Saturday, June 15, 2024

கருப்பாயி !

-

நான் கண்ட பெண்களில் மிகவும் அழகானவள் இந்த ஆயி. பார்த்த உடன் பிடித்துப் போகுமளவு இலட்சணமாக இருப்பாள்.

பெண்

உழைத்துப் பிழைக்கும் ஒரு சிறு விவசாயி குடும்பத்தில் பிறந்தவள் இந்த ஆயி. (எங்க ஊரில் பெண் பிள்ளையை ஆயி என்று செல்லமாக அழைப்பார்கள்). ஆயியை சின்ன வயதிலிருந்தே எனக்கு தெரியும். மிகவும் கொழு கொழு குழந்தையாக, துறு துறுவென்று இருப்பாள். கருப்பா இருந்தாலும் களையாக இருக்கிறாள் என்று கிராமத்தில் ஆயியை தூக்கி கொஞ்சாதவர்கள் கிடையாது. ஆயியை கடந்து செல்லும் யாருக்கும், ஒரு நிமிசமாவது எடுத்து அணைக்கத் தூண்டும் வசீகரம் அவளிடம் இருக்கும்.

அவள் பழகுவதற்கு மிகவும் எளிமையானவள். ஏழை விவசாயி குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தன்னால் முடிந்த உதவிகளை பிறருக்கு தட்டாமல் செய்வாள். அக்கம் பக்கத்து குழந்தைகளை பெற்றோர் இல்லாத நேரத்தில் மணிக்கணக்கில் பார்த்துக் கொள்வாள். தெருவோரத்தில் இருக்கும் வயதான பாட்டிக்கு குளிக்க கொள்ள தண்ணி எடுத்து கொடுப்பாள். தன் கூட பழகும் தோழிகளுக்கு கஷ்டம் என்றால் தான் வைத்திருக்கும் நகையை அம்மாவுக்குத் தெரியாமல் அடகு வைக்க கொடுப்பாள். தெருவில் நடமாடும் குழந்தைகளோ, பெரியவர்களோ பசியோடு இருக்கிறார்கள் என்று தெரிந்தால் சாப்பாடு போடாமல் விடமாட்டாள்.

ஒரு கிராமத்துப் பெண் என்ற முறையில் இந்த பண்புகளை எல்லாம் அங்கே பல பெண்களிடம் பார்க்கலாம் என்றாலும் குறிப்பிட்டுச் சொல்லுமளவு ஆயியிடம் இந்த நேசம் அழகாக குடி கொண்டிருந்தது.

இருந்தாலும் இவையெல்லாம் அவளுக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும். தான் கருப்பாக இருக்கிறோம் என்ற உண்மை அவ்வப்போது அவளை கொஞ்சம் கலங்கடிக்கும். இல்லை அவளது ஆழ்மனதில் அது மாறாத வடுவாக இருக்கிறது என்றும் சொல்லலாம். அதுவும் மிகவும் சிறிய வயதிலேயே இந்தக் கவலை அவளிடம் இருந்தது.

இனி அவளது கதையை பேச்சு மொழியிலேயே சொல்கிறேன். அதுதான் எனக்கு இயல்பாக வரும்.

அவள் வீட்டருகில் மனிதர்கள் குளிக்காத, ஆட்டு, மாட்டுக்கு பயன்படுத்துற ஒரு குளம் இருந்துச்சு. அஞ்சு வயசுல எந்த நேரம் பார்த்தாலும் அந்த கொளத்துல தான் குளிச்சுகிட்டே இருப்பா. பார்க்கறவங்க எல்லாரும் அழச்சுட்டு வந்து வீட்டில விட்டு திட்டுவாங்க. தவறி விழுந்தா என்னாவது, பாத்துக்கங்க என்பார்கள். அவங்க விட்டுட்டு போன மறு நிமிசமே சோப்பையும், லோட்டாவையும் (சொம்பு) தூக்கிட்டு ஓடிருவா.

“ஒரு நாளைக்கு எத்தன தடவடி குளிப்ப” என்றதற்க்கு, “நான் செவப்பாகர வர குளிப்பேன்” என்று அஞ்சு வயசுல அவள் சொன்னது இன்னும் என் காதுக்குள்ள கேட்டுக்கிட்டே இருக்கு. இப்போது அவ வளந்து பெரியவளாயி கல்யாணமும் முடிஞ்சிருச்சு. இப்பயும் அப்படிதான் தன் கருப்பு கலருக்காக உள்ளுக்குள் வேதனையை வைச்சுக்கிட்டு வெளியில வேடிக்கையா பேசுவா.

திருமணத்துக்கு பிறகு ஊருக்கு வந்தவ என்னை பார்க்க வந்திருந்தாள். மத்தியான நேரம் இருக்கும். “என்ன செய்றக்கா” என்றபடி வந்தா. “வா, வா,” என்றபடியே, “பாப்பாவ குளிப்பாட்ட கஸ்தூரி மஞ்சள், பூலாங்கிழங்கு, பாசிப்பயறு, கடலப் பருப்பு, எல்லாத்தையும் சேத்து அரைச்சத சலிச்சுட்டு இருக்கேன்” என்றேன்.

“ஏன் ஒரு மாதிரியா இருக்க முகமெல்லாம் கருத்து போய் இருக்கு” என்றேன்.

