Wednesday, February 21, 2024
முகப்புகட்சிகள்இதர கட்சிகள்நிதிஷ் குமார் - பாஜக முறிவு : கொள்கையா - சந்தர்ப்பவாதமா ?

நிதிஷ் குமார் – பாஜக முறிவு : கொள்கையா – சந்தர்ப்பவாதமா ?

-

தவாத பாரதிய ஜனதாவுக்கு ஒரு மதச்சார்பற்ற முகமூடியை 17 ஆண்டுகளாக வலிந்து அளித்து வந்த ஐக்கிய ஜனதா தளம் தற்போது கூட்டணியை முறித்திருக்கிறது. இந்த முகமூடி உறவுக்கு மோடி பிரதமரானால் கேடு என்பது நிதீஷ் குமாரின் முடிவு.

நிதீஷ் குமார், சரத் யாதவ்
நிதீஷ் குமார், சரத் யாதவ்

2005 மற்றும் 2010 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து வென்று இரண்டாவது முறையாக முதலமைச்சராக நீடிப்பவர் நிதீஷ். கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது நரேந்திர மோடி பிரச்சாரத்திற்கு வருவதாக இருந்ததை தடை செய்து வெற்றி பெற்றவர் அவர். பீகாரில் முசுலீம்கள் வாக்கு பறிபோய்விடக்கூடாது என்பதற்கே இந்த மோடி தடை. அன்று பாஜகவும் இந்த தடையை சந்தர்ப்பவாதமாக ஏற்றுக் கொண்டது.

தற்போது அடுத்த ஆண்டில் வரும் பாராளுமன்ற தேர்தலில் மோடியை பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தும் பாஜகவின் முடிவு அவருக்கு உவப்பானதில்லை. காரணம் கொள்கையல்ல, இசுலாமியர் வாக்குகள் பறிபோய்விடும் என்ற சுயநலத்திலிருந்து வரும் பிழைப்புவாத பயம்தான்.

கோவா கூட்டத்தில் தேர்தல் பிரச்சாரக் குழுவின் தலைவராக, அத்வானி ஆதரவாளர்களின் எதிர்ப்பையும் மீறி மோடியை நியமிக்கப்பட்டது துவக்கம் மட்டுமல்ல அவர்தான் பிரதமர் பதவிக்கான ஆள் என்பது நிதீஷ் குமாருக்கு உடன்பாடில்லை.

இதன் தொடர்ச்சியாக நேற்று கவர்னர் டி.ஒய் பாட்டிலை பார்த்து கூட்டணி முறிவை தெரிவித்து, 11 பாஜக அமைச்சர்களை நீக்குமாறு பரிந்துரைத்திருக்கிறார். மேலும் ஜூன் 19 அன்று சட்டமன்றத்தைக் கூட்டி பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

243 உறுப்பினர்கள் கொண்ட பீகார் சட்ட சபையில் ஐக்கிய ஜனதா தளத்திற்கு 118 உறுப்பினர்கள் உள்ளனர். பெரும்பான்மைக்குரிய எண்ணான 122-ஐ அடைய இன்னும் 4 உறுப்பினர்கள் வேண்டும். அதை ஏதாவது சுயேச்சைகளைக் கொண்டு அடைந்து விடுவார்கள். அதேநேரம் 91 உறுப்பினர்களைக் கொண்ட பாஜக, 31 உறுப்பினர்களை குதிரை பேரத்தில் வாங்கினால் அவர்களே ஆட்சி அமைக்கலாம். ஆனாலும் இது நிறையவே சிரமம் என்பதால் நிதீஷ் குமார் ஆட்சியை தொடருவதில் அநேகமாக பிரச்சினை இல்லை.

