privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைகதைசத்யசாய் அபார்ட்மென்ட்ஸ் !

சத்யசாய் அபார்ட்மென்ட்ஸ் !

-

“என்ன சித்ரா? பக்கத்து போர்சன்ல புதுசா குடித்தனம் வந்தவாகிட்ட ரொம்ப நேரம் பேசிண்டிருந்தே! ஏதாச்சும் பிராப்ளமா?”

“இல்ல, இல்ல, தண்ணி இல்லையாம், மோட்டரு போடச் சொன்னாங்க, மெயின்ட்டனன்ஸ் எல்லாம் எவ்வளவு என்னான்னு விசாரிச்சாங்க, நானும் அவங்கள விசாரிச்சுட்டிருந்தேன்.”

“பசங்கள ஸ்கூலுக்கு அனுப்சாச்சு, போரடிக்குதா?” கேட்டுக்கொண்டே மாலதி வீட்டுக்குள் செட்டியார் வீட்டம்மா நுழைந்தார்.

“காத்தால வேலல்லாம் முடிஞ்சிருத்தா, நீங்க மத்யானம் சமையலுக்கே போயிருப்பேள், நான்தான் தேமேன்னு கதபேசிண்டிருக்கேன்” என்று செட்டியார் வீட்டம்மாவை ஒரு சிரிப்போடு உள்ளே இழுத்துக்கொண்டு… மாலதி திரும்பவும் விசயத்துக்கு வந்தாள்.

“சித்ரா! முன்னாடி எங்க குடி இருந்தாளாம்?”

“வியாசர்பாடியாம்!”

“என்னடி இது விவகாரமான ஏரியாவா இருக்கு!” கேட்ட மாத்திரத்தில் மாலதி கேலியாகவும், எச்சரிக்கையாகவும் முகக்குறிப்புக் காட்டினாள். வயசு அம்பத்தி நாலு ஆனாலும் செட்டியார் வீட்டம்மாவுக்கு காது கணீரென்று ஒலித்தது போல பாய்ந்து கொண்டு பேசினார், “எங்க வீட்ல சொல்வாரு, அந்தப் பக்கமெல்லாம் அடிதடி, வெட்டுக்குத்துன்னு ஏரியாவே கல்ச்சர் ஒரு மாதிரின்னு,” என்று பேசிக்கொண்டே வந்தவர், சற்று குரலைத் தாழ்த்தி வியாசர்பாடின்னா பெரும்பாலும் ‘அவங்காளா கூட இருக்கலாம்’!

“என்ன ‘இங்கு’ வக்கீறீங்க, தெளிவாகத்தான் சொல்லுங்களேன். இங்க யாரு இருக்கா?” சித்ரா வற்பறுத்த, “இவ ஒருத்தி, எல்லாத்தையும் புளி போட்டு விளக்கணும், பெரும்பாலும் அங்கெல்லாம் எஸ்.சி. தான் இருப்பாங்க,” இன்னுங்கூட சித்ரா முழு மனதாக நிறைவு காட்டாதவள் போல பார்க்க, கிசுகிசுத்தவாறு “அதான்! போதுமா?!”

“ஓ! புரியுது, புரியுது, இந்த காலத்துல பாலாஜி அம்மா, யார்? என்னன்னு? கேக்க முடியாது, அபார்ட்மெண்டல ஹவுஸ் ஓனர் விருப்பம், அவங்க அவங்க வாடகை பாத்து விடுறாங்க, பாரத விலாஸ் மாதிரி அபார்ட்மென்ட் ஆகிடுச்சி.”

“ஏய், பாரதவிலாஸ்ல மல்டி ஸ்டேட் தாண்டி, மல்ட்டி கேஸ்ட் இல்ல; நமகென்ன, நாம பாத்து நடந்துண்டா, நரகத்துலயும் பொழைக்கலாம்பா, அதுபோல கரெக்ட்டா வச்சுண்டா, பிரச்சனை இல்ல! ‘பாக்கலாம், உடனே தெரியாது இல்லைய, போகப் போக யார்னு தெரிஞ்சிடப்போவுது!”

“ஆமாம், சித்ரா, நீதான் பக்கத்து வீடு. பழக்க வழக்கத்த பாத்தா தெரிஞ்சுடப்போவுது, நான் மேல இருக்கறதால சரியா பாக்க முடியல, ரெண்டு புள்ள போல இருக்கு, கருப்பாதான் தெரியுதுங்க!” செட்டியார் வீட்டம்மா குத்து மதிப்பாய் பேச மாலதி வெடுக்கென சிரித்துவிட்டாள்.

“ஏண்டி! என்னப் பாத்து சிரிக்கிறே. நானும் கருப்பா இருக்கேன்னா! இது வேற கருப்புடி, அவுங்க கருப்பே தனி!”

ஆமாம் என்பதுபோல சித்ராவும் தலையாட்டிக் கொண்டே, “விடுங்க எல்லாருமே கருப்பாத்தான் இருக்காங்க, அத வச்சி சொல்லிட முடியாது, பிராமின்லயே பிளாக்கும் உண்டு, கூட்டுறவர்கள்ல ஒயிட்டும் உண்டு, பேச்ச பாத்தா டவுட்டாதான் இருக்கு!”

“சித்ராவுக்கு சொல்ல வேண்டியதில்ல, இன்னும் ஒரு வாரத்துல குலம், கோத்திரம், ஜாதகத்தையே புட்டு வச்சிடுவா. பாவம்! மனுஷாள வெறுக்கக் கூடாது, இருந்தாலும் அவா பழக்க வழக்கம் நமக்கு ஒத்துவர்றதுல்ல, இப்ப நாங்க கூடத்தான் நான் பிராமின், இருந்தாலும் நம்ப அபார்ட்மெண்ட்ல யாரும் பேதம் பாக்கல வித்தியாசம் இல்லாம பழகிக்கிறோம், அவங்களும் எடத்துக்கு ஏத்த மாதிரி இருந்தா பரவாயில்ல.”

“ஏன் நாம கெடந்து மண்டைய பிச்சிகிட்டு, சித்ரா விடாம பேச்சுக்கொடு, பேசவுட்டாத்தான் விசயம் வெளியே வரும், நீ பேசி பாரு!” செட்டியார் வீட்டம்மா முகத்தை சீரியசாக வைத்துக்கொண்டு கீதோபதேசம் செய்தார்.

“அய்யோ, மணி பதினொண்னு ஆகப் போறது, குளிச்சிட்டு வேலையப் பாக்கனணும், வீட்ல ‘டான்னு’ கிளம்பிடுவார்!” மாலதி குறிப்பு காட்ட கலைந்தனர்.

திப்பிலி ரசத்தை உறிஞ்சி ஒரு கனை கனைத்தபடி தெம்புவந்தவன் போல சாய்ராம் மெல்ல மாலதியை விசாரிக்க ஆரம்பித்தான், “என்ன? புதுசா வந்தவாள பத்தி மேட்டர் ஓடுது போல இருக்கு”!

“ஆமாம்! இதுக்கு முன்னாடி வியாசர்பாடில இருந்தாளாம், சித்ரா சொல்லிண்டிருந்தா”

“சரி, என்ன பொருள்லாம் வந்துச்சு, பாத்தியா?”

“கட்டில், பீரோ… எல்லாம் வந்துச்சு!”

“கட்டில், பீரோ, கல்யாணம் ஆனா எல்லாந்தான் வச்சிருப்பா, இது ஒரு பாய்ண்ட்டா? காஸ்ட்லியா வேற என்ன வந்துச்சுன்னா, அதுக்கு பதிலக் காணோம்!

“நைட்ல வந்ததால, சரியா கவனிக்கல, ஆளுங்கள பாத்தா ‘அவாள்தான்னு’ தெரியறது!”

“ஏய்! எவாளாவோ இருக்கட்டும் ஒரு வாஷிங்மெசின், பிரிட்ஜ், எல்.சி.டி. மாதிரி காஸ்ட்லி பொருளா இருந்தா, ஆளு என்ன பேக்ரவுண்டு, ஸ்டேட்டஸ் என்னன்னு தெரியும். மாசம் ஏழாயிரம் வாடகை தர ரெடியா வர்றான்னா ஒண்ணும் ஏப்ப சாப்பையா இருக்க மாட்டா! நீ முந்திண்டு வாய வுட்டு, மொக பொல்லாப்பு பண்ணின்டுறாதே! இப்பல்லாம் எல்லார் தயவும் தேவப்படறது, செட்டியார் வீட்லயும் பக்கத்துல பிள்ள விட்லேயும் சூத்ராளே நம்மகிட்ட விழுந்து விழுந்து தானா வந்து ஹெல்ப் பண்றாள்னா அவா லெவல் அவாளுக்கே தெரியும்! அது போலத்தான் வந்தவாளும், பக்கத்துல அவா வேற மாதிரி பேசினாலும், நீ பேச்சுல எரிச்சல காட்டிடாதே, ஆமாம்”