“நீ வேற என் வேதனைய அதிகமாக்காத” என்றாள்.

“ஏன் என்ன ஆச்சு” என்றேன்.

“எங்கம்மா இப்படியெல்லாம் அரச்சு குளிப்பாட்டியிருந்தா நான் நல்ல கலரா வந்துருப்பேன்லே”அப்டின்னா.

“உனக்கு எப்பவும் விளயாட்டுதான். யாரு எப்படி கிண்டலடிச்சாலும் சிரிச்சுகிட்டே போற. எந்த நேரமும் உன் கலர பத்தி நீயே பேசி தானாகவே கிண்டலடிக்கிற. மத்தவங்க உண்னை கிண்டல் செஞ்சாலும அத இருக்கிறத்தான சொல்றாங்கன்னு சகஜமாக எடுத்துட்டு போற, ஆனா உள்ளுக்குள்ள கவலையும் படற. நல்ல பொண்ணுடி நீ” என்றேன்.

முகம்

“யார் சொன்னா நான் கவலைப்படலேன்னு. அதெல்லாம் மறக்கற மாதிரியா சொல்றாங்க, நான் என்ன நினைப்பேன், எப்படி வலிக்கும் என்பதெல்லாம் அவங்களுக்கு முக்கியமில்லை. நா சின்னப் புள்ளையா இருந்தப்ப கிண்டல் செய்யறதா நெனைச்சு சொன்னாங்க. நீ இந்த அளவு கருப்பா இருந்தா எவன்டி ஒன்ன கட்டிக்குவான்னு, இன்னைக்கு வரையும் சொல்லிட்டுதான் இருக்காங்க. கிண்டல் பண்றதா நெனச்சு மனசுல ஆணி தச்சா மாதிரி சொல்றாங்க. என்னோட கலர நெனச்சு வருத்தபடாத நாளே கெடையாது. கருப்பா இருப்பவங்க வாழவே தகுதி இல்லங்கர அளவுக்கு மனுசங்க படுத்தி வக்கிறாங்க.

கருப்பா இருக்குறேன்னு கவலப்படாத, அப்படின்னு ஆறுதல் சொல்றது போல என் கலர ஞாபகப்படுத்தி கிட்டேதான் இருப்பாங்க.

கருப்பா இருந்தாலும் களையா இருக்கா, கருப்பா இருந்தாலும் காலேஜ்ஜெல்லாம் படிச்சுல்ல இருக்கா, நீ கருப்பா இருந்தாலும் உன் வீட்டுக்காரரு நல்ல சிகப்பா இருக்காரு, பிள்ள ஒன்னப் போல கருப்பா பெத்துக்காம உன் வீட்டுக்காரர் போல செகப்பா பெத்துக்க.

இப்படி யார் எது சொன்னாலும் என் கலரோட சேத்துதான் சொல்றாங்க. என் வாழ்நாள் பூராவும் கலரப்பத்தி கவலப்பட வைச்சுகிட்டேதா இருப்பாங்க” என்றாள்.

“தெனதெனம் இத சந்திச்சுகிட்டுதானே இருக்கேன். நாந்தா உங்கிட்ட சொல்லியிருக்கேனே யாரெல்லாம் எப்படியெல்லாம் சொன்னாங்கன்னு” என்றாள்.

 

மா, ஆயி அப்பப்ப என்கிட்ட சொல்லியவற்றில் சிலதைத்தான் உங்ககிட்ட சொல்றேன். இனி வருவது ஆயி நேரடியாக பேசியவை:

“பள்ளியில் என் பேருல ஒரு பொண்ணு இருந்துச்சு. அந்த பொண்ணு செவப்பா இருக்கும். கூட படிக்குற பிள்ளைங்க, என் பேரோட சேத்து கருப்பையும், அவ பேரோட சேத்து சிவப்பையும் சொல்லுவாங்க, வாத்தியாரு மொதக் கொண்டு என்ன கருப்பாயின்னுதான் கூப்பிடுவாறு. ஏன்னு கேட்டா ” நீ நம்ம சாதிடி, எனக்கில்லாத உரிமையான்னு” சொல்லுவாறு.

“ஒருத்தர் கேட்டாரு நீ யாரோட பொண்ணு, உங்க அப்பா பேரு என்னா. நானும் சொன்னேன். அப்படியா நம்பவே முடியல, பறத்தெருல கொண்டு விட்டா நீ எங்க பிள்ளன்னு சத்தியம் செஞ்சுதான் அழச்சுட்டு வரணும் அப்டின்னாரு”. (கருப்புங்கரது கலரைத் தாண்டி தாழ்த்தப்பட்ட சாதியாவும் பாக்கப்படுது.)

”நானும் என் கூட்டாளியும் கல்லூரிக்கு போயிட்டு இருந்தோம். என் கூட்டாளி நல்ல சிகப்பா இருப்பா. நாலு பசங்க ஒக்காந்து அரட்டையடிச்சுட்டு இருந்தாங்க. நாங்க அவங்களை கடந்து போய்ட்டோம். உஸ்…. உஸ்…-இன்னு சத்தம் கொடுத்தானுங்க திரும்பி பாத்தேன். சைகையிலேயே உன்ன இல்லா அந்த பெண்ண கூப்பிடுன்னான். எனக்கு அவனுங்க அப்படி பெண்கள அசிங்க படுத்துறானுங்களேங்கர கோபம் வராம, கருப்புங்கரதால நம்மள வேண்டான்னுட்டு அவள கூப்பிட சொல்றானேன்னு கோபமும் சிரிப்பும் வந்தது”.