ஆனாலும் பாஜக இந்த பிரிவை சும்மா விடவில்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி பெயரைச் சொல்லி முதலமைச்சரான நிதீஷ் குமார் மானமுள்ளவராக இருந்தால் ராஜினாமா செய்ய வேண்டும் என்று அறம் பேசுகிறது பாஜக. நிதீஷ் அமைச்சரவையில் துணை முதல் அமைச்சராக இருந்த பாஜகவின் சுஷில் குமார் மோடி ஐக்கிய ஜனதா தளத்தின் முடிவை நம்பிக்கை துரோகம் என்றதோடு வரும் 18-ம் தேதி பீகார் பந்தையும் அறிவித்திருக்கிறார். கூட்டணி முறிவுக்கெல்லாம் நடத்தப்படும் வேலை நிறுத்தத்தை பார்க்குமளவு பீகார் மக்கள் ஏமாளிகளாக இருக்கிறார்கள்.

நிதீஷ் குமார், நரேந்திர மோடி
நிதீஷ் குமாரும், நரேந்திர மோடியும்

பீகாரில் இப்படி உறவு முடிந்திருப்பதால் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் அமைப்பாளர் பதவியில் இருந்து சரத் யாதவும் ராஜினாமா செய்திருக்கிறார். “இந்த தருணம் கொள்கையா இல்லை சமரசமா என்று முடிவு செய்யும் நேரம், கொள்கைக்காக நாங்கள் சமரசம் செய்து கொள்ள முடியாது என்று முடிவெடுத்தோம், அதனால் எந்த விளைவையும் சந்திக்க தயாராக உள்ளோம்” என்றெல்லாம் முழங்கியிருக்கிறார் நிதீஷ் குமார்.

தேர்தலுக்கான சந்தர்ப்பவாதங்கள் கூட எப்படி கொள்கையாக திரிக்கப்படுகின்றன் பாருங்கள்! பாஜகவில் மோடி மட்டும்தான் இந்துத்துவ கேடியா, அத்வானி போன்றவர்களெல்லாம் சைவப்புலியா என்ன? இந்த 17 ஆண்டுகளில் எத்தனை எத்தனை கலவரங்கள், சம்பவங்களையெல்லாம் இந்து மதவெறியர்கள் நடத்தியிருக்கிறார்கள்? 2002 குஜராத் கலவரம் மோடி தலைமையில் நடக்கும் போது இதே நிதீஷ் குமார் ரயிலைவே அமைச்சராக வாஜ்பாயியின் தலைமையில் இருந்திருக்கிறார். அப்போதெல்லாம் வராத மதச்சார்பற்ற உணர்வு இப்போது பீறீட்டெழுவது ஏன்? இத்தனை நாட்களாக எங்கே ஒளிந்து கொண்டிருந்தது அந்த உணர்வு?

பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளத்திற்குமான உறவே சந்தர்ப்பாவாதத்தின் அடிப்படையில் உருவான ஒன்றுதான். காங்கிரசையும், லல்லு பிரசாத் யாதவையும் முறியடிப்பதற்கு இரண்டு கட்சிகளும் ஒன்று சேர தேவை இருந்தது. அதற்காக சேர்ந்தார்கள். அதற்காக என்றே நிறைய சமரசங்கள் செய்து கொண்டார்கள். தற்போது இரண்டு முறை வெற்றி பெற்றிருப்பதால் இனி தனிக் கச்சேரியே நடத்தலாம், கூட்டணி ஆவர்த்தனம் தேவையில்லை என்று நிதீஷ் குமார் யோசிக்கிறார். மேலும் மைய அளவில் பாஜக மதவாதக் கட்சி என்றாலும் பீகாரில் மோடியைக் கூட அனுமதிக்கவில்லை எனுமளவு கட்டுப்படுத்தி வைத்திருக்கிறோம், தற்போது அந்த மோடியே பிரதமருக்கான வேட்பாளர் என்றால் முதலுக்கே மோசமில்லையா என்று அவர் பார்க்கிறார்.

