privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஅரசியல்ஊடகம்மாலேகான் குற்றப்பத்திரிகையில் இந்து பயங்கரவாதிகள் !

மாலேகான் குற்றப்பத்திரிகையில் இந்து பயங்கரவாதிகள் !

-

டந்த வாரம் மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்து பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்த லோகேஷ் சர்மா, டான்சிங், ராஜேந்திர சவுத்ரி, மனோகர் நர்வாரியா ஆகிய நான்கு பேர் மீதும் தேசிய புலனாய்வுக் குழு அதிகாரிகள் மகாராஷ்ட்ரா சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை சமர்ப்பித்துள்ளனர். இந்த குற்றப்பத்திரிகையில் இந்த நான்கு மதவெறியர்களின் குண்டு வைப்புச் சதிச்செயல்களும் அவர்களின் தொடர்புகளும் ஆதாரங்களுடன் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. எனினும் பிரக்யாசிங் உள்ளிட்ட முக்கிய குற்றவாளிகளின் பெயர்கள் இடம் பெறவில்லை.

மாலேகான் குண்டுவெடிப்பு இடம்.
மாலேகான் குண்டு வெடிப்புகள் 2006 : படா கப்ரிஸ்தான் மசூதிக்கு வெளியில்.

2006-ம் ஆண்டு செப்டம்பர் எட்டாம் தேதி வெள்ளிக்கிழமை மதியம். மகாராஷ்டிர மாநிலம் மாலேகானில் இஸ்லாமியர்கள் திரளாக வசிக்கும் பகுதியில் உள்ள ஒரு மசூதியில் சரியாக தொழுகை முடிகின்ற நேரத்தில் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது ஒரு குண்டு. சிதறித் தெரித்த சில்லுகளுடன் மேலே எழும்பிய புகைப்படலம் களைவதற்குள் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்தன. அதை அடுத்து அருகில் இருந்த சந்தைப் பகுதியில் ஒரு குண்டு, என்று அடுத்தடுத்து தொடர்ச்சியாக நான்கு குண்டுகள் வெடித்துச் சிதறின. பிய்த்தெறியப்பட்ட சதைத் துணுக்குகளால் அந்த இடமே இரத்தகளரியானது. இந்த தாக்குதலில் மொத்தம் 38 பேர் கொல்லப்பட்டனர், 200-க்கும் அதிகமான மக்கள் படுகாயமடைந்தனர்.

இது மாலேகானில் நடத்தப்பட்ட முதல் தாக்குதல். இதற்கு அடுத்த பயங்கரவாத தாக்குதல் 2008 ஆம் ஆண்டின் ரம்ஜான் மாதத்தில் நடத்தப்பட்டது. டிபன் பாக்ஸ்களில் அடைக்கப்பட்ட வெடிகுண்டுகள் மாலேகானில் உள்ள ஒரு மசூதிக்கு வெளியில் நின்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்தது. அதுவும் வெள்ளிக்கிழமை தான், மதிய தொழுகை முடியும் நேரத்தில் தான் இந்த குண்டுகளும் வெடித்துச் சிதறின. இந்த தாக்குதலில் மொத்தம் நான்கு பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.

உடனடியாக கடமையில் இறங்கிய காவல்துறை இதற்கு முஸ்லீம் பயங்கரவாதிகள் தான் காரணம் என்று வெற்றிலையில் மை போட்டு பார்த்ததைப் போல அடித்துக் கூறியது. இவர்கள் தான் குண்டு வைத்தனர் இவர்களுக்கும் தடை செய்யப்பட்ட சிமி அமைப்புக்கும் தொடர்பு உள்ளது என்று கூறி ஒன்பது அப்பாவி முஸ்லீம்களை கைது செய்து சிறையில் தள்ளினர். ஆனால் அவர்கள் எந்த குற்றமும் செய்யாத அப்பாவிகள் என்பது பின்னர் நிரூபிக்கப்பட்டு அவர்கள் அனைவரும் 2012 இல் விடுவிக்கப்பட்டனர். அதாவது, தவறே செய்யாமல் பயங்கரவாதிகளாக குற்றஞ்சாட்டப்பட்டு ஐந்து ஆண்டுகளை சிறையில் கழித்த பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

குற்றம் சாட்டப்பட்ட இஸ்லாமியர்கள்
பொய்யாக குற்றம் சாட்டப்பட்ட இஸ்லாமியர்கள்.

இந்தியாவின் எந்த மூலையில் குண்டு வெடித்தாலும் உடனே இந்து பொதுப்புத்தியில் தாடி, குல்லா வைத்த முஸ்லீம் முகங்கள் தான் தோன்றும். அந்த அளவுக்கு இசுலாமியர்களைப் பற்றிய இந்து பெரும்பாண்மையின் கண்ணோட்டம் ஆர்.எஸ்.எஸ் காவிக் கண்ணோட்டமாக மாற்றப்பட்டிருக்கிறது. இந்த கண்ணோட்டத்தை வடிவமைப்பதிலும், இஸ்லாமியர்களைப் பற்றிய பொதுக்கருத்தை உருவாக்குவதிலும் ஜனநாயகத் தூண்கள் என்று தங்களைத் தாங்களே பீற்றிக்கொள்ளும் ஊடகங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. குண்டு வெடிப்புகள் நடக்கும் போதெல்லாம் அநீதியான முறையிலும் ஒருதலை பட்சமாகவும், இஸ்லாமியர்களுக்கு எதிரான பொதுக்கருத்தையும் வெறுப்பையும் அதிகரிக்கும் கருத்துக் கருவிகளாகவே இந்த ஜனநாயகத் தூண்கள் செயல்படுகின்றன.

பயம், பீதி, பதட்டம் என்று உணர்ச்சிக் கொந்தளிப்பு மிக்க இத்தகைய தருணங்களில் பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் தம் பங்கிற்கு தமது சொந்த கற்பனைகளையும், பொய்களையும் எவ்வித தயக்கமும் இன்றி வாசகர்களிடம் அள்ளிவிட்டு ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்குகளுக்கு போட்டியாக முஸ்லீம் வெறுப்பு பிரச்சாரத்தில் இறங்குகின்றன. வெளியில் ஜனநாயக வேடமும் மூளைக்குள் ஆர்.எஸ்.எஸ் அரை டவுசர் புத்தியையும் வைத்துக்கொண்டு வார்த்தைக்கு வார்த்தை தீவிரவாதம், பயங்கரவாதம் என்று ஊளையிடும் இந்த அகிம்சாவாதிகள் எல்லாம் இந்து தீவிரவாதிகள், இந்து பயங்கரவாதிகளின் குண்டுவைப்புகளை பற்றி வாய் திறப்பதே இல்லை.

மாலேகான் தாக்குதலுக்கு முன்பும் இதே பாணியில் மகாராஷ்ட்ரா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பயங்கரவாதத் தக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. 2003-ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி, வெள்ளிக்கிழமை மதியம், பார்பானி நகரில் உள்ள ரஹ்மத் நகர் மகமதியா மசூதியில் ஒரு தாக்குதலும், 2004-ம் ஆண்டு ஆகஸ்டு 2-ம் தேதி, வெள்ளிக்கிழமை மதியம், புர்ணா நகரின் சித்தார்த் நகரில் உள்ள மிராஜ் உல் உலூரம் மதறாசா மற்றும் மசூதியிலும் இதே போன்ற வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதே ஆண்டு ஆகஸ்டு 27-ம் தேதி, வெள்ளிக்கிழமை மதியம் ஜால்னா நகரில் உள்ள காதிரியா மசூதியிலும் குண்டுகள் வெடித்தன. 2006-ம் ஆண்டு ஐதராபாத் மெக்கா மசூதி மற்றும் அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்புகளும் இதே பாணியில் வெள்ளிக்கிழமை, மதிய நேரங்களில் தான் நடத்தப்பட்டன.

