முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்ஐபிஎல் - ஃபிக்கி : அந்த 3 இலட்சம் கோடி எங்களுக்குத்தான் !

ஐபிஎல் – ஃபிக்கி : அந்த 3 இலட்சம் கோடி எங்களுக்குத்தான் !

-

விளையாட்டு உள்ளிட்டு எதிலும் பந்தயம் கட்டி சூதாடுவதை சட்டபூர்வமாக்க வேண்டும் என்று இந்திய முதலாளிகளின் சங்கங்களின் கூட்டமைப்பு ஃபிக்கி (FICCI) கூறியிருக்கிறது. அது மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு சமர்ப்பித்துள்ள ஒரு ஆய்வறிக்கையில் “இந்தியாவில் பந்தயம் கட்டி சூதாடுவது சட்ட விரோதமாக இருப்பதால் அதில் ஒவ்வொரு ஆண்டும் ரூ 3 லட்சம் கோடி கருப்பு பணம் புழங்குகிறது” என்று கவலை தெரிவித்திருக்கிறது.

ficci-sports“பந்தயம் கட்டி சூதாடுவதை தடை செய்ய அரசு பெரும் செலவில் முயற்சிகள் செய்தாலும் அது தலைமறைவாக தொடர்ந்து நடைபெறுகிறது; இப்போது பிரச்சனை பந்தயம் கட்டுவது என்பதைத் தாண்டி சதி செய்து போட்டிகளை வளைப்பது என்ற நிலைக்கு போயிருக்கிறது; இதை முறைப்படுத்த வேண்டும் என்றால் பந்தயம் கட்டி சூதாடுவதை சட்டப்படி அனுமதித்து ஒழுங்குபடுத்துவதற்கான வழிகளை அரசு பரிசீலிக்க வேண்டும்” என்று அது கேட்டுக் கொண்டிருக்கிறது.

ஃபிக்கி விளையாட்டு குழுவின் தலைவர் சஞ்சீவ் பால், “புகை பிடிப்பது போல, சூதாடுவது போல பந்தயம் கட்டுவது விரும்பத் தகாத ஒன்றுதான். ஆனால், சட்டப்படி தடை செய்வதன் மூலம் அதை ஒழித்துக் கட்ட முடியாது.” என்று தெரிவித்திருக்கிறார். “இந்த துறையை சட்டபூர்வமாக்கி வரி விதிப்பதன் மூலம் ஆண்டுக்கு ரூ 12,000 கோடி முதல் ரூ 19,000 கோடி வரை அரசுக்கு வருமானம் வரும்” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

ஐ.பி.எல். கிரிக்கெட் பற்றிய விபரங்களை பார்க்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு உணர்வு ஏற்படுகிறது. சுத்த சுயம்புவான கிரிக்கெட் ரசிகர்களான இந்து நாளிதழ், ஹர்ஷா போக்லே போன்ற நிபுணர்கள், பிஷன் சிங் பேடி போன்ற முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் ஐந்து நாள் டெஸ்ட் போட்டி, வெள்ளைச் சீருடை, கனவான்களின் விளையாட்டு என்று கடந்த கால கனவுகளில் மிதக்கிறார்கள். ஐ.பி.எல். வந்து எல்லாத்தையும் சீரழித்து விட்டது என்று நொந்து கொள்கிறார்கள்.

illegal-cricket-bettingஇதையே தஞ்சாவூர் விவசாயி ஒருவர் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை பார்த்தால், “அடப்பாவிகளா பயிர் செய்ய தண்ணீ இல்லாம வாடுறோம்; பம்புசெட்டு வச்சு இறைக்கலாம்னா கரென்ட் கூட இல்லை. இந்த நிலைமையில இவ்வளவு தண்ணீ விரயமாக்கி, இவ்வளவு கரென்ட் எடுத்துக் கிட்டு என்னடா கூத்து” என்று கரித்துக் கொட்டுவார்.