பாஜகவோ அத்வானி போன்ற ஓய்வுபெறும் வயதுடைய ஜெனரல்களை கடாசி விட்டு முதலாளிகள், ஊடகங்கள், வட இந்திய இந்து நடுத்தர வர்க்க ஆதரவு பெற்ற மோடியை முன்னிறுத்தி ஏதும் பிழைக்க முடியாதா என்று முடிவெடுத்து விட்டது. அதன்படி நிதீஷ்குமாரின் பீகார் கணக்குகளும், பாஜகவின் இந்தியக் கணக்குகளும் இணக்கமாக சேராது என்பதாலேயே இந்த பிரிவு நடந்திருக்கிறது. இதற்கு மேல் இதை கொள்கையால் வகுத்து பார்ப்பது அந்த வார்த்தைக்கே அவமானம்.

நிதீஷ் குமார்
பீகாரின் ‘ஜமீன்தார்’ நிதீஷ் குமார்

பீகாரின் நிலப்பிரபுத்துவ ‘மேல்’ சாதி மற்றும் இந்துத்துவ நடுத்தர வர்க்கத்தினை சமூக அடிப்படையாகக் கொண்ட பாஜகவை கூட்டாளியாக வைத்திருப்பதை விட நரேந்திர மோடி ஒன்றும் அதிகமில்லை. அதே போன்று எந்த ‘வளர்ச்சி’-க்கென்று மோடி போற்றப்படுகிறாரோ அதே ‘வளர்ச்சி’க்காக நிதீஷும் பாராட்டப்படுகிறார். இரண்டுமே டுபாக்கூர் வளர்ச்சி என்பதற்கு வினவிலேயே நிறைய கட்டுரைகள் ஆதாரங்களோடு இருக்கின்றன. தற்போது இந்த இரண்டு ‘வளர்ச்சி’ வாள்களும் ஒரு உறையில் முடங்க முடியாது என்பதுதான் இதன் கவித்துவ நீதி.

11.11.2011-ம் தேதியில் 11 மணி 11 நிமிடம் 11 விநாடியில் 11 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்த நிதீஷ் குமார் இது போன்ற ‘வரலாற்று’ முக்கியத்துவம் வாய்ந்த தேதிகளில் முடிவெடுப்பதுதான் தனது வெற்றிக்கு காரணம் என்று முன்னர் சொல்லியிருந்தார். இந்த விசயத்தில் இவருக்கு போட்டியாளர் ராகுகாலம் – நல்ல நாள் – முகூர்த்தம் பார்த்து முதலமைச்சராவதற்கு நாட்கணக்கில் காத்திருந்த புதுவை ரங்கசாமி மட்டும்தான்.

அந்த வகையில் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவருக்குள்ளும் ஒரு இந்துத்துவவாதி ஒளிந்திருக்கிறான். அதே நேரம் இசுலாமியர் வாக்கு வேண்டும், பாராளுமன்ற தேர்தலில் ஒரு முக்கிய சக்தியாக வருவதற்கு நிறைய தொகுதிகள் வேண்டும் என்று பல கணக்குகளோடு இந்துத்வவாதிகளின் குத்தகைதாரரான பாஜகவோடு மல்லுக்கட்ட வேண்டியிருக்கிறது.

இறுதியாக மோடிதான் பிரதமருக்கான வேட்பாளர் என்று பொறி பறக்க குதிக்கும் பாஜக, இந்த பிரிவுக்கு பிறகு சிவசேனா, அகாலிதளம் எனும் இரண்டு கட்சிகளோடு மட்டும் புலம்ப முடியும். அந்த வகையில் பார்த்தால் மோடிக்கேற்ற ஜாடி குஜராத்தை தாண்டி எங்கும் இல்லை என்பதே நிதர்சனம்.

