முகப்புகட்சிகள்இதர கட்சிகள்திவ்யா - இளவரசனைப் பிரித்த பாமக சாதி வெறியர்கள் !

திவ்யா – இளவரசனைப் பிரித்த பாமக சாதி வெறியர்கள் !

-

‘தாழ்த்தப்பட்ட சாதி இளைஞர்கள் ஜீன்ஸ் பேன்ட், கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டு வன்னியர் பெண்களை திட்டம் போட்டே மயக்கி விடுகிறார்கள். வன்னியர்களின் சொத்துக்களை கைப்பற்ற இப்படி சதி செய்கிறார்கள். திருமணம் செய்து சில மாதங்களில் பெண்ணை கொடுமைப்படுத்தி துரத்தி விடுகிறார்கள். பணம் கேட்டு மிரட்டுகிறார்கள். அப்படி ஆயிரக்கணக்கான சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த நாடகக் காதல்களை எதிர்த்து நாங்கள் போராடுகிறோம்.’

என்று தமிழ் நாடு முழுவதும் ஆதிக்க சாதிவெறிச் சங்கங்களை கூட்டி இயக்கம் நடத்தினார் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ். நாடகக் காதல் மூலம் பெண்களையும், சமூகத்தையும் சீரழிக்கும் இளைஞர்களை தடுப்பதற்காக வன்னிய சங்கத்தின் மூலம் மாமல்லபுரத்தில் சித்திரை நிலவு கூட்டம் நடத்தினார்.

தற்போது இளவரசன், திவ்யா ‘பிரிவை’ வைத்து ராமதாஸ் தலைமையிலான சாதி வெறியர்கள் கும்மாளம் போடுகிறார்கள்.

தருமபுரி மாவட்டம் நாய்க்கன் கொட்டாயில் உள்ள நத்தம் காலனியைச் சேர்ந்த இளவரசன் என்ற தாழ்த்தப்பட சாதி இளைஞரும், செல்லன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த திவ்யா என்ற வன்னியர் சாதி பெண்ணும் காதலித்தனர். திவ்யாவின் அப்பா நாகராஜனும், இளவரசனின் அப்பா இளங்கோவும் நண்பர்கள் என்ற முறையில் அவர்களுக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. நர்சிங் படித்துக் கொண்டிருந்த திவ்யா, இளவரசனின் குடும்பப் பின்னணியை நன்கு தெரிந்தே அவர் மீது காதல் கொண்டிருக்கிறார்.

இளவரசன், திவ்யா
இளவரசன், திவ்யா (படம் : நன்றி விகடன்)

திவ்யாவின் வீட்டுக்குத் தெரியாமல் அவரை ஏமாற்றி இளவரசன் அழைத்துக் கொண்டு ஓடி விடவில்லை. காதல் பற்றி தெரிந்த திவ்யாவின் தந்தை நாகராஜ் மகளுக்கு அறிவுரை கூறியிருக்கிறார்.

“இந்த வயசுல காதல் வர்றது சகஜம் தான். ஆனா இந்த ஊருக்கு அது ஒத்து வராதது . நான் ஏத்துக்கிட்டாலும் இந்த சமுதாயம் ஏத்துக்காது. சென்னை மாதிரி வெளியூரைச் சேர்ந்த தலித் பையனா இருந்தாக்கூட எனக்கு பிரச்னை இல்லை. நானே கல்யாணம் பண்ணி வைப்பேன். ஆனா நம்ம பக்கத்து ஊர் தலித் பையனை நீ கல்யாணம் பண்ணினேனா எனக்கு ஊர்ல மரியாதை இருக்காது. அதனால இந்த காதல் வேணாம்” என்று அறிவு கூறியிருக்கிறார்.

திவ்யாவின் தந்தை நாகராஜனுக்கு பெரும்பான்மை வன்னியர் உழைக்கும் மக்களைப் போலவே தனது மகளின் காதலை அங்கீகரிப்பதில் பிரச்சனை இல்லை. ஆனால், ஊரில் நிலவிய ஆதிக்க சாதி சமூகச் சூழல்தான் அவரை தயங்க வைத்திருக்கிறது. ஆனால், திவ்யா தனது காதலை விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை. நாகராஜூக்கு காதலை பிரிக்க விருப்பம் இல்லை என்றாலும், வன்னியர் சாதி வெறியை தூண்டி விட்டு அரசியல் செய்பவர்களுக்கு பயந்து திவ்யாவுக்கு வேறு திருமணம் செய்து கொடுக்க அவசர ஏற்பாடு செய்திருக்கிறார். திவ்யா வேறு வழியில்லாமல் இளவரசனுக்கு போன் செய்து தன்னை அழைத்துச் சென்று விடும்படி அழுதிருக்கிறார். அதைத் தொடர்ந்து இளவரசனும், திவ்யாவும் திருப்பதிக்குப் போய் திருமணம் செய்து கொண்டனர்.