ஆனால், இந்த ரணகளத்துக்கு மத்தியில் சூதாட்டத்தை சட்டபூர்வமாக்க வேண்டும் என்ற கிளுகிளுப்பு ஃபிக்கிக்கு ஏன் தேவைப்படுகிறது? இவர்கள் கிரிக்கெட் எனும் விளையாட்டின் மீதான காதலிலோ இல்லை அதைக் காப்பாற்றவேண்டும் என்பதாலோ இங்கு தலையிடவில்லை.

சட்டத்தை முழுவதும் புறக்கணித்து தலைமறைவு உலகில் செயல்படும் பந்தயம் வைத்து சூதாடும் துறையினருக்கு அரசின் அங்கீகாரம் இல்லை. சூதாட்ட முதலாளிகள் (dons), அவர்களது வலைப்பின்னலில் இயங்கும் தரகர்கள் (புக்கிகள்), பந்தயம் வைக்கும் சூதாடிகள் (punters), சூதாட்ட பணத்தை வசூலிக்கும் ஊழியர்கள் (ரன்னர்கள்), இவர்களுடன் ஒத்துழைக்கும் விளையாட்டு அணிகளை சேர்ந்தவர்கள் என்று நாட்டு எல்லைகளையும், மொழி வேறுபாடுகளையும், மத வித்தியாசங்களையும் கடந்து உலகெங்கும் கிளை பரப்பி நிற்கிறது இந்த சூதாட்ட உலகம். அவரவர் படிநிலைக்கேற்ப ஐந்து நட்சத்திர விடுதிகளில், சொகுசு பங்களாக்களில், அடக்கமான ரியல் எஸ்டேட் அல்லது பயண முகவர் அல்லது அடகுக் கடை அலுவலகங்களின் பின்புறத்தில், சேரிகளில், சந்துகளில், இடுக்குகளில் அரசின் சட்ட திட்டங்களுக்கு வெளியில் தமது தொழிலை செய்கிறார்கள்.

இவர்கள் பாதுகாப்புக்காக கொடுக்கும் கப்பத் தொகையை தாண்டி, போட்டியாளர் யாராவது போட்டுக் கொடுத்து காவல் துறை நடவடிக்கை அல்லது புலனாய்வு துறையின் விசாரணை நடக்கும் போது பெருமளவு பணம் இழப்பதோடு கூண்டோடு ஆட்களையும் பலி கொடுக்க வேண்டியிருக்கும். அந்த ‘ரிஸ்கோ’டு தொழில் செய்கிறார்கள். ஆனால் இவர்களின் இலாபம் என்பது பல நூறு மடங்கு அதிகமானது என்பதால் ஒரு முறை வென்றாலே பல தடவை அரசு அபாயத்தை எதிர்கொள்ளலாம்.

cricket-bettingஃபிக்கி பிரதிநிதித்துவப்படுத்தும் சங்கங்களின் முதலாளிகள் இந்த உலகத்தை எச்சில் ஒழுக பார்க்கிறார்கள். ஒரு தொழிற்சாலை ஆரம்பித்து, உற்பத்தி செய்து, சந்தையில் விற்று லாபம் சம்பாதிப்பது எல்லாம் பழைய கால முதலாளிகளின், காலத்துக்கேற்ப முன்னேறாத கட்டுப்பெட்டிகளின் கோட்பாடு. 21-ம் நூற்றாண்டின் உலக மயமான முதலாளித்துவத்தில், பணத்தைப் போட்டு பணத்தை எடுக்க வேண்டும்; அதிக காலம் பிடிக்கக் கூடாது; ரிஸ்க் அதிகம் இருந்தாலும், வெற்றி பெற்றால் பெருமளவு லாபம் வர வேண்டும்; பணம் திரட்டிக் கொண்டால் உற்பத்தி, விற்பனை இதற்கெல்லாம் ஆளை போட்டு வேலை வாங்கிக் கொள்ளலாம்.

