privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்இராணுவம்மணிப்பூர் : 64 ஆண்டுகளாகத் தொடரும் ஆக்கிரமிப்பு !

மணிப்பூர் : 64 ஆண்டுகளாகத் தொடரும் ஆக்கிரமிப்பு !

-

ணிப்பூரில் இந்திய இராணுவம் நடத்திவரும் போலி மோதல் கொலைகளை, சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ள ஒரு பொதுநல வழக்கு அம்பலத்துக்கு கொண்டு வந்துள்ளது. நீதிக்குப் புறம்பாகக் கொல்லப்பட்டவர்களது குடும்பத்தினர் சங்கம் என்ற மணிப்பூரைச் சேர்ந்த அமைப்பு தாக்கல் செய்துள்ள இம்மனு, 2007 முதல் 2012 வரையிலான 5 ஆண்டுகளில் சுமார் 1500 பேருக்கும் மேற்பட்டவர்கள் போலி மோதலில் இராணுவத்தால் கொல்லப்பட்டிருக்கின்றனர் என்றும், இது குறித்து ஒரு சுயேச்சையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்றும், ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தை மணிப்பூரிலிருந்து விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும் கோரியிருக்கிறது.

ஐரோம் ஷர்மிளா, தங்ஜம் மனோரமா
மணிப்பூரில் அமலில் உள்ள ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்கக் கோரி பத்தாண்டுகளுக்கு மேலாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் ஐரோம் ஷர்மிளா (இடது); அசாம் துப்பாக்கிப் படைப்பிரிவால் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்ட தங்ஜம் மனோரமா (வலது படம்) வழக்கு, இன்னும் விசாரணை நிலையைக் கூட எட்டவில்லை.

இந்த வழக்கில் தனது தரப்பை அறிக்கையாகத் தாக்கல் செய்துள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையம், மேற்குறிப்பிட்ட 5 ஆண்டுகளில் மணிப்பூரிலிருந்து மொத்தம் 1671 போலி மோதல் கொலைப் புகார்கள் தங்களிடம் வந்துள்ளதாகவும், அவற்றில் 191 புகார்களை விசாரித்ததில், அனைத்தும் போலி மோதல் கொலைகளே என்று தெரியவந்ததால், கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு 10.5 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மீதமுள்ள வழக்குகளை விசாரிக்கவிடாமல் தடுக்க அம்மாநில அரசு, பல்வேறு முட்டுக்கட்டைகளைப் போட்டுவருவதாகவும் தேசிய மனித உரிமை ஆணையம் தனது அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளது.

இப்பிரச்சினை குறித்து உச்ச நீதிமன்றமும் ஒரு விசாரணைக் குழுவை நியமித்தது. முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தலைமையிலான அந்தக் குழு, தன்னிடம் விசாரணைக்கு வந்த 7 கொலைகளும் போலி மோதல் கொலைகளே என்று கூறியிருப்பதுடன், ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தை திரும்பப் பெறவேண்டும் என்றும் கருத்து தெரிவித்திருக்கிறது.

இத்தகையதொரு கொடூரமான இராணுவ ஒடுக்குமுறையை மணிப்பூரில் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது இந்திய அரசு. ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென்று நவம்பர் 2000 முதல் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தி வரும் ஐரோம் சர்மிளா மீது தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செயப்பட்டுள்ளதேயன்றி, அச்சட்டம் விலக்கிக் கொள்ளப்படவில்லை. ஜுலை 2004- இல் தங்ஜம் மனோரமா என்ற பெண்ணை அசாம் ரைபிள்ஸ் படையினர் வல்லுறவு செய்து கொன்றதை எதிர்த்து, “இந்திய இராணுவமே எங்களையும் வல்லுறவு செய்” என்று இம்பாலில் உள்ள அசாம் ரைபிள்ஸ் தலைமையகத்தின் முன் நிர்வாணமாக நின்று போராடினார்கள் மணிப்பூர் தாய்மார்கள். அவர்கள் தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறைவைக்கப் பட்டனர்.