இது வரை, பாமக சாதி வெறியர்கள் சொல்வது போல இளவரசன் சதித் திட்டம் தீட்டும் தந்திரசாலியாகவோ, திவ்யா உலகம் தெரியாமல் ஏமாந்து விட்டதாகவோ எதுவும் இல்லை.

தான் திருமணம் செய்து வைக்க முடியா விட்டாலும் தன் மகள் அவளுக்கு விருப்பமான வாழ்வைத் தேடிக் கொண்டதில் நாகராஜூக்கு மறுப்பு எதுவும் இருந்திருக்கவில்லை. திவ்யாவின் அம்மா திவ்யாவுடன் தொடர்ந்து பேசிக் கொண்டு இருந்திருக்கிறார். ஆனால், ஊரில் உள்ள சாதி வெறி அரசியல்வாதிகளால் இதை சகித்துக் கொள்ள முடியவில்லை. சம்பந்தமில்லாத ஆட்கள் எல்லாம் வந்து நாகராஜ் வீட்டு முன்னாடி நின்னு அசிங்கமாக திட்டி விட்டுப் போவார்களாம்.

தாக்கப்பட்ட வீடுகள்
தாக்கப்பட்ட வீடுகள் (படம் : நன்றி தி ஹிந்து)

இந்த கட்டத்தில் நாகராஜ் மர்மமான முறையில் இறந்து போகிறார். அவரது உடலை திவ்யாவின் அம்மா, நாகராஜின் மனைவி தேன்மொழியிடமிருந்து பறித்துக் கொண்டு போய் அதை வைத்து நத்தம் காலனியில் உள்ள 300-க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட சாதி மக்களின் வீடுகளை அடித்து உடைத்து, தீ வைத்துக் கொளுத்தினர் சாதி வெறி பிடித்த பாமக கட்சியினர். திவ்யா-இளவரசன் தம்பதியினரின் வாழ்க்கை, நாகராஜனின் உயிர், அவரது குடும்பத்தின் அமைதி அனைத்தையும் குலைத்தாவது தமது அரசியலை வளர்த்துக் கொள்வதில் குறியாக இருந்திருக்கின்றனர் சாதி வெறியர்கள்.

அடுத்தவர்களின் சொத்துக்களை அழிப்பதும், வாழ்க்கையை குலைப்பதும் வன்னிய சாதி வெறி பிடித்த பாட்டாளி மக்கள் கட்சியினர்தான் என்பதையும் அவர்கள் நிரூபித்தார்கள்.

அதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து ஆதிக்க சாதி சங்கத் தலைவர்களை சந்தித்து, தமிழகம் தழுவிய ஆதிக்க சாதி கூட்டணியை உருவாக்க முயற்சித்து வந்தார் ராமதாஸ். தமிழக அரசு அதை வேடிக்கை பார்த்து வந்தது. கடலூர், இராமநாதபுரம் உள்ளிட்ட சில ஆட்சியர்கள் மூலம் தடுப்பாணை பிறப்பித்து ராமதாசை எதிர்ப்பது போல தமிழக அரசு பாவ்லா காட்டி வந்தது. அதையும் நீதிமன்றங்கள் மூலம் உடைத்து வெள்ளை வேட்டி உடுத்திய ரவுடியாக உலா வந்தார் ராமதாஸ்.

ராமதாசும் அவரது கட்சியும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டு, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக அவதூறு பிரச்சாரம் செய்யும் அந்த கட்சியின் திடீர் பணக்கார அரசியல் ரவுடிகள் அனைவரையும் கைது செய்ய மறுத்த தமிழ்நாடு அரசின் கையாலாகத்தனம் அவர்களது கிரிமினல் நடவடிக்கைகளை மேலும் மேலும் செய்ய சாத்தியங்களை ஏற்படுத்திக் கொடுத்தது. சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட இளம் தம்பதியினரை மிரட்டுவது, அடிப்பது, கொலை செய்வது என்று பல சம்பவங்கள் தமிழ்நாட்டில் தொடர்ந்து நடந்தன.

இந்தச் சூழலில், திவ்யாவுடன் தொடர்ந்து தொலைபேசியில் பேசி வந்த, ஓரிரு முறை திவ்யா-இளவரசன் வீட்டிற்கு போயிருக்கிற திவ்யாவின் தாயார் தேன்மொழியின் பெயரில் பாட்டாளி மக்கள் கட்சியின் வழக்கறிஞர் அணி சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தது. கடந்த மார்ச் 27-ம் தேதி வழக்கை விசாரித்த நீதிபதிகள் கே என் பாஷா, பி தேவதாஸ் ஆகியோரிடம் திவ்யா, “நான் விரும்பித்தான் இளவரசனுடன் சென்றேன். என்னை யாரும் துன்புறுத்தவில்லை” என்று கூறினார். அதைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுப்படி திவ்யா இளவரசனுடன் தொடர்ந்து வாழ்ந்து வந்தார்.

