privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஅரசியல்ஊடகம்குமுதம் ரிப்போர்ட்டர் அவதூறுக்கு புமாஇமு கண்டனம் !

குமுதம் ரிப்போர்ட்டர் அவதூறுக்கு புமாஇமு கண்டனம் !

-

வணிக மயமாகும் கல்வி
வணிக மயமாகும் கல்விக்கு எதிராக புமாஇமு மாநாடு

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்பு குறித்து குமுதம் ரிப்போர்ட்டர் வெளியிட்ட அவதூறு செய்திக்கு மறுப்பாக புமாஇமுவின் தலைவர் தோழர் கணேசன் அனுப்பிய மறுப்புச் செய்தி:

குமுதம் ரிப்போர்ட்டர் (27.6.2013) இதழில் “வெளிச்சத்துக்கு வரும் நக்சல் ரகசியம்” என்ற தலைப்பில் ஒரு கட்டுக்கதை வெளியாகியிருக்கிறது. எமது அமைப்புக்கு எதிரான ஆதாரமற்ற பொய்கள் நிரம்பியிருக்கும் அந்தக் கட்டுரை போலீசு உளவுத்துறையின் கையாட்களால் எழுதித்தரப்பட்டு, உங்கள் பத்திரிகையில் வெளியிடப்பட்டிருக்கிறது.

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி என்ற எமது அமைப்பு, 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இயங்கி வருகின்றது. சென்னையில் பல கல்லூரிகளில் பல்லாயிரக்கணக்கான மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டிருக்கும் வலிமையான மாணவர் அமைப்பு எங்களுடையதுதான். எங்களுடைய அமைப்பு மாணவர்களிடம் பெற்றிருக்கும் செல்வாக்கின் காரணமாகத்தான் ஏபிவிபி முதலான இந்து மதவெறி மாணவர் அமைப்புகள் இங்கே தலையெடுக்க முடியவில்லை.

சமச்சீர் கல்வி
சமச்சீர் கல்வி போராட்டம்

தனியார் கல்விக் கொள்ளைக்கு எதிராக மாணவர்களுடன் பெற்றோரையும் இணைத்துப் போராடிவருவது நாங்கள்தான். சென்ற திமுக ஆட்சிக்காலத்தில், அரசு உதவி பெறும் பள்ளிகள் நடத்திய நன்கொடைக் கொள்ளையை தடுத்து நிறுத்தியதுடன், வாங்கிய பணத்தை பெற்றோரிடமே திரும்பக் கொடுக்கவைத்ததும் எமது அமைப்பின் போராட்டம்தான்.

சமச்சீர் கல்வியாகட்டும், இலங்கை இனப்படுகொலை பிரச்சினையாகட்டும், அனைத்திலும் மாணவர்களைத் திரட்டிப் போராடுவதில் முன் நின்றது எமது அமைப்புத்தான். சமச்சீர் கல்விக்காக தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தியதிலும், உச்ச நீதிமன்றம் வரை சென்று வாதாடி வெற்றி ஈட்டியதிலும் எமது அமைப்பின் பங்கு முதன்மையானது என்பதைத் தமிழகத்தின் கல்வியாளர்களும், அரசியல் முன்னணியாளர்களும் அறிவர். எமது போராட்டங்கள் குறித்த செய்திகளும், எமது தலைவர்களின் பேட்டிகளும் உங்கள் பத்திரிகை உட்பட பல்வேறு ஊடகங்களிலும் தொடர்ந்து வெளிவந்திருக்கின்றன. அவ்வாறிருக்க, உங்கள் கட்டுரை எமது அமைப்பை ஏதோ ரகசிய சதிக்கும்பல் போல சித்தரித்திருக்கிறது.

ஓட்டுப் போடாதே புரட்சி செய், நக்சல்பாரிகள் தேசபக்தர்கள்” என்பன போன்ற முழக்கங்களை எமது தோழமை அமைப்புகள் கடந்த 30 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டம் நடத்தி பிரச்சாரம் செய்து வருகின்றன. எமது தோழமைப் பத்திரிகைகளான புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் ஆகியவற்றில் அவை தொடர்ந்து கட்டுரைகளாக எழுதப்படுகின்றன. அவ்வாறிருக்க யாரோ ஒரு போலீசு அதிகாரி இதனை இப்போதுதான் கண்டுபிடித்து உங்கள் நிருபருக்கு மட்டும் கூறியிருப்பது போல இக்கட்டுரை சித்தரிப்பது கேலிக்குரிய நகைச்சுவை.

பேருந்து கட்டண உயர்வுக்கு எதிரான பிரச்சாரம்
பேருந்து கட்டண உயர்வுக்கு எதிரான பிரச்சாரம்

உண்மையில் இதற்கு காரணம் வேறு. சமீபத்தில் லஞ்ச ஊழல் குற்றத்துக்காக உயர் நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு உள்ளாகியிருக்கும் மதுரவாயல் காவல்நிலையத்தின் முறைகேடுகளையும், அங்கே நடைபெற்ற லாக் அப் கொலையையும் எதிர்த்து போராடி வருவது அந்தப் பகுதியைச் சேர்ந்த எமது அமைப்புதான். இதன் காரணமாகவே எமது தோழர்கள் மீது பல பொய்வழக்குகள் போடுவதுடன், அமைப்புக்கு எதிரான அவதூறுகளையும் அந்தக் காவல்நிலைய அதிகாரிகள் பரப்பி வருகிறார்கள். சந்தோஷ் நகர் பகுதிக்கும் இது பொருந்தும். போலீசின் கிரிமினல் குற்றங்களை மறைப்பதற்காகவும், முட்டுக் கொடுப்பதற்காகவும் தலித் மக்களின் குடியிருப்பு பகுதிகளையே கிரிமினல் பகுதிகளாக சித்தரித்திருக்கிறது உங்கள் பத்திரிகை.

கட்டுரை முழுவதும் நயவஞ்சகமான அவதூறுகளை எழுதிவிட்டு, எமது தோழர் கார்த்திகேயனின் மறுப்புச் செய்தியை ஒப்புக்கு இரண்டு வரி வெளியிட்டு விட்டு, இருதரப்பு செய்திகளையும் வெளியிட்டது போல காட்டிருக்கிறீர்கள். இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.

எமது இந்த மறுப்பு செய்தியை முழுமையாக வெளியிடுவதுடன், இத்தகைய அவதூறு செய்தியை வெளியிட்டதற்கு உங்கள் பத்திரிகை வருத்தம் தெரிவிக்கவேண்டும் என்றும் கோருகிறோம்.

இவண்
கணேசன், மாநில ஒருங்கிணைப்பாளர்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி