முகப்புகலைகவிதைமுற்றுகையின் கீழ் !

முற்றுகையின் கீழ் !

-

முற்றுகையின் கீழ் – மக்மூத் தார்வீஷ்

மக்மூத் தார்வீஷ்
மக்மூத் தார்வீஷ்

ங்கு அரையிருள் கவிழ்ந்த
குன்றுகளின் சரிவில்
தோட்டத்தில் உடைந்து கிடக்கும்
நிழல்களை நெருங்கும்
காலத்தின் தடத்தில்
கைதிகள் செய்வதையே செய்கிறோம்:
வேலை தொலைத்தவர்கள் செய்வதையே செய்கிறோம்:
நாங்கள் நம்பிக்கையை பேணுகிறோம்.

***

விடியலுக்கு தயாராகும் ஒரு நாட்டில்
எங்கள் அறிவுத்திறம் குன்றி போகிறது
நாங்கள் வெற்றியை அணுக்கமாக
உணரும் இந்த பொழுதில் :
ஷெல்லடிகளால் ஒளிரும் எங்கள் இரவு இரவாக இல்லை
இந்த நிலவறையின் இருட்டில்
எங்கள் எதிரிகள் விழிப்பாக இருந்து
எங்களுக்கான ஒளியை ஏற்றுகிறார்கள்

***

இங்கு ‘நான்’ என்பது இல்லை
இங்கு ஆதாம் தனது களிமண்ணின்
துகளை அறிகிறார்.

****

சாவின் விளிம்பில் அவர் சொல்கிறார் :
இழப்பதற்கு எந்த தடமும் என்னிடம் இல்லை.
ஏதுமற்ற நான்
என் விடுதலைக்கு அருகாமையில் உள்ளேன்
என்னுடைய சொந்த கரங்களில்தான்
என்னுடைய எதிர்காலம் உள்ளது.
விரைவில் என் வாழ்வை
துருவிக் கண்டுணர்வேன்.
சுதந்திரமாகவும், பெற்றோரின்றியும்
நான் பிறப்பெடுப்பேன்.
எனது பெயராக
நீலவான எழுத்துக்களை தெரிவு செய்வேன்.

****

வாசலில் நிற்போரே, உள்ளே வாருங்கள்,
எங்களுடன் அரேபிய காபி அருந்துங்கள்
எங்களைப் போன்ற
மனிதர்களே நீங்களும் என்பதை உணர்வீர்கள்.
வீடுகளின் வாயில்களில் நிற்போரே
நமது காலைப் பொழுதுகளிலிருந்து வெளியேறுங்கள்,
உங்களைப் போன்ற மனிதர்கள் தான்
நாங்கள் என்று
மீளுறுதி செய்ய விரும்புகிறோம்.

****

விமானங்கள் மறையும் போது
அந்த தூய வெள்ளை புறாக்கள்
சொர்க்கத்தின் கன்னங்களை கழுவுகின்றன.
கூடவே தளர்த்தப்பட்ட சிறகுகளில்
கதிரொளியை திரும்ப எடுத்து கொண்டும்,
தூய வானவெளியுடன் கொண்டாட்டத்தை
தமதாக்கிக் கொண்டும்
அந்த தூய வெள்ளை புறாக்கள்
மேலே மேலே பறக்கின்றன.
அதோ! அந்த வானம் மட்டுமே மெய்ம்மை என்பது போல.
(இரு எறிகுண்டுகள் மத்தியில்
கடந்து சென்றவர் உரைத்தார், என்னிடம்)

***

மக்மூத் தார்வீஷ்

போர்வீரர்களின் பின்னால் நிற்கும் சைப்ரஸ் மரங்கள்
வானம் தகர்ந்து வீழாமல் தாங்கும் பள்ளிவாசல் தூபிகள்.
உருக்கு வேலிக்குப் பின்னால் –
ஒரு பீரங்கியின் காவல் கண்களுக்குக் கீழ்  –
வீரர்கள் சிறுநீர் கழிக்கிறார்கள்.
தேவாலயத்தின் ஞாயிறு கூடுகைக்குப் பின்
விரியும் ஒரு தெருவில் இலையுதிர் பருவநாள்
தனது பொன்மய அலைதலை முடிக்கிறது.

