Saturday, March 22, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.கநடைப்பிணங்கள் ஜாக்கிரதை !

நடைப்பிணங்கள் ஜாக்கிரதை !

-

05-coffin-bloodநடைப்பிணங்கள் ஜாக்கிரதை!

ந்தக வெம்மையில்
கருகிய இலைகளின் நரம்புகள்,
கொஞ்சம் அழுந்தத் தொட்டால்
உதிரும் மழலையின் நாவுகள்.

அடுத்தடுத்து விழுந்து
ஆக்சிஜன் உறிஞ்சிய குண்டுகள்
அடுத்த தலைமுறையே இல்லாமல்
பிள்ளைகள் எரிய
தாயுடல் விறகுகள்.

முண்டம் வேறு தலை வேறாய்
முடிந்தவர்கள் கதையை விட
பயங்கரமானது,
முள்வேலிக்குள் அடைத்துவைத்து
முழு நிர்வாணமாக்கி
உணர்வுகளை சோதனையிட்டு
உறுப்புகளில் ‘பயங்கரவாதத்தை’ தேடும்
மீட்புப் பணி!

வெடித்துச் சிதறி
இரத்தத்தில் பிசறிக் கிடப்பது
பனை நுங்கின் சிதறலா?
இல்லை,
நிறைமாதக் கர்ப்பிணியின் சிசுக் கூழா?
வளி மண்டலமே
வலி மண்டலமாகும் படி
அதிர்ச்சியில் அலறிய காற்று
பிதுங்கிய விழிகளில்
பீதியில் உறைந்தது.

இசைப்பிரியாஉரிமைகள் உச்சரித்த
உதடுகள் குதறி…
தாய் மண் நிறைந்த
விழிக்கோளம் சிதறி…
உடல் திசுக்களெல்லாம்
வெறிப்பல் நுழைத்து…
பெண் என்பதற்கும் மேலாக
அவளது பிறப்புறுப்பில் இறங்கி,
இராணுவம் வேட்டையாடிய
ஈழத்து இசைப்பிரியாக்களின் உடம்பில்
இந்திய அரசின்  மேலாதிக்கம்
அம்பலமானது!

ஈழக்கொலைக்களத்தை
இயக்கி நடத்தியதே இந்திய அரசுதான்!
இந்த உண்மையை உரைக்காமல்
இந்திய மேலாதிக்கம் எதிர்க்காமல்,
ஈழத்தைக் காப்பாற்ற
இந்தியாவிடமே வலியுறுத்தும்
தில்லிவாய்க்கால்களின் மோசடிகள்
முள்ளிவாய்க்காலை விட பயங்கரமானவை!

சனம்
தவியாய்த் தவிக்கையில்
பிணமாய்க் கிடந்தவர்கள்,
பிணங்கள் உறுதியானவுடன்
சனங்களுக்காக பேச
எழுந்துவர ஆரம்பித்து விட்டார்கள்,
தளபதியாய்… புரட்சித் தலைவியாய்…புரட்சிப் புயலாய்.
எச்சரிக்கை!

நடமாடும் தமிழகமே
நடைப் பிணங்கள் ஜாக்கிரதை!

– துரை. சண்முகம்
________________________________________________________________________________
புதிய கலாச்சாரம் – மார்ச் 2013
________________________________________________________________________________