அசிமானந்தா சொருகிய ஆப்பு

ஆனால், அடுத்த குண்டு மசூதியில் வெடிக்கவில்லை. ஒரு வீட்டிற்குள் வெடித்தது. 2006-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மகாராஷ்ட்ரா மாநிலம் தரோடாவைச் சேர்ந்த ராஜ்கோண்ட்வர் என்பவரது வீட்டிற்குள் இருந்து வெடித்துச் சிதறியது. பயங்கரவாத தாக்குதல்களுக்காக தயாரித்துக் கொண்டிருந்த போதே அந்த குண்டுகள் வெடித்துச் சிதறிவிட்டன. இந்த வெடி விபத்தில் ஆர்.எஸ்.எஸ் பரிவாரங்களைச் சேர்ந்த இருவர் அதே இடத்தில் இறந்தனர், ஐந்து பேர் படுகாயத்துடன் கைது செய்யப்பட்டனர். இந்த குண்டுகள் ஒளரங்காபாத் மசூதியை தாக்குவதற்காக தயாரிக்கப்பட்டவை என்பது பின்னர் விசாரணையில் தெரிய வந்தது. அப்போது தான் இந்து பயங்கரவாதிகளின் குண்டு வைப்பு சதி வேலைகள் ஓரளவுக்கு வெளியே தெரிந்தன. இந்தியாவில் குண்டுகள் வெடிக்கும் போதெல்லாம் தேசபக்த ஒப்பாரியும், இஸ்லாமிய தீவிரவாதம் பற்றி விதம்விதமான திரைக்கதைகளையும் எழுதுகின்ற பத்திரிகைகள் எல்லாம் அப்போது கேடுகெட்ட முறையில் உண்மைகளை மூடி மறைக்கவே முயற்சித்தன.

அதன் பிறகு குண்டு வைப்புகளில் ஈடுபட்ட இந்து பயங்கரவாதிகள் ஒவ்வொருவராக கைது செய்யப்பட்டனர். மாலேகானில் நடத்தப்பட்ட இரண்டாவது குண்டு வெடிப்பு தொடர்பாக 2008 ஆம் ஆண்டில் பெண் சாமியார் பிரக்யா சிங்கும், இரு முன்னாள் இராணுவ அதிகாரிகளும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட இராணுவ அதிகாரிகள் இருவரும் மேஜர் ஜெனரல் தகுதியில் இராணுவத்தில் பணியாற்றியவர்கள். இவர்கள் தான் இந்து பயங்கரவாதிகளுக்கு வெடிகுண்டுகளை தயாரிப்பதற்கு பயிற்சியளித்துள்ளனர். இவர்களைத் தவிர மற்றொரு முன்னாள் இராணுவ அதிகாரியும் கைது செய்யப்பட்டார். அவர் லெப்டினென்ட் கர்னல் ஸ்ரீகாந்த் பிரசாத் புரோஹித். ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் நடத்திய பல்வேறு குண்டு வைப்புகளுக்கு இந்திய இராணுவத்திலிருந்து வெடி மருந்துகளை கொண்டுவந்து கொடுத்த தேசபக்தர் இவர் தான். இந்து பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவைப்புகளில் எல்லாம் இவனுடைய பங்கு மிகவும் முக்கியமானது.

பிரக்யா உள்ளிட்டோரின் கைதைத் தொடர்ந்து அதே ஆண்டில் உ.பி மாநிலம் கான்பூரில் வைத்து தயானந்த் பாண்டே என்கிற சாமியார் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் 2010-ம் ஆண்டு அசிமானந்தா என்கிற ஆர்.எஸ்.எஸ் சின் முழு நேர ஊழியர் கைது செய்யப்பட்டார். இவர் கைது செய்யப்பட்டது தான் இந்த வழக்கில் மிக முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. இவர் தான் குண்டு வைப்புகளில் ஈடுபட்ட இந்து பயங்கரவாதிகளைப் பற்றிய பல உண்மைகளை முதன்முதலில் வாக்குமூலமாக அளித்தவர். அவருடைய வாக்குமூலத்தில் தனக்கும் ஆர்.எஸ்.எஸ்க்கும் மக்கா மஸ்ஜித் குண்டு வைப்பில் மட்டுமல்ல, 2006 இல் நடந்த மாலேகான் குண்டுவெடிப்பிலும் தொடர்பு இருக்கிறது என்பதை ஒப்புக்கொண்டார். அசிமானந்தாவின் இந்த ஒப்புதல் வாக்குமூலம் ஆர்.எஸ்.எஸ்க்கு சொருகப்பட்ட கூர்மையான ஆப்பாக அமைந்தது.