“தெரியும், தெரியும், பக்கத்துல இவா மட்டும் என்ன? நமக்கு எல்லாம் ஒண்ணுதான். டீட்டெய்லுக்காக விலாவாவாரியா பேசிண்டிருந்தேன், யார் யார் கிட்ட எவ்ளோ வச்சுக்கணுமோ அவ்ளோதான் வச்சுக்கணும்னு தெரியாதா? நீங்க பசங்கள மட்டும் கொஞ்சம் ஓவரா பழகிடாம இருக்க சொல்லி வையுங்கோ! என்ன?”

தலையாட்டிக் கொண்டே சாய்ராம் பைக்கை ஸ்டார்ட் செய்ய அது புகையை கக்கியது.

“ராகுலம்மா கொஞ்சம் வாங்களேன்!” சித்ரா கூப்பிட மாலதி சித்ரா வீட்டுக்குள் விரைந்தாள்.

பிராமணாள் காபி பார் - பெங்களூருவில் !
பிராமணாள் காபி பார் – பெங்களூருவில் !

மெதுவான குரலில் ஆரம்பித்தாள் சித்ரா, “பக்கத்தில, ஐ.சி.எப்.ல வேல செய்யிறாராம். அதான் பக்கமா இருக்குன்னு இங்க குடி வந்திருக்காங்க. சொந்த ஊர் செய்யாறாம். ரெண்டும் பசங்க, ஒருத்தன் செவன்த், ஒருத்தன் சிக்ஸ்த் எஸ்.பி. ஓ.ஏ வாம்! சி.பி. எஸ்.சி. சிலபஸ்லதான் படிக்கிறாங்க… அவங்களும் டிகிரியாம், ஹஸ்பெண்ட் சென்ட்ரல் கவர்மெண்ட்னால, பசங்கள பாத்துக்க வேலைக்கு போகலயாம்.” ஒப்பித்தாள்.

“இந்த காலத்துல டிகிரின்னா சர்ட்டிபிகேட்டயா வாங்கியா பாக்கப் போறோம்! சொல்றத கேட்டுக்க வேண்டியதுதான், எல்லாம் சரி, என்ன ஆளுங்கண்ணு தெரிஞ்சிச்சா! அத வுட்டுட்டியே!”

“அதுதான் புரிய மாட்டேங்குது! நான் வெஜ்தான்னு தெரியுறது, அவரப்பாத்தா செம கருப்பு, அவளும் மாநிறம்தான். நீங்க வெளில வர்றப்ப, துணி காயப்போடுற மாதிரி பாருங்களேன், பேச்செல்லாம் ‘அந்த’ மாதிரி தான் இருக்கு, ஒரு வேள ரொம்பநாளா மெட்ராஸ்ல இருக்கிறதால சிலபேர் அப்பிடி பேசலாம், யாரு கண்டா? எப்படியும் தெரியத்தான் போவுது!”

“ஏய்! பசங்க உசாரு! நேத்திக்கே அந்த சின்ன பையன்கிட்ட என்னடா சாப்பிட்டேன்னேன்! வாயத் திறக்கணுமே! பதிலே சொல்லாம ஓடிட்டான்!”

“பாவம்! பழக்கம் இல்லேல்ல, புதுசு. அதான் பேச மாட்டேங்கிறான் போல. ஆனா நேரத்துக்கு குக்கர் சத்தம் கேக்குது, பருப்பு வாசன வருது, இது வரைக்கும் நான் வெஜ் வாசன வரல, இனிமே தான் தெரியும், இப்பதான் வந்துருக்காங்க!”

