தமிழ்நாட்டு மக்களுக்கு ‘வாயாலேயே கூடங்குளத்திலிருந்து மின்சாரம் தயாரித்துக் கொடுத்து விட்ட’ மத்திய அமைச்சர் நாராயணசாமி இப்போது நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேசன் (என்எல்சி) நிறுவனத்தின் பங்குகளை விற்பதன் மூலம் பணம் திரட்டி, அதை நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்தலாம் என்று என்எல்சி தனியார் மயத்தை நியாயப்படுத்தியிருக்கிறார்.

லாபகரமாக இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனமான என்எல்சி 2011-12 நிதியாண்டில் ரூ 5,696 கோடி வருமானத்தில் ரூ 1,411 கோடி லாபம் (24.77%) ஈட்டியிருக்கிறது. பொதுத் துறை என்றால் உற்பத்தித் திறன் குறைவாக இருக்கும், நஷ்டத்தில்தான் இயங்கும், அதனால் பொதுத் துறை நிறுவனங்களின் ஒரு பகுதியை தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்க வேண்டும் என்பது உலகை நாட்டாமை செய்யும் உலக வர்த்தகக் கழகம் மற்றும் அமெரிக்க அரசின் கோட்பாடு. அதை சிரமேற்கொண்டு செயல்படுத்துவதுதான் காங்கிரஸ் ஆண்டாலும், பாஜக ஆண்டாலும் தரகு முதலாளிகளுக்கு சேவை செய்யும் இந்திய அரசின் செயல்பாடு.
அந்த அடிப்படையில் தமிழ்நாட்டுக்கும் தென் மாநிலங்களுக்கும் மாதம் 2,740 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்து தரும், 10,000 ஒப்பந்தத் தொழிலாளர்கள் உட்பட 27,000 தொழிலாளர்கள் பணி புரியும் என்எல்சியை தனியார் கையில் ஒப்படைக்க தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது மத்திய அரசு.
5 சதவீதம் பங்குகள்தானே விற்கப்படப் போகிறது என்று சில முதலாளித்துவ ‘அறிவாளி’கள் இதற்கு சப்பைக் கட்டு கட்டி வருகிறார்கள். மக்களின் சொத்தை படிப்படியாக தனியார் கையில் விட்டுக் கொடுக்கும் சறுக்குப் பாதையில் 1991-92, 1992-93 ஆண்டுகளிலேயே என்எல்சியை செலுத்தியது மத்திய அரசு. 2002, 2006-ம் ஆண்டுகளில் கூடுதல் பங்குகளை விற்க முயற்சி செய்த மத்திய அரசின் திட்டங்கள் கடும் எதிர்ப்புக்குப் பிறகு கைவிடப்பட்டன. என்எல்சியின் பங்குகளை விற்ற அதே நேரத்தில் தனியாருக்கு பங்குகள் விற்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களில் 30%-40%க்கும் மேல் தனியாருக்கு விற்கப்பட்டிருக்கின்றன என்பதையும், படிப்படியாக தனியார் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் அவற்றை ஒப்படைத்து விடுவதுதான் அரசின் நோக்கம் என்பதையும் இவர்கள் அறியாமல் இருக்கிறார்கள் அல்லது மறைத்து விடுகிறார்கள்.
இந்த நடவடிக்கையை எதிர்த்து அறிக்கை வெளியிட்டிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா, இதனால் நெய்வேலியில் தொழிலாளர் போராட்டம் வெடிக்கும் என்றும், லாபம் ஈட்டும் நவரத்தினா நிறுவனத்தின் பங்குகளை வீழ்ந்து கொண்டிருக்கும் பங்குச் சந்தையில் விற்பதன் மூலம் இந்திய அரசு நஷ்டமடையும் என்றும் தனது எதிர்ப்பை தெரிவித்திருக்கிறார். அதாவது எதிர் காலத்தில் தான் ஆதரிக்கும் மத்திய அரசின் கீழ் தொழிலாளர்கள் போராடவில்லை என்றும், பங்குச் சந்தையில் நல்ல விலை கிடைப்பதால் விற்கிறோம் என்றும் என்எல்சியை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்வதை அவர் ஆதரிக்கலாம். ஜெயலலிதாவைப் பொறுத்தவரை தொழிலாளர் எதிர்ப்பின்றி பங்குகள் விற்கலாம் என்பதே கொள்கை.
