அந்த ஒரு சீட்டு !

-

no.1

ந்த ஒரு சீட்டின் கணக்குகள் கணிதவியலின் பரிமாணத்திற்குள் அடங்காத ஒன்று. உங்கள் குழந்தைகளுக்கு கணக்கு வரவில்லை என்று கவலைப்படுகிறீர்களா? பரவாயில்லை, ராஜ்ய சபா தேர்தலின் பொருட்டு தமிழகத்தில் கட்சிகள் போட்டு வரும் மனக்கணக்கு, பணக்கணக்கு, அரசியல் கணக்குகளை வைத்து அந்த ஆறாவது உறுப்பினர் யார் என்பதை கண்டு பிடிக்கச் சொல்லுங்கள்! உங்கள் குழந்தை கணிதத்தில் நிபுணத்துவம் பெற்று விடும்.

அந்த ஒரு சீட்டு திமுகவிற்கோ, தேமுதிகவிற்கோ போய்விடக்கூடாது என்று மற்றவரை விட அதிகம் கவலைப்பட்டவர் ‘புரட்சித் தலைவி’. சட்டசபையில் மிருக பல பெரும்பான்மை இருந்தும், பாராளுமன்ற மேலவையின் நான்கு உறுப்பினர்களை எளிதாக தெரிவு செய்யும் பலமிருந்தும், ‘அம்மா’ சும்மா இருக்கவில்லை. 5, 6-வது உறுப்பினர்கள் எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்து விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். அதனாலேயே ஐந்தாவது வேட்பாளரையும் அறிவித்தார். கனிமொழி வேட்பு மனுவைத் தொடர்ந்து தேமுதிகவும் களமிறங்கியதும் அம்மா மனமிறங்கி ஐந்தாவதை வலது கம்யூனிஸ்ட்டுகளுக்கு விட்டுக் கொடுத்தார். அந்த ஒரு சீட்டுக்காக அவர்கள் அடித்துக் கொள்ளட்டும் என்பது ‘அம்மா’வின் நேயர் விருப்பம்

அந்த ஒரு சீட்டு அதாவது ஆறாவது சீட்டு அம்மாவின் கடைக்கண் பார்வை பெறுவோரே பெற முடியும் என்று குதூகலிக்கிறது தினமணி. அதிருப்தி தேமுதிக உறுப்பினர்கள் வாக்கு ஏழு, மற்றும் அதிமுக கூட்டணியில் வெற்றி பெற்ற புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் அனைவரும் அம்மாவின் ஆணைக்கு காத்திருப்பதாக சாமரம் வீசுகிறது தினமணி. அம்மாவைப் பொறுத்த வரை தேமுதிக, திமுக இரண்டும் வெற்றி பெறக் கூடாது. அல்லது வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலின் எதிர்க்கட்சி கூட்டணி ஆயத்தங்களை உடைக்குமளவாவது காய்களை நகர்த்த வேண்டும்.

maitreyan
அம்மாவுக்கு மட்டுமல்ல அம்மா டேபிளுக்கும் சேர்த்து விழும் மைத்ரேயன்!

அந்த ஒரு சீட்டிற்காக அம்மா அறிவித்ததும் மயிலாப்பூர் மருத்துவர் மைத்ரேயன் அம்மா காலடியில் விழுந்து சேவித்த புகைப்படம் பார்த்தீர்களா? என்ன இருந்தாலும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவில் இருக்கும் போது இதே மைத்ரேயன் காஞ்சி சங்கராச்சாரி ஜெயேந்திரன் காலில் விழுந்தவர் அல்லவா? ஒரு ஸ்வயம் சேவக் எந்தக் கட்சியிலும் இருந்தாலும் இப்படி பெரியோரை மதிக்கும் ஒழுக்கம் கொண்டவனாக இருப்பான் என்பதற்கு வாழும் எடுத்துக் காட்டு மைத்ரேயன். வந்தே மாதரம்! அம்மாவே சரணம்!