“பள்ளிக்கு, கல்லூரிக்கு போகும் போது எங்க மாமா வீட்ட கடந்துதான் போவேன். என்ன பாத்து, மாமா அவங்க பிள்ளைககிட்ட பூச்சாண்டி வருது பாரு என்பாரு. என்ன எங்க பாத்தாலும் மாமா பசங்க பூச்சாண்டின்னுதான் கூப்பிடுங்க. என் பேர் அவங்களுக்குத் தெரியாது. என் கல்யாணத்துக்கு வந்தப்ப கூட பூச்சாண்டி கல்யாணத்துக்கு நானும் வருவேன்னு அடம் பிடிச்சு வந்ததா சொல்லி எங்கிட்ட சந்தோச பட்டுக்குறாங்க.”

“ஒரு உறவினர் அவங்ளோட நாலு வயசு பையனையும் கூட்டிட்டு வீட்டுக்கு வந்திருந்தாங்க. முதலில் ஒதுங்கியே இருந்த அந்த பையன் பிறகு என் கூட விளையாடினான். வீட்டுக்கு போகும் போது அந்த அக்காவுக்கு முத்தம் கொடுத்துட்டு வா போவோம் என்றார்கள். நான் அந்த அக்காவுக்கு முத்தம் கொடுக்க மாட்டேன் அந்த அக்கா கருப்பா அசிங்கமா இருக்காங்க என்றான். மற்றவர்கள் கொல்லுன்னு சிரிச்சாங்க. நானும் சிரிச்சேன். ஆன என் கண்ணுல கண்ணீர் வந்ததை யாரும் பாக்கல.”

“ஒரு நாள் சுடிதார் எடுத்துட்டு வந்தேன். எங்க அம்மா சொல்லுது இது என்ன ஓங்கலருலேயே எடுத்துருக்க வேற கலரே கெடைக்கலயா”

முகம்

“வீட்டுல எல்லாரும் சாப்பிட்டுகிட்டு இருந்தோம். என் கல்யாண பேச்சு பத்தி பேசுணாங்க. ரெண்டு மூணு எடத்துல கேக்குறாங்க, நமக்கு சரிப்பட்டு வர்ற மாதிரியான எடத்துல குடுப்போம் அப்படின்னாங்க அம்மா. சாப்பிட்டுட்டு இருந்த அண்ணனுக்கு என்ன தோணுச்சோ. செவப்பா வர்றதுக்குன்னே என்னென்னமோ விக்கிறாய்ங்களே எதையாவது வாங்கி தடவி செவப்பா மாறு என்றான். சொன்னதோடு மட்டும் இல்லாம ஊட்டியிலேருந்து ஏதோ எண்ணையை வரவழச்சும் கொடுத்தான்.”

“நான் ஒருத்தர காதலிக்கிறேன்னு வீட்டுல சொன்னே. முதலில் மற்றவர்களை போலத்தான் ஒத்துக்கல. பிறகு அந்த பையன பாக்கணும்ன்னு சொன்னாங்க. பாத்துட்டு வந்து என் அக்கா சொன்னா அந்த பையன் செவப்பா அழகா இருக்கான். நீ கருப்பா அசிங்கமா இருக்க, இதல்லாம் நடக்காது. எங்களுக்கு நம்பிக்கை இல்ல. அவங்க வீட்டுலயும் ஒத்துக்க மாட்டாங்க. அவ்வளவு செவப்பா இருக்குற பையனுக்கு எப்படி ஒன்ன கட்டுவாங்க.”

“மாப்பிள்ள வீட்டுலேருந்து பொண்ணு பாக்க வீட்டுக்கு வந்திருந்தாங்க. வீடு கலகலப்பா இருந்துச்சு. என் தோழி ஒருத்தி வந்திருந்தா. என்னை கேலி செய்தா. தனுஷின் படிக்காதவன் படத்துல வர்ர ஆர்த்தியை பெண் பார்க்கும் சீனை வைத்து என்ன ஆர்த்தி கேரக்டரில் பொருத்தி நையாண்டி செய்தாள். (நான் சிரிச்சு சிரிச்சு பேசிட்டே இருப்பனா, அம்மாவும், அப்பாவும் ரசிச்சு ரசிச்சு கேட்டுட்டே இருப்பாங்க) இதை சொல்லிட்டு அவ விழுந்து விழுந்து சிரிச்சா. நானும் சிரிச்சுக்கிட்டே யோசிச்சேன். இந்த காமெடியில கருப்புங்குறது அசிங்கம்ணு எவ்வளவு கேவலமா சொல்லி இருக்காணுங்க.”

“கல்யாணம் நடந்தது. கல்யாணத்துக்கு வந்திருந்த சொந்தக்காரங்க எல்லாருமே, மாப்பிள்ள இவ்வளவு அழகா கலரா இருக்காரே பொண்ணு இப்படி கருப்பா இருக்கே எப்படி இந்த கல்யாணம் நடக்குது. வரதட்சண எதுவும் நெறைய செஞ்சாங்களா. இல்ல மாப்பிளய கட்டாய படுத்துனாய்ங்களான்னு பொலம்பி தீத்துட்டாங்க. மேல காலேஜ் தோழி பற்றி சொல்லியிருந்தேனே அவளும் கல்யாணத்துக்கு வந்திருந்தா. போட்டோ எடுத்திருந்தோம். அதை பார்த்த பக்கத்து வீட்டு அக்கா என் மொகத்த மறச்சு என் தோழியையும் அவரையும் பார்த்து நல்ல சோடி செவப்பா அழகா இருக்காங்க என்றாள்.”

