privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

எதிர்கொள்வோம் !

-

இவ்வளவு நாளாகப் புலிகளையும் பிரபாகரனையும் பாசிஸ்டு என்று கூறிவிட்டு, மாணவர் போராட்டம் அளித்த நிர்ப்பந்தத்தின் காரணமாக, தாங்களும் ஈழப் போராட்டத்துக்கு ஆதரவு என்று வேறு வழியில்லாமல் காட்டிக்கொள்கிறீர்கள். அல்லது ஆதாயம் அடைவதற்காக இப்படி நடிக்கிறீர்கள்.

இப்படிச் சொல்லுவது கொஞ்சமும் உண்மைக் கலப்பில்லாத முழுப்பொய். பாசிஸ்டுகளின் அதிகாரபூர்வ ஊதுகுழல்களான கோயபல்சு – கோயரிங் போன்றவர்கள்கூட இப்படிப் புளுகுவதற்குத் துணிய மாட்டார்கள். ஆனால், தங்களுக்கென்று எந்தவொரு சொந்த அரசியல் திட்டமும் நடைமுறையும் இல்லாமல் ஈழச் சிக்கலை வைத்துக் கொண்டு பிழைப்பு நடத்தும் சில அரசியல் காளான்கள் தொடர்ந்து இப்படிப் புளுகி வருகிறார்கள்.

சைதாப்பேட்டை ஆர்ப்பாட்டம்
“ஈழத்திலே வெறியாட்டம் ! இங்கே எதற்கு குடியரசுக் கொண்டாட்டம் !!” என்ற முழக்கத்தின் கீழ் ஈழத்தின் மீது நடத்தப்படும் போரில் இந்திய அரசு உடந்தையாக இருப்பதை அம்பலப்படுத்தி ஜனவரி 26, 2009 அன்று சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே ம.க.இ.க. உள்ளிட்ட புரட்சிகர அமைப்புகள் இணைந்து நடத்திய எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம். (கோப்புப் படம்).

ஈழ விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவு என்ற நிலையிலிருந்து ம.க.இ.க., புதிய ஜனநாயகம் மற்றும் இதன் தோழமை அமைப்புகள் ஒரு போதும் விலகியிருந்ததாகவோ, ஒதுங்கியிருந்ததாகவோ, அல்லது மற்ற அமைப்புகளை விடப் பின்தங்கியிருந்ததாகவோ இவர்களால் ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடியுமா? அதற்கு மாறாக, ஈழ விடுதலைப் போராட்டத்தை எப்போதும் தம் தலையில் தாங்கிச் சுமப்பவர்களாகக் காட்டிக் கொள்ளும் நெடுமா, வைகோ, பெம, ராமா, திருமா, தியாகு, சுப.வீ., வீரமணி போன்றவர்களெல்லாம் தமது பிழைப்புவாத அரசியல் நலனுக்காகவும் தம் தோலைக் காத்துக் கொள்வற்கும் ஈழம் என்ற சொல்லை உச்சரிப்பதற்கோ, எழுதுவதற்கோ கூட அஞ்சிய தருணங்களையும் நாம் ஆதாரங்களுடன் எடுத்துக் காட்ட முடியும்.

அவர்களோடு சேர்ந்து இப்போது முளைத்துள்ள புலிகளின் புதிய துதிபாடிகளும் ஈழத்தின் எதிரிகளை வீழ்த்துவதை விட, ம.க.இ.க., புதிய ஜனநாயகம், பு.மா.இ.மு., மற்றும் இவற்றின் தோழமை அமைப்புகளை ஈழ விடுதலைப் போராட்டத்துக்கு எதிரானவை என்று புளுகி, இவற்றைத் தமிழ் மக்களிடமிருந்து தனிமைப்படுத்தும் பணியை முதன்மையாகக் கொண்டு செயல்படுகிறார்கள். பிரபாகரனையும் விடுதலைப் புலிகளையும் பாசிஸ்டுகள் என்று மதிப்பிடுவதாலும் ஈழச் சிக்கலுக்குப் “பொதுவாக்கெடுப்பு” என்று ஒருபுறம் முழுங்கிக் கொண்டே, “தனி ஈழம்தான் ஒரே தீர்வு” என்பதை இப்பொழுதே முடிந்த முடிவாகக் கூறாதவர்களை, ஈழப் போராட்ட ஆதரவுக்கு எதிர்நிலைக்குத் தள்ளுகின்றனர்.

