பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு, பிரதமரின் பொருளாதார ஆலோசகர் ரங்கராஜன் குழு முன் வைத்த கொள்ளைச் சூத்திரத்தையும், முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் நிறுவனத்தின் மலைமுழுங்கிக் கோரிக்கையையும் ஏற்றுக் கொண்டு இயற்கை எரிவாயு விலையை இரட்டிப்பாக்குவதற்கு ஒப்புதல் அளித்திருக்கிறது.

ரங்கராஜன் குழு, இறக்குமதி ஒப்பந்தங்களில் குறிப்பிடப்பட்டுள்ள திரவ இயற்கை வாயுவின் நீண்டகால விலையையும், பன்னாட்டு வர்த்தக குறியீட்டு எண்களையும் அடிப்படையாக கொண்டு இந்தியாவில் எடுக்கப்படும் இயற்கை எரிவாயுவின் விலையை நிர்ணயிப்பதற்கான ஒரு சிக்கலான முதலாளிகளுக்கு ஆதரவான சூத்திரத்தை முன் வைத்திருந்தது. விலையை மாதா மாதம் மறுஆய்வு என்று ரங்கராஜன் கமிட்டி சொல்லியிருந்தாலும் அமைச்சரவை குழு, 3 மாதங்களுக்கு ஒருமுறைதான் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து அந்த ஒரு விஷயத்திலாவது தனது ‘சுதந்திரத்தை’ நிலைநாட்டியிருக்கிறது.
அரசின் எந்தப் பிரிவு ரிலையன்சுக்கு மிக விசுவாசமான அடிமை என்ற போட்டியில் வீரப்ப மொய்லியின் பெட்ரோலிய அமைச்சகம் ஒரு அலகுக்கு $6.775 விலையை பரிந்துரைத்திருந்தது. ப சிதம்பரத்தின் நிதி அமைச்சகமும், மான்டேக் சிங் அலுவாலியாவின் திட்டக் கமிஷனும் இரண்டு மடங்கு விலை ஏற்றத்தை கோரியிருந்தனர். அமைச்சரவை குழு அதிகபட்ச விலை உயர்வை ஏற்றுக் கொண்டது.
தற்போது ஒரு யூனிட்டுக்கு $4.2 (ரூ 250) ஆக இருக்கும் விலை ஏப்ரல் 1, 2014 முதல் யூனிட்டுக்கு $8.4 (ரூ 500) ஆக உயர்த்தப்படும். இந்த புதிய விலை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மறுஆய்வு செய்யப்படும். அதன்படி எரிவாயு விலை அதற்கு அடுத்த ஆண்டு $10-ஐ எட்டி விடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஆதாயம் அடையப் போவது யார், யார்?
பொதுத் துறை நிறுவனங்களான ஆயில் இந்தியா, இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன், மற்றும் தனியார் நிறுவனமான ரிலையன்ஸ் ஆகியவை இந்த விலை உயர்வின் மூலம் ஆதாயம் ஈட்ட உள்ளன. அம்பானி மட்டுமல்ல, பொதுத்துறை நிறுவனங்களும் சேர்ந்துதானே ஆதாயம் அடைகின்றன என்று நீங்கள் கேட்கலாம். பொதுத்துறை தனியார் மயமாகும் காலத்திலும், பொதுத்துறையின் பணம் மறைமுகமாக பன்னாட்டு நிறுவனங்களுக்கும் போய்ச் சேருவதையும் பார்க்க வேண்டும். அதன்படி இனி இந்த விலை உயர்வு மக்களிடம் பிடுங்கப்பட்டு அம்பானிக்கு நேரடியாகவும் ஏனைய முதலாளிளுக்கு பொதுத்துறை வழியாக மறைமுகமாகவும் போய்ச் சேரும்.