இந்தக் கட்டத்திலும், திவ்யா-இளவரசன் தம்பதியினரை பிரிக்க முயற்சி செய்தது பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த சாதி வெறியர்கள்தான். இளவரசனும் திவ்யாவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.

கடந்த 4-ம் தேதி திவ்யாவின் பெரியம்மா திவ்யாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, “உங்க அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லை. ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளோம். உன் நெனைப்பாகத்தான் புலம்பிக்கிட்டு இருக்கா. நீ வந்து பார்த்துட்டுப் போ” என்று கூறியுள்ளார். தந்தையின் அகால மரணத்தாலும், தாய், தம்பி ஆகியோரை பிரிந்திருந்ததாலும் பாதிக்கப்பட்டிருந்த திவ்யா தன் தாயை பார்க்க போயிருக்கிறார். திரும்பி வரவில்லை.

திவ்யா
சென்னை உயர்நீதிமன்றத்துக்கு வெளியில் வழக்கறிஞர்கள் சூழ திவ்யா (படம் : நன்றி தி ஹிந்து)

திவ்யாவை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்ற இளவரசனிடம் திவ்யாவின் தாயார் தேன்மொழி, “எங்களைத் தேடி எங்க பொண்ணு வந்துட்டா. இனி நீ அவள தொந்தரவு பண்ணாத.. சுமுகமா பேசித் தீர்த்துக்கலாம். உனக்கு என்ன வேணுமோ நாங்க செஞ்சு தர்றோம்” என்று கூறியிருக்கிறார்.

காதலர்களை பிரிப்பது வன்னிய சாதி வெறியர்களின் சதித்திட்டம்தான் என்பது தெளிவாகிறது. அப்படியாவது சாதிப் ‘பெருமையை’ மீட்பதற்கு திட்டம் போடும் காட்டுமிராண்டிகள்தான் பாட்டாளி மக்கள் கட்சியின் சாதி வெறியர்கள்.

இதுபற்றி தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் இளவரசனும் அவரது பெற்றோரும் புகார் செய்தனர். இது தொடர்பாக போலீசார், பெண் மாயம் என்ற அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அதன் பிறகு 6-ம் தேதி தேன்மொழி தாக்கல் செய்திருந்த இன்னொரு ஆட்கொணர்வு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது திவ்யா தேன்மொழியுடன் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டார்.

“நான் செய்த தவறால் என் தந்தையை இழந்து விட்டேன். இனிமேலும் எதையும் இழக்கத் தயாரில்லை. தற்போது கொஞ்சம் காலம் தாயுடன் கழிக்கவே விரும்புகிறேன்” என்று நீதிபதிகளிடம் கூறியிருக்கிறார் திவ்யா. திவ்யாவுடன் பேசுவதற்கு இளவரசன் முயற்சித்த போது அதை பாமக வக்கீல்கள் தடுத்திருக்கின்றனர்.

அதைத் தொடர்ந்து இளவரசன் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் சங்கரசுப்பு, “இளவரசனுடன் சிறிது நேரம் பேசுவதற்கு திவ்யாவை அனுமதிக்க வேண்டும்” என்று கேட்டதை நீதிபதிகள் தாமாகவே மறுத்திருக்கின்றனர். “திவ்யாவை அழைத்துப் பேசினோம். யாருடன் வசித்தார்? எங்கிருந்து யார் அழைத்து வந்தார்? என்பதையெல்லாம் கேட்டோம். திவ்யா தனது தாயாருடன் செல்வதற்குத்தான் விரும்புகிறார். தாயாருடன் செல்லப்போகிறேன் என்றும், மனக்குழப்பமாக இருக்கிறது” என்றும் தெரிவித்ததாக கூறினர்.

திவ்யா கடத்தப்பட்டிருக்கிறார் என்று பதிவு செய்யப்பட்ட புகாரை விசாரிக்க வேண்டும் என்ற வாதத்தையும் “திவ்யாவிடம் அதுபற்றியும் விசாரித்தோம். தன்னை யாரும் கடத்தவில்லை என்றும், தானாகவே தாயாரிடம் சென்றதாகவும் தெரிவித்தார்.” என்று கூறி நீதிபதிகள் நிராகரித்திருக்கின்றனர்.

