Saturday, May 3, 2025
முகப்புஉலகம்ஆசியா'அல்லா' மண்ணில் எங்கள் தொழிலாளர் போராட்டம் துவக்கம் !

‘அல்லா’ மண்ணில் எங்கள் தொழிலாளர் போராட்டம் துவக்கம் !

-

மே 19 ஞாயிற்றுக்கிழமை அன்று துபாய் அதிர்ச்சியுடன் கண் விழித்தது. துபாயிலும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பிற பகுதிகளிலும் கட்டிடப் பணியில் ஈடுபட்டிருந்த அரப்டெக் கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்தனர். முதலில் எமிரேட்ஸின் பிற பகுதிகளில் தொடங்கிய இந்தப் போராட்டம் மெல்ல பரவி துபாயிலும் சூடு பிடித்தது.

சம்பள உயர்வு, நல்ல தங்கும் வசதி, ஆண்டு விடுமுறை போன்றவற்றை கோரிக்கைகளாக வைத்து அரப்டெக் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்தனர். துபாயில் யூனியன் அமைப்பது அரசு விதிகளின்படி தண்டனைக்குரியது. அதையும் மீறி ஊழியர்கள் ஒன்றிணைந்து இந்த போரட்டத்தை அறிவித்தனர் என்பது தான் துபாய் மற்றும் எமிரேட்ஸ் அரசுகளுக்கு அதிர்ச்சியளிக்க கூடியதாக இருந்தது.

துபாய் கட்டிடத் தொழிலாளர்கள்
படம் : நன்றி – அல் ஜசீரா

துபாய் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் கட்டிடப் பணியில் ஈடுபட்டிருக்கும் பெரும்பாலான ஊழியர்கள் பங்களாதேஷ், இந்தியா, நேபாளம் மற்றும் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு மாதத்திற்கு $160 முதல் $190 (சுமார் ரூ 6000 முதல் ரூ 9000 வரை) வரை சம்பளமாக கொடுக்கப்படுகிறது. ஆனால் இவர்கள் பணியில் சேரும் போது ஒப்பந்தத்தில் காட்டப்படும் தொகையோ இதை விட இரண்டு மடங்கு. ஓவர் டைம் வேலை வாங்கி விட்டு அதற்கான ஊதியம் கொடுக்கப்படுவதில்லை என்றும் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

இவர்களுக்கு உணவு, தங்கும் வசதி இலவசம் என ஒப்பந்தங்களில் சொல்லப்பட்டாலும், பெரும்பாலும் இவர்களே கட்டணம் செலுத்தி தான் சாப்பிட வேண்டும், இலவசமாக தரப்படும் உணவை வாயில் வைக்க முடியாது. தங்குமிடத்தில் 50 பேர் வரை ஒரே அறையில் தங்க வேண்டும், 12 மணிநேரம் வரை உழைக்க வேண்டும். கடும் வெயிலில் உழைத்தபடியே இருக்க வேண்டும், சூட்டிற்கு சிறுநீர் கூட வராது.

துபாய் பற்றி வினவில் ஏற்கனவே வந்த கட்டுரை. துபாயில் கட்டிடத் தொழில் 2009-ம் ஆண்டு உலகப் பொருளாதார நெருக்கடியால் முடங்கியது. விலைகள் உச்ச அளவுகளிலிருந்து 50 சதவீதத்துக்கும் அதிகம் வீழ்ச்சியடைந்தன. இப்போது 100க்கும் அதிகமான ஆடம்பர ஹோட்டல்களை கட்டும் பணிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன.

