பிரிட்டிஷ் அரசியலை பிடித்திருக்கும் புதிய விவகாரமாக பிரபுக்கள் சபையின் மூன்று உறுப்பினர்கள் பணம் வாங்கிக் கொண்டு ஒரு தனியார் கம்பெனிக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறியது பதிவாகியுள்ளது.
தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த ப்ரையன் மெக்கின்சி, ஜேக் கன்னிங்ஹம் ஆகியோரும் உல்ஸ்டர் ஐக்கிய கட்சியைச் சேர்ந்த ஜான் லேர்ட் என்பவரும் வாடிக்கையாளரான தனியார் நிறுவனம் சார்பாக நாடாளுமன்றத்தில் கேள்விகள் கேட்கவும், அவர்கள் அமைச்சர்களை சந்திக்க வசதியாக பாராளுமன்ற வளாகத்தில் விருந்துகள் நடத்தவும், வாடிக்கையாளர்களுக்கு ஆதரவாக அரசாங்கத்திடம் வாதாடவும் முன் வந்துள்ளனர்.
சண்டே டைம்ஸ் பத்திரிகையைச் சேர்ந்த நிருபர்கள் ஒரு கற்பனை சூரிய எரிசக்தி நிறுவனத்தின் பிரதிநிதிகளாக நடித்து அதன் வர்த்தகத்துக்கு சாதகமான புதிய சட்டங்களை இயற்ற வேலை செய்ய வேண்டி இந்த உறுப்பினர்களை அணுகியிருக்கின்றனர். இந்த மூவரும் அத்தகைய சேவைகளுக்கு ஆயிரக்கணக்கான பவுண்டுகள் ஊதியமாக கேட்பது பதிவாகியுள்ளது.
“மாதத்துக்கு 10,000 பவுண்ட் தருவதாக சொல்றீங்களா? 12,000 பவுண்ட் என்று வைத்துக் கொண்டால் நான் ரெடி” என்கிறார் கன்னிங்ஹம் பிரபு. கொடுத்த பணத்துக்கு முழு திருப்தி கேரண்டி என்றும் அவர் உறுதியளித்திருக்கிறார்.
காசு கொடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு வசதியாக விருந்துகளை ஏற்பாடு செய்வதாகவும் அவற்றின் மூலம் அவர்கள் அமைச்சர்களை அணுகி அவர்களது காதை கடிக்க முடியும் என்றும் சொல்லியிருக்கிறார் மெக்கின்சி பிரபு. “பிரபுக்கள் சபையில் இருந்தால் மட்டுமே கிடைக்கும் வசதிகள் எனக்கு இருக்கின்றன. அவற்றை பயன்படுத்தி உங்களுக்கு உதவ முடியும்” என்றும் அவர் சொல்லியிருக்கிறார்.
ஒரு சிறு தொகை கொடுத்தால், அந்த கம்பெனிக்காக வேலை செய்ய மகிழ்ச்சியுடன் தயார் என்று லெயிர்ட் பிரபு சொல்லியிருக்கிறார். “ஒரு பொதுத் தொடர்பு ஊழியரது சேவைகளை நீங்கள் பயன்படுத்திக் கொள்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவர் பிரபுக்கள் சபையில் இருப்பது தற்செயலானது. பிரபுக்கள் சபையில் இருக்கும் ஒரு பல் மருத்துவரின் சேவைகளை பயன்படுத்திக் கொள்வது போன்றதுதான் இது” என்றும் அவர்களுக்கு தைரியமளித்திருக்கிறார்.
இந்த விவகாரம் வெடிப்பதற்கு முந்தைய நாள், தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுவதற்கு பணம் கேட்ட விவகாரத்தில் டோரி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பேட்ரிக் மெர்சர் பதவி விலகியிருந்தார். பிபிசி, டெய்லி டெலிகிராப் நிருபர்கள் வைத்த பொறியில் அவர் சிக்கியிருந்தார்.
2005-ம் ஆண்டு ஆஜ் தக் தொலைக்காட்சி இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்கு பணம் கேட்டதை பதிவு செய்து அம்பலப்படுத்தியது. பாரதீய ஜனதாவின் மகாராஷ்டிராவைச் சேர்ந்த எம் கே அன்னா பட்டீல், ஒய் ஜி மகாஜன், சத்தீஸ்கரைச் சேர்ந்த பிரதீப் காந்தி, இமாச்சல் பிரதேசத்தைச் சேர்ந்த சுரேஷ் சாந்தல், காங்கிரசின் குவாலியர் உறுப்பினர் ராம் சேவக் சிங், லல்லுவின் கட்சியின் ஜார்கண்டைச் சேர்ந்த மனோஜ் குமார், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் நரேந்திர குமார் குஷ்வாகா, லால் சந்திரா, ராஜா ராம் பால் ஆகியோர் பிடிபட்டனர்.
‘இந்திய ஜனநாயகம் முதிர்ச்சியடையவில்லை, நாடாளுமன்ற ஜனநாயகம் செயல்பட ஆரம்பித்து 60 ஆண்டுகள்தான் ஆகிறது. இங்கிலாந்து, அமெரிக்கா அல்லது சுவீடன் போன்று முதிர்ச்சி அடைந்த ஜனநாயகங்களில் இத்தகைய ஊழல்கள் நடைபெறாது’ என்று அதியமான் போன்ற முதலாளித்துவ ஜனநாயக ஆதரவாளர்கள் சமாதானம் கூறுவார்கள். இந்தியாவில் ஏதாவது பிரச்சினை வந்தால் நாம் காலனிய ஆட்சியில் வெள்ளையர்கள் தயவில் இருந்தால் இங்கே ஊழல் கிடையாது, பாலும் தேனும் ஓடுமென்றும் கூட பல பெரியவர்கள் பேசக் கேட்டிருப்போம்.
ஆனால், 350 ஆண்டுகளாக முதிர்ச்சியடைந்த பாராளுமன்றங்களுக்கெல்லாம் தாயான இங்கிலாந்து ஜனநாயகத்திலும் இதே கதைதான் என்பது நாடாளுமன்ற முதலாளித்துவ ஜனநாயகத்தின் யோக்கியதையை அம்பலப்படுத்துகிறது.
மேலும் படிக்க
முதிர்ச்சி அடைந்த ஜனநாயகங்களில் இத்தகைய ஊழல்கள் நடைபெறாது’ என்று அதியமான் போன்ற முதலாளித்துவ ஜனநாயக ஆதரவாளர்கள் சமாதானம் கூறுவார்கள்.—அப்புறமா கூவுவாரோ??
குருவை விஞ்சிய சீடர்களைக் கொண்டது இந்திய நாடாளுமன்றம்.