privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஐரோப்பாஇங்கிலாந்து : உளவுத்துறைக்கு ஒதுக்கீடு ! மக்களுக்கு வெட்டு !!

இங்கிலாந்து : உளவுத்துறைக்கு ஒதுக்கீடு ! மக்களுக்கு வெட்டு !!

-

ரும் 2014-15-ம் ஆண்டில் பொதுத்துறை சேவைகளுக்கான செலவுகளை மறு ஆய்வு செய்த இங்கிலாந்து அரசு, பெரும்பான்மையான பொதுத்துறை சார்ந்த செலவுகளுக்கு வெட்டு கொடுத்திருக்கும் அதே நேரத்தில் உளவுத் துறையின் செலவுகளுக்கு அதிகமாக நிதி ஒடுக்கீடு செய்துள்ளது.

ஜார்ஜ் ஆஸ்போர்ன்
பிரிட்டிஷ் நிதி அமைச்சர் ஜார்ஜ் ஆஸ்போர்னின் பட்ஜெட் வெட்டுகள் (படம் : நன்றி கார்டியன், யுகே)

உலக முதலாளித்துவத்தின் பிறப்பிடமான இங்கிலாந்து மீண்டும் ஒரு முறை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இரண்டாம் உலகப் போருக்கு பிறகான சில பத்தாண்டுகளுக்கு அரசு மருத்துவ சேவை, அரசுப் பள்ளிகள் என சிறந்த மக்கள் நல அரசாக தன்னை காட்டிகொண்ட இங்கிலாந்து இப்போதைய முதலாளித்துவத்தின் கடும் நெருக்கடிக்கான விடையை தேடிக்கொண்டிருக்கிறது.

உலகளாவிய நிதித் துறை நெருக்கடிக்கு உலக வங்கி, பன்னாட்டு நிதியம் தலைமையிலான முதலாளித்துவ அறிஞர்கள் முன்வைக்கும் முக்கிய தீர்வுகள் பொதுத் துறை நிறுவனங்களிலும், மக்கள் நல சேவைகளிலும் அரசின் செயல்பாடு நிறுத்தப்பட வேண்டும், அந்தத் துறைகளை தனியாருக்கு திறந்துவிட வேண்டும். அத்தகைய நவதாராளவாத பொருளாதார கொள்கையின்படியே இங்கிலாந்து அரசு தன் செலவுகளை மறு ஆய்வு செய்து வருகிறது. அதனடிப்படையில் இங்கிலாந்து நாட்டின் நிதி அமைச்சர் ஜார்ஜ் ஆஸ்போர்ன் ஜூன் மாதம் 26 ம் தேதி அரசின் செலவு மறுஆய்வு அறிக்கையை நாடாளுமன்றத்தின் முன் வைத்தார்.

வரும் 2014-15ம் ஆண்டிலிருந்து பல துறைகளுக்கு சுமார் 17 பில்லியன் டாலர் வரை நிதி வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது, இதில் அரசுப் பள்ளிகள், கலாச்சார நிறுவனங்கள், தேசிய சுகாதாரத் துறை, நீதித்துறை, மற்றும் பிற பொதுத்துறை நிறுவனங்களும் அடங்கும். ஒரு பக்கம் மக்களை நேரடியாக பாதிக்கும் நிதி வெட்டுகளை செய்துள்ள அதே நேரத்தில் , உளவுத் துறைக்கான நிதி ஒதுக்கீடு 3.6 சதவீதம் அதிகமாக்கப்பட்டுள்ளது. 2014-15 ஆம் ஆண்டிலிருந்து உளவுத்துறைக்கான செலவுகள் 2.9 பில்லியன் டாலர்களாக இருக்கும்.

இது நிச்சயம் பாசிச நடவடிக்கை என மக்களில் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். இதை பற்றி தன் கருத்தை பதிவு செய்த அஃப்ஸின் ராதன்ஸி என்பவர், ”ஒரு பக்கம் அறிவியல் ஆய்வுகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வெள்ளத் தடுப்பு போன்றவற்றிகான நிதியை குறைப்பது, நூலகங்களை மூடுவது என்று மக்களை பொது வெளியிலிருந்து விரட்டியடிக்கும் அதே நேரம், உளவு துறைக்கு அதிகமாக நிதி ஒதுக்குவது என்ன வித அரசின் நடவடிக்கையாக இருக்கும்?” என கேள்வி எழுப்புகிறார்.