பிரபாகரன் மற்றும் புலிகளை பாசிஸ்டுகள் என்று இப்போதும்தான் ம.க.இ.க., புதிய ஜனநாயகம் மற்றும் இதன் தோழமை அமைப்புகள் கூறி வருகின்றன; எதற்காகவும் யாருக்காகவும் அவ்வாறு கூறுவதை இந்த அமைப்புகள் நிறுத்திவிடவில்லை; பிரபாகரன் மற்றும் புலிகளை பாசிஸ்டுகள் என்பது கடந்தகால வரலாற்று உண்மை. பிரபாகரன் மற்றும் அவர் தலைமையிலான விடுதலைப் புலிகளின் முந்தைய பாசிச அரசியல், இராணுவத் தவறுகளிலிருந்து பாடங் கற்றுக் கொள்ளவேண்டும். மீண்டும் அவர்களின் வழிமுறைகளை யாரும் பின்பற்றக் கூடாது.

ஆனால், கடந்த முப்பதாண்டுகால ஈழப் போராட்டத்தில் பிரபாகரனும் புலிகளும் தவறே செய்யவில்லை; ஈழப்போரின் துயரமான முடிவுகளுக்குப் பன்னாட்டுச் சதியும் இலங்கை, இந்திய அரசுகள் நடத்திய கொடூரமான தாக்குதல் மட்டும்தான் காரணம் என்று கூறி, பிரபாகரன் மற்றும் புலிகளின் பாசிச அரசியல், இராணுவ நடவடிக்கைகளையும் நியாயப்படுத்திக் கொண்டு, பிரபாகரன் மற்றும் புலிகள் மீது கட்டியெழுப்பப்பட்ட பிரமை, தனிநபர் வழிபாடு, கற்பிதங்கள் எல்லாமும் தொடரும் பொழுது இந்த விடயம் அவசியமாகிறது. இந்த அளவுக்குத்தான் ஈழச்சிக்கலின் இன்றைய நிலையில் பிரபாகரன் மற்றும் புலிகளை பாசிஸ்டுகள் என்ற கருத்து-மதிப்பீடு முக்கியத்துவமுடையது.

“மாணவர் போராட்டம் அளித்த நிர்ப்பந்தம்” என்பது கடைந்தெடுத்த பொய்யும் மாணவர் போராட்டம் பற்றிய ஞான சூனியத்தின் பிதற்றலும் தான். கடந்த பல ஆண்டுகளில் ஈழ ஆதரவு மாணவர் போராட்டத்தைக் கட்டியெழுப்பியதில் ம.க.இ.க., புதிய ஜனநாயகம் மற்றும் இதன் தோழமை அமைப்புகளின் பங்கு, குறிப்பாக, புட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணியின் பங்கு மிக மிக முக்கியமானதாகும்.

புலிகளிடமிருந்து ஈழத்தின் கிழக்கு மாகாணத்தை முழுமையாகக் கைப்பற்றிக்கொண்ட இலங்கை பாசிச இராணுவம் 2008 நவம்பரில் வன்னியின் மீது தாக்குதல் தொடுத்து, புலிகளின் தலைமையகமாக இருந்த கிளிநொச்சியைச் சுற்றிவளைத்தது.

கசாப்புக்காரனிடமே காருண்யம் கோரும் கதையாக, கொலைகாரன் மன்மோகனிடமே, இங்குள்ள ஓட்டுக் கட்சிகள் ‘கோரிக்கை’ வைத்துக் கொண்டிருந்த சூழலில், தமிழக மக்கள் போராட்டங்கள் இந்திய அரசுக்கும் ஆளும் வர்க்கங்களுக்கும் எதிராக நடத்தப்பட வேண்டும் என்று ம.க.இ.க., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு., வி.வி.மு., பெ.வி.மு., ஆகிய அமைப்புகள் முன்வைத்தன. அந்த அடிப்படையில் அவ்வமைப்பினர், 2008 நவம்பரில் “ஈழத் தமிழர் படுகொலைக்குத் துணைநிற்கும் இந்திய அரசை முறியடிப்போம்”, “கொலைவெறி பிடித்த மன்மோகன் சிங்கே, உன் டாடாவும், அம்பானியும் கொள்ளையடிக்க எங்கள் ஈழத் தமிழர் சாக வேண்டுமா?” – என விண்ணதிரும் முழக்கங்களை எழுப்பி, சென்னை அண்ணா சாலையை மறித்து, நந்தனம் இராணுவ எஸ்டேட் அலுவலகத்தைத் திடீரென்று முற்றுகையிட்டுப் போராடினர். திருச்சி இராணுவ வளாகத்தை (கண்டோன்மெண்ட்) ம.க.இ.க., பு.மா.இ.மு. முதலான அமைப்புகள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தின.