***

(ஒரு கொலையாளியிடம்) உன்னால் பாதிக்கப்பட்டவரின்
முகத்தை நீ கவனித்தாய் எனில்,
அது உன் எண்ணத்தை ஊடுருவியிருந்தால்,
வாயு கிடங்கில் இறந்த உனது தாய்
உன் நினைவில் வந்திருப்பார்.
இந்த துப்பாக்கியின் தேவையிலிருந்து
நீ விடுவிக்கப்பட்டிருப்பாய்.
மேலும், உனது மனம் அறிந்திருக்கும் : இதுவல்ல
ஒருவர் தன அடையாளத்தை தேடிக் கொள்ளும் முறை என்று.

***

புயலுக்கு மத்தியில் சாய்வு ஏணியில் காத்திருக்கும்
இந்த முற்றுகைநிலை ஒரு உக்கிரமான காத்திருப்பு.
மிகக் கீழ்நிலையில் மண்டியாக, தனிமையில்,
நாங்கள் தனிமையில்…
வானவில்லின் காட்சி உலா
மட்டும் இல்லை என்றால்.

***

இந்த அகல்பரப்புக்கு அப்பால் எங்களுக்கு
சகோதரர்கள் இருக்கிறார்கள்.
அருமையான சகோதரர்கள். அவர்கள்
எங்களை நேசிக்கிறார்கள். எங்களை நினைத்து
கண்ணீர் உகுக்கிறார்கள்.
”அதோ! இந்த முற்றுகை உறுதிசெய்யப்பட்டால்
….” அவர்கள் தங்கள் வாக்கியத்தை முடிக்கவில்லை:
”எங்களை கைவிட்டு விடாதீர்கள், விட்டுச் செல்லாதீர்”

***

எங்கள் இழப்புகள்: தினமும்
இரண்டிலிருந்து எட்டு தியாகிகள்.
பத்து பேர் காயமடைகிறார்கள்.
மேலும் இருபது வீடுகள்…
மேலும் ஐம்பது தேவதாரு மரங்கள்
இதனுடன் சேர்ந்து இந்த கவிதையும்
நாடகமும், முடிக்கப்படாத ஓவியமும்
சந்திக்கும் கட்டமைப்பு பிழை,.

***

ஒரு பெண் மேகத்திடம் உரைத்தாள் :
என் காதலனை மூடிக்கொள்
என் துணி அவன் ரத்தத்தால்
நனைந்துள்ளது.

***

நீ மழையாக இல்லையெனில், அன்பானவனே
மரமாக இரு
மனநிறைவூட்டும் வளப்பமான மரமாக
நீ மரமாக இல்லையெனில், அன்பானவனே
கல்லாக இரு
நீர்நயம் செறிந்த கல்லாக
நீ கல்லாக இல்லையெனில், அன்பானவனே
நிலவாக இரு
நேசித்த பெண்ணின் கனவில் வரும் நிலவாக
(மகனின் இறுதிச் சடங்கில், ஒரு தாய்)

***

ஓ! காவலர்களே! நீங்கள் களைப்படவில்லையா?
எங்கள் உப்பில் விழும் ஒளிக்காகவும்
எங்கள் புண்களிலிருந்து எழும்பும்
வெண்சுடருக்காகவும் காத்திருக்கும்
காவலர்களே! நீங்கள் களைப்படவில்லையா ?

***

இந்த காலங்களின் பளுவை
சற்று குறைக்க
இந்த இடத்தின் தூய்மைக்கேட்டை
சுத்தப்படுத்த
இந்த முழுமையான, முடிவற்ற நீலப்பெருவெளியின்
சிறுதிறம் போதுமானது

***

அந்த ஆன்மா அதன் உச்சியிலிருந்து
கீழிறங்க விரும்பட்டும்
என் அருகே கரம்கோர்த்து
அதன் பட்டுப் பாதங்களில்
நடக்கட்டும்
இரு நெடுநாளைய நண்பர்கள்
புராதன உணவையும், பழங்குவளையில்
மதுவையும் பகிர்வது போல
நாங்கள் இணைந்து சாலையில்
நடப்பதை யாசிக்கிறேன்.
அதன் பிறகு எங்கள் நாட்கள்
வேறுவேறாக திசைவழி கொள்ளும்
நான் இயற்கையை பின்னும் கடந்து
ஒரு உயரமான மலையில் அமர முடிவெடுப்பேன்.

***

என் உடைந்த கட்டுமானத்தில் விழும் நிழல்
பச்சையாக வளர்கிறது
என் ஆட்டின் தோல் மீது ஓநாய்
துயில் கொள்கிறது
தேவதையை போன்று, என்னைப் போன்று
அவனும் கனவு காண்கிறான்.
அந்த வாழ்க்கை இங்கு இருக்கிறது…
அங்கில்லை.

