
வீட்டு பணிப்பெண்ணாக வேலை பார்த்துவந்த 13 வயது பியா என்ற சிறுமியின் மீது ஜம்மு காஷ்மீர் போலீஸார் “தற்கொலை முயற்சி” குற்றப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஜம்முவில் உள்ள கோல் குஜ்ரால் பகுதியில் வசிக்கும் வக்கீல் ஒருவர் வீட்டில் பியா வேலை பார்த்து வந்தாள். மே 8-ம் தேதி அவர்கள் வீட்டில் குளியல் அறையில் உள்ள தண்ணீர் குழாயில் தூக்கு போட்டு தற்கொலை செய்ய முயற்சித்திருக்கிறாள். மிகவும் ஆபத்தான நிலையில் ஜம்மு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இப்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறாள்.
இன்ஸ்பெக்டர் அர்விந்த் சாமியல், “பியா வேலை செய்து வந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்” என்றும். “குளியலறையில் உள் தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு தற்கொலை செய்ய முயற்சித்த பியாவை, 5 – 7 நிமிஷங்களுக்குள், கதவை உடைத்து வெளியில் கொண்டு வந்து மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள்” என்றும் குறிப்பிட்டார்.
வழக்கு தொடர்பான விசாரணை துவக்க நிலையில் உள்ளது என்றும், மருத்துவ பரிசோதனை அறிக்கைகளுக்காக காத்திருப்பதாகவும் இன்ஸ்பெக்டர் தெரிவித்தார். “இதுவரை பாலியல் ரீதியான தாக்குதல் அல்லது பலாத்காரம் நடைபெற்றதாக குற்றப் பதிவு செய்யவில்லை” என்றும், “மருத்துவ பரிசோதனை அறிக்கைகள் வந்தவுடன் சட்டம் தன் கடமையைச் செய்யும்” என்றும் கூறியுள்ளார்.
பியாவின் எஜமானரின் தந்தை ஜம்முவில் முன்னணி குற்றவியல் வழக்கறிஞராக உள்ளார். இரண்டு முறை ஜம்மு பார் அசோசியேஷன் தலைவராகவும், சிட்டிசன் கூட்டுறவு வங்கி மற்றும் ஜம்மு காஷ்மீர் கூட்டுறவு வீட்டு வாரிய கார்போரேஷனின் நிர்வாகத் தலைவராகவும் இருந்து வருகிறார். அந்தஸ்தும், அதிகார வர்க்க ஆளுமையும் கொண்ட பெரிய மனிதரின் வீட்டின் விஷயம்தான் 13 வயது சிறுமியான பியா வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்ததும், அவள் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்ததாக சொல்லப்படுவதும்.
இந்த சம்பவத்தை பற்றி செய்திகள் வெளியிடாமல் ஊடகங்கள் முடக்கப்பட்டுள்ளதாக ஜம்முவில் உள்ள குழந்தைத் தொழிலாளிகள் நல ஆர்வலர் ஒருவர் தெரிவிக்கின்றார். பியா சிகிச்சை பெற்றுவரும் ஐ.சி.யூ பிரிவுக்கு வெளியில் ஜம்மு காஷ்மீர் போலீசின் தலைமை குற்றவியல் விசாரணை அதிகாரி முகாமிட்டு ஊடகங்களை அனுமதிக்காமல் காத்து வருகின்றார்.
சுயநினைவு கூட இல்லாத அந்த சிறுமியின் மீது தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ள கடமை தவறாத காவல் துறை, சட்டத்தில் புரளும் அந்த குடும்பத்தினர் ஒரு மைனர் சிறுமியை வீட்டு பணியாளராக அமர்த்தியதற்காகவோ, தற்கொலைக்கு தூண்டியதாகவோ வழக்கு பதிவு செய்யவில்லை.
இந்தியா முழுவதும் பியாவை போல் 1.26 கோடிக்கும் அதிகமான குழந்தைகள் பணக்கார, நடுத்தர, மற்றும் மேட்டுக்குடியினர் வீட்டில் பணியாளார்களாக அமர்த்தப்பட்டுள்ளனர். மணிக் கணக்கில் வேலை, வீட்டில் எல்லோரும் சாப்பிட்ட பிறகு மிஞ்சும் உணவு, சொற்பமான கூலி என்று இந்த குழந்தைத் தொழிலாளர்கள் கொத்தடிமைகள் போலவே நடத்தப்படுகின்றனர்.
நூற்றுக்கணக்கான இத்தகைய சம்பவங்களில் சில மட்டுமே ஊடகங்களில் வெளி வருகின்றன.