“மறுவீட்டுக்கு வந்திருந்தோம். என் அப்பா வயல் வேலை முடிச்சுட்டு வந்தார். வந்தவர் பின்பக்கமாக வந்தார். என்னப்பா இப்படி வர்றீங்கன்னு கேட்டேன். ரொம்ப கருப்பா தெரியிரேன், அதனால குளிச்சுட்டு வாறேன் என்றார். என்னடா நம் வியாதி அப்பாவுக்கும் தொத்திகிச்சான்னு விழுந்து விழுந்து சிரிச்சேன்.”

“கல்யாணத்துக்கு மேக்கப் போட ஆள் வேண்டாம் அசிங்கமா தெரியும் என்றார்கள். நான் கேட்கவே இல்ல. எப்படியாவது கொஞ்சமாச்சும் கலரா தெரிய மாட்டோமா அப்டின்னு ஒரு ஆசையில 7000 ரூபாய் கொடுத்து பியூட்டி பார்லர்லேர்ந்து ஆள் வரவச்சு அலங்காரம் பண்ணிக்கிட்டேன். அதப் பாத்து அனைவரும் சொன்னது கரகாட்டகாரி மாதிரி இருந்துச்சுன்னுதான். கரகம் ஆடுற பெண்களும் நம்மள மாதிரி கருப்பா இருந்து மேக்கப் போடுறவங்களோன்னு நினைச்சேன். எண்ண வழிய, வழிய, முன்ன இருந்தத விட ரொம்ப கருப்பா இருந்துச்சு என்றார்கள். நாம கருப்பா பயங்கரமா இருக்கோன்னு நெனச்சேன், ஆனா மேக்கப் போட்டதுக்கு பிறகு பயங்கரமா கருப்பா இருப்போம் போல, சரி விடுங்க.”

“ஒரு நாள் நானும் என் கணவரும் வெளிய போயிட்டு வந்தோம். என் மாமியார் என் கணவனுக்கு மட்டும் திருஷ்டி சுத்தி போட்டாங்க. ஏன் அவருக்கு மட்டும் சுத்துறீங்க எனக்கு கெடயாதான்னேன். கருப்பா இருக்குறவங்களுக்கு திருஷ்டி விழாதுன்னாங்க. இன்னொரு நாள் சொன்னாங்க போற எடத்துலயெல்லாம் கேக்கறாங்க, கருப்பா இருக்குற அந்த பொண்ண எப்படி ஒம்மவனுக்கு கட்டுனேன்னு. நீங்க என்னா சொன்னிங்க என்றேன். அவன் தலையெழுத்து அப்டின்னு சொன்னே வேற என்ன சொல்ல என்று என் மாமியார் கூறியதும் என் உடல் கூசியது”.

“தோழர் ஒருத்தர சந்திச்சேன். அவர் சொன்னார் ஆயி நீங்க கருப்பா இருப்பதை அசிங்கமா நெனைக்கிறிங்க. அதுதான் நம்மோட திராவிட நிறம். செவப்புங்கறது எல்லாம் பின்னாடி கலந்து உருவானது. கருப்புதான் நம்ம ஒரிஜினல் கலரு, அதுதான் ஆரோக்கியம். எந்த வெய்யில்லயும் ஒண்ணும் செய்யாது. அதுவும் இல்லாம நீங்க ஒரு விவசாயி பொண்ணு, நீங்க இப்படிதான் இருப்பீங்க, அதுதான் பெருமையுங் கூட. திருமணத்துக்காக பியூட்டி பார்லர் போய் முகத்த பேசியல் பண்ணப் போறதா சொல்றீங்க அதெல்லாம் தேவையில்ல. கருப்புதான் உங்களுக்கு அழகு. ஒரு மனிதனுக்கு புற அழகு முக்கியமில்லை. அக அழகுதான் முக்கியம். அது உங்களுக்கு நிறைய இருக்கு. அழகுங்கிறது வயது ஆக ஆக அழிந்து போகும். நாம் செய்யும் நல்ல செயல் தான் நிலைத்து நிக்கும். நீங்க இப்படி கருப்பா இருப்பதுதான் உங்கள் அழகு என்று சொன்னவர் சொல்லிய சில மணி நேரத்துக்கெல்லாம் அவர் குழந்தையை பார்த்து மனைவியிடம் சொல்கிறார். வரவர பாப்பா ஆயி கலருக்கு வந்துரும் போலருக்கே என்றார். என்னதான் பேசினாலும் உங்களுக்குள்ளும் கலரப்பத்தின நெனப்பு இருப்பது தான் உண்மை. தனக்கு தனக்குன்னு வந்தா நெஞ்சு படக்கு படக்குன்னு அடிச்சுக்குன்னு சொல்வாங்க அது இதுதான் போலருக்குன்னு அவருகிட்ட சொன்னேன். அவரு சும்மா விளையாட்டுக்குன்னு மழுப்புனாரு.”

