Sunday, November 3, 2024
முகப்புபார்ப்பனிய பாசிசம்சிறுபான்மையினர்அயோத்தி : ரியல் எஸ்டேட் மாஃபியாக்களாக சாமியார்கள் !

அயோத்தி : ரியல் எஸ்டேட் மாஃபியாக்களாக சாமியார்கள் !

-

பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் இராமன் பிறந்தான் என்றும், அங்கே இருந்த கோயிலை இடித்து விட்டுத்தான் பாபர் மசூதியைக் கட்டியதாகவும் ஒரு பொய்யை அவிழ்த்து விட்டு, அதை வரலாறாக்கி, வழக்காகவும் ஆக்கி, அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் தனக்கு சாதகமாகத் தீர்ப்பும் பெற்றிருக்கிறது சங்க பரிவாரக் கும்பல். இப்பிரச்சினைக்காக நாடு முழுவதும் கொல்லப்பட்ட முஸ்லீம் மக்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காதது.

ஆனால் இதே ராம ஜென்ம பூமி பிரச்சினை அயோத்தி நகரின் இந்து சாமியார்களையும் காவு வாங்கியிருக்கிறது. அவர்களுடைய மடங்களைப் பறித்திருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? இந்த உண்மையை சமீபத்திய ‘ஓபன் தி மாகசின்‘ ஒரு கட்டுரையாக வெளியிட்டுள்ளது. அதன் சுருக்கப்பட்ட தமிழாக்கத்தை கீழே தருகிறோம்.

ராமஜென்ம பூமி என்பது மத நம்பிக்கை தொடர்பான பிரச்சினை அல்ல, பார்ப்பன இந்து மதவெறி பாசிஸ்டுகள் அதிகாரத்தைக் கைப்பற்றும் பொருட்டு, பயன்படுத்தும் அரசியல் பிரச்சினை என்பதை நாம் அறிவோம். மக்களின் மத நம்பிக்கை என்ற போர்வைக்குள் ஒளிந்து கொள்ளும் பாசிசக் கிரிமினல்களின் உண்மையான முகத்தை அம்பலப்படுத்திக் காட்டுகிறது இக்கட்டுரை.

ரணம் நெருங்கி விட்டது போலிருந்தது. கை கால்களை அசைக்க முடியவில்லை; கண்கள் இருண்டு போயிருந்தன; தாடைகள் இறுகியிருந்தன; மூக்கும் வாயும் நசுக்கப்பட்டு மூச்சு திணறியது. மூச்சு விட போராடியதில் உடலெங்கும் சுரீரென்று வலி பரவியது.

அப்புறம் என்ன ஆச்சு? ராம் அசாரே தாஸ் சொல்கிறார்,

“அவ்வளவுதான், இதற்கு மேல் போராடி பலனில்லை என்று நினைத்த சமயம் என் கண்ணெதிரே பகவான் ஹனுமான் முழு தேஜசுடன் காட்சியளித்தார். அவர் காலில் விழுந்து என்னை காப்பாற்றும்படி கதறினேன். அந்தக் கணத்திலேயே என் கைகளிலும் கால்களிலும் புதிய சக்தி பாய்ந்தது, புது வேகத்துடன் அந்த கொலைகாரப் பிடியிலிருந்து தப்பினேன். படுக்கையிலிருந்து குதித்து இறங்கி, அலறிக் கொண்டே கோயிலிலிருந்து ஓடினேன்‘.

அயோத்தி பாப்ரி மசூதி
பாப்ரி மசூதி இடித்த பிறகு பக்தியோடு போட்டி போடும் ரியல் எஸ்டேட் !

ராம் அசாரே தாசை பொறுத்த வரை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இரவில் நடந்த அந்த தாக்குதலிலிருந்து அனுமான்தான் அவரைக் காப்பாற்றினார். இருப்பினும் அனுமாரால் அவருடைய சொத்தைக் காப்பாற்ற முடியவில்லை. அவர் பீடாதிபதியாக இருந்த அயோத்தியின் ராம்கோட் பகுதியில் 7.5 ஏக்கரில் அமைந்துள்ள சௌபுர்ஜி கோயிலின் பல கோடி மதிப்பிலான சொத்து அவருடைய கையை விட்டு போய்விட்டது. ‘நாகா வைராகி‘ என்று அழைக்கப்படும் முரட்டு சாமியார் பிரிவைச் சேர்ந்த அவர் இன்றைக்கு தன்னுடைய 90 வயதில் நாடோடியாக வாழ்ந்து வருகிறார்.