கடந்த பிப்ரவரி 17-ம் தேதி, ஜம்முவில், 12 ஆவது வகுப்பு படித்து வந்த மாணவன், தன்னை வேலைக்கு வைத்திருந்த ஓய்வு பெற்ற தலைமை இன்ஜினியர் வீட்டில் தூக்கு போட்டுக்கொண்டு இறந்தான். ஏப்ரல் 24-ம் தேதி அஸ்ஸாமைச் சேர்ந்த சமீர் முண்ட என்ற 15 வயது சிறுவன், ஸ்ரீநகரில் அவன் வேலை செய்து வந்த வீட்டில் தூக்கு போட்டுக் கொண்டுள்ளான்.
2011 அக்டோபர் 2-ம் தேதி டோடா மாவட்டத்தை சேர்ந்த 12 வயது நிரம்பிய சுபாஷ் என்ற சிறுவன், வேலை செய்து வந்த வீட்டின் குளியல் அறையில் தண்ணீர் குழாயில் தூக்குபோட்டு கொண்டு இறந்துள்ளான்.
நவம்பர் 2011-ல் பல்கலைக் கழக பேராசிரியர் வீட்டில் வேலை பார்த்து வந்த 10 வயது சிறுவன் அவரால் மிக மோசமாக அடிக்கப்பட்டு, சித்திரவதைக்கு ஆளாகி இருக்கிறான்.
நடுத்தரவர்க்க வணிகர் வீட்டில் வேலைபார்த்துவந்த சஞ்சனா என்ற 14 வயது பெண், எஜமானர்களால் முதுகுத் தண்டு உடைக்கப்பட்டு எதிர்காலமே பாதிக்கப்பட்டுள்ள நிலைக்கு தள்ளப்பட்டுள்ளாள்.
வட இந்தியாவில் நிலவும் நிலப்பிரபுத்துவ விழுமியங்களின் சுவடுதான் வீட்டில் வேலையாட்களை அடிமைகளாக அதட்டி மிரட்டி வேலை வாங்கும் பழக்கம். வீட்டு வேலை, சமையல், குழந்தை பராமரிப்பு, வயதானவர்கள் பராமரிப்பு என்று சகலத்திற்கும் ஒரு வேலையாள் தேவைப்படுகிறது. அவர்கள வீட்டில் உள்ள குழந்தைகளின் வயதை ஒத்த இவர்களை வேலை வாங்குவதைப் பற்றி அவர்களுக்கு எந்த சலனமும் இருப்பதில்லை; குழந்தை பணியாளாக இருந்தால் அடங்கி இருப்பார்கள், விட்டு விட்டு வேறு இடங்களுக்கு போய் விட மாட்டார்கள் என்ற காரணங்களால் இவர்களை தேர்வு செய்கிறார்கள்.
பீகார், ஜார்கண்ட், தமிழ்நாடு, அசாம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் இருந்து குழந்தைகள் பிற மாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றனர். விவசாயம் பொய்த்துப்போன கிராமங்களில் குழந்தை தொழிலாளர்களை சேகரிக்கும் வேட்டையில், கிராமத்தில் இயங்கும் ஒப்பந்தக்காரர்கள் மூலம் நகரங்களில் இயங்கும் பணியாட்கள் வழங்கும் ஏஜென்சிகள் செயல்படுகின்றனர். குழந்தைகளின் பெற்றோர் ஒப்பந்தத் தொழிலாளிகளாக குழந்தைகளை விற்கின்றனர்.
மொழி தெரியாமல், வேலை பற்றி எந்த அறிமுகமும் இல்லாமால், தன் பெற்றோரையும், உடன் பிறந்தவர்களையும் உயிருடன் திரும்பி வந்து பார்ப்போமா என்ற கேள்விகளுடன் அவர்களது அடிமை வாழ்வு ஆரம்பிக்கிறது.
திருப்பி தாக்க தெரியாத இந்த பிள்ளைகள் மீது அடி உதைகள் முதல் பாலியல் வன்முறை வரையிலான தாக்குதல்களும் நடத்தப்படுகின்றன. அவர்கள் வீட்டு குழந்தைகளும் வேலையாட்கள் செய்யும் வேலைகளை கேவலமாக கருதி அவர்கள் மீது மரியாதையின்றி வளர்கிறார்கள், கிடைக்கும் சந்தர்ப்பங்களில் அவர்களை ஒடுக்கவும் கற்றுக் கொள்கிறார்கள்.
ஒரு வீட்டு செல்லப் பிராணிக்கு கிடைக்கும் அன்பும் அரவணைப்பும் கூட கிடைக்காத இந்த குழந்தை பணியாளர்கள், பெற்றவர்கள், உறவினர்கள் என்று எல்லாரையும் விட்டு, மொழி தெரியாத ஊரில், கொடுமையான வேலை நிலைமைகளுடன், நிறைவேறாத ஏக்கங்களுடன் வாழ்கின்றனர். கொடுமைகளை தாங்க முடியாத சூழலில் தான் உயிரையும் போக்கிக் கொள்ளத் துணிகின்றனர் அல்லது எஜமானர்களின் தாக்குதல்களால் கொல்லப்படுகின்றனர்.