இத்தகைய நிதி மூலதன சூதாட்டத்துக்காக பங்குச் சந்தை, அன்னிய செலாவணி சந்தை, சரக்குகள் சந்தை (கமாடிட்டி சந்தை), முதலீட்டு ஆவணங்கள் சந்தை என்று நூற்றுக் கணக்கான சட்டபூர்வமான வாய்ப்புகள் உள்ளன. உற்பத்தியில் மட்டும் லாபம் சம்பாதிப்பேன் என்று இருக்கும் பழைய பாணி முதலாளிகள் ஒரு ஆண்டில் சம்பாதிக்கும் பணத்தை நிதிச் சந்தைகளில் சூதாடும் முதலாளிகள் ஒரே வாரத்தில் சம்பாதித்து விட, தொழிற்சாலையின் உரிமையே பின்னவருக்கு கை மாறி விடுகிறது. முன்னாள் உற்பத்தி முதலாளிகள் நிதி முதலாளிகளிடம் சம்பளம் வாங்கும் இன்னாள் தலைமை நிர்வாக அலுவலராகி விடுகிறார்கள்.

இந்த நிலையில், பணம் போட்டு பணம் செய்யும் முதலாளிகள் அதே நிலையில் நீடிக்க வேண்டுமானால் பணத்தை பெருக்குவதற்கான புதுப் புது வாய்ப்புகளை தேட வேண்டும். ரூ 3 லட்சம் கோடி புழங்கும் சூதாட்டச் சந்தையில் சட்ட விரோதமாக இறங்குவதற்கு இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசன் போல ரிஸ்க் எடுக்க வேண்டியிருக்கிறது. அகப்பட்டுக் கொண்டால் சமாளிக்க வேண்டியிருக்கிறது. அப்படி அகப்பட்டுக் கொள்ளாமல் சூதாட்ட உலகில் பணத்தை பெருக்கிக் கொண்டவர்களின் கை அதில் கலந்து கொள்ளாத முதலாளிகளின் கைகளை விட மேலோங்கி விடுகிறது.

இது எல்லோருக்கும் சம வாய்ப்பு (லெவல் பிளேயிங் ஃபீல்ட்) என்ற முதலாளிகளின் அறத்துக்கு விரோதமாக இருக்கிறது. அதனால் ஃபிக்கி சங்க முதலாளிகள், ரூ 3 லட்சம் கோடி புழங்கும் இந்த துறையில் சூதாடுவதற்கு சட்டத்தை மீற தைரியம் உள்ள முதலாளிகளுக்கும் அப்படிப்பட்ட தைரியம் இல்லாத முதலாளிகளுக்கும் சம வாய்ப்பு வழங்கும்படி அரசை கேட்டு ஆய்வறிக்கை தயாரித்து அளித்திருக்கிறார்கள். அதில் குறிப்பிட்ட சதவீதத்தை (4% முதல் 6% வரை), அரசுக்கு வரியாக செலுத்தவும் தயாராக இருப்பதாக அரசுக்கு ஆசை காட்டுகிறார்கள்.

ஃபிக்கியின் சஞ்சீவ் பால் சொல்வது போல, சிகரெட் தயாரிப்பதோ, சாராயம் விற்பதோ சமூகத்தை பாதிப்பதாக இருந்தாலும் அதை சட்ட பூர்வமாக்கி, சந்தைப் படுத்தி, லாபம் சம்பாதிக்க முதலாளிகள் ஒரு போதும் தயங்கியதில்லை. அதே போல பந்தயம் வைத்து சூதாடுவதை சட்டபூர்வமாக்கி அதில் ஈடுபட்டு பணத்தை பெருக்கி நாட்டுக்கு சேவை செய்ய ஆர்வம் காட்டுகிறார்கள். அவ்வளவுதான்.

சரி, பந்தய சூதாட்டத்தை சட்டபூர்வமாக்கினால் பிரச்சினை முடிந்து விடுமா? பந்தய பணத்தை மீட்கவேண்டுமானால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை மீறி ஆட்டத்தின் போக்கை மாற்றவேண்டும் என்ற கட்டாயம் ஏற்படும். அப்போது வீரர்களையோ இல்லை அணிகளையோ மொத்தமாக விலைபேசி ஆட்டத்தின் போக்கை முன்கூட்டியே நிர்ணயிப்பதும் நடந்தே தீரும்.