மக்கள் போராட்டம் காரணமாக அசாம் ரைபிள்ஸ் குற்றவாளிகள் மீது மாநில போலீசு வழக்கு பதிவு செய்த போதிலும், ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தின் படி, இராணுவத்தின் மீது வழக்கு பதிவு செய்யும் அதிகாரம் மாநில போலீசுக்கு இல்லை என்று கூறி, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய அனுமதி மறுத்து வருகின்றது மத்திய அரசு.

பிரிவினைவாத இயக்கங்களை ஒடுக்குவது என்ற பெயரில் மணிப்பூரில் படுகொலைகளையும் பாலியல் வன்முறைகளையும் அரங்கேற்றுவது மட்டுமின்றி, மணிப்பூர் இளைஞர்களைப் போதைக்கு அடிமையாக்கிச் சீரழிப்பதையும் இந்திய இராணுவம் திட்டமிட்டே செய்கிறது. சுமார் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை மருந்துகளைக் கடத்த முயன்ற லெப்டினென்ட் கர்னல் அஜய் சவுத்திரி என்ற இந்திய இராணுவ கர்னல் பர்மா எல்லைக்கு அருகே சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் சிறப்பு அதிகார சட்டம், இந்த இராணுவ அதிகாரியையும் காப்பாற்றிவிடும்.

ஜந்தர் மந்தர் ஆர்ப்பாட்டம்
இராணுவமும் துணை இராணுவப் படைகளும் மணிப்பூரில் கண்மண் தெரியாமல் நடத்திவரும் போலி மோதல் கொலைகளைத் தடுத்து, விசாரணை நடத்தக் கோரி மணிப்பூரி மாணவர்களும், மக்களும் டெல்லி ஜந்தர் மந்தரில் நடத்திய முழக்க ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்).

ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் என்பது முதன்முதலாக 1958 – ஆம் ஆண்டில் ஒரு அவசரச் சட்டமாக மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. அன்று முதல் இன்றுவரை அந்தச் சட்டம் மணிப்பூரில் அமலில் இருக்கிறது. ஒரு பகுதி கலவரப்பகுதியாக தொடர்ந்து நீடிக்கிறதா, அங்கே ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் தொடர்வது அவசியமா என்று ஆறு மாதங்களுக்கு ஒருமுறை ஆய்வுக்கு உட்படுத்தி, உரிய காரணங்கள் இருந்தால் மட்டுமே இதனை நீட்டிக்க வேண்டும் என்று 14 ஆண்டுகளுக்கு முன்னரே மணிப்பூர் தொடர்பான ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. போலி மோதல் கொலை குறித்த புகார்கள் வந்தால், அவற்றைக் கையாள வேண்டிய முறை குறித்தும் உச்ச நீதிமன்ற உத்தரவுகள் இருக்கின்றன. எனினும் இவை எதையும் அரசோ, இராணுவமோ குப்பைக் காகிதத்துக்குச் சமமாகக் கூட மதித்ததில்லை.

சுமார் 20 இலட்சம் மக்கள் தொகை கொண்ட மணிப்பூரில் இதுவரை சுமார் 20,000 பேருக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இராணுவத்தினால் பாதிக்கப்படாத குடும்பம் மணிப்பூரில் இல்லை. ஐம்பது பேருக்கு ஒரு சிப்பாய் வீதம் இராணுவம் அங்கே நிறுத்தப்பட்டிருக்கிறது. 1958 முதல் அங்கே இந்திய இராணுவம் நிரந்தரமாகக் குடியிருக்கிறது. காரணம் – மணிப்பூரை இந்தியா ஆக்கிரமித்திருக்கிறது என்பதுதான்.