 1. பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி முன்னிறுத்தப்படுவது உறுதியாகிவிட்ட நிலையில் அக்கட்சியுடனான உறவை ஐக்கிய ஜனதா தளம் முறித்துக் கொண்டுவிட்டது. ஆனால் இதே ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவரான நிதிஷ்குமார்தான் முன்பு நரேந்திர மோடியை வானளாவ புகழ்ந்து தள்ளியவரும் என்பது குறிப்பிடத்தக்கது. நிச்சயமாக உங்களால் நம்ப முடியாது.. நரேந்திர மோடியை குஜராத் கலவரத்தை முன்னிறுத்தி அவர் ஒரு மதச்சார்பற்றவர் என்று கூறிக் கொண்டு 17 ஆண்டுகால கூட்டணியை முறித்த இதே ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ்குமார் 2004 லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியான போது ஒரு மூத்த ஊடகவியலாளரிடம் தெரிவித்த கருத்துகள் இது..”பாரதிய ஜனதா கட்சியின் புதிய முகம் நரேந்திர மோடிதான்..அவர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இருந்து வந்தவர். வழக்கமாக பாரதிய ஜனதா கட்சியில் இருக்கும் பிராமணர் லாபியில் இருந்து தப்பியவரும் கூட…அவரை ஒருமுறை நேரில் சந்தித்தால் அவர்மீது ஈர்ப்பு உள்ளவராக மாறிவிடுவீர்கள்… மிகவும் எளிமையான குடும்பத்தில் இருந்து வந்தவர்… நான் அவரது ரசிகனும் கூட என்று சொன்னவர்தான் இதே நிதீஷ்குமார். ஆனால் பின்னர் தாமும் ஒரு பிரதமர் வேட்பாளர் என்ற கனவில் தம்மை மோடியின் பரம வைரியாகவே வரித்துக் கொண்டார் நிதீஷ்குமார்…2010ஆம் ஆண்டு பீகார் மாநில சட்டசபை தேர்தலுக்கு முன்பாக பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்கும் நிர்வாகிகளுக்கு தமது அதிகாரப்பூர்வ இல்லத்தில் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார் நிதீஷ்குமார். ஆனால் அன்றைய நாளிதழ்களில் பீகாருக்கும் நரேந்திர மோடி வருகை தந்து நல்லாட்சி தர வேண்டும் என்று ஒரு விளம்பரம் வந்ததாலேயே அந்த விருந்தையே ரத்து செய்தார் நிதீஷ்குமார். நரேந்திர மோடியை மதச்சார்பற்றவர் என்று கூறுகிற இதே நிதீஷ்குமார், ஜனாதிபதி தேர்தலில் பிரணாப் முகர்ஜியை ஆதரித்தார். அப்படியானால் பாஜக ஆதரித்த பி.ஏ.சங்மா என்ன மதச்சார்புள்ளவரா? என்ற கேள்விக்கு இதுவரை அவரிடம் எந்த பதிலும் இல்லை. ஒருவேளை காங்கிரஸ் கட்சி மட்டுமே மதச்சார்பின்மை என்பதை ஒட்டுமொத்த குத்தகைக்கு எடுத்துள்ளதா? என்பதற்கும் நிதீஷிடம் பதில் இல்லை.. ஜனாதிபதி தேர்தலில் அம்பானி குடும்பத்தினரின் விருப்பமாக பிரணாப் நிறுத்தப்பட்டார். நிதீஷின் ஐக்கிய ஜனதா தளத்தை ஆட்டுவிக்கும் அம்பானி குடும்பத்து எம்.பியின் விருப்பப்படியே நிதீஷும் செயல்பட்டார் என்ற உண்மை பலருக்கும் தெரியும். கோத்ரா கலவரத்தைவிட பீகாரின் சேனாரி படுகொலை சம்பவம் மிகவும் கொடூரமானதே..அதை ஏன் பேசுவதில்லை.. ஒருவகையில் நரேந்திர மோடியை விமர்சித்து நிதீஷ்குமார் பேசுவதும்கூட மோடிக்குத்தான் கூடுதல் நன்மை ஏற்படுத்துகிறது. நரேந்திர மோடி ஒரு டீ விற்பனையாளரின் மகனே. தமது இளம்பிராயத்தில் டீ டம்ளர்களை கழுவியவர்தான்.. நிதீஷ் பொறியியல் பட்டம் படித்த போது அவர் கல்லூரிக்குப் போகாமல் தனித் தேர்வராக பட்டம் பெற்றவர்… இப்போதும் பதவிகள் வந்தாலும் எளிமையான மனிதராக இருக்கும் மோடியைக் கண்டு நிதீஷுக்கு என்ன பொறாமை? ஒன்றே ஒன்றுதான் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக தம்மையும் நிதீஷ்குமார் கருதிக் கொள்வதுதான்! இதனாலேயே நேற்று வரை அவரை புகழ்ந்துதள்ளிவிட்டு இன்று வைரியாக வரிந்து கட்டுகிறார் நிதீஷ்குமார்!