கோயிலுக்கு திரும்பி போனால், புதிய பீடாதிபதியாக முடி சூட்டிக் கொண்டிருக்கும் தன்னுடைய முன்னாள் சீடரால் கொல்லப்பட்டு விடுவோம் என்று அவர் பயப்படுகிறார். விஸ்வ ஹிந்து பரிஷத்தின் அயோத்தி நகரக் கிளைத் தலைவரான பிரிஜ்மோகன் தாஸ் என்பவர்தான் அந்த ‘கொலைகாரச்’ சீடர்.

“மூன்று வருடங்களுக்கு முன்பு கோயிலின் விவகாரங்களை கையாளுவதற்கு வசதியாக தனக்கு பவர்-ஆப்-அட்டர்னி எழுதித் தரும்படி என்னிடம் கேட்டான். ஆனால், கோயிலின் பீடாதிபதி பதவியையே தன் பெயரில் பதிவு செய்து கொண்டு, என்னை ஏமாற்றி ஆவணங்களில் கையெழுத்து வாங்கி விட்டான். ஒரு வருடம் எதுவும் சொல்லவில்லை, அதற்கு பிறகு அங்கு இருப்பதற்கு எனக்கு உரிமை இல்லை என்றும் நான் இடத்தை காலி செய்ய வேண்டும் என்றும் மிரட்ட ஆரம்பித்தான். நான் கிளம்பாததால், அன்றிரவு என்னைக் கொல்லப் பார்த்தான். அத்தோடு அந்த இடத்தைக் காலி செய்து விட்டேன்” என்கிறார் ராம் அசாரே தாஸ்.

இப்போது கோயிலையும் அதன் சொத்தையும் முழுமையாக தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பிரிஜ்மோகன் தாஸ், குருவின் மென்னியைத் திருக முயற்சித்ததையோ கோயில் சொத்தை ஏமாற்றி வாங்கியதையோ மறுக்கிறார். “என் குரு அயோத்தியின் நில மாஃபியாக்களின் கைக்குள் போய் விட்டார். அவர் கோயிலின் நிலத்தை விற்று விட விரும்பினார். அதை நான் அனுமதிக்கவில்லை, அதனால்தான் என் மீது இது போன்ற அவதூறுகளை சொல்கிறார்” என்கிறார். “இந்து மதத்தை பாதுகாப்பதுதான் என் முதல் கடமை, அதை நான் செய்யவில்லை என்றால் அயோத்தியில் வாழ்வதற்கே எனக்கு உரிமை இல்லை”

ஒரு விதத்தில் பார்த்தால் ராம் அசாரே தாஸ் அதிருஷ்டசாலி. அவர் உயிரோடு தப்பிப் பிழைத்ததற்காக சந்தோஷப்பட வேண்டும். சொத்துக்காக பீடாதிபதிகள் கொலை செய்யப்படுவது அயோத்தியில் அதிகரித்திருக்கிறது. கோயில்களுக்கும் மடங்களுக்கும் சொத்தாக பெருமளவிலான நிலங்கள் இருக்கின்றன. நவாபுகளும் காலனி ஆட்சிக்காலத்து சிற்றரசர்களும் தானமாக கொடுத்த நிலங்கள் அவை.

யோத்தியின் அனைத்து கோயில் நிலங்களும் “தேவதா” நிலங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றின் உடைமை எந்த மனிதரின் பெயரிலும் இல்லாமல் கடவுளின் பெயரில் இருப்பதால், கடவுளை (கோயிலை) தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் அதன் உரிமையாளர் ஆகி விடுகிறார். (பாபர் மசூதி வழக்கிலும் குழந்தை இராமன் சிலைதான் இடத்தின் உரிமையாளர், இராமனுடைய காப்பாளரான தேவகி நந்தன் அகர்வால் என்பவர்தான் வழக்கின் எதிர் மனுதாரர்- கட்டுரையாளர்) உத்தர பிரதேசத்தின் சொத்து கையளிப்பு சட்டத்தின்படி ஒவ்வொரு பகுதியின் ஆணையரும் தேவதா நிலத்தை விற்பதற்கு அனுமதி வழங்க முடியும். கடவுளின் காப்பாளர்களான மடாதிபதிகள்தான் நிலத்தின் உரிமையாளர்கள் என்பதால், கடவுளின் பெயரில் இருக்கும் நிலங்கள் அடிக்கடி கைமாறுகின்றன.