1891-இல் மணிப்பூர் மன்னனைப் போரில் வென்று மணிப்பூரைத் தனது ஆளுகையின் கீழ் கொண்டுவந்தது பிரிட்டிஷ் அரசு. 1947 வரை பிரிட்டிஷ் இந்தியாவுடன் மணிப்பூர் இணைக்கப்படவில்லை. அனைவருக்கும் வாக்குரிமை என்ற அடிப்படையில் 1948 -இல், (இந்திய அரசியல் சாசனம் நிறைவேற்றப்படுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே) மணிப்பூர் என்ற நாடு தனது முதல் தேர்தலை நடத்தியது. தேர்தலுக்குப் பின் ‘பிரஜா சாந்தி’ என்ற கட்சியின் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்டது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் 1949 அக்டோபரில், அந்நாட்டு மக்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், மணிப்பூர் இந்தியாவுடன் பலவந்தமாக இணைக்கப்பட்டது. மணிப்பூரின் ராஜா புத்த சந்திராவை பேச்சுவார்த்தை என்று சொல்லி அழைத்து, ஷில்லாங்கில் வீட்டுக் காவலில் அடைத்த இந்திய அரசு, இராணுவத்தைக் குவித்து அவரை மிரட்டி, மணிப்பூரை இந்தியாவுடன் இணைக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வைத்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும், மந்திரி சபையும் கலைக்கப்பட்டன. இதுதான் மணிப்பூரை இந்தியா ஆக்கிரமித்ததன் சுருக்கமான வரலாறு. இதனை எதிர்த்து மணிப்பூர் மக்கள் அமைதி வழியில்தான் போராடத் தொடங்கினார்கள். எனினும், அங்கே இந்திய இராணுவம் குவிக்கப்பட்டது. பின்னர் பல ஆயுதக் குழுக்கள் தோன்றின. அவற்றை ஒடுக்குவது என்ற பேரில் இராணுவத்தின் ஆட்சி அங்கே நிரந்தரமாக்கப்பட்டு விட்டது.

“ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் வல்லுறவுக் குற்றவாளிகளுக்குப் பாதுகாப்பு தரக்கூடாது” என்று வர்மா கமிசன் கூறியது. போலி மோதல் கொலைகளை விசாரிக்குமாறு ஏராளமான உச்ச நீதிமன்ற உத்தரவுகள் உள்ளன. இருப்பினும் இந்திய அரசு ஆக்கிரமிப்பு என்ற பெருங்குற்றத்தை நியாயப்படுத்துவதற்காகத்தான் ஆயுதப்(ஆக்கிரமிப்பு) படைகள் பாதுகாப்புச் சட்டத்தை இயற்றி வைத்திருக்கிறது.

மணிப்பூரை மட்டுமல்ல, சுய நிர்ணய உரிமை கோரிப் போராடிவரும் காஷ்மீர் மற்றும் வடகிழக்கிந்திய தேசிய இனங்கள் அனைத்தையும் தனது இராணுவ வலிமையைப் பயன்படுத்தித்தான் இந்திய அரசு நசுக்கி வருகிறது. நேரு காலத்திலிருந்து தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த ஆக்கிரமிப்புகளையும் இன ஒடுக்குமுறைகளையும் போலி கம்யூனிஸ்டுகள், திராவிடக் கட்சிகள் உள்ளிட்ட எல்லா ஓட்டுப் பொறுக்கிகளும் ஆதரிக்கின்றனர். இந்த வெட்கங்கெட்ட ஆக்கிரமிப்பை தேசிய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கும் நடவடிக்கையாகச் சித்தரிக்கின்றனர். அதனைக் கொண்டாடும்படி மக்களைப் பயிற்றுவித்திருக்கின்றனர்.

இத்தகைய அயோக்கியர்களான ஓட்டுப் பொறுக்கிகளும் இனவாதிகளும் ஊடகங்களும்தான், இன்று ஈழத்தமிழர்களுக்காகக் கண்ணீர் விடுகின்றனர். ஈழத்தை இந்திராகாந்தி வாங்கித் தந்திருப்பார், ஜெயலலிதா வாங்கித் தருவார் என்றெல்லாம் கதையளக்கின்றனர்.

– அஜித்
________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – ஜூன் 2013
________________________________________________________________________________