  • இது பையாவின் சொந்த சரக்கு அல்ல, ஒன் இந்தியாவில் சுட்ட சரக்கு!

 2. காரணம் கொள்கையல்ல, இசுலாமியர் வாக்குகள் பறிபோய்விடும் என்ற சுயநலத்திலிருந்து வரும் பிழைப்புவாத பயம்தான்…அட,சும்மாவா எலி அம்மனமா ஓடும்.

 3. ///”பாரதிய ஜனதா கட்சியின் புதிய முகம் நரேந்திர மோடிதான்..அவர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இருந்து வந்தவர். வழக்கமாக பாரதிய ஜனதா கட்சியில் இருக்கும் பிராமணர் லாபியில் இருந்து தப்பியவரும் கூட…அவரை ஒருமுறை நேரில் சந்தித்தால் அவர்மீது ஈர்ப்பு உள்ளவராக மாறிவிடுவீர்கள்… மிகவும் எளிமையான குடும்பத்தில் இருந்து வந்தவர்… நான் அவரது ரசிகனும் கூட என்று சொன்னவர்தான் ///
  இந்த செய்தி உண்மைன்னு ஹரிகுமாருக்கு சொன்னது யாரு?
  ராஜ்நாத் சிங் புகழ்ந்ததை நித்திஸ் பெயரில் கதையளப்பது ஏனோ?
  மோடிக்கு திறமை இருந்தால் பிரதமராக வரட்டுமே ,தேவ கவுடா,நரசிம்மராவு ,மன்மோகன்சிங் ,விபி சிங் எல்லாம் இப்படி செம்பு தூக்கியா பிரதமர் ஆனாங்க ?

 4. மோடிக்கு திறமை இருந்தால் பிரதமராக வரட்டுமே ,தேவ கவுடா,நரசிம்மராவு ,மன்மோகன்சிங் ,விபி சிங் எல்லாம் இப்படி செம்பு தூக்கியா பிரதமர் ஆனாங்க ?

 5. நிதிஷ்குமார் முடிவின் பின்னால் சந்தர்ப்பவாதம், பிழைப்புவாதம் இருக்கிறது என்பது வெளிப்படையாக அனைவரும் எளிதாக அறியமுடிகின்ற சேதி. மட்டுமின்றி, இதனை அம்பலப்படுத்த முயற்சிப்பதிலே பார்ப்பன பரிவாரங்கள் தமது சக்தியை வரும் காலத்தில் செலவிட போகின்றன. எனவே வினவு கட்டுரை வேறு மாதிரி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