அந்த ஒரு சீட்டிற்காக தூத்துக்குடி சரவண பெருமாளை அறிவித்தாரே ‘அம்மா’, அந்தக் கதை நினைவிருக்கிறதா? அதிமுகவின் மாணவரணி செயலாளராக இருக்கும் 50 வயது சரவண பெருமாள் இரண்டு முறை கடத்தல் வழக்குகளில் பிடிபட்டு சிறை சென்ற சாதனையாளர். இத்தகைய கிரிமினல்கள் கூட ‘அம்மா’வின் கடைக்கண் பட்டு சாகாவரம் பெறுகிறார்கள். என்ன இருந்தாலும் ஒரு கிரிமினலின் மனது இன்னொரு கிரிமினலுக்குத்தானே தெரியும். பிறகு ஊடகங்களில் ஐயாவின் சாதனைகள் நாறியதால் கமுக்கமாக வேட்பாளரை மாற்றிவிட்டார் ‘அம்மா’.

அந்த ஒரு சீட்டிற்காக வெட்கம், மானம், சூடு, சுரணை இன்னபிற சுயமரியாதை சமாச்சாரங்களை கடாசி விட்டு, கறிக்கடையை சுற்றி வரும் நாலு கால் ஜீவன் போல அலைகிறது திமுக. இத்தகைய சுயமரியாதை எல்லாம் திமுவிற்கு இதற்கு முன்பே கிடையாதே என்று நீங்கள் வியக்கலாம். எனினும் நடப்பிலுள்ள மரியாதைக்குரிய தமிழ் வார்த்தைகளை வைத்துத்தானே திமுகவின் சந்தர்ப்பவாத அரசியலை புரிந்து கொள்ள முடியும்? 23 உறுப்பினர்களுடன் இன்னுமொரு 11 உறுப்பினர்களை வாங்கி விடலாம் என்று பல்வேறு தேர்தல் விளையாட்டுக்களை சந்தித்த திமுக முடிவு செய்தது. ஆனாலும் வேட்பாளர் யாரென்று சண்டையெல்லாம் நடக்கவில்லை. கருணாநிதி குடும்பத்திற்கு போகத்தான் பதவிகளோ, பணியாரமோ மற்றவர்களுக்கு பங்கிடப்படும் என்ற விதி அமலில் இருப்பதால் ராஜாத்தி அம்மாளின் நெருக்குதலில் கனிமொழி ஏகமனதாக வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டார்.

கனிமொழி
“புதுதில்லியில் அட்ரஸ் வேணும்”

அந்த ஒரு சீட்டிற்காக திமுக நடத்தியிருப்பது கிட்டத்தட்ட பிச்சை எடுப்பது போன்ற பரிதாபம்தான். திராவிடக் கட்சிகளை ஒழிப்பேன் என்று சபதம் எடுத்து புழல் சிறைக்கும், அப்பல்லோவிற்கும் விஜயம் செய்த ராமதாஸிடம் பல்லை இளித்துக் கொண்டு ஆதரவு கேட்டது திமுக. அதை நோட்டம் பார்க்கவே அப்பல்லோவில் துரை முருகனைப் பார்க்கச் செல்லும் சாக்கில் அன்புமணியைச் சந்தித்தார்கள் கருணாநிதியின் வாரிசுகள். தனது அரசியல் வாழ்வில் விஜயகாந்தால் அதிகம் கண்டிக்கப்பட்ட திமுகதான் எப்படியாவது கேப்டன் மனமிறங்கி அருள்பாலிக்க மாட்டாரா என்று தவம் இருக்கிறது. இல்லையென்றால் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய அம்மா போல மற்றுமொரு ஏழு விக்கெட்டுகளை விலைக்கு வாங்கலாமா என்று ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபடுகிறது. துரத்தி விட்ட காங்கிரசிடம் தூது போகிறது. அறுத்துக் கொண்டு போன மார்க்சிஸ்டுகளிடம் நோட்டம் பார்க்கிறது. எல்லாம் எதற்காம்? 2 ஜி வழக்கின் வாய்தாக்களை கனிமொழி எதிர்கொள்வதற்கு புது தில்லியில் ஒரு தங்குமிடமும், அடையாள அட்டையும் வேண்டுமாம்.

