வர்க்க ஜனநாயகம் என்ன கோருகிறது என்றால், எந்த விதமான பூர்ஷ்வா தேசியவாதத்துக்கும் நேர் மாறான முறையில் எல்லா தேசிய இனங்களையும் சேர்ந்த தொழிலாளர்களும் எல்லாத் தொழிலாளி வர்க்க நிறுவனங்களிலும் – தொழிற்சங்கங்களிலும், கூட்டுறவுக் கழகங்களிலும் நுகர்வாளர் சங்கங்களிலும் கல்விக் கழகங்களிலும் ஏனைய எல்லாவற்றிலும் – நிபந்தனையின்றி ஐக்கியமடையவும் ஒருங்கிணையவும் வேண்டும். இம்மாதிரியான ஐக்கியத்தாலும் ஒருங்கிணைவாலும் மட்டுமே ஜனநாயகத்துக்காக முனைந்து நின்று பாடுபட முடியும், மூலதனத்துக்கு எதிராக – மூலதனம் ஏற்கனவே சர்வதேசியத் தன்மையைப் பெற்றுள்ளது., மேலும் மேலும் சர்வதேசியத் தன்மையைப் பெற்று வருகிறது – தொழிலாளர்களது நலன்களைப் பாதுகாத்து நிற்க முடியும். எல்லாத் தனியுரிமைகளுக்கும் எல்லாச் சுரண்டல்களுக்கும் அன்னியமான புதிய வாழ்க்கை முறையை நோக்கி மனிதகுலம் வளர்ச்சியுறுவதற்காகப் போராட முடியும்.

மிதவாத பூர்ஷ்வா தேசியவாதம் எல்லாம், தொழிலாளர்கள் மத்தியில் மிகப் பெரிய அளவில் சீர்கேட்டை உண்டாக்குகின்றன. சுதந்திர இலட்சியத்துக்கும் பாட்டாளிகளின் வர்க்கப் போராட்ட இலட்சியத்துக்கும் மிகப்பெரிய அளவில் தீங்கு இழைக்கின்றன என்பதுதான். இந்த பூர்ஷ்வா போக்கானது (மற்றும் பூர்ஷ்வா-பிரபுத்துவ) போக்கானது “தேசிய இனக் கலாச்சாரம்” என்ற கோஷத்துக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு இருப்பதால், இது மேலும் அதிக அபாயம் விளைவிப்பதாகி விடுகிறது.

மார்க்சியக் கோணத்தில், அதாவது வர்க்கப் போராட்டத்தின் கண்ணோட்டத்திலிருந்து பார்ப்போமாயின், கோஷங்களை அர்த்தமற்ற “பொதுக் கோட்பாடுகளோடும்” பகட்டுப் பேச்சுக்களோடும் தொடர்களோடும் அல்லாமல் வர்க்கங்களது நலன்களோடும் கொள்கைகளோடும் ஒப்பிட்டுப் பார்ப்போமாயின், இன்றைய தேசிய இன வாழ்க்கையின் உண்மைகள் மேற்கூறியவாறே உள்ளன

தேசிய இனக் கலாச்சாரம் என்னும் கோஷம் பூர்ஷ்வா ஏமாற்றாகும். நம்முடைய கோஷம்: ஜனநாயகத்தின், உலகத் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் சர்வதேசிய கலாச்சாரமாகும்.

தேசிய இனக் கலாச்சாரம் ஒவ்வொன்றிலும் – வளர்ச்சியடைந்த வடிவில் இல்லை என்றாலும் – ஜனநாயக சோஷலிசக் கலாச்சாரத்தின் கூறுகள் எப்படியும் இருக்கவே செய்கின்றன. ஏனென்றால் ஒவ்வொரு தேசிய இனத்திலும் உழைப்போரும் சுரண்டப்படுபவோருமான மக்கள் திரளினர் இருக்கிறார்கள், இவர்களது வாழ்க்கை நிலைமைகள் தவிர்க்வொண்ணாதவாறு ஜனநாயக, சோஷலிச சித்தாந்தத்தை உதித்தெழச் செய்கின்றன. ஆனால் ஒவ்வொரு தேசிய இனத்திலும் பூர்ஷ்வா கலாச்சாரமும் இருக்கிறது – கூறுகளின் வடிவில் அல்ல, ஆதிக்கம் செலுத்தும் கலாச்சாரத்தின் வடிவில் இருக்கிறது. ஆகவே பொதுவான “தேசிய இனக் கலாச்சாரம்” என்பது நிலப்பிரபுக்கள், சமய குருமார்கள், முதலாளி வர்க்கத்தார் ஆகியோரது கலாச்சாரம் ஆகும்.