நிலங்களை கைப்பற்றுவதற்காக தமது குருநாதர்களுக்கு எதிராக சிஷ்யர்கள் தீட்டும் சதித்திட்டங்களின் நெடி நகரம் முழுவதும் நிரம்பியிருக்கிறது. குருவைக் கொல்ல சீடர்கள் சதி செய்கிறார்கள். சீடர்கள் ஒருவரையொருவர் கொல்லச் சதித்திட்டம் தீட்டுகிறார்கள். சச்சரவுக்குள்ளாகாத எந்த ஒரு கோயிலையும் அயோத்தியில் பார்க்க முடிவதில்லை.

ராமன் பிறந்த இடம் என்ற சிறப்பு அப்பாவி பக்தர்கள் மனதில் அயோத்திக்கு இருக்கிறது. ஆனால், அயோத்தியின் கோயில்களிலும் ஆசிரமங்களிலும் நடக்கும் வாரிசுரிமைப் போர்களைப் பற்றி அவர்களுக்குத் தெரியாது. நகரத்தின் சாது சமூகத்துக்கு சட்ட ஒழுங்கு என்றால் என்னவென்றே தெரியாது என்று சொல்லுமளவுக்கு பல வன்முறை சம்பவங்கள் அரங்கேறுகின்றன. ‘தடி எடுத்தவன் தண்டல்காரன்’ என்பதுதான் நடைமுறை விதியாக இருக்கிறது. இது மக்கள் மத்தியில் நாட்டுப்புற பாடலாகவே உருவெடுத்திருக்கிறது.

‘காலைப் பிடிச்சி சாமியாரு ஆனாங்க
மென்னியப் பிடிச்சி மடாதிபதி ஆனாங்க;
பாரம்பரியத்தையும் மறந்தாச்சு
பாடங்களையும் மறந்தாச்சு;
ஹே ராமா, மீண்டும் பூமிக்கு வா
இவங்களுக்கு நல்ல புத்தி கொடு‘

1980களின் மத்தியில்தான் இது எல்லாம் ஆரம்பித்தது என்று என்கிறார்கள் அயோத்தியின் சாதுக்கள். பாப்ரி மஸ்ஜித் இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்காக சங்க பரிவாரத்தின் விஸ்வ ஹிந்து பரிஷத் அந்த நேரத்தில்தான் ஆள் திரட்ட ஆரம்பித்திருந்தது.

அயோத்தியின் மடாதிபதிகளை கைக்குள் போட்டுக் கொள்வது விஎச்பியின் திட்டத்தில் முக்கியமான ஒரு பகுதி. சில மடாதிபதிகள் சங்க பரிவாரத்தின் திட்டத்துடன் சேர்ந்து கொண்டார்கள், அப்படி சேராதவர்கள் இந்த வாய்ப்பை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சீடர்களால் தூக்கி எறியப்பட்டார்கள். தாமும் சொந்தமாக குண்டர் படையை வைத்திருக்கும் மடாதிபதிகளைத் தவிர வேறு யாரும் வி.எச்.பி.யின் இறுகும் பிடியிலிருந்து தப்ப முடியாத சூழல் உருவானது.

ராமஜன்மபூமி விவகாரத்திற்கு பிறகு வெளியூர் பக்தர்களின் வருகை பெருமளவு அதிகரித்தது. அவர்கள் தங்குவதற்கான தர்மசாலைகளாக பல கோயில்கள் மாற்றப்பட்டன. ரியல் எஸ்டேட் மதிப்பு பல மடங்கு அதிகரித்தது.

விசுவ இந்து பரிசத்
ரியல் எஸ்டேட் கிரிமினல்கள்தான் விசுவ இந்து பரிசத்தின் தளபதிகள் !

“பக்தி சுற்றுலாவில் பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. முன்பெல்லாம் தமது குருவுடனும் கோயில்களுடனும் பாரம்பரிய தொடர்பு உடைய பக்தர்கள்தான் வருவார்கள். இந்தக் கோயில் பிரச்சனை ஆரம்பித்ததிலிருந்து வெளியூர்க்காரர்கள் பெரும் எண்ணிக்கையில் வர ஆரம்பித்திருக்கிறார்கள்”. அவர்கள் எளிமையான பக்தர்களும் அல்ல. “அவர்களது பணத்துக்கும் டாம்பீகத்துக்கும் பலியான அயோத்தியின் பல சாதுக்கள் துறவைத் துறந்து விட்டார்கள்” என்கிறார் அயோத்தியைச் சேர்ந்த ஹரிதயாள் மிஷ்ரா என்ற சாது.