“சென்னையில் மட்டுமின்றி, அதே முழக்கங்களை முன்வைத்து இந்தப் புரட்சிகர அமைப்புகள் திருச்சி பாலக்கரையிலும்; கோவை செஞ்சிலுவைச் சங்கம் முன்பாகவும்; தஞ்சை இரயிலடி எதிரிலும்; ஓசூர் ராம்நகர் அண்ணாசாலை அருகிலும்; தருமபுரி ராஜகோபால் பூங்கா முன்பாகவும்; கடலூரில் உழவர் சந்தை அருகிலும் திரளான மக்கள் பங்கேற்புடன் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தின.

பு.மா.இ.மு. முற்றுகை
ராஜபக்சே கும்பலுடன் கைகோர்த்துக் கொண்டு ஈழத்தமிழின அழிப்புப் போரை நடத்திவரும் இந்திய அரசை அம்பலப்படுத்தி, 12.02.2009 அன்று திருச்சியில் அனைத்துப் பள்ளி – கல்லூரி மாணவர்களை அணிதிரட்டி, மத்தியப் பேருந்து நிலையம் அருகே உள்ள 117-வது பிரதேச இராணுவப் படைத் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு பு.மா.இ.மு. நடத்திய ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்).

அந்த நாளில் போலீசின் அனுமதி மறுப்பு மற்றும் மழை காரணமாகத் தடைபட்ட பல பகுதிகளில் பேருந்து, ரயில் மற்றும் தெருமுனைப் பிரச்சாரங்களை முன்னெடுத்துச் சென்றன. இதன் தொடர்ச்சியாக கடந்த 17.10.08 அன்று துறையூர் பேருந்து நிலையம் எதிரிலும், கிருஷ்ணகிரி வட்டாட்சியர் அலுவலகம் எதிரிலும் கண்டன ஆர்ப்பாட்டத்தையும்; சென்னை குரோம்பேட்டை பேருந்து நிலையம் அருகில் தெருமுனைக் கூட்டத்தையும் நடத்தின. 19.10.08 அன்று கோத்தகிரியில், நீலமலை அனைத்துத் தொழிலாளர் சங்கத்தினர் எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். 20.10.08 அன்று திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் மாபெரும் பொதுக்கூட்டம், கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.”

“13.11.08 அன்று அதிராம்பட்டினத்தில், ஈழத் தமிழர் படுகொலைக்குத் துணை நிற்கும் இந்திய அரசுக்கெதிராக வி.வி.மு; பு.மா.இ.மு. ஆகிய அமைப்புகளின் சார்பில் செங்கொடி ஏந்தி விண்ணதிரும் முழக்கங்களுடன் ஆர்ப்பாட்டம் நடந்தது. 19.11.08 அன்று கிருஷ்ணகிரியில் பு.ஜ.தொ.மு; வி.வி.மு., ஆகிய அமைப்புகளின் சார்பில் பகுதிவாழ் மக்களின் ஊக்கமான பங்கேற்போடு பொதுக்கூட்டம் நடைபெற்றது. கடலூர் மாவட்டம் – நெல்லிக்குப்பத்தில், வி.வி.மு; பு.மா.இ.மு; பு.ஜ.தொ.மு; ஆகிய அமைப்புகள் இணைந்து ஈழத்தமிழர் படுகொலைக்குத் துணைபோகும் இந்திய அரசைச் சாடிப் பொதுக்கூட்டம் நடத்தின. புதுச்சேரி மற்றும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த இப்புரட்சிகர அமைப்புகள் இணைந்து 22.11.08 அன்று கோட்டக்குப்பத்தில் இதே முழக்கத்தின் கீழ் பொதுக்கூட்டத்தை நடத்தின. இப்பொதுக்கூட்டங்களும் ம.க.இ.க. மையக் கலைக்குழுவின் புரட்சிகர கலைநிகழ்ச்சியும் ஆயிரக்கணக்கான உழைக்கும் மக்களின் நெஞ்சில் ஈழ ஆதரவு அரசியலைப் பதியவைத்தன.”

“2008 – ஆம் ஆண்டு இறுதியில் ஈழத்தமிழர்கள் மீதான அழித்தொழிப்புப் போர் உச்சமடைந்து வந்த சூழலில் பாசிச சிங்கள பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிராகவும், இப்படுகொலைகளுக்குத் துணை நிற்கும் இந்திய அரசுக்கெதிராகவும், புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி தொடர் பிரச்சார இயக்கத்தை மேலும் உறுதியாக நடத்தியது.