தங்கள் நிலைமைகளில் சிறிது முன்னேற்றம் வேண்டி தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினர். ஆனால் எதற்கும் நிறுவனம் செவி சாய்க்கவில்லை. பல ஊழியர்களின் பாஸ்போர்ட், வேலை செய்வதற்கான அனுமதி சீட்டு முதலியவற்றை பதுக்கி வைத்திருக்கும் ஒப்பந்தக்காரர்களை எதிர்த்து ஊழியர்கள் ஒன்றும் செய்ய முடியாது. ஊழியர்கள் மிரட்டப்பட்டு வேலை நிறுத்தம் வாபஸ் வாங்கப்பட்டு விட்டது. வேலை நிறுத்தம் தவறானது என்று மிரட்டப்பட்டு திரும்பப்பெறப்பட்டதே ஒழிய, எந்த கோரிக்கைகளும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை, இன்னும் சொல்லப் போனால், நிறுவனம் தரப்பில் பேச்சு வார்த்தைக்கு கூட யாரும் வரவில்லை. அரசு உதவியுடன் போலீஸ் படையை அனுப்பி ஊழியர்களை பணிய வைத்தது நிறுவனம்.

தொழிலாளர்கள் தமக்குள் ஒருங்கிணைந்து பேச்சு வார்த்தைக்கு செல்லவும், வேலை நிறுத்தத்தை ஒருங்கிணைக்கவும் சிலரை பிரதிநிதிகளாக தேர்ந்தெடுத்து இருந்தனர். இப்பொழுது அந்த பிரதிநிதிகளுக்கு ஒப்பந்த ரத்து அல்லது பணி நீக்க ஆணைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதைப் பற்றி அரசு தரப்பிலும் நிறுவனத்தின் தரப்பிலும் கூறும்போது, “நாங்கள் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி முறையான சம்பளத்தை வழங்குகிறோம், இங்கு தங்கும் வசதிகள் நன்றாக உள்ளன, மேலும் இங்கு வேலை செய்யும் தொழிலாளர்களோ தங்கள் நாட்டை விட இங்கு அதிகம் சம்பாதிக்கவே வந்துள்ளனர் அப்படியிருக்க துபாய் நிலமைகளை பற்றி குறைகூறுவது தவறு” என்று கூறியுள்ளனர்.

“உங்கள் நாட்டில் பிழைக்க வழியில்லாமல் தான் இங்கு வந்துள்ளீர்கள், நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்” என்பதுதான் இதன் சாரம். நிறுவனம் சொல்வதை வங்கதேசத்து ஊழியர்கள் மறுக்கின்றனர். “எங்கள் நாட்டில் வேலை செய்திருந்தால் இதை விட அதிகமாகவே சம்பாதித்திருபேன், இங்கு அதிக சம்பளம் என்று ஒப்பந்ததில் மாட்டிகொண்டுள்ளேன்” என்றார். இங்கு வேலை செய்யும் சிலருக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக விடுமுறையே அளிக்கவில்லை. துபாய் சட்டப்படி ஆண்டிற்கு ஒரு மாதம் விடுமுறை அளிக்க வேண்டும்.

துபாய் அரசு மீண்டும் இந்த மாதிரியான ஒரு வேலை நிறுத்தம் வராமல் இருக்க ஊழியர்களை மிரட்டுவது, அவர்களை கண்காணிப்பது, சிலரை பணி நீக்கம் செய்வது என தொடர்ந்து தொழிலாளருக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது.

இன்றைக்கு ஷேக்குகளின் அடக்குமுறை சட்டங்கள் மற்றும் அட்டூழியங்களால் இந்த வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்திருக்கலாம். ஆனால் அல்லாவின் மண்ணில் இதுவரை வாயே திறக்க கூடாது என்று சிறை வைக்கப்பட்டிருந்த தொழிலாளிகள் இன்று போராட துவங்கியிருக்கின்றனர். ஏழை நாடுகளைச் சேர்ந்த இவர்களில் பெரும்பாலானோர் மதத்தால் முசுலீம்கள் என்பதை விளக்கத் தேவையில்லை. ஆனால் மத்தை விட முக்கியமானது வர்க்கம் என்பது இந்த வேலை நிறுத்தத்தின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இனி அமெரிக்க அடிவருடிகளான அரபு ஷேக்குகள் மதத்தை வைத்து எங்கள் தொழிலாளிகளை ஒடுக்க முடியாது என்பதற்கு இது ஒரு துவக்கம்.

மேலும் படிக்க
Dubai workers hold rare strike for more wages