தன்னை துறவிகளின் அமைப்பாக சித்தரித்துக் கொள்வதால், விசுவ இந்து பரிசத்திற்கு துறவிகள் தேவைப்படுகிறார்கள். அதுவும் ராமன் பிறந்த ஊராதலால், அயோத்தி நகரின் துறவிகள் அவசியம் தேவைப்படுகிறார்கள். புத்திசாலி மடாதிபதிகள் வி.எச்.பியுடன் சேர்ந்து கொண்டார்கள். முடியாது என்று மறுப்பவர்களை வி.எச்.பி குண்டர்கள் உதவியுடன் தூக்கி வீசி விட்டு சொத்தையும் கைப்பற்றிக் கொண்டார்கள். ‘காரியத்தை சாதித்துக் கொள்வதற்கு எந்த விதமான கிரிமினல் வேலையையும் கூசாமல் செய்வதற்கு மடாதிபதிகளை வி.எச்.பி பழக்கி விட்டது‘ என்கிறார் சத்சங் ஆசிரம் என்ற மடத்தின் துறவி ரகுநந்தன் தாஸ்.

“முன்பெல்லாம் மூத்த பீடாதிபதிகளுக்கு மரியாதை இருந்தது. ஆனா ராமர் கோயில் இயக்கம் ஆரம்பித்த பிறகு அயோத்தியின் மடாதிபதிகள் பயத்திலேயே வாழ வேண்டியிருக்கிறது. பீடங்களின் தலைமை இப்போது லாபகரமான வியாபாரமாகியிருக்கிறது. அயோத்தியின் பல கோயில்களில் தங்களது ஆட்களை புகுத்துவதில் விஸ்வ ஹிந்து பரிஷத் வெற்றியடைந்திருக்கிறது” என்கிறார் ராம் அசாரே தாஸ்.

“அயோத்தியில் நடக்கும் 90 சதவீத கிரைம்கள் கோயில் சொத்து தொடர்பானவை” என்கிறார் பைசாபாத்தை சேர்ந்த ரஞ்சித்லால் என்ற வழக்கறிஞர். “பெரும்பான்மை கோயில்கள் கிரிமினல்களின் கூடாரங்களாக மாறியிருக்கின்றன. நாட்டின் பிற பகுதிகளில் ஏதாவது குற்றம் செய்து விட்டு இங்கு வந்து சாதுக்களின் வேஷத்தில் புகுந்து விடுகிறார்கள். 10-15 வருடங்களில் அரசியல் கட்சி உதவியோடு மடாதிபதி ஆவதில் வெற்றி பெற்றால் இங்கேயே தங்கி விடுகிறார்கள். அல்லது சொந்த ஊருக்குத் திரும்பிப் போய் புதிய வாழ்க்கையை தொடங்குகிறார்கள்”.

ஹனுமான்கர்ஹி என்ற கோயிலில் 500க்கும் மேற்பட்ட நாக வைராகிகள் வசிக்கின்றார்கள். நகரத்தில் கோயில் பதவி தொடர்பான சண்டைகளில் இந்த வைராகிகள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். “பெரும்பான்மை கோயில் உரிமை பிரச்சனைகளில் ஹனுமான் கர்ஹியின் நாகாக்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்புடையவர்கள்” என்கிறார் ஹரிதயாள் மிஸ்ரா.

ஹனுமான்கர்ஹியின் நாகாக்கள் அந்தக் கோயிலை தமது கோட்டையாக கருதுகிறார்கள். அவர்கள் ஆச்சார்யா ராமானந்தர் பாரம்பரியத்தில் வந்த ராம பக்தர்கள். நாகா பாரம்பரியத்தில் வைராகி என்ற சொல் போர்க்குணமிக்க வைணவத் துறவிகளை குறிக்கிறது.

அயோத்தியின் பெரும்பகுதி கோயில் நிலங்கள் தங்களுக்கு உரியவை என்று அவர்கள் கருதுகின்றனர். அயோத்தியிலும் வட இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் உள்ள கோயில் சொத்துக்களை நிர்வாகம் செய்கின்றனர். கந்து வட்டிக்கு கடன் கொடுப்பது, கோயில் நிலங்களை வாடகைக்கு விடுவது, போன்ற தொழில்களில் ஈடுபடுகின்றனர். இந்த வியாபாரங்கள் தொடர்பாக அவர்களுக்கிடையே சண்டை நடப்பதும் வழக்கம்.