ஆயி சொன்ன கதைகளில் ஒரு சிலவற்றைத்தான் மேலே கூறினேன். சொல்லாத கதைகள் அதிகம் என்றாலும் கருப்பு பிரச்சினைகளை புரிந்து கொள்ள மேற்கண்ட கதைகளே போதுமானதுன்னு நினைக்கிறேன்.

ஆயி அப்பப்ப சொல்லி வருத்தப்பட்ட நினைவிலிருந்து வெளியே வந்த நான், “கவலைப்படாதே அவர்களெல்லாம் அறிவு கெட்டவர்கள், மற்றவர் மனம் புண்படாமல் பேச தெரியாதவர்கள். ஒங்கிட்ட இருக்குற நல்ல கொணந்தான் முக்கியம். மத்தவங்களுக்கு நீ செய்ற உதவிதான் ஒசந்தது. நீ நெனக்கிற மாதிரி கலருக்கு மதிப்பு கெடையாது. இதையெல்லாம் மனசுல போட்டு கொழப்பிக்காம வேலைய பாரு. கலரா நமக்கு சோறு போட போவுது” என்றேன்.

“நீ நெனைக்கிறா மாதிரி என்னோட கலர கிண்டல் பண்றவங்க மட்டும் காரணம் இல்ல. ஒன்னப்போல என்ன கிண்டல் பண்ணாதவங்களும், நான் வருத்தப்பட்றதுக்கு ஒரு காரணம். கலரு ஒரு மேட்டறே இல்லன்னு சொல்ற நீயே ஒம்பிள்ளைக்கு அமெரிக்க பௌடரு, அமெரிக்க சோப்பு  (ஜான்சன் அண்ட் ஜான்சன்), உள்ளூரு கஸ்தூரி மஞ்சள், பூலாங்கெழங்கு, பச்சபயிரு…-ன்னு போயிட்டே இருக்கியே நீ கலர பாக்கலயா? இல்ல இந்த சமூகம்தான் கலரை பாக்காம இருக்கா?” என்றாள் ஆயி.

என்னிடம் பதில் இல்லை.

 – வேணி.

 1. “நீ நெனைக்கிறா மாதிரி என்னோட கலர கிண்டல் பண்றவங்க மட்டும் காரணம் இல்ல. ஒன்னப்போல என்ன கிண்டல் பண்ணாதவங்களும், நான் வருத்தப்பட்றதுக்கு ஒரு காரணம். கலரு ஒரு மேட்டறே இல்லன்னு சொல்ற நீயே ஒம்பிள்ளைக்கு அமெரிக்க பௌடரு, அமெரிக்க சோப்பு (ஜான்சன் அண்ட் ஜான்சன்), உள்ளூரு கஸ்தூரி மஞ்சள், பூலாங்கெழங்கு, பச்சபயிரு…-ன்னு போயிட்டே இருக்கியே நீ கலர பாக்கலயா? இல்ல இந்த சமூகம்தான் கலரை பாக்காம இருக்கா?” என்றாள் ஆயி.//

  செருப்பால் அடித்தது போல் இருந்தது

 2. யானைக்கு தான் கருப்பாயிருக்கிறோம் என்று கவலை வந்துவிட்டால் பிறகு அது தன் வலிமை, கம்பீரம், புத்திசாலித்தனம், குறும்பு எல்லாவற்றையும் மறந்து தேவையில்லாமல் வெட்கமும், வேதனையும் பட ஆரம்பித்துவிடும்.. அப்பறம் யானை ரசிகர்கள் கூட அதனை கருப்பு குண்டா என்று குமட்டில் குத்தி கிண்டல் செய்ய துவங்கிவிடுவார்கள்..

 3. அட போங்க பாசு பசங்கள்ள கருப்பா இருக்குறவன் தான் கலக்குறான் இது சத்தியமான உண்மை செக்க செவேர்ர்னு சூப்பர் பிகரோட பைக்ல சர்ரு சர்ருன்னு பறந்து நமக்கு சுர்ர் ன்னு சூடேத்துரானுங்க.

 4. அய்ரோப்பியர்கள் ஆசிய இன மக்களை கருப்பர் என்றே குறிக்கின்றனர்! அஙகு மிதமான வெயில் படுவதால், அவர்கள் இயற்கையாய் ஏற்படும் தற்காப்பு அரணான கருப்பு நிறமிகளை இழந்துவிட்டனர்! இதை ஈடு செய்யவே அரை நிர்வாண சூரிய குளியலை விரும்புகிரார்கள்!நாம் பரம்பரையாக கடும் வெயில் பகுதியில் வாழ்வதால், தெவைக்கு அதிகமான கருப்புநிறத்தை பெற்றிருக்கிரோம்! இது பாதுகாப்பனது! ஆரொக்கியமானது! சிவத்த தோலை உயர்வாக கருதி, நமக்கு நாமே தாழ்வு கற்பித்துக்கொள்ளல் கூடாது! கோழி வெள்ளையாயிருந்தாலென்ன, கருப்பாயிருந்தாலென்ன ? குருமா ருசியாய் இருந்தால் சரிதான்! அம்பிக்கு ஆட்செபமில்லையே ?

