செய்தி : “ம.பி., முதல்வர், சிவ்ராஜ் சிங் சவுகானை, அத்வானி பாராட்டி பேசியதை, எதிர்க்கட்சிகள் திசை திருப்புகின்றன. சவுகானை பாராட்டி பேசினார் என்பதற்காக, நரேந்திர மோடியை, அத்வானி குறைத்து மதிப்பிட்டதாக கருதக்கூடாது,” என பா.ஜ. தலைவர் ராஜ்நாத் சிங் கூறினார்.
நீதி : பா.ஜ.க-வில் கோஷ்டிச் சண்டைகள் கொடி கட்டிப் பறக்கின்றன என்பதை யாரும் குறைத்து மதிப்பிடக் கூடாதாம்.
______
செய்தி : ரயில்வேயில் நடந்த ஊழல் குறித்து, முன்னாள் ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சாலிடம், சி.பி.ஐ., இந்த வாரம் விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளது.
நீதி : ஓ.. இப்பத்தான் விசாரணையா! அதுசரி, அமைச்சர் ஆவணங்களையும், ஆதாரங்களையும் அழிப்பதற்கு அவகாசம் கொடுக்க வேண்டுமல்லவா!
______
செய்தி : “முதலமைச்சர்களை வெறுமனே கூட்டத்தில் கூட்டி, அவர்களின் கருத்துகளைத் தெரிவிக்க விடாமல், அவர்களை வெறும் ரப்பர் ஸ்டாம்ப் போல் மத்திய அரசு வெளிப்படுத்துகிறது.” – தில்லியில் பாதுகாப்பு குறித்து நடைபெற உள்ள முதலமைச்சர்கள் கூட்டம் குறித்து ஜெயலலிதா.
நீதி : அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழுக்களிலெல்லாம் ரப்பர் ஸ்டாம்புகளை சந்திக்கும் புரட்சித் தலைவி அவர்களே! சாக்கடை சந்தனத்திற்கு அழலாமா?
_______
செய்தி : தன் மீது அவதூறு வழக்குத் தொடர தமிழக அரசு பிறப்பித்த அரசாணைகளை ரத்துசெய்யக் கோரி தேமுதிக தலைவர் விஜயகாந்த் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.
நீதி : நீதிபதி அவர்களே இந்த பச்சப்பிள்ளைக்கு ஏதோ கொஞ்சம் பாத்து போட்டுக் கொடுங்கள்! இன்னும் எத்தனை காலம்தான் அழுது அரற்றுவார்!
______
செய்தி : “பாரதீய ஜனதாவில், நான் மூன்றாவது இடத்தில் இருக்கிறேன். எனக்கு முன், மோடி, ரமண் சிங் உள்ளனர்,” என மத்திய பிரதேச முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவருமான, சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்து உள்ளார்.
நீதி : தர வரிசையை எப்படி தீர்மானிக்கிறீர்கள் சவுகான் அவர்களே? கலவரங்கள், கொலைகளை வைத்தா?
______
செய்தி : தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா உள்பட அக்கட்சி நிர்வாகிகள் 5 பேர் மீது திருப்பூர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நீதி : “கல்யாண மண்டபத்த இடிக்கிறான்னு கட்சி கிட்சி ஆரம்பிக்காதேன்னு படிச்சு படிச்சு சொன்னனே”ன்னு அண்ணி அழுது கொண்டே கேப்டனுக்கு கம்பெனி கொடுக்கிறார்.
_______
செய்தி : மத்திய கனரக தொழில்கள் துறை அமைச்சரும், முன்னாள் விமான போக்குவரத்து துறையை கவனித்தவருமான, பிரபுல் படேலுக்கு எதிராக, ‘இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் மாஜி அதிகாரி கொடுத்த புகாரை, பகிரங்கமாக வெளியிட வேண்டும்’ என, மத்திய அரசுக்கு, மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
நீதி : விசாரிச்சு தண்டிக்கத்தான் முடியாது, எவ்வளவு சுருட்டினாரென்பதையாவது சொல்லுங்கப்பா!
_______
செய்தி : “நக்சலைட்டுகளை அடக்குவதற்கு கூடுதல் படைகளை அனுப்புங்கள்”, மத்திய அரசுக்கு ஒடிசா முதல்வர் கோரிக்கை!
நீதி : மாவோயிஸ்ட்டுகளிடம் அணி திரண்டிருக்கும் பழங்குடி மக்களைப் பார்த்து ஃபாரினில் படித்த முதலமைச்சர் நவீன் பட்நாயக் பயப்படுவது வேடிக்கை!
_____
செய்தி : ஸ்ரீரங்கம் கோயிலில் சுமார் 40 கோடி ரூபாய் செலவில் பழுதுபார்ப்பு மற்றும் புனரமைப்பு வேலைகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஜெயலலிதா.
நீதி : இனி ஸ்ரீரங்கம் கோவில் அம்மாவிடம் ஆசிபெற்ற அரங்கநாதர் கோவில் என்று அழைக்கப்படும்!
_____
செய்தி : பாலியல் குற்றங்களைத் தடுக்கும் வகையில் இனி அரசுப் பெண்கள் பள்ளிகளில், ஆசிரியைகள் மட்டுமே நியமனம் செய்யப்படுவார்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
நீதி : மகளிர் காவல் நிலையங்களை நிறைய ஆரம்பித்தாலும் ஆண் போலீசின் லாக்கப் பாலியல் வன்முறைகள் குறையவில்லையே அரசே!
_____
செய்தி : அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள 7 கோடி குடும்பங்களை வறுமையில் இருந்து மீட்க இமாச்சல பிரதேசம், உத்திரகாண்ட் உள்ளிட்ட வடகிழக்கு மற்றும் மலைவாழ் மாநில மக்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக காங்கிரஸ் தலைவர் சோனியா தெரிவித்துள்ளார்.
நீதி : எப்படி? சல்வாஜூடும் ஆரம்பித்து தண்டகாரன்யா பழங்குடி மக்களை பரலோகம் அனுப்பிய மாதிரியா?
______
செய்தி : காவிரி நதிநீர் பங்கீட்டுக்காக மத்திய அரசு அறிவித்துள்ள தாற்காலிக மேற்பார்வைக் குழுவால் கர்நாடக அரசை கட்டுப்படுத்த முடியாது என்பதால் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தால்தான் நிரந்தர தீர்வு கிடைக்கும் எனமத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே. வாசன் தெரிவித்தார்.
நீதி : கர்நாடகாவிலும், மத்திய அரசிலும் ஆளும் காங்கிரஸ் அரசாங்கங்களால் 5 நயாபைசாவுக்கு பிரயோஜனமில்லை என்கிறார் அண்ணன் வாசன்.
______
செய்தி : திருச்சியில் 25 ஏக்கரில் கடந்த ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்ட தேசிய சட்டப்பள்ளியில் முதல் ஆண்டுக்கான வகுப்புகள் நடப்பு ஆண்டிலேயே தொடங்கப்படும் என்று ஸ்ரீரங்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் அறிவித்தார் முதல்வர் ஜெயலலிதா.
நீதி : நாடு முழுவதும் அம்மா சார்பில் அவதூறு வழக்குளை தொடுப்பதற்கு ஆயிரக்கணக்கில் வழக்கறிஞர்கள் தேவை என்பதால் இந்த கல்லூரியில் படிப்பவருக்கு வேலை உறுதி!
______
செய்தி : ஆம் ஆத்மி கட்சி அமைப்பாளர் அரவிந்த கேஜரிவாலின் அரசியல் பிரவேசமும், நடவடிக்கையும் எதிர்வரும் தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் குழப்பத்துக்கே வழி வகுக்கும் என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
நீதி : கேஜ்ரிவாலின் அரசியல் பிரவேசம் காமடிக்குத்தான் வழிவகுக்கும், அதில் ஏதய்யா குழப்பம்?
______
செய்தி : “தகவல் அறியும் உரிமைச் சட்டம், காங்கிரஸ், பா.ஜ., உள்ளிட்ட, ஆறு அரசியல்கட்சிகளுக்கும் இனி பொருந்தும்” என, மத்திய தகவல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
நீதி : இதனால் இனி இவர்களது கூட்டணி காரணங்கள், சூட்கேஸ் பேரங்களை அறிந்து கொள்ளலாமா ஆணையர் அவர்களே?
_____
செய்தி : சம்பளம் கொடுக்காத பவர் ஸ்டாரின் நடவடிக்கையை கண்டித்து சென்னை அண்ணாநகரில் அவரது மருத்துவமனை ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நீதி : இந்தப் பரதேசிக்கு கவரை வாங்கிக் கொண்டு பவர் ஸ்டார் என்று பட்டம் கொடுத்து விளம்பரம் செய்த ஊடகங்களை எதிர்த்து போராடுங்கள் ஊழியர்களே!
// இந்தப் பரதேசிக்கு கவரை வாங்கிக் கொண்டு பவர் ஸ்டார் என்று பட்டம் கொடுத்து விளம்பரம் செய்த ஊடகங்களை எதிர்த்து போராடுங்கள் ஊழியர்களே! //
இவருக்கு “பவர் ஸ்டார்” என்ற பட்டம் கொடுத்தது திருமாவளவன் அப்படின்னு அதிஷா சொல்றாரு. உண்மையா?
http://www.athishaonline.com/2013/01/blog-post_6136.htm
செய்தி : “முதலமைச்சர்களை வெறுமனே கூட்டத்தில் கூட்டி, அவர்களின் கருத்துகளைத் தெரிவிக்க விடாமல், அவர்களை வெறும் ரப்பர் ஸ்டாம்ப் போல் மத்திய அரசு வெளிப்படுத்துகிறது.” – தில்லியில் பாதுகாப்பு குறித்து நடைபெற உள்ள முதலமைச்சர்கள் கூட்டம் குறித்து ஜெயலலிதா.
நீதி : அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழுக்களிலெல்லாம் ரப்பர் ஸ்டாம்புகளை சந்திக்கும் புரட்சித் தலைவி அவர்களே! சாக்கடை சந்தனத்திற்கு அழலாமா?
என்ன வினவு சொல்ல வருகிரீர்கள், இவர்களைப கருத்து சொல்ல விட்டா அது சந்தனமா?
என்ன கருத்து சொல்கிறார்கள் என்று பார்ப்பது ரெண்டாவது விஷயம். முதல் விஷயம் கருத்து சொல்வதற்கான ஜனநாயகம் உண்டா எனப் பார்ப்பதே. அந்த ஜனநாயகத்தை தன் கட்சி உறுப்பினர்களுக்கு கொடுத்திராத ஜெ, மத்திய அரசிடம் மட்டும் எதிர்பார்ப்பது நியாயமில்லையே!