“சட்டப்படி, ஹனுமான்கர்ஹியும் அதன் சொத்துக்களும் பஞ்சாயத்து முறைப்படி நிர்வாகம் செய்யப்பட வேண்டும். ஆனால் நடைமுறையில் வல்லவன் வகுப்பதுதான் வாய்க்கால்.” என்கிறார் ஹனுமான்கர்ஹியில் வசிக்கும் பல்ராம் தாஸ். அவரது குரு ஹரிஷங்கர் தாஸ் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கொலை முயற்சியிலிருந்து தப்பினார். “என்னை நோக்கி 6 குண்டுகளை சுட்டனர். ஆனால் நான் எப்படியோ தப்பி விட்டேன்” என்கிறார் ஹரிஷங்கர் தாஸ். அவர் படே பயில்வான் என்று அழைக்கப்படுகிறார். சக சாது ஒருவர்தான் அவரை கொல்ல முயற்சித்ததாக சொல்கிறார்.

இது போன்ற சம்பவங்கள் நடப்பது ஹனுமான் கோயில் வளாகத்தில் சகஜமாகிவிட்டது. அலஹாபாத் உயர்நீதிமன்றமே ஹனுமான் கர்ஹியின் சொத்து தொடர்பான வழக்குகள் அதிகரித்து வருவதைப் பற்றி கவலை தெரிவித்து, ஹனுமான்கர்ஹியின் நிர்வாகியாக ஒரு மூத்த அதிகாரியை நியமிக்கும்படி உத்தர பிரதேச மாநில அரசை கேட்டுக் கொண்டிருக்கிறது. காசி விஸ்வநாதர் கோயிலுக்கு இருப்பதைப் போன்ற ஒரு அறக்கட்டளையை உருவாக்கலாமா என்று பரிசீலிக்கும்படியும் சொல்லியிருக்கிறது. அப்படி எதுவும் செய்யவிடாமல், உயர்நீதிமன்றத்தின் அந்த உத்தரவுக்கு ஹனுமான்கர்ஹி நாகா சாமியார்கள் உச்சநீதிமன்றதிதல் தடை உத்தரவு வாங்கியிருக்கின்றனர்.

80 வயதான ராம்ரூப் தாஸ், ரங் நிவாஸ் கோயிலின் தலைமைப் பீடத்தை தனது சீடர் ரகுநாத் தாசுக்கு கொடுத்து விட்டு பீகாரின் சமஸ்டிபூரிலுள்ள கோயில் நிலங்களை பார்த்துக் கொள்ள போய் விட்டார். இந்த ஆண்டு பிப்ரவரி 9-ம் தேதி ரகுநாத் தாஸ் வாரிசு யாரையும் அறிவிக்காமலேயே இறந்து விட்டார். “அவரது இறப்புக்குப் பிறகு ஹனுமான்கிரஹியைச் சேர்ந்தவரும் பாஜக தலைவருமான மன்மோகன் தாஸ் கோயிலை சட்ட விரோதமாக கைப்பற்றிக் கொண்டார்” என்கிறார் ராம்ரூப் தாஸ்.

சீடரின் இறப்பை கேள்விப்பட்டு அவசர அவசரமாக அயோத்திக்கு திரும்பிய ராம்ரூப் தாஸ், தான் இன்னும் உயிரோடு இருப்பதால் கோயிலின் தலைமை தனக்குத்தான் வர வேண்டும் என்று வலியுறுத்தினார். ரகுநாத் தாஸ் சிறிது காலம் ஹனுமான்கர்ஹியில் இருந்ததால், தாங்கள் அவருடைய குரு சகோதரர்கள் என்றும், கோயில் தங்களுக்குத்தான் சேரும் என்று கூறிய மன்மோகன்தாஸ், குரு ராம்சொருப் தாஸை கோயிலுக்கு உள்ளேயே விடவில்லை. ஹனுமான்கார்ஹியின் நாகாக்கள் அதைச் சுற்றி காவலாக நின்றிருந்தார்கள்.