அந்த ஒரு சீட்டு கேப்டனை அலைக்கழித்த விதம் அலாதியானது. அறுவர் சஸ்பெண்ட், அறுவரிலிருந்து எழுவரான ஓடுகாலிகள் என்று துக்கத்தில் இருந்த கேப்டன் தனது கட்சி அலுவலகத்தில் மெயின் கேட்டை எப்போதும் மூடியே வைத்திருக்கிறாம். அவரே தலையில் முக்காடு போட்ட துண்டுடன் சிறிய கேட் வழியாகவே அலுவலகம் செல்கிறாராம். ஆக திமுக தொலைநோக்கோடு கல்யாண மண்டபத்தின் போர்ட்டிகோவை இடித்தது சரி என்பதை வரலாறு நிரூபித்திருக்கிறது. திமுகவை திட்டியிருக்கிறோம், அதிமுகவை பகைத்துக் கொள்ள முடியாது என்று திரிசங்கு நரகத்தில் இருந்த கேப்டன் இந்த தேர்தலை கசப்பு மருந்தாக கடந்து விடவே எண்ணினார்.

அந்த ஒரு சீட்டில் போட்டியிடவா, புறக்கணிக்கவா என்பதிலேயே நாட்கள் கடந்து விட்டன. மச்சான் சதீஷை வேட்பாளராக நியமிக்கச் சொல்லி மனைவி பிரேமலதா நெருக்கடி கொடுக்க, எதிர்கால அபாயங்களை எண்ணி நிகழ்கால தேர்தல் குறித்து யோசித்தே தலைமுடி டையையும் மீறி நரைத்துப் போனது. திமுகவை ஆதரித்தால் இத்தனை நாட்கள் கிடைத்து வந்த திமுக எதிர்ப்பு ஓட்டுக்கள் போய் இன்னுமொரு மதிமுக போல அரசியல் அனாதையாக மாறிவிடுவீர்கள் என்று சோ, தினமலர், தினமணி அம்பி வகையறாக்கள் ஓதி வந்தன. அப்படி ஒரு அனாதையாக்கத்தான் அம்மாவும் தீவிரமாக முயன்று வருகிறார் என்பதை அம்பிகள் மறைத்து விட்டு இந்த வஞ்சப் புகழ்ச்சி அணியை விடாது பாடினர். இறுதியில் வேறு வழியின்றி கட்சியின் பொருளாளர் இளங்கோவனை வேட்பாளராக அறிவித்து விட்டு நடப்பது நடக்கட்டும் என்று ஒதுங்கிக் கொண்டார் விஜயகாந்த்.

தா பாண்டியன்
அதிமுகவின் கம்யூனிஸ்ட் பிரிவு செயலர் தா பாண்டியன் ‘அம்மா’வுடன்

அந்த ஒரு சீட்டு குறித்து மார்க்சிஸ்டுகள் வெகுவாக அலட்டிக் கொள்ளவில்லை. துரத்தி விட்ட அதிமுகவை ஆதரிக்க முடியாது. விட்டுவிட்டு வந்த திமுகவையும் ஆதரிக்க முடியாது. கேப்டனோ சண்டை போடுமளவு பலமில்லை. இறுதியல் கம்யூனிசம் என்ற பெயருக்காக வலதுகளை மட்டும்தான் ஆதரிக்க முடியும். வலது வெற்றி பெறுவது தாபாவின் கையில் என்பதால் மார்க்சிஸ்டுகள் வேடிக்கை பார்ப்பவரின் மனநிலையில் இருந்தார்கள். இந்திய அளவில் மூன்றாவது அணியின் ஹோல் சேல் வியாபாரிகளாக இருந்த மார்க்சிஸ்டுகளை மம்தாவும், நிதீஷ்குமாரும், நவீன்பட்நாயக்கும், ஏன் ஜெயலலிதாவும் கூட ஓரங்கட்டி விட்டதால் மேட்ச் பிக்சிங் செய்யப்பட்ட போட்டிக்கு கூட நடுவராக இருக்க முடியவில்லையே என்று தோழர்கள் அழுது கொண்டே சிரிக்கையில் இந்த தேர்தலெல்லாம் ஒரு பிரச்சினையா என்ன?

