செய்தி : சேலம் மாவட்டம் அம்மாப்பேட்டை காமராஜர் காலனி பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒன்றாம் வகுப்புக்கு சேர்க்கைக் கட்டணமாக ரூ. 10 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து, பொதுமக்கள் கடும் கோபம் அடைந்தனர்.
நீதி : தனியார் பள்ளிகளில் 1-ம் வகுப்புக்கு பல ஆயிரங்களிலோ இல்லை இலட்சங்களிலோ கட்டணம் இருப்பதை ஏற்கும் அதே பொதுமக்கள் “அடிச்சிட்டு கொடுத்தாலும் வாங்கிட்டு போவான்”-ஆக இருப்பது ஏன்?
______
செய்தி : தமிழகத்தில் பணியின் போது மரணமடைந்த காவலர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் ஜெயலலிதா நிதியுதவி அறிவித்துள்ளார்.
நீதி : நாங்கள் பணியில் இறந்தால் மட்டும் நிதியில்லையா என்று காவலர்களின் பங்காளிகளான கிரிமினல்கள் சண்டைக்கு வருகிறார்கள்.
______
செய்தி: விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே கோயில் கட்டுவது தொடர்பாக எழுந்த தகராறில் வார்டு உறுப்பினர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
நீதி : ஊர் இரண்டு பட்டால் கடவுளுக்கு கொண்டாட்டமோ?
______
செய்தி: மூத்த பத்திரிகையாளருக்கான நினைவஞ்சலி போன்ற முக்கிய நிகழ்வுகளில், பத்திரிகையாளர்கள் என்கிற உணர்வுடன் அனைவரும் ஒன்றிணைவது அவசியம் என “தினமணி’ ஆசிரியர் கே. வைத்தியநாதன் வலியுறுத்தினார்.
நீதி : எதுக்கு இணையணும்? அம்மாவுக்கு ஜால்ரா போடவா?
______
செய்தி : தனது நிர்வாகத் திறமையால் இந்திய பத்திரிகை உலகை வியக்க வைத்தவர் சிவந்திஆதித்தன் என புதிய தலைமுறை இதழாசிரியர் மாலன் புகழாரம் சூட்டினார்.
நீதி : எந்த கட்சி ஆள்கிறதோ அதற்கு சொம்பு தூக்குவதுதான் ஆதித்தினது நிர்வாகத் ‘திறமை’ என்றால் மாலன் ஏன் கொண்டாட மாட்டார்!
______
செய்தி: காவிரிப் பிரச்னையில் தமிழகத்தின் உரிமைகளைக் காக்க அனைவரும் ஒருமித்து குரல் கொடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நீதி: யாருடைய உரிமையைக் காக்க அனைவரும் ஆளுக்கொரு கட்சியை வைத்திருக்கிறார்கள் வைகோ அவர்களே? கலைத்து விடவேண்டியதுதானே?
______
செய்தி : காவிரி டெல்டா பகுதிகளில் இந்த ஆண்டும் குறுவைச் சாகுபடி பொய்க்கக் கூடிய சூழல் நிலவுவதாக திமுக தலைவர் கருணாநிதி எச்சரித்துள்ளார்.
நீதி : இதனால் கோபாலபுரத்திலோ இல்லை போயஸ் தோட்டத்திலோ ஏன் தைலாபுரம் தோட்டத்திலோ யாரும் பட்டினி கிடக்கப் போகிறார்களா என்ன?
______
செய்தி : ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் பிரதமர் பதவியில் இருப்பது மன்மோகன்சிங்; ஆனால் முடிவுகளை எடுப்பது சோனியா காந்தி என்று பாஜக விமர்சித்துள்ளது.
நீதி : எடுத்த முடிவு சரியா, தவறா என்பதை விட யார் முடிவு எடுத்தார் என்பது முக்கியமா? பாஜக ஆட்சிக்கு வந்தால் ஆர்.எஸ்.எஸ்தான் முடிவு எடுக்கும் என்று எல்லோருக்கும் தெரியுமே!
______
செய்தி : ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் தரகர்களாக ஈடுபட்ட 9 பேரை கொல்கத்தாவில் இன்று காவல்துறையினர் கைது செய்தனர்.
நீதி: தில்லி, மும்பை, சென்னை எல்லாம் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் போது ரசகுல்லா இல்லையே என்ற குறையை நீக்கி பாரத ஒற்றுமையை நிரூபித்திருக்கிறார்கள்.
______
செய்தி: “காவிரி விவகாரத்தில் சுமுகத் தீர்வுக்கு எங்கள் மாநில அரசு தயாராக உள்ளது” என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறினார்.
நீதி : கண்டிசன்ஸ் அப்ளை ( காவிரியில் மழை பெய்து அணை நிரம்பினால் மட்டும் நீர் அனுப்பப்படும் – அதுவும் ஸ்டாக் உள்ளவரை மட்டும்)
______
செய்தி : கோவா கடல் பகுதியில் உள்ள ஐஎன்எஸ் தர்கஷ் என்ற அதிநவீனபோர்க்கப்பலிலிருந்து பிரமோஸ் ஏவுகணை புதன்கிழமை வெற்றிகரமாக பரிசோதித்துப்பார்க்கப்பட்டது.
நீதி : இதற்கு போட்டியாக பாக் ஏவும் ஏவுகணை குறித்த செய்திக்கு நாளைய தினத்தந்தியை பார்க்கவும்.
______
செய்தி : பிரதமர் மன்மோகன் சிங்குடன் தனக்கு கருத்து வேறுபாடு எதுவும் இல்லை என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.
நீதி : அமெரிக்காதான் எஜமான் என்றான பிறகு அடிமைகளிடம், கருத்து வேறுபாடு இருக்கட்டும், கருத்தே தோன்றுமா என்ன?
______
செய்தி: 2 ஜி, நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல்களில் தவறு செய்தவர்கள் அரசால் தண்டிக்கப்படுவர் என பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
நீதி : வேறு எதற்கும் சிரிப்பு வரவில்லை என்றாலும் பரவாயில்லை, இதற்கு கூடவா நீங்கள் சிரிக்கவில்லை மிஸ்டர் மன்மோகன்?
______
செய்தி : சாண்டி – சென்னிதாலா மோதல் – கேரள காங்கிரசில் உச்சகட்டம் !
நீதி : ராமராஜ் காட்டன் வேஷ்டிகள் எத்தனை லோடு அனுப்ப வேண்டும்?
_____
செய்தி : ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, இரண்டாவது முறையாக பதவியேற்று, நான்காண்டுகள் நிறைவு அடைந்ததையொட்டி, அரசின் சாதனை அறிக்கையை பிரதமர் மன்மோகன் சிங் நேற்று வெளியிட்டார்.
நீதி : பாவம் அந்த பேப்பர்கள்!
______
செய்தி : திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக சமர்ப்பிக்கும் தொகை, தினசரி, 2 கோடி ரூபாயைத் தாண்டுகிறது. இது போதாது என்று, திருப்பதியில் இருந்து, அலிபிரி வழியாக திருமலைக்கு கொண்டு செல்லும் அனைத்து பொருட்கள் மீதும், புதிதாக ஒரு வரியை விதிக்க உள்ளது தேவஸ்தானம். இது, “ஏழுமலையான் வரி” என்று அழைக்கப்படுமாம்.
நீதி : விட்டால் வாட்டிகன் போல ஒரு தனிநாடாக மாற்றிவிட்டு மொட்டை போட்டவர்களுக்கும், போடுபவர்களுக்கும் மட்டும்தான் அனுமதி என்று மாற்றி விடுவார்களோ?