  ஒரு வகையில் நிதிஷின் இந்த முறிவு முக்கியமான நேரத்தில் செய்யப்பட்ட முடிவு. ‘இந்தியா டுடே’ இதழில் ஒரு மோசடி கருத்து கணிப்பு வெளிவந்தது. அதில், மன்மோகன், ராகுலை விட மோடியே பிரதமர் பதவிக்கு லாயக்கானவர் என்றனராம் பெரும்பான்மை மக்கள். மன் மோகன்சிங் மாதிரியான ஆட்களுக்கு பதில் ஒரு நாயை அந்த இடத்தில் உட்கார வைத்தால் கூட தேவலாம் என்ற முடிவுக்கு மக்கள் வருவதில் ஆச்சரியமில்லையே. ஆனால், இதனையே பெரிய அங்கீகாரமாக காட்டி மோடி என்ற பாசிஸ கிரிமினலை பிரதமராக்க ஒட்டுமொத்த இந்தியாவே தவம் கிடப்பது போல ஒரு பொய் சித்திரத்தை அளிக்கின்றனர். ஆர்.எஸ்.சை விடவும் இதில் முன்னணியில் இருப்பது ஆர்.எஸ்.எஸில் டெக்னிக்கலாக இல்லாத அம்பிகள். உதாரணம், பத்ரி சேஷாத்ரி. இந்திய மத்தியதர வர்க்கத்தின் மனசாட்சியாக விளங்கும் தேசிய ஊடகங்கள் மத்தியில் மோடிக்கு ஒளிவட்டம் வழங்குவதில் ஒரு போட்டியே நிலவுகிறது. டைம்ஸ் நவ்–ல் அர்னப் கோஸ்வாமி ஒரு விவாதத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். அப்போது, கிரிமினல் மோடி டில்லியில் வந்திறங்குகிறார். உடனே விவாதத்துக்கு தற்காலிக இடைவெளி கொடுத்துவிட்டு அனைவர் கவனத்தையும் மோடி மீது திருப்புகிறார், அர்னப். மோடி வந்து கொண்டிருந்த மகிழுந்தை காண்பிக்கிறார். காருக்குள்ளே விவேகானந்தர் போன்ற தோற்றத்தில், மோடி. சகிக்கவில்லை.

  பத்து வருடங்களுக்கு மேலாக ஆட்சி அரியணை இல்லாமல் அரை பைத்தியக்கார நிலைக்கே சென்று விட்ட அருண்ஜேட்லி முதலான ஆர்.எஸ்.எஸ் அம்பிகளும், எங்களை அடி, உதை ; அப்போது தான் திருந்துவோம் என்ற ஒழுக்கசீலர்களும் மோடியை ரட்சகராக பெரிதும் நம்பியிருக்கின்றனர். நிதிஷ்குமாரின் கூட்டணி முறிவு ஒரு நற்செய்தி. மோடியை விட்டால் வேறு கதியில்லை என்று கதையளந்தவர்களின் வாயில் விழுந்த ஒருபிடி மண். இதனால், மன பிராந்தி கொண்டுள்ளனர், இந்துமத வெறியினர். ஒரு கூட்டணி முறிவுக்காக யாரேனும் பந்த் அறிவிப்பார்களா? கைவிட்ட காதலி மீது ஆசிட் வீசும் பொறுக்கியின் அடாவடி இது.

  ஊடகங்களில் பங்கேற்று மகஇக வின் கருத்துக்களை தெரிவிக்க முன்வர வேண்டும். அதற்கு தடையாக இருக்கும் கட்சியின் ஷரத்துக்களில் சிறு மாற்றங்களை கால மாறுதல்களுக்கேற்ப செய்வது நல்லது.

 6. மன்மொகன்சிஙகிற்கு மாற்றாக ஒரு ஊழலற்ற, அனைத்து இந்தியர்களும் ஏற்றுக்கொள்ளும் தலைமை , ப ஜ க வில் இல்லாதது வெளிப்படையாகிவிட்டது! முழு பூசணியை சோற்றில் மறைக்கும் விதமாக, இப்பொது மோடியின் முகமூடியை மாற்றும் முயற்சிநடக்கிறது! அயொத்தி கட்சி விழாவிற்கு செல்லாததை வைத்து அவரை செசக்குலர் என்று ஏற்றுக்கொள்ள முடியுமா? மோடி மாறிவிட்டார் என்பது கேழ்வரகில் நெய் வடிகிறது என்பது போல!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க