வாயை திறப்பதற்குள் மூச்சை நிறுத்திய ஆர்.எஸ்.எஸ்

சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ்
சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு

இந்துமதவெறிக் கும்பல் மசூதிகளை அடுத்து இரயில்களுக்கும் குண்டு வைக்கத் திட்டமிட்டது. அந்த திட்டத்தின் முதல் முயற்சியாக, 2007 ஆம் ஆண்டு டெல்லிக்கும் லாகூருக்கும் இடையே ஓடும் சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் ரயில் ஆர்.எஸ்.எஸ் கும்பலால் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது. இந்த பயங்கரவாத தாக்குதலில் மொத்தம் 68 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தலைமை ஏற்று நடத்தியவன் சுனில் ஜோஷி என்கிற ஆர்.எஸ்.எஸ்சின் முழுநேர ஊழியன். மாலேகான், அஜ்மீர், மெக்கா மசூதி, சம்ஜவ்தா உள்ளிட்ட அனைத்து குண்டுவெடிப்புகளிலும் மிகப்பெரியதொரு வலைப்பின்னல் செயல்பட்டிருக்கிறது. இந்த தாக்குதல்கள் அனைத்திலும் பிரக்யாசிங், ஸ்ரீகாந்த் பிரசாத் புரோஹித், அசிமானந்தா, சுனில் ஜோஷி போன்ற கீழ்மட்ட தலைகளில் இருந்து பல உயர்மட்ட தலைகள் வரை சம்பந்தப்பட்டிருக்கின்றனர் என்பதை சுனில் ஜோஷியின் கொலை அம்பலப்படுத்தியது.

குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய இந்துமதவெறியர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டதாலும், ஏற்கெனவே கைதானவர்கள் பல உண்மைகளை கக்கிக்கொண்டிருந்ததாலும், சம்ஜவ்தா குண்டு வெடிப்பில் முக்கிய மூளையாக செயல்பட்ட சுனில் ஜோஷி கைது செய்யப்பட்டால் அவனும் வாக்குமூலத்தில் பல உண்மைகளை கக்கக்கூடும் என்கிற அபாயம் இருந்தது. அவனுக்கு இந்த சதிச் செயலின் மொத்த வலைப்பின்னலும் தெரிந்திருந்தது, யார், யார் பெரிய தலைகள், அவர்களின் பங்கு என்ன என்பது பற்றி எல்லாம் அவனுக்குத் தெரியும். எனவே அவன் கைதானால் பல முக்கிய தலைகளே உருளும் என்பதால் ஆர்.எஸ்.எஸ் இந்து பயங்கரவாதிகளே சுனில் ஜோஷியை 2007-ம் ஆண்டு மத்தியப் பிரதேச மாநிலம் தேவாசில் வைத்து போட்டுத் தள்ளிவிட்டனர். அசிமானந்தா இதையும் தனது வாக்கு மூலத்தில் கூறியுள்ளார். இதன் மூலம் சுனில் ஜோஷியை கொன்றது பிரக்யாசிங் உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் தான் என்கிற உண்மையும் தெரியவந்தது. இந்த கொலைக்காகவும் பிரக்யா சிங் மீது ஒரு வழக்கு போடப்பட்டது.

