Thursday, May 1, 2025
முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்காட்டுப்பள்ளி எல்&டி நிர்வாகத்தின் அடக்குமுறை !

காட்டுப்பள்ளி எல்&டி நிர்வாகத்தின் அடக்குமுறை !

-

காட்டுப்பள்ளி எல்&டி நிர்வாகத்தின் அடக்குமுறை ! பணி நிரந்தரம் கேட்டு போராடிய தொழிலாளர்களுக்கு வேலூர் சிறை !!

சென்னை மீஞ்சூரை அடுத்த காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள எல்&டி கப்பல் கட்டும் தளத்தில் கடந்த 29.05.2013 அன்று பணி நிரந்தரம், ஊதிய உயர்வு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 150 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு பொய் வழக்கு போடப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

காட்டுப்பள்ளி என்ற குப்பத்தை சேர்ந்த மக்களின் நிலங்களை பிடுங்கிக்கொண்டு அங்கு நிறுவப்படும் தொழிற்சாலையில் பணி வழங்குவதாக வாக்குறுதிகளை வீசி தமிழக அரசின் உதவியுடன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் எல்&டி நிறுவனம், கப்பல் கட்டும் தளம், துறைமுகம், மற்றும் பேக்ரிகேஷன் யுனிட் ஆகியவற்றை அமைத்தது. நிலத்தை பிடுங்கிய மீனர்களுக்கு மாற்று இடம் மட்டும் தந்து மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து அவர்களை ஒப்பந்தத் தொழிலாளர்களாக வைத்து சுரண்டி வருகிறது எல்&டி நிறுவனம்.

காட்டுப்பள்ளி கிராமத்தில் எல்&டி நிறுவனம் துறைமுகம் அமைத்ததினால் பழவேற்காட்டை சுற்றியுள்ள மீனவ கிராம மக்கள் கடலில் மீன் பிடிக்க முடியாததோடு மீன் வளமும் குறைந்துள்ளது. துறைமுகத்தினால் கடல் அரிப்பும் ஏற்பட்டுள்ளதால் வாழ்வாதாரம் இழந்த மீனவ மக்களுக்கு வேலை தருவதாக அரசின் முன்னிலையில் எல்&டி நிறுவனம் ஒப்புக் கொண்டது.

1,750 மீனவர்களுக்கு வேலை தருவதாக வாக்களித்தபடி இன்று வரை ஒருவரையும் பணி நிரந்தரம் செய்யாமல் ஒப்பந்த தொழிலாளர்களாக வைத்து தோட்ட வேலைகள், துப்புரவு பணிகளை கொடுத்து மீனவ தொழிலாளர்களை ஏமாற்றி வந்தது எல்&டி நிறுவனம். இது தாசில்தார், கலெக்டர் என அரசு துறையின் கவனத்துக்கு கொண்டு சென்ற பின்பும் எதையும் மதிக்காமல் தன் விருப்பம் போல் இயங்கி வந்தது எல்&டி நிறுவனம். கடந்த வருட(2012) இறுதியில், இதை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என மீனவ கிராம மக்கள் முற்பட்ட போது அனைத்து சோதனை சாவடிகளிலும் மீனவர்களை தடுத்துள்ளார் பொன்னேரி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பொன்.ராஜா. இந்நிறுவனத்தில் ஒப்பந்தங்களின் மூலம் மட்டுமே மாதம் ரூ 45 லட்சம் வரை எம்.எல்.ஏ-வுக்கு தரப்படுகிறது. இதனால்தான் எல்&டி நிறுவனத்திற்கு ஆதரவாக எம்.எல்.ஏ பொன்.ராஜா செயல்படுகிறார் என்று மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில் கடந்த 28.05.2013 அன்று 3 மாத பயிற்சி காலம் முடித்து பணிக்குச் சென்ற 13 தொழிலாளர்களை தோட்ட வேலை செய்யும் படி நிர்வாகம் பணித்துள்ளது. அரசாணைப்படி தங்களுக்கு வேலை தராததோடு மட்டுமின்றி தோட்ட வேலை செய்யச் சொல்லும் நிர்வாகத்தை 13 தொழிலாளர்களும் கண்டித்துள்ளனர். இதனால், ஏற்கனவே கப்பல் கட்டும் தளத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த மீனவ தொழிலாளிகளை தோட்ட வேலை செய்யுமாறு கூறி விட்டு, இந்த 13 தொழிலாளிகளை கப்பல் கட்டும் பணி செய்யுமாறு நிர்வாகம் கூறியுள்ளது. இதனால் கோபமடைந்த தொழிலாளர்கள் பணியாற்றிக் கொண்டிருந்த மீனவத்தொழிலாளர்கள் 250 பேரையும் ஒருங்கிணைத்து எல்&டி நிறுவனத்தின் கீழ் நேரடி பணி நிரந்தரம், எல்&டி நிறுவனத்தின் முத்திரையிட்ட அடையாள அட்டை, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோரிக்கைகளுக்கு செவி மடுக்காத எல்&டி நிர்வாக உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளது. பேசித் தீர்த்துக்கொள்ளலாம், தொழிலாளர் பிரதிநிதிகளாக நான்கு பேர் மட்டும் உள்ளே வாருங்கள், பேசித் தீர்த்துக்கொள்ளலாம் என்றெல்லாம் டி.எஸ்.பியும், போலீசு அதிகாரிகளும் பேசிய பசப்பு வார்த்தைகளுக்கு மயங்காமல், ‘உள்ள வந்தா நீ என்ன பேசுவனு எங்களுக்கு தெரியும், எதுவா இருந்தாலும் இங்கியே எங்க எல்லார் முன்னாடியும் பேசு’ என முகத்திலறைந்து போராட்டத்தினை தொடர்ந்தனர் தொழிலாளிகள். காலையில் தொடங்கிய உள்ளிருப்பு போராட்டம் இரவு வரை தொடர்ந்தது. மறுநாள் காலையிலும் தொடர்ந்தது போராட்டம். இப்படியே விட்டால் போராட்டம் தீவிரமாகி அடுத்த யூனிட்களிலும் பற்றிக் கொள்ளும் என்பதை உணர்ந்த போலீஸ் தொழிலாளர்களை கைது செய்து மீஞ்சூரில் மண்டபத்தில் அடைத்தது. தகவல் அறிந்ததும் மீனவ மக்கள் மண்டபத்துக்கு விரைந்தனர். துளியும் தாமதிக்காத காவல் துறை ‘சட்டம் ஒழுங்கை காப்பாற்றவும், ஜனநாயகத்தை காக்கவும் துரிதமாக செயல்பட்டு தொழிலாளர்களை பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் இடமில்லை என்று பொய் சொல்லி அனைவரையும் வேலூர் சிறையில் அடைத்ததன் மூலம் எல்&டி முதலாளிக்கு சேவை செய்து நெஞ்சம் குளிர்ந்தது.

சிறையில் உள்ள தொழிலாளர்களுக்கு தனியாக வழக்கறிஞர் வைக்க வேண்டாமெனவும், திங்கட்கிழமை (03.05.2013) நீதிமன்றம் இயங்கத் தொடங்கியவுடன் வியாழக் கிழமைக்குள் (06.05.2013) தானே பிணையில் எடுத்து தருவதாகவும் வாக்குறுதி அளித்துள்ளதால், எம்.எல்.ஏ பொன் ராஜாவிடம் இப்பிரச்சனையை விட்டுள்ளனர் மீனவ மக்கள்.

தகவல் அறிந்த திருவள்ளூர் மாவட்ட புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சம்பவ இடத்திற்கு சென்று தொழிலாளிகளிடமும் மீனவர்களிடமும் தகவல் திரட்டி எல்.&டி நிர்வாகத்தையும், எல்&டி முதலாளிக்கு துணை போகும் தமிழக அரசையும் கண்டித்து சுவரொட்டி ஒட்டினர். சுவரொட்டி ஒட்டும் போது மீனவ மக்கள் நம்மை ஆதரித்தனர் முக்கிய இடங்களில் ஒட்டுமாறு வழிகாட்டியதோடு, போஸ்டர் ஒட்டிய தோழர்களுக்கு குளிர்பானம் வாங்கித் தந்து தங்களது அன்பை வெளிப்படுத்தினர். சம்பவத்திற்க்கு பின், போலீசு பாதுகாப்புடன் எல்&டி கப்பல் கட்டும் தளத்தில், எந்த தடங்கலுமின்றி தொழிலாளர்களின் கைகளினால் கப்பல் கட்டப்பட்டுகொண்டிருக்கிறது.

அடுத்தகட்ட போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும், முதலாளித்துவமெனும் கப்பலை மூழ்கடிக்கவும் தொழிலாளர்களுக்கு வர்க்க உணர்வூட்டி பு.ஜ.தொ.மு அமைப்பை கட்டிக்கொண்டிருக்கிறது.

final

தகவல் : புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, மணலி