“ஏன்? நான் பிராமின் எல்லாருந்தான் சாப்பிடறேள், அவா வீடு, அவா பாடு! நாம கேக்க முடியாது! எங்க ராகுலுக்கே அத்லட்டிக் பிராக்டிஸ் பண்ணனும்னா முட்டை சாப்பிடனும்னு டாக்டர் சொல்லிட்டா, அவா அப்பா பாயில் பண்ணி தர்றார். உனக்குதான் தெரியுமே, சாப்பிடறத பத்தி இல்ல, இருந்தாலும் ரொம்பவும் அதர் கேஸ்ட்டுன்னா ஆச்சாரமா இருந்துட்டதால ஒத்துக்க மாட்டேங்கறது ‘அவா’ பழக்க வழக்கம் நமக்கு ஒத்து வராது!”

“நானே, என் பையன ரொம்ப வச்சுக்காதன்னு சொல்லி வச்சிருக்கேன், ஏன்னா புள்ளங்க எதார்த்தமா பழகிட்டா, அப்புறம் வேணாம்னா கேக்காதுங்க, எங்க வீட்ல கூட நீயா போயி பேசாத, தானா கேட்டா பதில் சொல்றதோட வச்சுக்க, அந்தாள பாத்த மொகமே சரியில்லேன்னு சொன்னாரு!”

“ஏய் நாம பாட்டும் பேசிண்டிருக்கோம், பக்கத்துல காதுல விழாதே! அது வேற!” மாலதி திடீரென சுதாரிக்க “பக்கத்துல படிக்கட்டு தாண்டிதான சுவரு! கேக்காது, மேலும், புதுசா இருக்கறதால அவுங்க வெளியிலயே வர்றதில்ல, சரி, ரேசன் போனா சொல்லுங்க, நானும் வாரேன்!”

“ரேசன்னோன்னேதான் ஞாபகம் வருது, உனக்குதான் பழக்கம் இருக்கில்ல, புதுசா வந்தவங்களுக்கு அரிசி வேணாம்னா கேளு! நாம வாங்கிக்கலாம், இட்லிக்கு ஆகும்!”

“நீங்க வேற! அவங்க வெள்ள கார்டாம், கேட்டுப் பாத்துட்டேன்…”

“அட! வெள்ள கார்டா, அப்ப பெரிய இடந்தான். ஹ.. ஹிம்” என்று முனுகியவள் திடீரென ஞாபகம் வந்தவள் போல “அந்த லேடி பேரு என்ன?

“அபிராமி” சடாரென சித்ரா பதில் சொல்ல, “பேர வச்சி ஒண்னும் யோசிக்க முடியலயே! ஊம்…” மாலதி குழப்பத்தோடு நகர, கருப்பும், வெள்ளையுமாக பூனை கட்டை சுவரில் நடந்து வந்தது, அச்சத்தோடு மாலதியை பார்த்து முறைக்க, “தே… ச்சூ.. இது வேற கெடந்து குறுக்கும் நெருக்கும் அலையறது” என்று விரட்டிக் கொண்டே போனாள்.

பிராமி கதவைப் பூட்டி விட்டு வெளிக்கிளம்பவும், மாலதி வாசலில் நிற்கவும் எதேச்சையாய் அமைந்தது. மாலதியைப் பார்த்ததும் அபிராமி விருப்பத்துடன் புன்னைகைத்தாள். பதிலுக்கு, “என்ன வீடு செட்டில் ஆயிடுத்தா?” என்று மாலதி கேட்க, மேலிருந்து செட்டியார் வீட்டம்மாவும் இறங்கி வந்து சேர்ந்து கொண்டார்.

“ஊம்… எல்லாம் முடிஞ்சிடுச்சு!” என்று முகம் பார்த்து பதில் சொன்ன அபிராமியின் கழுத்தையே கவனித்த மாலதி “செயின் புது டிசைனா இருக்கு, நியு கலெக்சனா? “என்று விசாரிக்க “தாலி செயின்” என்று அபிராமி பிடித்து தெரியும்படி தூக்கிக் காட்டினாள்.

“இதென்ன புலிப்பல்லா, புள்ளையார் தாலியா?”

“எங்க வீட்டு தெய்வம் டிசைனு!”

அதற்கு மேல் கேட்கத் தயங்கினாள் மாலதி. “நேற்று பெருமாள் கோயில் வாசல்ல பாத்தேன், பெருமாள்தான் கும்பிடுவியா?” செட்டியார் வீட்டம்மா கொக்கி போட்டார்.

“இல்லைங்க, வேம்புலி அம்மன் கோயிலுக்கு போயிட்டு அப்புடியே வர்ற வழியில பெருமாள் கோயிலுக்கும் போயிட்டு வந்தேன்!”