நீதிமன்றத்தின் காவிப்பாசம்

பிரக்யா தாக்கூர்
போலீஸ் காவலில் பிரக்யா தாக்கூர்

குண்டுவெடிப்பு வழக்குகளில் இந்துத்துவ பயங்கரவாதிகள் வரிசையாக கைது செய்யப்பட்டனர். இரண்டாவதாக நடந்த மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் பங்காற்றிய கர்நாடக மாநிலத்தை சேர்ந்த முத்தலிக் என்பவன் 2011 ஆம் ஆண்டில் இறுதியாக கைது செய்யப்பட்டான். இவனையும் சேர்த்து இதுவரை பனிரெண்டு இந்துத்துவ பயங்கரவாதிகள் பல்வேறு குண்டு வைப்புகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். ராம்ஜி கல்சங்கரா, சந்தீப் டாங்கே என்கிற இரண்டு பேர் இதுவரை பிடிபடாமல் தலைமறைவாக உள்ளனர். பா.ஜ.க மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வந்தால் இவர்களின் வனவாச வாழ்வு முடிந்து வெளியே வருவதோடு அடுத்த முறை பிரதமர் வேட்பாளர்களாகவும் கூட நிறுத்தப்படலாம். சும்மாவா, தியாகம் அல்லவா செய்திருக்கிறார்கள்.

மாலேகான் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்ட பிரக்யாசிங் உள்ளிட்ட பதினோரு பேர் மீதும் ”மகாராஷ்ட்ரா திட்டமிட்ட குற்றத்தடுப்புச் சட்டத்தின்” கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த சட்டம் ஒரு பயங்கரவாதத் தடுப்புச் சட்டமாகும். இது கடுமையான சட்டப் பிரிவுகளை கொண்டது. இந்த குண்டுவெடிப்பு வழக்கின் விசாரணை நாசிக் தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அப்பாவி இஸ்லாமியர்களை பிடித்து ஆண்டுக்கணக்கில் உள்ளே தள்ளுவதில் மகிழ்ச்சி கொள்ளும் நீதி மன்றம், பிரக்யா சிங் உள்ளிட்ட இந்து பயங்கரவாதிகளை இந்த சட்டப்பிரிவின் கீழ் கைது செய்தது தவறு என்று கூறியதோடு அதை ரத்து செய்து, சாதாரண கோர்ட்டில் நடக்கும் சாதாரண வழக்கைப் போல இந்த வழக்கை விசாரிக்கும்படி உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவை (அயோக்கியத்தனத்தை) கேட்டதும் பிரக்யாசிங்கின் தந்தைக்கு தலைகால் புரியவில்லை, தனது குடும்பத்தோடு நண்பர்கள் உறவினர்களுக்கு எல்லாம் இனிப்புகளை வழங்கிக் கொண்டாடினார்.

வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு குழுவிடம் மாற்றம்

இந்த வழக்கை முதலில் மகாராஷ்டிரா மாநில பயங்கரவாத தடுப்புப் படை விசாரித்து வந்தது. அது தடை செய்யப்பட்ட இஸ்லாமிய மாணவர் அமைப்பான சிமியும், வேறு சில இஸ்லாமிய அமைப்புகளும் தான் இந்த குண்டு வெடிப்புகளுக்கு காரணம் என்று கூறி ஒன்பது அப்பாவி இஸ்லாமியர்களை கைது செய்து உள்ளே தள்ளியதோடு வழக்கையும் அத்துடன் ஊத்தி மூடப்பார்த்தது. ஆனால் மத்திய உள்துறை அமைச்சகம் இதில் தலையிட்டு இந்துத்துவா பயங்கரவாதிகள் நடத்திய அனைத்துக் குண்டுவெடிப்பு வழக்குகளையும் தீவிரவாத தடுப்புப் படையிடமிருந்து தேசிய புலனாய்வு குழுவிடம் 2011-ம் ஆண்டு ஒப்படைத்தது.

ராஜேஷ் தவாடே, குல்கர்னி
குண்டு வைப்பில் ஈடுபட்ட இந்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்த ராஜேஷ் தவாடேயும் குல்கர்னியும்.