இதைத் தொடர்ந்து நீதிமன்றம் பின்வருமாறு உத்தரவு பிறப்பித்திருக்கிறது:

“இந்த வழக்கு விசாரணைக்காக திவ்யா தனது தாயாருடன் (மனுதாரர்) ஆஜரானார். இளவரசனும் ஆஜராகி இருந்தார். திவ்யாவிடம் பேசியபோது, சமீபத்தில் நடந்த சம்பவங்களால் தனது மனம் மிகவும் குழம்பிப்போய் உள்ளது என்று பதில் அளித்தார். எனவே, தகுந்த முடிவு எடுப்பதற்கு முன்பு தனது தாயாருடன் தங்க விரும்புவதாக திவ்யா கூறினார். மேலும், இளவரசனுடன் இப்போது பேச விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்தார். தாயாருக்கு உடல்நலன் சரியில்லை என்று தகவல் கிடைத்ததால் அவரை பார்ப்பதற்காக தனது சொந்த விருப்பத்தின்பேரில் சென்றதாகவும் திவ்யா கூறி உள்ளார்.

இளவரசன்
உயர்நீதிமன்றத்துக்கு வெளியே இளவரசன் (படம் : நன்றி தி ஹிந்து)

திவ்யா இப்படி வாக்குமூலம் கொடுத்துள்ளதை அடுத்து, அவர் தனது தாயாருடன் தங்கிக்கொள்ளலாம். திவ்யாவும், இளவரசனும் தங்களுக்கு பாதுகாப்பு தேவை என்றால் சம்பந்தப்பட்ட போலீசிடம் கேட்கலாம். அவர்கள் பாதுகாப்பு கேட்டால், அவர்களின் விண்ணப்பத்தை பரிசீலித்து தகுந்த பாதுகாப்பை போலீசார் வழங்க வேண்டும். விசாரணை ஜூலை 1–ந் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது”.

“திவ்யா விரும்பினார், அதனால் அவரது தாயுடன் தங்கிக் கொள்ளலாம்” என்பதுடன் நீதிமன்றம் தனது பொறுப்பை முடித்துக் கொண்டிருக்கிறது. திவ்யா-இளவரசன் காதலைத் தொடர்ந்து நடந்த அரசியல்/சமூக நிகழ்வுகளையோ, அவர்கள் பிரிவதில் பாட்டாளி மக்கள் கட்சியினருக்கு இருக்கும் அரசியல் ஆதாயங்களைப் பற்றியோ அவர்கள் கணக்கில் எடுக்க வில்லை. ஏனென்றால் சட்டம் அதைப் பற்றி எதுவும் சொல்லவில்லை.

காதலை பிரிப்பது, அடுத்தவரின் சொத்துக்களை அழிப்பது, தலித் மக்கள் மீது துவேசத்தை கிளப்புவது என்று அனைத்து சமூக விரோதச் செயல்களுக்கும் முதல் பொறுப்பாளிகள் ஆதிக்க சாதி வெறியைத் தூண்டி அரசியல் செய்ய முயற்சிக்கும் பாட்டாளி மக்கள் கட்சியினர்தான்.

திவ்யா-இளவரசனுக்கு இருப்பதாகச் சொல்லப்படும் அடிப்படை ஜனநாயக உரிமையை அவர்கள் சுதந்திரமாக அனுமதிப்பதற்கான சூழலோ, சட்டங்களோ நம் நாட்டில் இல்லை என்பதுதான் நிதர்சனம். சட்டங்களும் அரசமைப்பும் சாதி வெறிக் கட்சிகள் தமது நோக்கங்களுக்காக தனி நபர்களின், குடும்பங்களின், ஒட்டு மொத்த சமூகத்தின் வாழ்க்கையையே அழித்து வெறியாட்டம் போடுவதை தடுத்து நிறுத்தப் போவதில்லை என்பதோடு அவற்றை பாதுகாத்து நிற்கின்றன என்பதை திவ்யாவுக்கு நிகழ்ந்திருக்கும் இந்த வன்கொடுமை நிரூபித்துக் காட்டியிருக்கிறது.

பாமக சாதிவெறியர்களுக்கு பயந்தும் பணிந்தும் திவ்யா தனது காதலை துறக்கச் செய்யுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார். அந்த நிர்ப்பந்தத்தை முறியடித்து அவர் இளவரசனோடு சேர்ந்து வாழ்வதே உண்மையில் வன்னிய, தலித் மக்களுக்கு செய்யப்படும் உதவியாகும். திவ்யா அப்படி தைரியம் கொள்ளும் சூழ்நிலையை குறிப்பாக பாமக வன்னிய சாதிவெறியர்களை தனிமைப்படுத்தும் நிலையை நாம் ஏற்படுத்த வேண்டும்.

– செழியன்