செட்டியார் வூட்டம்மா விடுவதாயில்லை, “எங்க பால் காய்ச்சிரப்ப கூட அம்மா, அப்பாவ காணோம்!”

“அவங்களால ஊர்லேர்ந்து தனியா வர முடியாது! பிறகு பசங்க லீவுக்கு வருவாங்க!”

“வரட்டுங்களா? வீட்ல இன்னைக்கு நைட் சிப்டு, நான் பசங்களோட ரயில்வே குவார்ட்டர்ஸ்ல இருக்குற தெரிஞ்சவங்க வீட்டுக்கு ஒரு வேலையா போறேன்… நைட்டு வந்துருவேன்… வாரேங்க…” அபிராமி பொறுப்போடு பேசி விட்டு நகர்ந்தாள்.

வாசல் கேட்டை தாண்டிவிட்டாளா, என உறுதிபடுத்திக் கொண்ட செட்டியார் வீட்டம்மா, “கேட்டியே, ஒழுங்கா கேட்டியா? எங்க வீட்டு தெய்வம் தாலின்னு சொன்னப்ப என்னா சாமின்னு கேட்டிருந்தா என்ன வகையறான்னு புரிஞ்சிருக்கும்! கேக்காம விட்டுட்டியே!”

“அதையே சுத்தி சுத்தி கேட்டா தப்பா எடுத்துகிட்டா? அதான் நினப்பு வந்தும் வேண்டான்னு விட்டுட்டேன்…” இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போதே, புதிதாக குடித்தனம் வந்தவர்கள் போர்சனுக்கு எதிரே உள்ள காம்பவுண்டு சுவரை ஒட்டி ஆராய்ச்சி செய்தபடி நின்றிருந்த சித்ரா, மாலதியை ஜாடை காட்டி அழைக்க இருவரும் ஆர்வத்துடன் நெருங்கினார்கள். “வாங்க, தோ! பாருங்க புதுசு, புதுசா அபார்ட்மென்ட்ல என்னென்னவோ நடக்குது, பாருங்க புதையல!” சித்ரா கேலியாக இடத்தைக் காட்ட, மாலதிக்கு விழி அகன்றது.

“அய்யய்யோ! என்னடி இது, பாட்டில், பாட்டிலா கிடக்குது, லேபிள் மினு மினுக்க என்ன தைரியமா போட்ருக்கா! யாரா இருக்கும்?”

“கேள்வி கேக்குறபாரு! இந்த வீட்டுக்கு நேரா கெடக்கு யாரா இருக்கும்னு கேக்குற! குடிக்கிறவங்களுக்கு என்ன பயம் வேண்டி கெடக்கு! போனாளே! அவ வீட்டுக்காரராகத்தான் இருக்கும், புதுசா குடிவந்தா பழக்கத்த விட முடியுமா? இஷ்டத்துக்கு குடிச்சிட்டு இஷ்டத்துக்கு போட்டிருக்காங்க… “செட்டியார் வீட்டம்மா ஆதாரங்களை அடுக்க ஆரம்பித்தார்.

“வேற யாராவது போட்டிருப்பாங்களா! இங்க உள்ளவரே இப்படி போடுவாரா என்ன? அசிங்கம்னு நெனக்க மாட்டாரா?” சித்ரா சந்தேகப்பட, மாலதி ஆரம்பித்தாள்,

“அந்தாள கண்ணப் பாத்தாலே தெரியுது, செவ செவன்னு செவந்து கிடக்கறது, கண்ணு, மூஞ்செல்லாம் வீங்கி வடியறது, தெனம் குடி இருக்கும் போல இருக்கு! சந்தேகம் என்னடி! அந்தாளு மூஞ்சியும் கருகருனு மொகமும், முழிக்கறத பாத்தாலே தெரியலையா, மொடா குடிகாரன்னு, ரயில்வே வேற! வண்டி பிராட்கேஜ்ல ஓடுது! நேரம், காலம் கெடையாது, தினம்தான் ராத்திரி கேட்டு திறக்குற சத்தம் கேக்குதே! பாத்துகிட்டுதான இருக்கேன்! ராத்திரி குடிச்சிட்டு சத்தம் போடாம போட்டுடுவார் போல…” செட்டியார் வீட்டம்மா விவர மழை பொழிந்தார்.