இங்கிலாந்தின் தேசிய மருத்துவ சேவை மிகவும் பிரபலமானது, பிரிட்டனின் ஏகாதிபத்திய லாபங்களை கொண்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவச மருத்துவ சேவையை வெற்றிகரமாக வழங்கிய துறை அது. சென்ற ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டிகளின் போது கூட இங்கிலாந்தின் பெருமையாக இந்த தேசிய மருத்துவ சேவை குறிப்பிடப்பட்டு அதை மையமாக வைத்து கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

வில்லியம் ஹேக்
மக்களை கண்காணிப்பதை நியாயப்படுத்தும் பிரிட்டிஷ் வெளியுறவுத் துறை அமைச்சர் வில்லியம் ஹேக்.

ஆனால் இன்றோ அந்த சேவைகளுக்கு பணம் இல்லை என கை விரித்துவிட்டு, உளவுத்துறைக்கு அதிகமாக பணம் ஒதுக்கிவிட்டு கள்ளப் புன்னகை புரிகிறார் ஜார்ஜ் ஓஸ்போர்ன். இவர் சென்ற ஆண்டு பணக்காரர்களுக்கு சுமார் 50 சதவீதம் வரை வரி ரத்து செய்வதன் மூலம் அரசின் நிதிப் பற்றாக்குறையை சமாளிக்கலாம் என்ற தலைகீழ் கணக்கை அமல்படுத்தியவர். அவரிடம் நிதி அமைச்சக பொறுப்பு ஆளும் வர்க்கங்களால் ஏன் ஒப்படைக்கப்பட்டது என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

இங்கிலாந்தின் உளவுத்துறை சில வாரங்களுக்கு முன் தான் முகத்தில் கரி பூசிக்கொண்டது. பூசியவர் எட்வர்ட் ஸ்னோடன். அமெரிக்கா தன் நாட்டு மக்களையே உளவு பார்ப்பதை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டிய ஸ்னோடன், அதே சமயம் இங்கிலாந்தின் உளவுத் துறை இங்கிலாந்து மக்களையும், பிற உலக நாடுகளையும் உளவு பார்ப்பதையும் அந்த தகவல்களை பரஸ்பரம் அமெரிக்க உளவுத் துறையுடன் பகிர்வதையும் அம்பலப்படுத்தியிருந்தார். இதனால் ஜெர்மனி முதல் பல நாடுகள் இங்கிலாந்திற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன.

ஆனால் அமெரிக்காவிற்கு தகவல் பகிர்ந்ததையும், தன் நாட்டு மக்களையே உளவு பார்ப்பதையும் அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் வில்லியம் ஹேக் பெருமையாகவே கருதுகிறர். ”இதில் அசிங்கப்பட ஏதுமில்லை, இங்கிலாந்து பெருமைதான் தான் பட வேண்டும், இதன் மூலம் நாம் தீவிரவாதத்தை எதிர்க்கும் போரில் வென்றிருக்கிறோம். அனைத்தையும் சட்டப்படியே செய்திருக்கிறோம்” எனக் கூறியுள்ளார்.

ஆனால் உண்மையோ நேர் எதிரானது. உலகளாவிய பொருளாதார நெருக்கடியில் இங்கிலாந்து சிக்கி இருப்பது, அதன் விளைவாக பெருகி வரும் வேலையில்லாதவர்கள், நிதி மூலதனத்துக்கு ஆதரவாக செய்யப்படும் கடுமையான நிதி வெட்டுகளின் மூலம் அடிப்படை உரிமைகளை இழக்கும் ஏழை மக்கள், இதை எதிர்த்து மத்திய கிழக்கு நாடுகள் முதல், கிரேக்கம், பிரான்ஸ், ஸ்பெயின் போன்ற ஐரோப்பிய நாடுகளிலும் வீதிக்கு வந்து போராடும் மக்களின் கோபம், இங்கிலாந்தில் போராடி வரும் மாணவர்களின் எழுச்சி என அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கும் ஆளும் வர்க்கத்தின் அரசு, தனக்கு எந்த வித ஆபத்தும் வர கூடாது என மக்களை கண்காணிக்கவும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைக்கவும் உளவுத் துறைக்கு அதிக பணம் ஒதுக்குகிறது.

முதலாளிகளுக்கு உண்மையாக வேலை செய்வதும், அதன் ஒரு பகுதியாக மக்களின் அடிப்படை தேவைகளுக்கான திட்டங்களை வெட்டுவதும், எதிர்த்து போராடும் மக்களை கண்காணிப்பதும்தான் இங்கிலாந்து மட்டுமின்றி உலகெங்கிலும் உள்ள நாடுகளின் அரசுகளின் கொள்கை.