அந்த ஒரு சீட்டுக்காக அதிமுகவின் கம்யூனிஸ்ட் பிரிவு செயலரும், ஜெயலலிதாவின் பாணபத்திர ஓணாண்டியுமான தா. பாண்டியன் வெகு நாட்களாக ஒற்றைக் காலில் தவம் செய்கிறார். புதுக்கோட்டை முத்துராமன் இறந்த பிறகு கூட தாபா எளிமை புகழ் நல்லக்கண்ணுவை அழைத்துக் கொண்டு கோட்டைக்குச் சென்று அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்க அலைந்தார். அவரது பிறந்தநாளுக்கு கூட அம்மா வந்து ஹேப்பி பர்த் டே சொன்னது மற்ற அடிமைகளுக்கெல்லாம் கிடைக்காத அங்கீகாரம். தாபா வேட்பாளர் என்றால் அம்மா சும்மாவே ஆதரவு கொடுப்பார் என்ற உண்மை வதந்தியை அவர் சொல்லாமலேயே ஊடகங்கள் அவ்வப்போது நினைவுபடுத்தி வந்தன. இரவுக் கனவுகளில் அந்த நினைவுபடுத்தல்கள் இனிய ஜாங்கிரிகளாக தாபாவை உமிழ்நீர் பொங்க அலைக்கழித்திருக்கும்.

அந்த ஒரு சீட்டுக்காக வலது கம்யூனிஸ்டு தலைவர்கள் பரதன், சுதாகர் ரெட்டி சென்னை வந்து காத்திருந்தார்கள். அம்மன் தரிசனம் கிடைக்கவில்லை. கூடவே அதிமுக அறிவித்த ஐந்து வேட்பாளர் என்ற எண்ணிக்கை வலதுகளின் வயிற்றில் புளியைக் கரைத்தது. தன்னை மறுத்து டி.ராஜாதான் வேட்பாளர் என்றால் அம்மா இப்படித்தான செய்வார் என்று தாபா உள்ளுக்குள் குதூகலித்ததை அவரது சக தோழர்கள் உணராமலில்லை. சென்னையில் மறுத்த அம்மனை அவர்கள் தில்லி வரை துரத்தி சந்தித்தார்கள். அம்மா இடம் கொடுத்து பேசவில்லை. ஆகட்டும் பார்க்கலாம் என்று விடை கொடுத்தார். இறுதியில் திமுகவும், தேமுதிகவும் மோதுகிறது என்பது உறுதியான பிறகே அவர் வலது வேட்பாளர் டி.ராஜாவை ஆதரிப்பதாக அறிவித்தார். எதிரிகளுக்கு கிடைக்க கூடாது என்ற நல்லெண்ணத்தில் வலது அடிமைகளுக்கு ஒரு சீட் கிடைத்திருக்கிறது. இனி வலது கட்சி என்ன செய்ய வேண்டும் என்பதை தாபா மூலம் அம்மா சொல்வதை ஆயுள் முழுக்க செய்வார்கள் வலது அடிமைகள். நமக்கு வாய்த்த அடிமை இத்தனை சீப்பா என்று தாபாவிடம் அம்மா ஆச்சரியப்படலாம்.

அந்த ஒரு சீட்டை கனவு காணுமளவுக்கு உறுப்பினர்கள் இல்லையே என்பது காங்கிரசின் இல்லையில்லை காங்கிரஸ் கோஷ்டிகளின் கவலை. தேமுதிகவும், திமுகவும் தூது அனுப்பியிருக்கிறார்கள். ஐந்து உறுப்பினர்கள் கொண்ட காங்கிரஸ் யாரை ஆதரிக்கும் என்பதை சோனியா முடிவு செய்வார் என்று ஞானதேசிகன் சொல்லியிருக்கிறார். அந்த ஞானசூனியம் இதன்றி வேறு என்ன சொல்லியிருப்பார், இதையெல்லாம் ஒரு செய்தியாக ஏன் எழுதுகிறீர்கள் என்று நீங்கள் கோபப்படுகிறது தெரிகிறது. அடிமைகள் அன்னையிடம் கேட்டுத்தான் கனைப்பார்கள் என்றாலும் வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தை எப்படியாவது ஏமாற்றி சில பல தொகுதிகளை பெறுவது என்ற யோசனையில் இருக்கும் ராகுல் காந்தி என்ன முடிவெடுப்பார் என்பதைப் பொறுத்தும் அந்த ஒரு சீட்டின் தலைவிதி தீர்மானிக்கப்படலாம்.