வேறு சிலர் தமிழக அரசே இந்த ஐந்து சதவீதப் பங்குகளை விலை கொடுத்து வாங்கலாம் என்று அபாயகரமான யோசனையையெல்லாம் சொல்கின்றனர். அப்படி ஒன்று நடக்கப் போவதில்லை என்பது ஒரு புறமிருந்தாலும், நெய்வேலியின் நிலம், கனிம வளம், மின் உற்பத்தி அனைத்தும் தமிழக மக்களுக்குச் சொந்தம் எனும் போது நெய்வேலி நிறுவனத்திலிருந்து மத்திய அரசு வெளியேற வேண்டும் என்று சொல்வதுதான் சரியான கோரிக்கை. நெய்வேலியை தனியார் மயமாக்கியே தீருவது என்று அடம் பிடிக்கும் மத்திய அரசை இந்தக் கோரிக்கையும் போராட்டமும்தான் வழிக்குக் கொண்டு வரும்.
உலக வர்த்தக கழகம் மற்றும் அன்னிய நிதி நிறுவனங்கள் அனைத்தும் இலாபத்துடன் நடக்கும் இத்தகைய பொதுத்துறை நிறுவனங்களை முற்றிலும் தனியார்மயமாக்கியே தீரவேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கின்றன. அப்போதுதான் அவர்கள் டாலரை வைத்து பங்குச் சந்தையில் சூதாடி பணத்தை அள்ளிச் செல்லலாம். அடுத்து இத்தகைய நிறுவனங்களை நடத்துவதிலிருந்து மத்திய அரசு விலகிக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் நிபந்தனை விதிக்கிறார்கள்.
நெய்வேலி தனியார் மயமாக்கப்பட்டால் என்ன ஆகும்? நெய்வேலியின் மொத்த வருமானத்தில் 35% (ரூ 1,698 கோடி) தொழிலாளர்களுக்கு சம்பளமாக வழங்கப்படுகிறது, அதன் பிறகு யூனிட்டுக்கு ரூ 1-க்கும் குறைவான செலவில் மின்சாரம் தயாரிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்படுகிறது. மும்பையில் இயங்கும் டாடாவுக்கு சொந்தமான நிறுவனத்தின வருமானத்தில் 3% மட்டுமே தொழிலாளர்களுக்கு சம்பளமாக வழங்கப்படுகிறது என்பதையும் தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் ஒரு யூனிட்டுக்கு ரூ 10-க்கும் அதிகமான விலைக்கு மின்சாரத்தை விற்பதையும் இதனுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
இப்போது இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியடைந்து 1 டாலருக்கு ரூ 60/- என்ற அளவை தொட்டிருக்கும் நிலையில், என்எல்சி போன்ற நவரத்னா நிறுவனங்களின் பங்குகளை பங்குச் சந்தையில் விற்றால்தான் அன்னிய முதலீடுகளை ஈர்த்து பங்குச் சந்தைக்கு புத்துயிர் கொடுக்க முடியும், இந்திய ரூபாயின் மதிப்பை மீட்க முடியும், இறக்குமதி தேவைகளை சரிக்கட்ட முடியும் என்றெல்லாம் திட்டமிடுகிறார் நிதி அமைச்சர் ப சிதம்பரம். ஆனால், 20 ஆண்டுகளாக அன்னிய முதலீட்டாளர்களை ஈர்த்த உலகமயமாக்க கொள்கைகளுக்குப் பிறகு இந்திய ரூபாயின் மதிப்பு அதல பாதாளத்தை நோக்கி விழுந்து கொண்டிருப்பதற்கு என்ன காரணம் என்று அவர் யாருக்கும் விளக்கப் போவதில்லை.
ஏற்கனவே விற்கப்பட்டிருக்கும் 6.44% பங்குகளை தனியார் முதலீட்டாளர்களிடமிருந்து அரசே வாங்கி என்எல்சியை 100% பொதுத் துறை நிறுவனமாக மாற்றுவதற்காக தொழிலாளர்களும் மக்களும் போராட வேண்டும்.
மேலும் படிக்க