தேசிய புலனாய்வுக் குழு விசாரணையை துவங்கிய பிறகு தான் ஓரளவுக்காவது உண்மைகள் வெளிவரத் துவங்கின. எனினும் வலதுசாரி கண்ணோட்டமுள்ள இந்திய ஊடகங்கள் முடிந்த அளவுக்கு தமக்கு விருப்பமற்ற இந்த உண்மைகளை மூடி மறைக்கவே பார்த்தன. மாலேகான் குண்டு வெடிப்புக்கு இந்து அமைப்புகள் தான் காரணம் என்பதை தேசிய புலனாய்வுக் குழு ஆதாரங்கள், சாட்சிகளுடன் தனது அதிகாரபூர்வமான முதல் அறிவிப்பை 28.12.2012 அன்று வெளியிட்டது. அதன் பிறகு குற்றவாளிகளாக கைது செய்யப்பட்டிருந்த இந்து தீவிரவாதிகள் மீதான பிடி இறுக்கமடைந்தது.

இந்நிலையில் இம்மாதம் 23-ம் தேதி இவ்வழக்கு நடைபெற்று வரும் சிறப்பு நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வுக் குழு அதிகாரிகள் மாலேகான் குண்டுவைப்பில் லோகேஷ் சர்மா, டான்சிங், ராஜேந்திர சவுத்ரி, மனோகர் நர்வாரியா ஆகிய நான்கு இந்துத்துவ தீவிரவாதிகளுக்கு உள்ள தொடர்பை தெளிவுபடுத்தும் குற்றப்பத்திரிகையை சமர்ப்பித்துள்ளனர். தலைமறைவாக உள்ள ராம்ஜி கல்சங்கரா, சந்தீப் டாங்கே, அமித் சவுகான் ஆகியோருக்கு எதிரான விசாரணை நடந்துவருவதாகவும் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராம்ஜி மற்றும் டாங்கேயின் தலைக்கு ரூ.10 லட்சம்மும், அமித் சவுகானின் தலைக்கு ஐந்து லட்சமும் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயங்கரவாதிகளுக்கும் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்து தீவிரவாத அமைப்புகளுக்கும் இடையே உள்ள நெருங்கிய தொடர்பும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் முக்கிய குற்றவாளிகளான புரோஹித், அசிமானந்தா, ராணுவ அதிகாரி ஸ்ரீகாந்த் பிரசாத் புரோஹித், பெண் சாமியார் பிரக்யா சிங் தாகூரின் பெயர்கள் இக்குற்றப்பத்திரிகையில் இடம்பெறவில்லை. ஒரு வேளை இவர்களை தப்பிக்க வைப்பதற்குத்தான் இந்தக் குற்றப்பத்திரிகையா என்றும் தெரியவில்லை. இவ்வழக்கில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கிறது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது, துணை குற்றப்பத்திரிகை விரைவில் சமர்ப்பிக்கப்படும் என்று தேசிய புலனாய்வுக் குழு அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

நீதி நீதி மன்றத்தில் கிடைக்குமா ?

நாளையே மோடி ஆதரவாளர்களின் விருப்பப்படி பாசிச மோடி பிரதமரானால், இந்த குண்டு வைப்புகளில் கைது செய்யப்பட்டுள்ள அத்தனை பயங்கரவாதிகளும் நிச்சயமாக விடுதலை செய்யப்படுவார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

எந்த குற்றமும் செய்யாத அப்சல் குரு போன்ற அப்பாவிகளின் உயிரை குடித்து தனது வெறியை தீர்த்துக்கொண்ட பாசிச நீதிமன்றங்கள் செயல்படும் இந்தியாவில் இந்துமதவெறியர்களுக்கு எதிராக வழக்கும் விசாரணையும் நடப்பதே பெரிய விஷயம் தான். அந்த வகையில் தேசிய புலனாய்வுக் குழு இந்துவெறியர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பது வரவேற்கத்தக்கது தான். ஆனால், அதே நேரத்தில் விசாரணை நேர்மையாக நடத்தப்பட்டாலும், குற்றப்பத்திரிகை குற்றவாளிகளை சரியாக அடையாளம் காட்டினாலும் இந்திய நீதிமன்றங்கள் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களுக்கு நீதியை வழங்கிவிடும் என்று எதிர்பார்க்க முடியாது. நீதிமன்றங்களை மட்டுமே நம்பி இராமல் அதற்கு வெளியில் கட்டியமைக்கப்படும் மக்கள் போராட்டங்களால் தான் இந்த பயங்கரவாதிகளை தண்டிக்க முடியும்.