“ஜனநாயகத்தின் உலகத் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் சர்வதேசியக் கலாச்சாரம்” என்ற கோஷத்தை முன் வைக்கும் நாம், தேசிய இனக் கலாச்சாரம் ஒவ்வொன்றின் இடமிருந்தும் அதன் ஜனநாயக சோஷலிசக் கூறுகளை மட்டும்தான் எடுத்துக் கொள்கிறோம். ஒவ்வொரு தேசிய இனத்துக்கான பூர்ஷ்வாக் கலாச்சாரத்தையும் பூர்ஷ்வா தேசியவாதத்தையும் நிபந்தனையின்றி எதிர்ப்பதற்காக மட்டும்தான் அவற்றை எடுத்துக் கொள்கிறோம். எந்த ஜனநாயகவாதியும், இன்னும் அதிகமாக எந்த மார்க்சியவாதியும் மொழிகளது சமத்துவத்தை மறுக்கவோ, சொந்த மொழியிலே “சொந்த நாட்டு” முதலாளி வர்க்கத்தாருடன் வாக்குவாதம் புரிவதும்ம், “சொந்த நாட்டு” விவசாயிகளிடையிலும் குட்டி முதலாளித்துவப் பகுதியோரிடையிலும் சமய குருமார் எதிர்ப்பு அல்லது முதலாளித்துவ எதிர்ப்புக் கருத்துக்களைப் பிரச்சாரம் செய்வதும் அவசியமென்பதை மறுக்கவோ இல்லை.

பூர்ஷ்வா தேசியவாதமும் பாட்டாளி வர்க்கச் சர்வேதேசியவாதமும் இணக்கம் காண முடியாத பகைமை கொண்ட இருவேறு கோஷங்களாகும். இவை முதலாளித்துவ உலகில் முழுமையிலும் நிலவும் மாபெரும் இரு வேறு வர்க்க முகாம்களுக்கு ஏற்ப அமைந்து, தேசிய இனப் பிரச்சசினையில் இருவேறு கொள்கைகளின் (மேலும் இருவேறு உலகக் கண்ணோட்டங்களின்) வெளிப்பாடுகளாக விளங்குகிறவை.

வளர்ந்து செல்லும் முதலாளித்துவமானது, தேசிய இனப் பிரச்சினையில் இரண்டு வரலாற்றுப் போக்குகளை அறிந்திருக்கிறது. ஒன்று: தேசிய இன வாழ்க்கையும் தேசிய இன இயக்கங்களும் துயிலெழுதலும், எல்லா வித மான தேசிய இன ஒடுக்குமுறைக்கும் எதிராக போராட்டம் மூளுதலும், தேசிய இன அரசுகள் அமைக்கப்படுதலும். இரண்டாவது: எல்லா வடிவங்களிலும் தேசிய இனங்களிடையே ஒட்டுறவு வளர்ந்து மேலும் மேலும் துரிதமாதலும், தேசிய இனப் பிரிவினைச் சுவர்கள் தகர்க்கப்படுதலும், மூலதனத்தின், பொதுவாகப் பொருளாதார வாழ்வின், அரசியல், விஞ்ஞானம் முதலானவற்றின் சர்வதேச ஒற்றுமை உருவாக்கப்படுதலும்.

