privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்மின் விபத்து கடவுளின் செயலாம் !

மின் விபத்து கடவுளின் செயலாம் !

-

திருநெல்வேலியைச் சேர்ந்த செல்வராஜ், எல்.ஐ.சி அலுவலகத்தில் நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றி வந்தவர். கடந்த ஆண்டு பிப்ரவரி-12-ம் தேதி இருசக்கர வாகனத்தில் அவர் சென்று கொண்டிருந்த போது மேலே இருந்த மின் கம்பி அறுந்து விழுந்து, மின்சாரம் தாக்கியது. படுகாயமடைந்த செல்வராஜ் பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மரணம் அடைந்தார்.

கடவுள் பாலம்
கடவுளுக்கு பாலம் கட்டும் மின்சார வாரியம்

இது குறித்து அவரது மனைவி எஸ். குமாரி உயர்நீதிமன்றம், மதுரைக் கிளையில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில் மின்வாரியத்தினர் தங்கள் கடமையை சரிவரச் செய்யாமல் அலட்சியமாக இருந்ததால்தான் தனது கணவர் இறந்தார், ஆகவே அதற்குரிய இழப்பீடு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட வேண்டுமென்றும் அவர் கோரியிருந்தார்.

இதற்கு மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் தாக்கல் செய்த பதில் மனுவில், சம்பவம் நடந்த நாளில் பலத்த காற்று வீசியதும், பலர் செல்வராஜை செல்ல வேண்டாம் எனக் கூறியும் மீறி அதிவேகத்தில் சென்றதால் விபத்தில் சிக்கிக் கொண்டார், இது கடவுளின் செயல், மின் வாரியத்தின் பங்கு எதுவுமில்லை எனவும் கூறியிருந்தார்.

இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி கே.கே.சசிதரன், கடவுளின் பெயர் போட்டு தனது பொறுப்புகளிலிருந்து தப்பிக்கும் மின்வாரியத்தை கண்டித்து, அவர்களின் அலட்சியமே இந்த விபத்துக்கு காரணம் என்று தீர்ப்பளித்தார். உச்சநீதிமன்றம் ஒரு வழக்கில் அளித்த உத்தரவின்படி ஆண்டு வருமானத்தைப் போல 11 மடங்கு நிவாரணத் தொகை அளிக்க வேண்டும் என்று கணக்கிட்டு சுமார் 44 லட்சம் ரூபாய் அளிக்குமாறு மின்வாரியத்திற்கு உத்தரவிட்டார்.

பெரியார்
கடவுள், மத, புராண, சாத்திர, இதிகாசம் என்பவைகளை உதறித்தள்ளி அவற்றிலிருந்து வெளி வாருங்கள் : பெரியார்.

இதை ஒரு விபத்து என்று மட்டும் சொல்லியிருந்தால் கூட பிரச்சினையில்லை. மாறாக கடவுள் செயல் என்று மின் வாரியத்தின் அதிகாரி கூறுகிறார் என்றால் எவ்வளவு அபாயகரமான சூழலில் நாம் வாழ்கிறோம்? விட்டால் மின் தடை, தனியார் முதலாளிகளிடம் அதிக பணம் கொடுத்து வாங்கப்படும் மின்சாரம் அனைத்தும் கூட கடவுளின் செயல் என்று நியாயப்படுத்தலாமோ?

மின் கம்பமோ, கம்பிகளோ போதுமான உறுதியுடன் பராமரிக்கப்பட்டால் காற்றடிக்கும் போது விழாது. மாறாக அவை விழுமென்றே தெரிந்துதான் மின் வாரியம் பல ஊர்களில் அலட்சியமா இருக்கிறது. அந்த வகையில் பார்த்தால் மின்சாரம் தொடர்பான பல விபத்துக்களை விபத்துக்கள் என்று கூட சொல்ல முடியாது. ஏனெனில் அவை என்றாவது நடக்குமென்று தெரிந்துதான் மின் வாரியம் செயல்படுகிறது.

இறந்தவர், வருடம் 4,40,000 ரூபாய் சம்பளம் வாங்கியவர் என்பதால் பதினோரு மடங்கு அதிகமான நிவாரணத்தை குடும்பத்திற்கு பெற்றுத் தந்திருக்கிறார். இத்தகைய மாத ஊதியங்கள் இல்லாத பாமரர்கள் செத்தால் நீதிபதி அய்யாவும் இவ்வளவு பெரிய தொகையை கொடுக்கச் சொல்லி கூறமாட்டார். ஏழையாக பிறப்பதும், அரசு ஊழியராக மாறுவதும் கூட கடவுள் செயலா என்று தெரியவில்லை.

போகட்டும், கடவுள் நம்பிக்கை என்பது ஒருவரது தனிப்பட்ட வாழ்வில் அந்தரங்கமாக மட்டும் இருக்க வேண்டியது. அதையெல்லாம் பொதுப் பிரச்சினைகளுக்கு இழுத்து வருவதும், காரணமாக கூறுவதும் எத்தனை பெரிய முட்டாள்தனம் என்பதற்கு இந்த மின்வாரிய அதிகாரி ஒரு சான்று.

அரசு அலுவலகங்களில் யாகம், பூஜை, மழை பெய்ய சிறப்பு யாகங்கள், வாஸ்து பார்த்து அதிகாரிகள் செயல்படுவது என்று ஏராளமான முறையில் மத நம்பிக்கைகள் புரையோடிப் போயிருக்கின்றன. அதையெல்லாம் திருத்தி, அரசையும், அதிகாரிகளையும் மதச்சார்பற்ற முறையில் இயங்க வைக்காத வரைக்கும் இவர்கள் இப்படித்தான் கடவுள் பெயரில் பொறுப்புகளைக் கட்டிவிட்டு, அலட்சியமாக செயல்படுவார்கள்.