privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்இதர கட்சிகள்இளவரசனின் இறுதி நாள் !

இளவரசனின் இறுதி நாள் !

-

ருமபுரியிலிருந்து விவசாயிகள் விடுதலை முன்னணி தோழர்கள் இன்று முழுவதும் இளவரசன் தொடர்புடைய பல்வேறு இடங்களுக்குச் சென்று திரட்டிய தகவல்களை இங்கே தொகுத்துத் தருகிறோம்.

ரயில் தண்டவாளம் அருகே இளவரசன் உடல் கிடந்தது என்பதால் அவர் ரயில் முன்னே பாய்ந்து தற்கொலை செய்திருப்பதாக ஆரம்ப செய்திகள் தெரிவித்தன. ஆனால் ஒரு ரயிலின் முன்னே ஆடு மாடு பாய்ந்து இறந்தால் கூட சம்பந்தப்பட்ட ரயிலின் டிரைவர் அதை அருகில் உள்ள ஸ்டேசன் மாஸ்டரிடம் தெரிவிப்பது வழக்கம். ஆனால் இளவரசன் உடல் கண்டெடுக்கப்பட்ட நேரத்தில் கடந்து சென்ற குர்லா எக்ஸ்பிரசின் ஓட்டுநர் அப்படி ஒரு தகவலை ஸ்டேசன் மாஸ்டருக்கு தெரிவிக்கவில்லை.

தருமபுரி ரயில் நிலையத்தின் கேங்க் மேன்னாக வேலை செய்து வரும் கவுடு எனும் தொழிலாளிதான் இளவரசன் உடலைக் கண்டு ஸ்டேசன் மாஸ்டருக்கு தெரிவித்திருக்கிறார். இத்தகவல்களை தருமபுரி ஸ்டேசன் மாஸ்டரும், தொழிலாளி கவுடுவும் உறுதி செய்திருக்கிறார்கள்.

3-ம் தேதி அதாவது நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு இருந்தாலும் இளவரசன் தருமபுரியில்தான் இருந்திருக்கிறார். அன்று நத்தம் காலனி இளைஞர்களுடன் வழக்கம் போலவே கலகலப்பாக பழகியிருக்கிறார்.

4-ம் தேதி இன்று காலையில் சுமார் 7 மணிக்கு அருகில் உள்ள மலையப்பன் நகருக்குச் சென்று அங்கே உள்ள தனது மாமா முருகனை, இளவரசன் சந்தித்திருக்கிறார். மாமாவிடம் தினத்தந்தியில் வந்த செய்தியினைக் காண்பித்து திவ்யா இப்படி கூறியிருக்கிறாளே இதற்கு மேல் நான் என்ன செய்ய முடியும் என்று கேட்டிருக்கிறார். இனி தனக்கு கிடைக்க இருக்கும் போலிஸ் வேலைக்கு செல்வதாகவும் கூறியிருக்கிறார்.

திவ்யாவின் தந்தை நாகராஜன் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் இளவரசனும் சேர்க்கப்பட்டிருக்கிறார். அந்த வழக்கில் இருந்து தான் நிரபராதி என்று விடுவிக்கப்பட்ட பிறகு போலிஸ் வேலை கிடைப்பது உறுதி என்று இளவரசன் கருதியிருக்கிறார். அது வரை ஆந்திரா சித்தூருக்கு நண்பர்களுடன் சென்று வேறு வேலை பார்க்கப் போவதாக இளவரசன் தனது மாமாவிடம் சகஜமாக கூறியிருக்கிறார்.

பிறகு மாமாவிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டு தனது அப்பாவிடம் தொலைபேசியில் பேசியிருக்கிறார். இளவரசனது தந்தை தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிரேதப் பரிசோதனை துறையில் ரிப்போர்ட்டர் எனும் வேலை பார்த்து வருகிறார். அவரிடம் தொலைபேசியில் பேசிய இளவரசன், அப்பாவிடம் இருக்கும் பல்சர் இரு சக்கர வண்டி வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அதன்படி அப்பாவைப் பார்த்து பல்சர் வண்டியினை வாங்கியிருக்கிறார். கூடவே ஏடிஎம்மில் எடுக்கப்பட்ட பணம் 9000-த்தை சீட்டு கட்டுவதற்காக அம்மாவிடம் கொடுத்திருப்பதையும் தந்தையிடம் கூறுகிறார்.