ஆகவே இந்திய முதலாளிகளின் உண்மையான நோக்கம் அந்த மூன்று இலட்சம் கோடி தங்களது பாக்கெட்டுக்குள் வரவேண்டும் என்ற வர்த்தக வெறிதான். மற்றபடி இவர்களது சட்டபூர்வ சூதாட்டம் என்பது எதையும் சாதித்து விடாது.

அப்துல்

மேலும் படிக்க
FICCI for legalising sports betting

  1. //பந்தய பணத்தை மீட்கவேண்டுமானால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை மீறி ஆட்டத்தின் போக்கை மாற்றவேண்டும் என்ற கட்டாயம் ஏற்படும். அப்போது வீரர்களையோ இல்லை அணிகளையோ மொத்தமாக விலைபேசி ஆட்டத்தின் போக்கை முன்கூட்டியே நிர்ணயிப்பதும் நடந்தே தீரும்.//

    இது நடக்க வேண்டுமென்றே நான் விரும்புகிறேன். அப்போதுதானே இந்த மாயவலையில் சிக்கியிருக்கும் ரசிகர்கள் வெளியில் வருவார்கள்?? அப்படியும் வரமாட்டார்கள் என்றால் இந்த பிரச்சினையில் முட்டி மோதி ஆகக்கூடியதுதான் என்ன??

    • // இந்த மாயவலையில் சிக்கியிருக்கும் ரசிகர்கள் வெளியில் வருவார்கள்??//

      நிச்சயமாக வரமாட்டார்கள். முதலாளித்துவத்தில் எல்லாம் போலி என்றான பிறகு என்னதான் செய்வது. ஓய்வை இன்பமாக துய்க்க வேண்டும். அப்படி நுகரும் இன்பம் போலியானது என்று தெரிந்திருந்தலும் கூட. வேறு வழியில்லை.

  2. //…..முதலாளித்துவத்தில் எல்லாம் போலி என்றான பிறகு என்னதான் செய்வது. ஓய்வை இன்பமாக துய்க்க வேண்டும். அப்படி நுகரும் இன்பம் போலியானது என்று தெரிந்திருந்தலும் கூட. வேறு வழியில்லை.//… அதுதான்நமது கலாச்சாரத்தின் மகிமை! கல்லால் ஆன கடவுளும் என்றாவது ஒருநாள் தனக்கு மட்டும் அருளநேரில் வருவான் , அனியாயஙகளை தட்டி கேட்பான் என்று பக்தன் நம்புகிறான்! சாராயம் உடல்நலத்திற்கு கேடு, குடி குடியை கெடுக்கும் என்ற அபாய அறிவிப்பு இருந்தும் பெருஙகுடியர்கள் அரசின் வருவாயை பெருக்க தியாகம் செய்கிரார்கள்!நாளை சூதாட்டமும், விபச்சாரமும் சட்ட அஙீகாரம் பெறலாம்! எல்லாமே மக்கள் சேவை தானே என்று சேவை வரி போடலாம்! மது, மாது, வரிசையில் கிரிக்கெட்டும் ஒரு போதை பழக்கமாகிவிட்டது! ஆடத்தெரியாத அம்பிகள் கூட அலச பொருள் கிடைக்கிறது அல்லவா! உழைக்கும் வர்க்கத்திற்குதான் ஓய்வுநேரம் கிடைப்பதில்லை! ஆனால் கிரிக்கெட்நிலவரம் தெரியாவிட்டால் வெட்டி ஆபிசர்களுக்கு தலை வெடித்து விடுமே! பணம் பண்ண வழியிருக்கிறது என்று தெரிந்ததும், கிரிகெட்டுக்கு சம்பந்தமில்லாத அரசியல்வாதி சசி தரூர் கூட பின்பக்கமாக நுழைகிரார்!நடிகைகள் அரை குறை ஆடைகளுடன் ரசிகர்களையும் வீரர்களையும் (?) ஊக்குவிப்பதை பார்த்து , அடுத்து விபச்சாரம்தான் பாக்கி, அதையும் சட்டபூர்வமாக அஙகிகரிக்க கோரிக்கை எழலாம்! சேவை வரி விதிக்க சிதம்பரம் காத்துக்கொண்டிருக்கிரார்!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க