***

முற்றுகை நிலையில், காலம்
நித்தியத்துவத்தில் ஊன்றி நிற்கும் வெளி ஆகிறது
முற்றுகை நிலையில், வெளி நேற்றமையும்,
நாளையையும் தவறவிட்ட காலமாகிறது.

***

புதிய நாள் ஒன்றில் நான் வாழப்புகும் ஒவ்வொரு
கணத்திலும் ஒரு தியாகி என்னை வட்டமிடுகிறார்.
என்னிடம் கேள்விகள் தொடுக்கிறார் :
நீ எங்கே சென்றாய்? நீ எனக்களித்த ஒவ்வொரு
வார்த்தையையும் திரும்ப அகராதிக்கு
எடுத்துச் செல்
பின்னர் தூங்குவோரை பின்னொலியின்
சத்தத்திலிருந்து விடுவி.

***

அந்த தியாகவீரர் எனக்கு அறிவூட்டுகிறார்:
இந்த அகல்பரப்புக்கு அப்பால்
இறவா கன்னிகைகளை தேடவில்லை
இப்புவியின் அத்தி மற்றும் தேவதாரு
மரங்கள் மத்தியில் நான் வாழ ஆசைபடுகின்றேன்.
ஆனால், என்னால் அதனை அடைய முடியாது,
எனினும், எனது கடைசி உடமையாக இருக்கும்
ரத்தம் தோய்ந்த இந்த நீலவான உடலை
வைத்து குறி பார்க்கிறேன்.

***

தியாகவீரர் என்னை எச்சரித்தார்: அவர்கள் கதறலை
நம்பாதே
என் புகைப்படத்தை நோக்கியவாறு…
அழும் போது என் தந்தையை நம்பு என்றார்.
நாம் எப்படி நம் கடமைக்கூறை இழந்துள்ளோம்,
என் மகனே, என்னை எப்படி முந்தினாய்.
நான் முதலில். நானே முதலில்.

***

தியாக வீரர் என்னை சூழ்ந்து கொண்டார்:
இந்த இடம் மற்றும் செப்பமற்ற
மரச்சாமான்கள் போன்ற அனைத்தும்
நான் அமைத்து கொண்டது.
என் படுக்கையில் உள்ள வனப்பான
அரேபிய மான் நான் போட்டுக் கொண்டது
என் விரலில் இருக்கும் வளர்பிறை
என் துயரை ஆற்றுபடுத்துகிறது.

***

தீங்கற்ற அடிமைத்தனத்தை முழுமனதோடு
ஏற்க செய்யும் வரை
இந்த முற்றுகை நீடிக்கும்.

***

எதிர்ப்பு என்பது இதயத்தின் நலனை
ஒருவர் உறுதி செய்து கொள்வது
மேலும் விதைகள் மற்றும் தீவிரமான
வியாதியின் ஆரோக்கியம் சம்பந்தமானது:
அது நம்பிக்கையின் வியாதி.

***

மக்மூத் தார்வீஷ்

விடியல் பொழுதின் மிச்சத்தில்
என் புறம் நோக்கி நடக்கிறேன்.
இரவின் மிச்சத்தில்
என் காலடி ஒலியை கேட்கிறேன்.

***

ஈர்ப்போடு இந்த ஒளியின் போதையை,
பட்டாம்பூச்சியின் சுடரை, இந்த சுரங்கத்தின்
இருளை என்னுடன் பகிரும் இவரை
வாழ்த்துகிறேன்.

***

இரு வெளிகளை கடக்கும்
இந்த காரிருளின் இரவில் என்னோடு
மதுவை பகிரும் இவரை வாழ்த்துகிறேன்.
என்னுடைய ஆவியையும் வாழ்த்துகிறேன்.

***

என் நண்பர்கள் எப்போதும் எனக்கு
கடைசி விருந்தை தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள்
இந்த கருவாலி மரங்களின் நிழல்கள் மத்தியில்
என்னுடைய அமைதியான கல்லறை
பளிங்கிலான காலத்தின் கல்லறை வாசகம்
அவர்களை எப்போதும் ஈமச்சடங்கில்
எதிர்பார்ப்பேன்…
இறந்து போனது யார்.. யார்?

***

எழுதுதல் ஒரு நாய்க்குட்டி
இன்மையை கடித்தல்…
ஒருதுளி ரத்தம் சிந்தாமல் புண்களை எழுதுவது.