அந்த ஒரு சீட்டுக்காக அனைத்துக் கட்சிகளும் அலைந்து திரிந்து குனிந்து தொழுது வாங்கி விற்று வரும் இந்த சூழலை வைத்து பத்திரிகைகள் ஒரு மாதமாக கிசுகிசு அக்கப்போர்களை மாபெரும் போர் போல எழுதி குவித்துவிட்டன. அந்த ஒரு சீட்டுக்கான ஓட்டுக் கட்சிகளின் இந்த கவிதை வார்த்தைகளுக்கு இடையே ஒளிந்து கொண்டிருக்கும் மறை பொருள் குறித்து நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?

  1. // அந்த ஒரு சீட்டுக்காக அதிமுகவின் கம்யூனிஸ்ட் பிரிவு செயலரும், ஜெயலலிதாவின் பாணபத்திர ஓணாண்டியுமான தா. பாண்டியன் வெகு நாட்களாக ஒற்றைக் காலில் தவம் செய்கிறார். //

    பாணபத்திர ஓணாண்டி வாசகர் வட்டம் சார்பாக இந்த வரியை வன்மையாக கண்டிக்கிறேன். ஆனானப்பட்ட 23ம் புலிகேசியையே தைரியமாக திட்டியவன் ஓணாண்டிப் புலவன் என்பதை மறந்து விட வேண்டாம்! ஒப்பீடு செய்வதிலும் நேர்மை வேண்டும் ஐயா!

  2. கனிமொழிதான்… சும்மாவா கலைஞர் கணக்குப் போடுவார்..

  3. ஜெயலலிதாவின் வியூகம் கனிமொழிக்கு சாதகமாகவே தெரிகிறது! கேப்டன் மீது அவருக்கு ஏன் இந்த காட்டம்? பழயதை மறந்து பா ம க இறங்கிவந்து கேப்டனை ஆதரிக்கலாம்! நடக்குமா?

  4. …..//அந்த ஒரு சீட்டிற்காக அம்மா அறிவித்ததும் மயிலாப்பூர் மருத்துவர் மைத்ரேயன் அம்மா காலடியில் விழுந்து சேவித்த புகைப்படம் பார்த்தீர்களா? என்ன இருந்தாலும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவில் இருக்கும் போது இதே மைத்ரேயன் காஞ்சி சங்கராச்சாரி ஜெயேந்திரன் காலில் விழுந்தவர் அல்லவா? ஒரு ஸ்வயம் சேவக் எந்தக் கட்சியிலும் இருந்தாலும் இப்படி பெரியோரை மதிக்கும் ஒழுக்கம் கொண்டவனாக இருப்பான் என்பதற்கு வாழும் எடுத்துக் காட்டு மைத்ரேயன். வந்தே மாதரம்! அம்மாவே சரணம்!//….. இதை மட்டும் போட்டோ ஆதாரத்துடன் போட்டு அம்பிகளை வாயடைக்கச்செய்யதுவிட்டதே வினவு!

    • எனக்கு தெரிந்து இன்றைய நிலையில் சோனியா காந்தி, ராமதாஸ், கிருஷ்ணசாமி, ஜவாஹிருல்லா என எல்லாரும் காலிலும் விழுந்து கொண்டு இருப்பது கலைஞர் தான்! என்ன, இதை போட்டோ எடுக்க முடியாது!

  5. யார் காலில் எதற்காக விழுவது? நல்லாசி வேண்டி பெரியவர்காலில் விழுவது தப்பே இல்லைதான்! பதவிக்காகவும், பணத்துக்காகவும் காலில் விழுவது?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க