இந்து சாஸ்திரங்களில் புலமை பெற்ற அர்ஜூன் தாஸ் என்பவர் செட்டில் ஆவதற்கு ஒரு கோயிலை தேடிக் கொண்டிருந்தார். அவரிடம் ராம்ரூப்தாஸ் உதவி கேட்டார். “கோயில் சொத்தில் எனக்கும் பங்கு கொடுப்பதாக இருந்தால் பணம் வாங்கிக் கொண்டு அவருக்கு உதவி செய்யத் தயார் என்று சொன்னேன்” என்கிறார் அர்ஜூன் தாஸ். அடுத்த நாளே அர்ஜூன் தாசை தனது சீடராக ஏற்றுக் கொண்டு பீடாதிபதி பதவியை அவர் பெயருக்கு எழுதி வைத்தார் எண்பது வயதான ராம்ரூப்தாஸ்.

இதற்கிடையில் மன்மோகன் தாஸ் தன் தரப்பை பலப்படுத்திக் கொள்ள விஎச்பியைச் சேர்ந்த ராஜ்குமார் தாஸ் என்ற துறவியிடம் கோயிலை ஒப்படைத்து விட்டார். ராஜ்குமார் தாஸ் பல கொலை வழக்குகளில் தொடர்புடையவர். இனிமேல் வழக்கு கோர்ட்டுகளில் தீர்மானிக்கப்படலாம்.

அடுத்த கதை யுகல்பீகாரி தாஸ் என்பவருடையது. ஹனுமான்கர்ஹியைச் சேர்ந்த இந்த வைராகிக்கு அதிர்ஷ்டம் குறைவுதான். 10 ஆண்டுகளுக்கு முன்பு அவர் ஏதோ வேலையாக அயோத்தியை  விட்டு வெளியூர் போயிருந்த போது அவரது சீடர் ராமாக்ய தாஸ், தன்னுடைய குருநாதர் யுகல் பீகாரி தாஸ் இறந்து விட்டதாக அறிவித்து, அவருடைய முக்தியடைந்த ஆத்மாவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக தடபுடலாக ஒரு விருந்தையும் ஏற்பாடு செய்து நடத்தி யுகல்பீகாரி தாசின் இடத்தைக் கைப்பற்றிக் கொண்டார்.

அயோத்திக்கு திரும்பிய யுகல்பீகாரி தாஸ் தான் உயிரோடு இருப்பதாக சாதுக்களையும் அதிகாரிகளையும் நம்ப வைக்க எவ்வளவோ முயற்சி செய்தும் பலனில்லை. “நாங்கள்தான் கருமாதி விருந்தே சாப்பிட்டு விட்டோமே, அவ்வாறிருக்க நீ எப்படி உயிரோடு இருக்க முடியும்?” என்று மடக்கினர்.  வெறுத்துப் போன யுகல்பிகாரி தாஸ், அயோத்தியை விட்டே வெளியேறி பீகாரில் எங்கோ வசிக்கிறார்.

அவரைப் போன்று பல துறவிகள் அயோத்தியை விட்டுப் போய் விட விரும்புகிறார்கள். கோயில்களிலிருந்து துரத்தி விடப்படும் கட்சி சாராத பீடாதிபதிகள் வேறு வழியில்லாமல் அதை ஏற்றுக் கொள்கிறார்கள். வெளியேற்றப்பட்ட பல பீடாதிபதிகள் அயோத்தியின் ஆளரவற்ற மூலையான சரயு நதிக்கரையில் வாசுதேவ் காட் மஞ்சா என்ற இடத்தில் குடிசைகளில் வசிக்கின்றனர்.

அப்படிப்பட்ட ஒரு குடிசையில் சித்ரகூட்டி பாபா வசிக்கிறார். 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை அயோத்தியின் பிரபலமான சித்திரகூட்டி அஸ்தானின் பீடாதிபதியாக இருந்தவர் அவர். கோயிலிலிருந்து வெளியேற்றப்பட்டதிலிருந்து அவர் மௌனவிரதம் பூண்டிருக்கிறார். யாரிடமும் பேசுவதில்லை, அவரது எளிமையான குடிசையிலிருந்து எப்போதாவதுதான் வெளியில் வருகிறார். யாராவது அவரிடம் பேச முயற்சித்தால் கெட்ட வார்த்தை சொல்லி திட்டுகிறார்.

தமிழாக்கம் : செழியன்
________________________________________________________________________________
புதிய கலாச்சாரம் – மார்ச் 2013
________________________________________________________________________________

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க