“சைலண்ட்டா அவுரு போறது வர்றதப் பாத்தா சொல்லவும் முடியல, நம்பாம இருக்கவும் முடியல, அவங்க அவங்க விருப்பம், டஸ்ட் பின்ல போட்டா தெரியப் போறதில்ல, பசங்க இருக்குற இடம், யாரு சொல்றது? ஒரு நாள் கவனிச்சிட்டு சொல்லிட வேண்டியது தான்!” சித்ரா புலம்பிக்கொண்டாள்

“கலகலன்னு பேசிடறவாள நம்பிடலாம், சைலண்ட்தான் டேஞ்சரே! அவா கல்ச்சர மாத்த முடியாது! கைல காசும் வந்துடுச்சு! அவா இஷ்டத்தக்கு எல்லாம் செய்வா! யாரு கேக்கறது? சொன்னா நமக்கு பொல்லாப்பு”

“அதுக்காக அபார்மென்ட்ல படிக்குற பசங்கல பாத்து கெடட்டுங்கிறியா? அவங்களுக்கு நாகரிகம் கெடையாது. நாம பொது இடத்துல எப்படி இருக்கனும்னு சொல்லித்தான் ஆகணும், இன்னொரு முறை பாத்தா நானே அந்த பொண்ணுக்கிட்ட சொல்றேன். நாம ஏன் பயப்படனும், இத இப்படியே விட்டா, நாளைக்கு வேற விசயத்துக்கு துணிச்சல் குடுத்துடும்” – செட்டியார் வீட்டம்மா இருவருக்கும் தெம்பு கொடுத்தார். வாடகை வருதுன்னு கண்டதுங்களையும் வுட்டா இப்படித்தான்… மூவரும் முனகிக் கொண்டே நகர்ந்தனர்.

பேசிவிட்டு பெண்கள் வீட்டுற்குள் நுழைந்தவுடன், மெல்ல வெளியே வந்த சித்ராவின் கணவன் ஒரு நேரம் பார்த்து தலையைக் காட்டிய சாய்ராமை கண்ணால் குறிப்பு காட்டி அழைக்க, “அப்புறம் ரகு அந்த பிளம்பர வரச்சொன்னியே என்னாச்சு?” என்று பேசிக் கொண்டே முதுகில் நெளிந்த பூனூலை மேலும், கீழும் ஆட்டியபடி அபார்ட்மெண்ட்டின் பின் பக்கம் நகர்ந்தான்.

“சாயி, நல்ல வேல பண்ண நீ! பாட்டில இங்கயா போடுவ, மாடிலேந்து விட்டெறிந்தா கூட உடைஞ்சிருக்கும், முழு பாட்டிலையும் எல்லோரும் பாக்குற மாதிரி ஏன் இங்க போட்ட?..”

“அட! நான் மேலேந்துதான் போட்டேன், செத்தை கிடந்ததால உடையாம மாட்டிக்கிச்சு… நல்ல நேரம் புதுசா குடிவந்தவன் வேற ஆளா போனதால, அவன் தலயில விடிஞ்சிருச்சு, இல்ல நம்ம மேல சந்தேகம் வந்திருக்கும்! தப்பிச்சோம் போ! வீட்ல பேசினாலும்… அவங்க பாணியிலயே போ… அது சரி! போட்டது தான் போட்ட, எதுக்கு புதுசா குடிவந்தவன் வாசல்ல போட்ட?” ரகு வியப்பாய் கேட்க,

“பின்ன, நம்ப வீட்டுக்கு நேரா போடச் சொல்றியா! ஃபுல் அடிச்சும் நம்ப புத்தி மாறல பாத்தியா! அதான் விவரம்ங்கறது”

“சரி, சரி இதையே பேசாதே. வேற ஏதாவது பேசு…. “குரலை தாழ்த்தி சாய்ராம் வழிகாட்டினான்.

“பெரிய ஆளுப்பா, நீ!..”.

ரகுவும், சாய்ராமும் வெடித்துச் சிரிக்க நாக்கை நீட்டிக் கொண்டு காம்பவுன்ட் சுவரில் ஏறிய அரணை, பேச்சையும், சிரிப்பையும் பார்த்து பயந்து நடுங்கியது போல வெடுக்கென ஓடியது.

– துரை சண்முகம்
________________________________________________________________________________
புதிய கலாச்சாரம் – மே 2013
________________________________________________________________________________