“திருச்சியில், 08.12.08 அன்று மாலை பாலக்கரை பிரபாத் திரையரங்கம் எதிரில் அனைத்துக் கல்லூரி மாணவர்களை ஒருங்கிணைத்து பு.மா.இ.மு. தலைமையில் ஈழத்தமிழரின் சுயநிர்ணய உரிமைப் போரை ஆதரித்து எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி அரசு சட்டக் கல்லூரி, உருமு தனலெட்சுமி கல்லூரி, நேஷனல் கல்லூரி, பிஷப் ஹீபர் கல்லூரி, இன்ஃபன்ட் ஜீசஸ் பாலிடெக்னிக் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பெருந்திரளாகப் பங்கேற்றனர். ம.க.இ.க., பு.மா.இ.மு., தோழர்களோடு மாணவர் பிரதிநிதிகளும் எழுச்சியோடு உரையாற்றினர்” (ஆதாரம்: புதிய ஜனநாயகம், 2008).

தஞ்சை பேரணி
ம.க.இ.க. உள்ளிட்ட புரட்சிகர அமைப்புகள் இணைந்து, 2009-ம் ஆண்டு மே தினத்தன்று, “ஈழத்தின் மீதான இந்திய மேலாதிக்கப் போருக்குப் பதிலடி கொடுப்போம்!” என்ற அரசியல் முழக்கத்தை முன் வைத்து தஞ்சையில் நடத்திய ஆர்ப்பாட்டப் பேரணி. (கோப்புப் படம்)

2009 ஜனவரி-பிப்ரவரியில் இலங்கை இராணுவம் கிளிநொச்சியைக் கைப்பற்றி, வன்னியைத் திறந்தவெளி வதை முகாமாக சிங்கள இராணுவம் மாற்றிவிட்ட நிலையில், புலிகள் முல்லைத் தீவுக்கு தள்ளப்பட்ட நிலையில் “எப்படியாவது போரை நிறுத்துங்கள், இங்கே நாங்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்படுகிறோம்” என்று துயரக்குரல் எழுப்பினர், ஈழத் தமிழர். முத்துக்குமார் தீக்குளிப்பும், வழக்குரைஞர்கள் போராட்டங்களும் தமிழகத்தில் ஈழ ஆதரவு உணர்வலைகளை ஏற்படுத்தின. முத்துக்குமார் இறுதி ஊர்வலத்தையும் மாணவர்கள், வழக்குரைஞர்கள் போராட்டங்களையும் போர்க்குணமிக்கவையாக மாற்றியதில் பு.மா.இ.மு., ம.க.இ.க. தோழர்களின் பாத்திரம் முதன்மையானதாக இருந்தது.

பு.மா.இ.மு. தலைமையில் சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் நூற்றுக்கணக்கில் சாலை மறியலில் இறங்கி, போலீசு கைது முயற்சியை முறியடித்தனர். முத்துக்குமார் உடலடக்கத்தை அரசியலற்றதாக நடத்தும்படியான போலீசின் கோரிக்கையை தமிழினவாதக் குழுக்கள் ஏற்ற நிலையில், ம.க.இ.க. பு.மா.இ.மு., தோழர்கள் தலையிட்டு அதை அரசியல் ரீதியிலானதாக்கினர். பு.மா.இ.மு., தோழர்கள் சிங்கள இராணுவ வெறியின் கொடூரங்களை சித்தரிக்கும் காட்சிகளோடு முத்துக்குமார் இறுதி ஊர்வலம் அரசியல் எழுச்சியோடு நடந்தது.

அதன்பிறகும், ஒட்டுமொத்த ஈழத் தமிழினத்தையும் அழித்தொழிக்கும் பயங்கரவாதப் போரை சிங்கள இனவெறி அரசோடு கூட்டுச் சேர்ந்து நடத்திய இந்தியாவின் சதிச் செயலை எதிர்க்காமல், ஈழப் போரை நிறுத்தி, அமைதி வழியில் தீர்வு காணுமாறு இந்திய அரசிடமே கெஞ்சிக் கேட்கும் அடையாளப் போராட்டங்களை மட்டும் நடத்திவந்தன, தமிழினவாதக் குழுக்கள். ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு., முதலிய புரட்சிகர அமைப்புகள் மட்டுமே ஈழத் தமிழர் ஆதரவு போர் நிறுத்தக் கோரிக்கையோடு, இந்தியாவின் சதிச் செயலை எதிர்த்த தொடர் பிரச்சார இயக்கத்தைத் தமிழகமெங்கும் நடத்தி வந்தன. ஈழப் போர் நிறுத்தத்திற்காகப் பல பத்தாயிரம் துண்டறிக்கைகளையும் பிரசுரங்களையும் சுவரொட்டிகளையும் வெளியிட்டு, பிரச்சாரக் குழுக்களைக் கொண்டு ரயில்களிலும் பேருந்துகளிலும் பிரச்சார இயக்கங்களைத் தமிழகம் தழுவிய அளவில் தொடர்ந்து நடத்தின. ஆனால், தமிழினக் குழுக்களோ, 2009 நாடாளுமன்றத் தேர்தல்களில் “ஜெயா- பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் போர்நிறுத்தம் ஏற்படும், இலை மலர்ந்தால் ஈழம் மலரும்” என்ற மயக்கத்தில் மாணவர்களையும் மக்களையும் மூழ்கடித்தனர்.