இவ்விரு போக்குகளும் முதலாளித்துவத்தின் உலகு தழுவிய விதியாகும். முன்னது முதலாளித்துவ வளர்ச்சியின் ஆரம்பத்தில் ஆதிக்க நிலையில் உள்ளது. பின்னது முதிர்ச்சியடைந்து சோஷலிச சமூகமாக உருமாற்றம் பெறுவதை நோக்கிச் செல்லுகின்ற முதலாளித்துவத்தின் இயல்பினை வெளிப்படுத்துவதாகும். மார்க்சியவாதிகளது தேசிய இன வேலைத் திட்டம் இவ்விரு போக்குகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு, பின்வருவனவற்றுக்காக பாடுபடுகிறது. முதலாவதாக, தேசிய இனங்களின், மொழிகளின் சமத்துவத்துக்காகவும், இங்கு எந்த விதமான தனியுரிமைகளும் அனுமதிக்கப்படலாகாது என்பதற்காகவும்; இரண்டாவதாக, சர்வதேசிய வாதம் என்னும் கோட்பாட்டுக்காகவும், பூர்ஷ்வா தேசியவாதத்தால்- மிக மிக நயமானதாலுங் கூட – பாட்டாளி வர்க்கம் நச்சுப்படுத்தப்படுவதை எதிர்த்து இணக்கத்துக்கு இடமில்லாப் போராட்டம் நடத்த வேண்டும் என்பதற்காகவும்.

தேசிய இனப் பிரச்சினை பற்றிய விமர்சனக் குறிப்புகள் (முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1979ல் வெளியிடப்பட்டது) என்ற நூலிலிருந்து.
மொழிபெயர்ப்பாளர்
: ரா கிருஷ்ணையா.

 1. தேசிய இனப் பிரச்சினை குறித்து லெனின்!

  “எல்லா தேசிய இனங்களைச் சேர்ந்த தொழிலாளர்களின் ஐக்கியம்தான் சர்வதேசியத் தன்மையைப் பெற்றுள்ள மூலதனத்துக்கு எதிராக உழைக்கும் மக்களின் நலனை பாதுகாக்கும் போராட்டத்தை நடத்த முடியும்.”

  இன்றைய இலங்கை ஈழத்தமிழர் போராட்டத்திலும்,உலக பாட்டாளி வர்க்க விடுதலையிலும் இது பொருந்தும்.மேலும் பாட்டாளி வர்க்க போராட்ட தினமான மே நாளிலும் இதை வலியுருத்தி போராட வேண்டும்.தோழர் இலெனின் பிறந்த நாளில் உறுதி ஏற்போம்.

 2. தேசிய இனஙகளை அடையாளம் காண்பதே இஙகு பிரச்சினை! எல்லோரும் இந்துக்கள் என்று ஒரே குட்டையாக்கி இருப்பதே சுரண்டலுக்கு எளிதாக இருக்கிறது! கஷ்மீர் பிரச்சினை முதல் அசாமியர் பிரச்சினை வரை இன்னும் தீர்க்கப்படாத பல கொடுமைகள்! திராவிடர்களை தனி தேசிய இனமாக்கி விடுதலை பெற பெரியார் முயன்றார்! முடியவில்லை!

 3. லெனின் சொன்னது லெனின் தேசத்துலேயே எடுபடாம்ம போச்சு. எங்க ஊர்ல பெரியவங்க சொல்வாங்க. “உள்ளூர்லேயே உருப்படாத கழுதை எங்கயும் போயும் பிழைக்காது”னு. அது மனுஷனுக்கு பொருந்துதோ இல்லையோ கம்யூனிசத்துக்கு நல்லாவே பொருந்துது காம்ரேட்.

  • ஜனநாயகம்னு பேர வச்சிகிட்டு சர்வாதிகாரமா பேசறீங்க. அப்ப என்ன மய்த்துக்கு படிச்சவன் எல்லாம் அமெரிக்காவுக்கும் லண்டனுக்கும் ஓடறானுங்கோ

  • கழுதை எங்கு சென்றாலும் தனது முழு உழைப்பையும் கொடுத்து மனிதனுக்கு அதிக பயனை கொடுக்கிறது. கழுதையை பார்த்தாலே யோகம் வரும் என்று நம்பும் அளவுக்கு அது மனிதனுக்கு பயனுள்ள அளவுக்கு இருந்தது. இன்னும் இராணுவத்தில் மலைபாங்கான இடத்தில் வாகனங்கள் எதுவும் செல்ல முடியாது அந்த இடத்திலும் கழுதைதான் பயன் படுகிறது. இப்பொழுது இதையேன் சொல்கிறேன் என்றால் கழுதையைப் பற்றியே தெரியாத நீயெல்லாம் கம்யூனிசத்தை பற்றியெல்லாம் பேச வேண்டாம்.

 4. அன்புள்ள ஜனநாயகம் அவர்களுக்கு,

  தேசிய இனப் பிரச்சினை குறித்து மாமேதை லெனின் அவர்கள் எழுதிய நூல்கள் ஏதேனும் படித்ததுண்டா. அதற்கு இணையான நூல் எவரும் எழுதியிருக்கிறார்களா?. ஏங்கல்ஸ் அவர்கள் எழுதிய “லுத்விக் பாயர்பாக்கும் மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும்” என்ற நூலுக்கு இணையான தத்துவ நூல் எதையும் உலகில் காட்ட முடியுமா?.

  எதுவும் தெரியாமல் ஏன் லெனின் மீதும் கம்யூனிசத்தின் மீதும் இத்தனை வெறுப்பு.

  • குமரன் சொல்லிட்டாருப்பா… எல்லாரும் ஈழம் ஈழம்னு சொல்லரது விட்டு அனவரும் அர்சகர் ஆகலாம்னு சொல்ற போரட்ட்டதில கலந்துக்க வாங்கோ..கோ……டம் டம்….

   • ஈழம் சீசன் இரண்டு முடிந்து விட்டது சகா…சீசா த்ரீ அடுத்த வருசமோ அல்லது எப்போ ஐநா தீர்மானம் வருதோ அப்பத்தான்..அதுவரை சும்மா குந்திகினு இருக்க முடியுமா?அடுத்த புரட்சிக்கு வித்திட வேண்டாமா?

 5. ஒரு தேஸிய இனம் பிரிந்து செல்லும் உரிமையில் ஸரி அல்லது தவறு என்ற ஏதோ ஒரு ஒற்றை னிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பது உலக மகா அயோக்கியத்தனம்,இது இயக்க மறுப்பியலாகும்.
  ஒரு உருப் பெறாத தேசத்தை தேசிய சுயநிர்ணயதிற்கு உரியதாக மட்டுமே லெனின் பார்த்தார்.

  முதலாளிவர்க்கம் எப்பொழுதும் தனது தேசிய வாதத்தை முன் வைக்கிறது. ஆனால் பாட்டாளிவர்க்கதிற்கு இந்த கோரிக்கை வர்க்க போராட்டதின் கீழ் லடங்கியவை,எனவே கம்யூனிஸ்ட் கட்சி எப்பொழுதும் ஸுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதோடு நின்றுவிட வேண்டும்.ஏனென்றால் முதலாளிதுவதின் கீழ் பாட்டாளிவர்க்கதை அட்டக்க முடியாது.

 6. இந்திய அரசியலில் ஆபத்தான ‘இந்தி திணிப்புக்கும், இந்துத்வா திணிப்புக்கும்’ அருமையான தீர்வை தோழர் லெனின் கூறியுள்ளார்! இந்திய காம்ரேடுகள் அறிவார்களா?

  //……எந்த தேசிய இனத்துக்கும் எந்த மொழிக்கும் எந்தவிதமான தனியுரிமைகளும் இல்லவே இல்லை; தேசிய இனங்களது அரசியல் சுயநிர்ணயப் பிரச்சினை, அதாவது அவை அரசுகளாகப் பிரிந்து செல்லும் பிரச்சினை, முழு அளவுக்குச் சுதந்திரமான, ஜனநாயகமான வழியில் தீர்க்கப்படுதல்; எந்த ஒரு தேசிய இனத்துக்கும் எந்த விதமான சிறப்புரிமையும் அளிப்பதாகவோ, தேசிய இனங்களது சமத்துவத்துக்கு அல்லது தேசிய இனச் சிறுபான்மையினரது உரிமைகளுக்கு ஊறு செய்வதாக இருக்கும்படியான எந்த நடவடிக்கையும் சட்ட விரோதமானதென்றும் செயலுக்கு வர முடியாததென்றும் பிரகடனம் செய்து, இம்மாதிரியான நடவடிக்கை அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானதாக அறிவிக்கப்பட்டு நீக்கப்பட வேண்டும் என்றும், இதனைச் செயல்படுத்த முயலுவோர் குற்றவாளிகள் எனத் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கோருவதற்கு எந்தக் குடிமகனுக்கும் உரிமை அளித்திடும் சட்டம் ஒன்றை அனைத்து அரசுக்குமாகப் பிறப்பித்தல்.//

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க