தற்போது பங்குச் சந்தையில் இந்த நிறுவனங்களின் பங்குகளின் விலை ஏற்றமடைந்திருக்கின்றன. கடந்த சில நாட்களாக பின்னடைவுகளை சந்தித்திருக்கும் பங்குச் சந்தைக்கு இந்த முடிவு ஒரு புதிய ஊக்கத்தை கொடுத்திருக்கிறது. இப்படி அன்னிய நிதி நிறுவனங்கள் சூதாடுவதற்குரிய பணத்தையும் இந்த விலை உயர்வு மூலம் இந்திய மக்கள் கொடுக்க வேண்டும்.
அதனால் மார்கன் ஸ்டேன்லி போன்ற பன்னாட்டு நிதி நிறுவனங்கள் மகிழ்ச்சியடைந்திருக்கின்றன. டீசல் விலையை கட்டுப்படுத்துவதை பகுதியளவு கை விட்ட இந்திய அரசு இயற்கை எரிவாயு விலையை இரு மடங்காக்கி இருப்பது ஒரு மகத்தான சீர்திருத்தம் என்று மார்கன் ஸ்டேன்லி தனது அறிக்கையில் கூறியுள்ளது.

ஏற்கனவே இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் விலை உயர்வை தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் மின் கட்டண உயர்வாக மக்கள் தலையில் சுமத்துவதை மத்திய அரசு அனுமதித்திருக்கிறது.
இப்படி விலைகளை ஏற்றினால்தான் எரிசக்தி துறையில் புதிய முதலீடுகளை ஈர்க்க முடியும் என்றும் இதன் மூலம் அரசுக்கு ரூ 707 கோடி அதிக வருமானம் கிடைக்கும் என்றும் மத்திய அரசு கூறுகிறது.
இயற்கை எரிவாயு விலை உயர்வின் சுமையை யார் தாங்கப் போகிறார்கள்?
விலை உயர்வின் விளைவாக எரிவாயுவை பயன்படுத்தும் மின்நிலையங்களில் ஒரு யூனிட் மின்சாரத்துக்கான கட்டணம் ரூ 4.70 அதிகரித்து ரூ 6.40-ஐ எட்டும். மற்ற மின் நிலையங்களில் ஒரு யூனிட்டுக்கு 16 முதல் 20 பைசா வரை கட்டணம் அதிகரிக்கும்.
இயற்கை எரிவாயுவின் விலை $1 உயர்ந்தால் மின் கட்டண சுமை ரூ 6,260 கோடி அதிகரிக்கும் (வரப் போகும் $4 உயர்வின் காரணமாக ரூ 25,000 கோடி கூடுதல் சுமை ஏற்படும்). உரத் துறையில் $1 எரிவாயு விலை உயர்வால் ஏற்படப் போகும் அதிக செலவு ரூ 2,233 கோடி (இப்போது அனுமதிக்கப்பட்டுள்ள $4 உயர்வினால் ஏற்படப்போகும் அதிக சுமை ரூ 9,000 கோடி).
கார்ப்பரேட் தரகர்களால் கார்ப்பரேட் நலன்களுக்காக செயல்படும் மத்திய அமைச்சரவையின் விருப்பப்படி, பங்குச் சந்தையில் விலைகள் ஏற ஆரம்பித்திருக்கின்றன. பன்னாட்டு நிதி நிறுவனங்களும், தர நிர்ணய நிறுவனங்களும் கைத்தட்டி பாராட்டியிருக்கின்றன. ரிலையன்ஸ் அம்பானி மகிழ்ச்சியூட்டப்பட்டுள்ளார்.
ஏற்கனவே நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், இதன் மூலம் கட்டணங்களை இன்னும் உயர்த்துவதற்கான தயாரிப்புகளை மத்திய அரசு செய்து முடித்திருக்கிறது.
உழைக்கும் மக்களிடமிருந்தும், நடுத்தர வர்க்கத்திடமிருந்தும் அதிகரிக்கப்பட்ட மின்கட்டணமாக பிடுங்கப்படும் பணம் லாபமாக அம்பானிக்கும் மார்கன் ஸ்டேன்லிக்கும் போய் கொட்டப் போகிறது.
மேலும் படிக்க