2009 தமிழினப் படுகொலைக்குப் பின் அடுத்த நான்காண்டுகளில் தமிழக மாணவர்களிடையேயும் பொது மக்களிடையேயும் பெரிய அளவு எழுச்சி எதுவும் ஏற்பட்டுவிடவில்லை. பெரும்பாலும் ஈழ ஆதரவு இயக்கங்களைச் சேர்ந்த மாணவர்கள் மட்டும் பங்கேற்ற போராட்டங்கள் மட்டுமே நடந்தன. இதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று முள்ளிவாய்க்கால் போரில் பிரபாகரனோடு விடுதலைப் புலிகள் கூண்டோடு அழிக்கப்பட்டது கண்டு பிரமை தட்டிப் போயிருந்த தமிழினக் குழுக்கள், “பிரபாகரன் கொல்லப் படவில்லை; பிரபாகரனோடு விடுதலைப் புலிகள் மீண்டும் வருவார்கள்; சிங்கள வெறியர்களைப் பழி தீர்ப்பார்கள்” என்று புளுகி வந்தார்கள்.

ம.க.இ.க., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு., வி.வி.மு., பெ.வி.மு., ஆகிய அமைப்புகள் மட்டுமே ஈழப் போரின் இறுதி நாட்களின் உண்மைகளைச் சொன்னதோடு, போர்க் குற்றவாளி ராஜபக்சேவைத் தண்டிப்பது, ஈழ விடுதலைப் போராட்டம் தொடருவது ஆகியவற்றுக்காக மக்கள் இயக்கத்தைக் கட்டியெழுப்பும் தீர்வை முன்வைத்து செயல்படுகின்றன.

உண்மை இவ்வாறு இருக்கையில், முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலைகள் நடந்து கிட்டத்தட்ட நான்காண்டுகளுக்குப் பிறகு வந்த “மாணவர் போராட்ட நிர்ப்பந்தம் காரணமாகத்தான் ஈழப்போராட்டத்துக்கு ஆதரவு என்று வேறு வழியில்லாமல் காட்டிக்கொள்கிறீர்கள். அல்லது ஆதாயம் அடைவதற்காக இப்படி நடிக்கிறீர்கள்” என நம்மைப் பார்த்துக் கூறுவது பச்சைப் பொய் தவிர வேறென்ன? முள்ளிவாய்க்கால் முடிவுகளுக்கு பிரபாகரன், புலிகள் மட்டுமல்ல; தமக்குரிய பங்கை மூடி மறைப்பதற்காகவும், அதைச் சொல்லும் நமது வாயை மூடுவதற்காகவும் தமிழினவாதக் குழுக்கள் இவ்வாறு அவதூறு செய்கின்றன. ஆனால், அவர்கள் கனவு பலிக்காது.

மேலும், “ஈழ ஆதரவு மாணவர் போராட்டம்” என்பது எமது பு.மா.இ.மு. தலைமையிலான “ஈழத் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி”யையும் உள்ளடக்கியதுதான். விமான நிலைய முற்றுகை, ரயில்வே தலைமை அலுவலக முற்றுகை உட்பட சென்னை, கோவை, திருச்சி எனத் தமிழகமெங்கும் அவ்வமைப்பு நடத்திய போராட்டங்கள் எல்லாம் ஈழப்போராட்டத்துக்கு ஆதரவு என்று வேறு வழியில்லாமல் காட்டிக் கொள்ளும் அல்லது ஆதாயம் அடைவதற்காக இப்படி நடிப்பு என்று சொல்வதன் மூலம் அவற்றில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான மாணவர்களைத்தான் அவர்கள் அவமானப்படுத்துகிறார்கள்.

– ஆசிரியர் குழு.
________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – ஜூன் 2013
________________________________________________________________________________