– வையவன்

  1. //….முக்கிய குற்றவாளிகளான புரோஹித், அசிமானந்தா, ராணுவ அதிகாரி ஸ்ரீகாந்த் பிரசாத் புரோஹித், பெண் சாமியார் பிரக்யா சிங் தாகூரின் பெயர்கள் இக்குற்றப்பத்திரிகையில் இடம்பெறவில்லை. ஒரு வேளை இவர்களை தப்பிக்க வைப்பதற்குத்தான் இந்தக் குற்றப்பத்திரிகையா என்றும் தெரியவில்லை..// இந்துத்வா பயஙகரவாதம் காந்தி கொலையில் ஆரம்பித்தது..இன்னும் முடியவில்லை! மும்பை குண்டுவெடிப்பை திட்டமிட்டு நடத்திய ராபெர்ட் கெட்லை சிவசேனா தலைவரை சந்தித்த ரகசியம், இவர்களின் முகமூடியை முதலில் கிழித்த கர்க்கரே மரணம் பற்றிய ரகசியமும் வெளிவரவேண்டும்!

  2. அய்யா ஆஜாட்கசத்ரு தங்களுக்கு முகமூடியை முதலில் கிழித்த பார்ப்பன இந்து மதம் கர்க்கரே மிகவும் வேன்டியவர் ஆகீவிட்டாரா இப்போது?

  3. அழகரசன்! உண்மையை உள்ளபடி சொல்லும் எவரையும் எனக்கு பிடிக்கும்! அவர் மரணத்தில் பல சந்தேகங்கள் ஊடகங்களாலும், அவரது குடும்பத்தினராலும் எழுப்பபட்டன, குண்டு துளைக்காத அப்ரான் அணிந்தாரா, அது உண்மையில் தரம்வாய்ந்ததுதானா, அவரை திட்டமிட்டு மருத்துவ மனைக்கு ஆனுப்பிவ்னுப்பி கசாப்பிற்கும் தகவல் தரப்பட்டதா? கசாப் கூட்டாளியுடன் மருத்துமனை வளாகத்திற்குள் நுழையாமல், இவரை எதிர்பார்த்து காத்திருந்தது ஏன்? இப்படியாக பல கேள்விகளுக்கு விளக்கமில்லை! //பார்ப்பன இந்துமத கார்க்கரே? அது பற்றி விளக்கவும்! எஙளுக்கு தெரிந்து அவர் இந்து தீவிரவாதத்தை கண்டுபிடித்து முதலில் அறிவித்தவர்!

    • தீவிரவாத இந்துக்கள் பாகிஸ்தானில் உள்ளா இசுலாமிய தீவிரவாதிஇய்டம் இந்து மத எதிரியை(கர்காரே ) கொல்ல திட்டம் தீட்டி வென்று இருகிறார்கள்.அதை இந்து மதவாதத்தை எதிர்க்கும் காங்கிரசாலும் கண்டு பிடிக்க முடியவில்லை

      மதம் மூளையை மழுன்கடிக்கும் என்று தெரியும் . ஆனால் இந்த அளவிற்கு ….

      பிற மதத்தினர் செய்யும் தவறுகள் மூலம் , தமது மதத்தினரின் தவறுகளை மூடி மறைக்கலாம் என்கின்ற சராசரி மனிதனின் சிந்தனை தான் உங்கள் கருத்தில் உள்ளது .

      மதம் என்னும் கண்ணாடியை விலக்கி விட்டு உலகத்தை ஒரு தரம் பாருங்கள்

  4. மகாபாரத யுத்ததில் மக்களை கொல்லை, இவர்கள் பயன்படுத்திய பிரமாச்த்ரம், அணுகுண்டு தானாம்! என்னேநம் முன்னோர்களின் விஞ்ஞான அறிவு என்று வியக்கிறீர்களா? பார்க்க: உண்மை, ஜுன் 01-15, பெரியார் சுய மரியாதை இயக்க வெளியீடு.

Leave a Reply to Ajaathasathru பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க