  • // நாம் பரம்பரையாக கடும் வெயில் பகுதியில் வாழ்வதால், தெவைக்கு அதிகமான கருப்புநிறத்தை பெற்றிருக்கிரோம்! இது பாதுகாப்பனது! ஆரொக்கியமானது! சிவத்த தோலை உயர்வாக கருதி, நமக்கு நாமே தாழ்வு கற்பித்துக்கொள்ளல் கூடாது! //

   சரியாகச் சொன்னீர்கள்..

   // கோழி வெள்ளையாயிருந்தாலென்ன, கருப்பாயிருந்தாலென்ன ? குருமா ருசியாய் இருந்தால் சரிதான்!அம்பிக்கு ஆட்செபமில்லையே ? //

   இதை எதற்காகச் சொன்னீர்கள்..? கோழிக் குருமா எப்படி இருந்தால் எனக்கென்ன.. கடுமையாக ஆட்சேபிக்கிறேன்..

 5. கருப்பு கலர் மோசம்ற கருத்து எப்படி வந்துச்சுன்னு புரியல. திருமங்கை ஆழ்வார் பாடுகிறார், “மின்னுமா மழை தவழும் மேக வண்ணா!”

 6. இந்த நிறம் மக்களின் மேல் திணிக்கப்பட்ட ஒரு மன நோய்.. ஒருவேளை இது ஆங்கிலயேர் வழியாக வந்திருக்கலாம் ..ஐரோப்பிய மக்களுக்குதான் இந்த நிற பேதம்

 7. ஆப்பிரக்கர்களின் கருப்பையும், நமது கருப்பையும் ஒப்பீடு செய்ய முடியாது. ஆப்பிரக்கர்களுக்கு கருப்பு பற்றிய உணர்வு வெளியிலிருந்து தான் (ஐரோப்பியர்களிடமிருந்து) வருகிறது. நமக்கு அது வீட்டுக்குள்ளேயே ஏற்படுகிறது; நண்பர்கள்,சுற்றம் என்று அதிகப்படுத்தபடுகிறது. கருப்பு–வெள்ளை பற்றிய உயர்வு தாழ்வு ஐரோப்பியர்களிடமிருந்தே நமக்கு வந்தது. கிராமங்கள், சிறுநகரங்களில் வெள்ளைத்தோல் மனிதர்கள் பற்றிய கிண்டல் உண்டு; நகர்மயப்படுத்தலுடனே கருப்பு பற்றிய ப்ரக்ஞை அதிகமாகியுள்ளது. கருப்பான ஆண்கள் தப்பித்து விடலாம்; பெண்கள் நிலை சற்று மோசம். கறுப்பிலும் களை என்று ஒரு அழகு பிரயோகத்தை கண்டுபிடித்து இருக்கிறார்கள். இது பெண்களுக்கு சற்று ஆறுதல் அளிக்ககக் கூடியதாக இருக்கிறது.

  பொதுவாக, நாயர் சாதியினர் சிகப்பாக இருப்பார். ஒருமுறை குளத்தில் குளித்துக் கொண்டிருந்த ஒரு கருப்பு தேகத்தை கொண்ட நாயர், உடலை சற்று தாழ்த்தி, பின்னர் டவலை உருவிக் கொண்டு முதுகை சொறிந்தவாறும், அழுக்கை உருட்டிக்கொண்டும் இருந்தார். அதனை பார்த்த ஒரு பெரியவர் ‘சூத்திரன், கறுத்தாலும் இங்கன கறுக்குமோ ?’ என்று கிண்டல் செய்தார். குமரிமாவட்டத்தில், நாயர்களை சூத்திரர்கள் என்றே பிற சாதியினர் குறிப்பிடுவர்.

  பொதுவாக சண்டை மனநிலையில் கருப்பான நிறம் உடையோரை இழிவுபடுத்துவது நடக்கிறது. காக்கா, அண்டங்காக்கா என்று. இங்கே இந்த பெரியவரின் கிண்டலில் இருந்தது ஒரு வரலாற்று கோபம்; ஆங்கிலேயர்களை கும்பினி என்றும் வெள்ளையர் என்றும் சுதந்திர போராட்ட காலத்தில் அழைத்தது போல.

  • // இங்கே இந்த பெரியவரின் கிண்டலில் இருந்தது ஒரு வரலாற்று கோபம்; ஆங்கிலேயர்களை கும்பினி என்றும் வெள்ளையர் என்றும் சுதந்திர போராட்ட காலத்தில் அழைத்தது போல. //

   ஆங்கிலேயர்கள் East India Company-ஐ ஈஸ்ட் இண்டியா கொம்ப்பெனி என்று உச்சரித்ததால் தமிழ் மொழி பெயர்ப்பில் கும்பினி, கும்பினியார் என்று அழைக்கப்பட்டு பிரிட்டிஷ் அரசியின் நேரடி ஆட்சியின் கீழ் இந்தியா வந்தபின்பும் ஆங்கிலேயர்களை கும்பினியார், கும்பினி என்றே தொடர்ந்து அழைத்து வந்தனர்.. கும்பினி என்பது மங்குனி போன்ற வசவுச் சொல்லாகத் தெரியவில்லை..

 8. sukdev,karupagavum pala nairsgal irukkanga.

  indha vellai,karuppu issue britishargalal pugutha patta ondru and namma orru kanakkkula evlo vellaya irunthalum veliya poi suthunaale konjam taan aagum,adhu nalla prakasamagavum irukkum.