பல குழந்தைகள் பெற்றவர்களிடமிருந்து கடத்தப்பட்டு, ஒப்பந்த தொழிலாளிகளாக வீட்டு வேலைகளிலும், விபசாரத்திலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கடந்த ஏப்ரல் 11 2012-ம் தேதி அன்று ஜார்கண்டில் கடத்தி செல்லப்பட்ட 10 – 14 வயது நிரம்பிய இரண்டு பெண் குழந்தைகள், இரண்டு நாட்களுக்குள் டெல்லியில் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட ஜோதி என்ற 10 வயது சிறுமியின் சடலத்தை கூட அவளது சொந்த ஊரான ஜார்கண்டுக்கு கொண்டு போக முடியவில்லை. அந்த சிறுமியின் முகத்தைக் கூட கடைசியாக ஒரு முறை அவளுடைய தாயும், கூடப்பிறந்தவர்களும் பார்க்க முடியாமல் டெல்லியில் அவளது தந்தையே இறுதிச் சடங்கை செய்து முடித்திருக்கிறார்.
ஏட்டளவில் இருக்கும் சட்டங்களால் குழந்தை தொழிலாளிகளின் நிலைமை மாறப்போவது இல்லை என்பதை தான் பியாவின் பரிதாப நிலை நமக்கு புரியவைக்கிறது. இந்திய கிராமங்களில் வாழ்வாதாரம் அழிப்பு, நகர்ப்புற மேட்டுக் குடியினரின் பணத் திமிர் இந்த இரண்டும் இருக்கும் வரை பியாக்கள் கொல்லப்படுவது தொடர்ந்து கொண்டே இருக்கும்.
– ஜென்னி
மேலும் படிக்க
- Minor domestic help makes abortive bid on life
- Chennai teenager in critical condition in Jammu hospital
- Inside slave city
- Child domestic workers
- Is hiring children as domestic workers okay
- Domestic worker
- I’d rather die than clean your house
- NHRC takes cognizance of plight of tribal girls
- Maids – placement agencies counselling sessions
குழந்தைகளை வேலைக்கு அமர்த்துபவர்களை மட்டும் குற்றம் சொல்லிப்பயனில்லை. குழந்தைகளை வேலைக்கு வைத்துக்கொள்வதை இல்லாதொழித்துவிட்டால் மட்டும் இந்தக் குழந்தைகளின் எதிர்காலம் நன்றாகிவிடுமா?
குழந்தைகளை வளர்க்க தேவையான அடிப்படைப் பொருளாதாரம், அவர்களை நன்மக்களாக்கும் முதிர்ச்சி இல்லாது, குழந்தைகளை எண்ணுக்கணக்கற்றுப் பெற்றுத்தள்ளி தங்கள் பொருளாதாரச்சுமையை குழந்தைகளிடம் கொடுக்கும் ஏழைப் பெற்றோர்களும் குற்றவாளிகளே. இங்கே ஏழைகள் இரண்டு வகை: (1) தமது வருமானத்திற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்ளாதோரும் வருமானத்திற்கேற்ப வாழ்க்கையை அமைத்துக்கொள்ளத் தெரியாதவர்களும், (2) வாய்ப்புக்கள் மறுக்கப்பட்டவர்கள். இங்கேயுள்ள ஏழைகள் எல்லோரும் வாய்ப்புக்கள் மறுக்கப்பட்டவர்களா?
அப்படியே குழந்தைகளுக்குத் தேவையான உணவு, கல்வி போன்றவற்றை உறுதி செய்யத்தவறும் அரசும் கூடக் குற்றவாளியே.
The National Commission for Protection of Child Rights (NCPCR), State Commissions for Protection of Child Rights (SCPCR) போன்ற தேசிய, மாநில அளவிலான குழந்தைகள் உரிமை பாதுகாப்பு அமைப்புகள் என்னாதான் செய்கின்றன..?!
இந்த தொகுப்பை கொடுத்த ஜன்னிக்கு முதலில் நன்றி… குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு சட்டம் இந்த அரசு போட்டாலும் குழந்தைக்கான எதிரான குற்றங்கள் தொடர்கிறதே ஏன்?உழைக்கும் மக்கள் நம்பும் முதலாளித்துவ அரசு திட்டமிட்டே ஏழைக்குழந்தைக்களுக்கு கல்வியில் தனியார்மையத்தை புகுத்தி கல்வி கற்பதிலிருந்தே விரட்டிவிட்ட இந்த அரசை ஒழிக்காமல் குழந்தை தொழிலாளர் அவல நிலையை ஒழிக்க முடியாது. எனவே வர்க்கமாய் ஒன்றினைவோம்.குழந்தைகள் கல்வி பெறும் உரிமைக்கு போராடுவோம்.