privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கஈழத்தமிழருக்காக மாணவர் முன்னணி ஆர்ப்பாட்டம் !

ஈழத்தமிழருக்காக மாணவர் முன்னணி ஆர்ப்பாட்டம் !

-

மே -17, 2009  இன அழிப்புப் போரில் உயிர் நீத்த அனைத்து ஈழத் தமிழருக்கும் எமது நினைவஞ்சலி !

  • இனப்படுகொலை குற்றவாளி ராஜபக்சே கும்பலை தண்டிக்க நூரம்பர்க் போன்ற போர்க்குற்ற விசாரணைக்கு குறைவாக எதையும் ஏற்க மறுப்போம்!
  • சிங்கள குடியேற்றம், இராணுவ ஆக்கிரமிப்பு உள்ளிட்ட இன அழிப்பு நடவடிக்கைகளை முறியடிக்க குறுக்கு வழித் தீர்வு ஏதுமில்லை!
  • ஈழத்தமிழின மக்களின் தன்னுரிமையை நிலைநாட்ட குரல்கொடுப்போம்!
  • தமிழகத்தில் சிறப்பு அகதிமுகாம் எனும் முள்வேலிக்குள் சிறை வைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழ் அகதிகளை விடுதலைசெய்யப் போராடுவோம்!

ஆகிய முழக்கங்களின் கீழ் போராடி வரும் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி ஆகிய அமைப்புகள் இன அழிப்பு போரில் கொல்லப்பட்ட அனைத்து ஈழத்தமிழருக்கும் தமது நினைவஞ்சலியை போர்க்குணமிக்க ஆர்ப்பாட்டமாக சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகே நடத்தின.

திடீரென மறியல் செய்துவிடுவார்கள் என்ற பதைபதைப்பில் காலையில் இருந்தே ஏசி, டிசி, ஜேசி என அதிகாரிகள் நூற்றுக்கணக்கான போலீசாருடன் ஆர்ப்பாட்டப்பகுதியில் முகாமிட்டு இருந்தனர். காலை 11.15 மணிக்கு முழக்கங்களோடு ஆர்ப்பாட்டம் தொடங்கியது.

முப்பதாண்டு போராட்டத்தை
ஈழ மக்கள் போராட்டத்தை
முதுகில் குத்தி அழித்தது
இந்திய அரசு ! இந்திய அரசு !

அமைதிப்படையை அனுப்பி வைத்ததும்
அட்டூழியம் புரிந்ததும்
அரணாய் நின்று சிங்கள அரசை
காவல் காத்த்தும் இந்திய அரசு !

முள்ளிவாய்க்கால் படுகொலையை
நடத்தி வைத்ததும் இந்திய அரசு !

சிறப்பு முகாம் எனும் பெயரில்
சிறை வைத்தது யாரு யாரு ?
தமிழ் ஈழம் ஈழம் என்று
தீர்மானம் போடும் அம்மா தான் !

என்று இந்திய மேலாதிக்கத்தை அம்பலப்படுத்தும் வகையிலும் ஈழத்தமிழ் அகதிகளுக்கு உரிமை வழங்கிடவும் வலியுறுத்திய முழக்கங்கள் கொளுத்தும் வெயிலிலும் நெருப்பாய் தகித்து ஈழமக்களின் தன்னுரிமையை காக்க போராட அறைகூவி அழைத்தன.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சென்னை, ஈழத் தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணியின் தோழர் மருது தலைமை வகித்தார்.

சிறப்புரையாற்றிய, ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர். த. கணேசன் “ஈழ மக்களின் மீதான இனப்படுகொலையை இந்திய அரசு முதலாளிகளின் நலனுக்காக முன் நின்று நடத்தியதையும் அதற்கு எதிராக ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி மூலம் தமிழகம் முழுவதும் மாணவர்களை திரட்டிப் போராடியதையும் விளக்கினார்”.

மேலும் “ஈழத்தை வைத்து பிழைப்பு நடத்தக்கூடிய ஓட்டுக்கட்சிகள் மாணவர்களை குழப்ப நினைத்த போதும் மாணவர்கள் தங்களுடைய போராட்டத்தின் வலிமையை காட்டியதையும், போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டு தப்பி வந்த மக்களை அகதிகளாக மதிக்காமல் சட்ட விரோதக் குடியேறிகளாக வைத்து தினம் தினம் இந்த அரசு கொடுமைப்படுத்துவதையும்” சுட்டிக்காட்டினார். “ஈழத்தமிழ் மக்களுக்கு உண்மையான நினைவஞ்சலி என்பது அவர்களின் தன்னுரிமைக்காக நாம் போராடுவதே, அப்படிப்பட்ட போராட்டத்தை கட்டியமைத்து இந்திய மேலாதிக்கத்திற்கு மரண அடியை மக்களை கொடுக்கவைப்பதே நமது தலையாய பணி” என்று கூறினார்.

நினைவஞ்சலி கூட்டம் என்றால் மாலை வேளையில், காற்று வாங்கிக்கொண்டு யாருக்கும் துளியும் கஷ்டமின்றி மெழுகுவர்த்தியை பிடித்துக்கொண்டு திரிவதல்ல, போர்க்குணத்தோடு அம்மக்களின் உரிமைக்காக போராடுவதுதான். அவ்வகையில் நடத்தப்பட்ட இந்த எழுச்சிமிகு ஆர்ப்பட்டம் ஈழத்தமிழரின் இன்னல் தீர மீண்டும் மாணவர் போராட்டத்தை கட்டியமைக்க வேண்டிய தேவையை உணர்த்தியது.

தகவல்
புமாஇமு, ஈ.த.மா.முன்னணி