  Kalai enbathu,mugathin azhagu alla,adhu agathin azhagu.

  oru person evelavu azhaga irunthalum ummana moonjiya irntha yaarukkum pudiakkathu.

 9. கருப்பு பற்றி சொல்லப்படுவதெல்லாம் உண்மைதான்.ஆனால் கதையில் யதார்த்தமாகச் சொல்லப்படவில்லை.வலிந்து மிகைப்படுத்தி சொல்லியிருப்பது போல் தெரிகிறது.இது கதையா?கட்டுரையா என்று தெரியவில்லை.ரொம்பவும் கருப்பாக இருப்பவர்கள் மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பது உண்டு தான்.தமிழ் நாட்டில் கருப்பர்கள்தான் மெஜாரிட்டி.அவர்கள் நிறத்தை அவ்வளவாகக் கண்டுகொள்வதில்லை.கவுண்டமணி,செந்தில் போன்ற சினிமா கழிசடைகள் வந்துதான் கருப்பை கேவலப் படுத்தினார்கள்,அவர்களும் கருப்பு என்றபோதிலும்.பன்னாட்டு நுகர்வுக் கலாசார காலகட்டத்தில் லாப நோக்கத்திற்காக நிறம் முக்கியத்துவம் பெறுகிறது.இது ஒழிக்கப் பட வேண்டும்.

  • இங்கு சொல்லப்பட்டிருக்கும் அனைத்தும் உண்மையில் நடந்தவைதான். தமிழ்நாட்டில் கருப்பு நிறம் அதிகம் என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை வெள்ளையாக வேண்டும் என்ற விருப்பமும், முயற்சிகளும்!

   • உண்மை தான். சில உண்மைகளை அப்படியே ஏற்றுக்கொள்வதற்கு மனது தயங்குகிறது. ஏனெனில் அந்த தவறுகளை நாமும் நம் அன்றாட வாழ்வில் செய்து கொண்டிருக்கிறோமே என்பதால் தான். தாய் என்ற வார இதழின் ஆசிரியராக இருந்த திரு. வலம்புரி ஜான் அவர்கள் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் அவர் கூறியிருந்ததின் கருத்தாவது: “நான் இரண்டு முகத்துடன் இருக்க விரும்பவில்லை. அதாவது நான் உருவத்தில் நானாகவே இருக்க விரும்புகிறேன். மேக்கப் செய்து கொள்வதன் மூலம் என்னை நான் இரண்டாக உருவகப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை”. (வெள்ளையாக இருப்பவர்கள் மேலும் அழகைக் கூட்ட வேண்டும் என்பதில் எவ்வளவு சிரத்தை எடுத்துக் கொள்கிறார்களோ அதைப் போல் கருப்பாக இருப்பவர்களும் அதிக சிரத்தையுடன் மேலதிகமாக் தாழ்வு மனப்பான்மையையும், கவலையையும் ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.) ஆனால் நடைமுறையில் நாம் நம்மை வேறு விதமாக தோற்றமளிக்க வேண்டும் என்பதற்காக எந்தளவிற்கு சிரமங்களை ஏற்படுத்திக் கொள்கிறோம். சாதாரணமாக கண்பார்வைக்கான கண்ணாடி வாங்கும் போது கூட அதில் நம் தோற்றத்தை அழகாக காண்பிக்க வேண்டும் என்பதற்காக எத்தனை பிரேம்களை மாற்றி மாற்றி மாட்டிப் பார்க்கிறோம். இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். இது எப்படி ஆரம்பித்தது என்ற கேள்விக்குறியோடு, இதிலிருந்து எவ்வாறு, எப்படி விடுபடுவது என்பதும் பெரிய கேள்விக்குறி தான்.
    வைத்தீஸ்வரன் ஜோசியரின் மேல் வழக்கு போட்டது போல், வெள்ளையாக்குகிறேன் பேர்வழி என்று சொல்லி விதவிதமான கிரீம்களை சந்தையில் இறக்கிக் கொண்டிருக்கும் கம்பெனிகளின் மேல் கேஸ் போடமுடியாதா?

 10. ஆசிரியர் தனது கருப்பு நிறத்தால் மிகவும் தாழ்வுமனப்பான்மை கொண்டுவிட்டார் போல, அதையே பெறும் பிரச்சனையாக கருதி சலிப்பேற்றும்படி மிகைப்படுத்தி எழுதியுள்ளார்.

  பெண்களுக்கு நிறமெல்லாம் ஒரு பிரச்சனையே அல்ல. நாள்தோறும் நடக்கும் பாலியல் கொடுமைகளோ சாதிய வன்கொடுமைகளோ நிறத்தை பார்த்து நடப்பதில்லை.

  எனவே வேணி, நீங்கள் உங்கள் தனது புற அழகை முதலாளிகளின் விளம்பரம் சொல்லும் அழகுடன் ஒப்பிட்டு மனம் வருந்தவேண்டாம். கோடிக்கணக்கான கறுப்பு நிறத்தவர்களுக்கு மத்தியில் வெறும் ஆயிரக்கணக்கான சிவத்த தோலுடையவர்கள் இருக்கும் நமது ஊரில் விதிவிலக்காக நடக்கும் இது போன்ற நிகழ்வுக்களுக்காக புலம்பாமல் அதை புறக்கணிப்பதே சரியான வழிமுறை.

