முகப்புபோலி ஜனநாயகம்இராணுவம்இந்திய இராணுவத்தின் மட்டன் நேர்மையும் மனித அநீதியும் !

இந்திய இராணுவத்தின் மட்டன் நேர்மையும் மனித அநீதியும் !

-

ந்தியாவில் சட்டம் தன் ‘கடமை’யைச் செய்யும், தாமதமாக வந்தாலும் நீதிமன்ற தீர்ப்புகள் ‘நியாய’த்தை நிலை நிறுத்தும் என்பதை நிரூபிக்கும் ஒரு தீர்ப்பு இப்போது வந்துள்ளது.

இந்திய அமைதிப்படை
இலங்கையில் இந்திய அமைதிப்படை

குற்றம் இழைக்கப்பட்ட 25 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு சிறப்பு சிபிஐ நீதிமன்றம் ஒரு இராணுவ மேஜர் ஜெனரலுக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனையும், அவருக்கு கீழ் வேலை செய்த ஓய்வு பெற்ற லெப்டினென்ட் கர்னலுக்கு 1 ஆண்டு சிறைத் தண்டனையும் வழங்கியிருக்கிறது. 1987-1988 ஆண்டில் இலங்கையில் இந்திய அமைதிப்படைக்கு டப்பா இறைச்சி வாங்கியதில் ஊழல் தொடர்பான வழக்கில் இந்த தண்டனைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.

1987-ம் ஆண்டு ராஜீவ் காந்தி காலத்தில் ‘ஆபரேஷன் பவன்’ நடவடிக்கைகளுக்காக இலங்கைக்கு இந்திய அமைதிப்படை அனுப்பப்பட்டது. பின்னர், அந்த இயக்கம் முழு வீச்சான போராக மாறியதும் படைகளின் எண்ணிக்கை குறுகிய காலத்தில் 6,000லிருந்து, 1 லட்சமாக உயர்த்தப்பட்டது.

இலங்கையில் தமது வீரர்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை போதுமான அளவில் வாங்க முடியாமல் திணறிய ராணுவத்தின் நிலையை பயன்படுத்திக் கொண்டு ஊழல் புரிந்ததாக இரு ராணுவ அதிகாரிகள் மீது வழக்கு தொடரப்பட்டு 22 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு வந்திருக்கிறது. இந்திய ராணுவத்துக்கு உணவுப் பொருட்கள் வாங்கி அனுப்பும் பொறுப்பு ராணுவத்தின் தெற்கு மண்டல ஆணையகத்தின், வழங்கல் துறையைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் அனந்த் குமார் குப்தாவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

ஏ கே குப்தாவும் இன்னும் இரண்டு அதிகாரிகளும் சேர்ந்து டப்பா இறைச்சி கீமாவை மார்காவைச் (கோவா) சேர்ந்த கோஸ்டா & கோஸ்டா என்ற நிறுவனத்திடம் வாங்கியிருக்கிறார்கள். டெண்டர் மூலம் வாங்க வேண்டும் என்ற அதிகாரிகள் குழு ஒன்றின் பரிந்துரையை புறக்கணித்திருக்கிறார்கள். மார்காவோ வழங்கல் துறை மூலமாக இறைச்சி டப்பாக்களை வாங்கி, அவற்றை ராணுவ வண்டிகளில் சென்னைக்கு அனுப்பி வைத்ததன் மூலம் போக்குவரத்து செலவாகவும், உணவு விலையிலும் இந்திய அரசுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள். ரூ 61 லட்சம் மதிப்பிலான 83 டன் இறைச்சி தனியார் நிறுவனத்திடமிருந்து மார்காவோ வழங்கல் துறையால் வாங்கப்பட்டிருக்கிறது.

இந்திய அமைதிப்படை
திரும்பிய இந்திய அமைதிப்படை

இராணுவ வீரர்களுக்கு டப்பாவில் அடைக்கப்பட்ட இறைச்சி கைமா வழங்குவதில் முறைகேடு, இந்திய அரசுக்கு பொருளாதார இழப்பு என்றதும் இராணுவம் கடும் நடவடிக்கை எடுத்திருக்கிறது. ஏ கே குப்தா அவர் ஓய்வு பெறுவதற்கு ஒரு நாள் முன்பு 1990-ல் கைது செய்யப்பட்டிருக்கிறார், பிரிகேடியர் ஏ எல் மல்ஹோத்ராவுடன் அவர் இராணுவ விசாரணையை எதிர் கொள்ள வேண்டிய சூழலில், ஆயுதக் காவலர்களிடமிருந்து தப்பி விட்டிருக்கிறார் குப்தா. மல்ஹோத்ராவின் குற்றம் உறுதி செய்யப்பட்டு, அவரது இராணுவ சேவை முன்கூட்டியே முடித்து வைக்கப்பட்டது. பின்னர் குப்தா ஆந்திராவிலிருந்து பிடிக்கப்பட்டிருக்கிறார்.