***

நமது காபி குடுவைகள். பறவைகள்,
பச்சை மரங்கள்.
இந்த நீலநிழலில், சூரியன் ஒரு மான் குட்டியை போன்று
ஒரு சுவரிலிருந்து இன்னொன்றிற்கு தாவுகிறது.
மேகங்களில் இருக்கும் நீர்
அதன் எல்லையில்லாத வடிவத்தை பெற்றிருக்கிறது.
தொங்கும் இதர நினைவுகள்
இந்த காலை ஆற்றலும், வனப்புமானது
என்று உணர்த்துகிறது.
மேலும் நாம் அமரத்துவத்தின் விருந்தாளிகள்
என்றும் உணர்த்துகிறது.

மக்மூத் தர்விஷ்
தமிழில் – சம்புகன்.

ஆசிரியர் குறிப்பு :

1941-ல் அல்பிர்வே என்னும் பாலஸ்தீன கிராமம் ஒன்றில் பிறந்த மக்மூத் தார்வீஷ் தனது ஏழு வயதிலே கிராம மக்களுடன் இஸ்ரேல் ராணுவத்தால் பாலஸ்தீனத்தை விட்டே துரத்தப்பட்டார். அந்த கிராமத்தை தரைமட்டமாக்கியது ராணுவம். பின்னர் அங்கு யூத குடியேற்றம் நிகழ்ந்தது. தர்விஷ் குடும்பம் சிறிது காலத்திற்கு பிறகு பாலஸ்தீனத்தில் ‘சட்டவிரோதமாக’ குடியேறியது.

பாலஸ்தீனம்
ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனம்

1960 வாக்கிலேயே அவர் தீவிரமாக அரசாங்கத்தால் கண்காணிக்கப்பட்டார். பாலஸ்தீன மக்களின் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவாக நின்ற இஸ்ரேல் கம்யூனிஸ்ட் கட்சியில் 1961-லிருந்து இணைந்து பணியாற்றினார். 1970-க்கு பின்னர் சொந்த நாட்டில் பெரிதும் இன்னலுக்கு உள்ளாகியதால் மாஸ்கோ, பாரீஸ் என்று பல்வேறு நாடுகளில் தஞ்சமடைந்தார். யாசர் அராபத்தின் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தில் (PLO) இணைந்தார். பாலஸ்தீனத்தில், சுயாட்சி அதிகாரம் கொண்ட ஒரு இடைக்கால அரசு நிர்வாகத்திற்கு வழிகோலும் ஆஸ்லோ ஒப்பந்தத்தை நிராகரித்து, PLO வின் செயற்குழு உறுப்பினர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்தார். இறுதி மூச்சு வரை கம்யூனிஸ்ட் உலகப்பார்வையை கொண்டிருந்தார், தர்விஷ்.

அவர் சென்ற நாடுகளில் எல்லாம் தனது நாட்டையும், மக்களையும், அவர்களின் விடுதலை கனவையும் சுமந்தார். அவருடைய ‘Passers by in Passing Words’ என்னும் கவிதை அரேபிய மக்களால் விரும்பி வாசிக்கப்பட்டு மக்கள் கவிஞர் ஆனார். மக்கள் மருத்துவர், மக்கள் தலைவர் போன்று தர்விஷ் ஒரு மக்கள் கவிஞர். அரசியல் என்றால் கோஷம்; கோஷம் இலக்கியத்துக்கு தோஷம் என்பது நமது இலக்கிய நாட்டாமைகள் எழுதி வைத்திருக்கும் இலக்கிய சாசனம். சமூக உணர்வின் ஆழம் சிறந்த படைப்புகளை பிரசவிக்கும் என்பதற்கு மக்மூத் தார்வீஷின் கவிதைகள் எடுத்துக்காட்டு.

இனவெறிக்கு எதிராக இனவாதத்தை அல்ல; சர்வதேசியத்தை முன்வைத்தார். இந்த கவிதை ‘முற்றுகையின் கீழ்’ பாலஸ்தீன நகரம் ரமல்லா முற்றுகைக்குள்ளான போது எழுதப்பட்டது. ரமல்லா அவர் பிறந்த கிராமத்தை உள்ளடக்கிய மலை அடிவாரம். பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் அலுவலகம் அங்கு செயல்பட்டது. முஸ்லிம்களின் சம எண்ணிக்கையில் கிறிஸ்தவர்களும் வாழ்ந்தார்கள். மேலும், இந்த கவிதை பாலஸ்தீன புவிப்பரப்பை ஆழமான படிமங்களுடன் விவரிக்கிறது. போர் சூழலின் யதார்த்தம் மக்களின் சராசரி வாழ்க்கையை பாதிப்பதை ஒரு பன்மை அடுக்கு முறையில் பேசுகிறது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க