  தரமான கட்டுரைகளை வெளியிடும் வினவு இதையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும்

  • இதனை ஒரு புனைவு என்று புரிந்து கொண்டு உரையாடுவதே சிறந்த முறை

   • செவத்திவீரன் & ஈழநாதன், பல நேரங்களில் எதார்த்தமான சம்பவங்கள் புனைவை விட நம்பமுடியாத காட்சிகளோடு இருக்கும்.

    எனது பள்ளிக்கால நண்பன் ஒருவன் நல்ல பருமனானவன். சாதாரண குடும்பம் தான், சின்ன வயதில் தைராய்டு பிரச்சினை ஏதோ வந்து குண்டாகி விட்டான். நல்ல அடர் கருப்பு நிறம். நண்பர்கள் வட்டத்தில் அவனுக்கு காட்டெறுமை கமாலா (அந்தக் காலத்தில் WWFல் வந்த ஒரு நீக்ரோ மல்யுத்த வீரன்) என்று பட்டப்பெயர். அதைச் சுருக்கி கக்கா என்று கூப்பிடுவார்கள். சொல்பவர்கள் எல்லோருக்கும் சொல்லும் போது அத்தனை சந்தோஷம். கொல் என்று சிரிப்பார்கள். அவனும் சிரிப்பான். ஆனால், இப்படிக் கூப்பிட்டது அவனது மனதில் ஆழப்பதிந்து விட்டது. தான் குண்டாக இருக்கிறோம். தன்னால் ஓடியாடி விளையாட முடியாது, தனக்கு கல்யாணம் நடக்காது என்று பல்வேறு பயங்கள் அவனுக்கே தெரியாமல் உருவாகி விட்டது.

    கல்லூரியிலும் அவன் என்னோடு தான் படித்தான். உடல் இளைக்க வேண்டுமென்று ஒழுங்காக சாப்பிடாமல் பல நாட்கள் வகுப்பை கவனிக்க முடியாமல் சோர்ந்து கிடப்பதை பார்த்திருக்கிறேன். அப்போது நானும் கூட அவனைக் கின்டல் அடித்திருக்கிறேன். பின்னர் இந்த தாழ்வு மனப்பான்மை அதிகரித்து படிக்க முடியாமல் இடையிலேயே நின்று விட்டான். இன்று ஊரில் கால் டாக்சி ஓட்டுகிறான். பார்க்கும் போது மனம் கணத்துப் போகிறது. நானும் கூட இதற்கு ஒரு காரணமாகி விட்டிருக்கிறேன்.

    மாட்டுச் சாணியைத் தின்றால் உடல் இளைக்கும் என்று சொன்னால் கூட கேட்டுக் கொள்ளும் அளவுக்கு அப்போதெல்லாம் அவன் அப்பிராணியாக இருந்தான். வாலிப பிராயத்தில் உடல் இளைக்க அவன் செய்த சில காரியங்களை கேட்டால் எவருமே நம்ப மாட்டார்கள்.

    நாம் போகிற போக்கில் உடலியல் ரீதியாக என்னத்தையாவது சொல்லி விட்டுப் போய் விடுகிறோம். எதிர் தரப்பில் அது என்னவகையாக எல்லாம் வினையாற்றும் என்று நமக்கு எப்படித் தெரியும்? அவர்கள் என்றாவது சொல்லும் போது தானே தெரிந்து கொள்ள முடியும்? கட்டுரை ஆசிரியர் கருப்பாயிக்கு அந்த வாய்ப்பு கிடைத்ததால் தெரிந்து கொள்ள முடிந்தது. இதே சிறு நகரங்களில் வளர்ந்த என்னைப் போன்றவர்களுக்குத் தெரியும், பள்ளிகளில் கரிச்சட்டி, கரியன், கருவாயன், குரூட் ஆயில் என்கிற பட்டப்பெயர்கள் சாதாரணம். அவர்களில் எத்தனை மனம் நொந்த கருப்பாயிகள் இருந்திருப்பார்கள் என்று இப்போது யோசித்து வருந்துகிறேன்.

 11. கருப்பாக குட்டையாக குண்டாக ஒல்லியாக இருப்பதெல்லாம் எய்ட்ஸ் போல ஒரு கொடிய ஆட்கொல்லி நோய் என்பதை இந்த அனுபவப் பகிர்வும்-விவாதங்களும் தெள்ளத்தெளிவாய் விளக்கிவிட்டது. தயவு செய்து இவ்வாறு இருப்பவர்களையெல்லாம் கருணையோடு அரவணைத்துச்செல்லுங்கள் உங்கள் பிள்ளைகளுக்கும் அவ்வாறே கற்றுக்கொடுங்கள் ஏனெனில் அவர்களுக்கு தேவை உங்கள் பரிகாசம் அல்ல அன்பு மட்டுமே

  அன்பே சிவம்

 12. பிள்ளை சிவப்பாக பிறக்க வேண்டும் என்று காஷ்மீரத்து குங்குமப்பூ கரைத்து குடிக்கும் இளந்தாய்மார்களும், பில்லை சிறிது நிறக்குறைவாய் பிறந்துவிட்டால், மற்றபடி நல்ல களையாய் ஆரோக்கியமாயிருந்தாலும், முகம் காட்டும் பிள்ளை வீட்டாரும் இன்றைக்கும் உள்ளனரே! முக்கியமாக முன்னேறிய சாதியினர்!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க