தொடர்ந்து வழக்கு விசாரணை சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்பட்டது. சிபிஐ, குப்தாவும் மார்காவோ வழங்கல் துறையில் அப்போது மேஜராக இருந்த எஸ் எஸ் கதியனும் கிரிமினல் சதித் திட்டம் தீட்டியதாக தனது புலன் விசாரணையில் உறுதி செய்தது. தமது பதவி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஒரு தனியார் கம்பெனிக்கு சாதகம் செய்ததாகவும் கண்டறியப்பட்டது. அவர்களது செயல்கள் அரசாங்கத்துக்கு நஷ்டம் ஏற்படுத்தியதையும் சிபிஐ நிரூபித்தது.

அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொண்ட சிபிஐயின் XIV கூடுதல் நீதிமன்ற நீதிபதி, குப்தாவும், கதியனும் தமது பதவியை பயன்படுத்தி ஒரு தனியார் நிறுவனத்திற்கு சாதகம் காட்டி அரசாங்கத்துக்கு இழப்பு ஏற்படுத்தியிருப்பதாக அரசுத் தரப்பு நிரூபித்திருப்பதாக தீர்ப்பளித்திருக்கிறார். குப்தாவுக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், கதியனுக்கு 1 ஆண்டு சிறைத் தண்டனையும் விதித்துள்ளார். கூடவே அவர்கள் இருவருக்கும் தலா ரூ 1,000 அபராதமும், தனியார் நிறுவனத்துக்கு ரூ 61,000 அபராதமும் விதித்திருக்கிறார். குற்றவாளிகள் மேல் முறையீடு செய்ய வசதியாக தண்டனையை தள்ளி வைத்திருக்கிறது நீதிமன்றம்.

சவப்பெட்டி ஊழல்
கார்கில் போரில் இறந்த வீரர்களுக்கு சவப்பெட்டி வாங்குவதில் ஊழல் நடந்தது.

தவறு செய்தவர்கள் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும், வழக்கு விசாரணை சில ஆண்டுகள் தள்ளிப் போனாலும் இறுதியில் இந்திய சட்டங்கள் குற்றவாளிகளை எட்டிப் பிடித்து விடும் என்பதை இந்த வழக்கு நிரூபித்திருப்பதாக தோன்றலாம்.

ஆனால் வயிற்றில் தள்ளும் மட்டன் ஊழலுக்காக இவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்யும் இராணுவமும், சிபிஐயும் போஃபார்ஸ், ஃபேர்பாக்ஸ், கார்கில் சவப்பெட்டி, ஹெலிகாப்டர் ஊழல் போன்ற பல நூறு கோடி மதிப்பிலான மெகா கொள்ளைகளை ஏன் கண்டு கொள்ளவில்லை என்று கேட்டால்தான் இராணுவம் மற்றும் சிபிஐயின் யோக்கியதை என்ன என்பது புரியவரும்.

அதே போல 1 லட்சம் பேர் கொண்ட இந்திய அமைதிப் படை ஈழத் தமிழ் மக்கள் மீது நடத்திய கொடூரங்களைப் பற்றி இந்திய அரசு இது வரை ஒரு வழக்கு கூட பதிவு செய்யவில்லை. மட்டனுக்கு காட்டப்பட்ட நேர்மை ஈழத்தமிழ் மக்கள் கொல்லப்பட்ட போதும், பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட போதும், சொத்துக்கள் நாசமாக்கப்பட்டபோதும் எங்கே போனது? ஆட்டுக்கறிக்கு இருக்கும் மதிப்பு கூட ஈழத்தமிழ் மக்கள்மீது இந்திய அரசுக்கு இல்லை என்பதைத்தானே இது காட்டுகிறது?

மேலும் படிக்க

  1. இந்திய கொலைகார படை, ஊழல் படையாக இருந்ததில் வியப்பென்ன! கார்கில் போரில் செட்டப் செய்யப்பட்ட ஒளிப்பதிவின் மூலம் பதவி உயர்வு, உண்மையிலேயெ உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கான சவப்பெட்டி வாஙகுவதில் ஊழலோ ஊழல், சபாஷ் இந்திய ராணுவத்தின் தேச பக்தி!நேர்மை ! இன்னும் கெலிகொப்டெர் ஊழல் விவரம் விரைவில் வெளிவரும் !

  2. மனிதன் விலங்கை வேட்டையாடி உண்டு வாழ்ந்தான்,இன்று மனிதனை வேட்டையாட விலங்கை தின்னுதீக்கிரான். தாகத்துக்கு மனித உயீரை குடிக்கிறான்.இந்திய இராணுவம்.

  3. இந்திய அவதிப்படையால் பயனடைந்தது, இந்த இடைதரகர் கூட்டம்தான்! இதில், இலஙைகை தமிழர்களால் புறக்கணிக்கபட்டு வந்த இந்திய அவதிப்படையை அன்றைய முதல்வர் வர்வேற்கவில்லை என, தேச பக்தி திலகங்களின் கூப்பாடு வேறு!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க