பல்சர் வண்டியினை அப்பாவிடம் வாங்கிக் கொண்டு தருமபுரி நகரப்பகுதியான பாரதிபுரத்தில் இருக்கும் அத்தையினை பார்க்கச் சென்றிருக்கிறார் இளவரசன். அங்குதான் அத்தையிடம் தருமபுரி அருகே உள்ள வண்ணாம்பட்டி எனும் நகரப்பகுதியில் இருக்கும் ஒரு நண்பனை பார்க்கச் செல்வதாக கூறியிருக்கிறார். இந்த நண்பர் வன்னியர் சாதியினைச் சேர்ந்தவர். 3-ம் தேதி இரவு இவர் நத்தத்தில் இளவரசனோடு அவரது வீட்டில் தங்கியிருக்கிறார். இவரை சந்திக்கச் செல்வதாக அத்தையிடம் கூறியிருக்கிறார் இளவரசன்.

அத்தையும் வெளியே தேவையின்றி சுத்தாதே என்றும், அடையாளம் தெரிந்து யாராவது அடித்துவிடக்கூடும், ஹெல்மெட் போட்டுக் கொண்டு போ எனக் கூறியிருக்கிறார். ஹெல்மெட் வேண்டாம் என்று கூறியபடி இளவரசன் நண்பனை பார்க்கச் சென்றிருக்கிறார்.

பிறகு மதியம் இளவரசன் தந்தைக்கு அவருக்கு தெரிந்த போலீஸ் பழனியிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வருகிறது. அதன்படி தண்டவாளம் அருகே பல்சர் வண்டி நிற்பதாக கூறியிருக்கிறார் அந்த போலீசு. அங்கே சென்ற பிறகுதான் தனது மகன் இறந்து கிடப்பது அவருக்கு தெரியும்.

இளவரசன் ரயிலில் பாய்ந்து அடிபட்டதற்கான பெரிய காயங்கள் அவரது உடலில் இல்லை. இடது கையில் ஒரு வெட்டுக் காயமும், தலை பிளந்தது போன்ற காயமும் இருந்தது. மூளை சிதறி இருந்தது. அவரது உடல் அருகே வாழைப்பழத் தோல் மற்றும் திறக்கப்படாத ஒரு மது பாட்டிலும் இருந்தது. கூட இருந்த பையில் 2011-ல் அவர்களுக்கிடையே பறிமாறப்பட்ட காதல் கடிதங்கள் இருந்ததாக போலிசு தெரிவித்திருக்கிறது.

இளவரசன் தந்தையிடம் பேசிய போது இது தற்கொலை என்பதை அவர் நம்ப முடியவில்லை. இளவரசனது ஊர் மக்களுடைய கருத்தும் அதுவேதான். ஏனெனில் தனக்கு எப்படியும் போலீஸ் வேலை கிடைக்கும், வேலை கிடைத்ததும் திவ்யா திரும்ப வருவாள் என்றுதான் பலரிடம் அவர் பேசியிருக்கிறார். பிரச்சனை வந்த போது தனது பெற்றோருக்கு அவரே ஆறுதல் சொல்வார் என்று தந்தை கூறுகிறார்.

செய்தி கிடைத்ததும் நத்தம் காலனி மற்றும் அருகாமை ஊர்களிலில் இருந்து மக்கள், தருமபுரி மருத்துவக் கல்லூரியில் குழுமி விட்டனர். நாளை காலை 9 மணிக்கு அங்கே இளவரசனது உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட இருக்கிறது. அந்த பிரேதப் பரிசோதனை துறையில்தான் இளவரசனது தந்தை வேலை செய்கிறார் என்பது துயரம் வாய்ந்தது.

நத்தம் காலனி மக்களிடம் பேசிய போலிஸ் எஸ்.பி அஸ்க்ராகார்க் 144 தடை உத்திரவு போடப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி விட்டு, இறுதி ஊர்வலத்திற்கு கூட்டமாக யாரும் செல்லக் கூடாது என்றும் பத்துபேர் மட்டும்தான் செல்ல வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். இதில் சம்பந்தப்பட்டவர்களை விசாரித்து நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

இளவரசன் தற்கொலை செய்து கொண்டாரா, ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்தாரா, இல்லை கொலை செய்யப்பட்டாரா என்பது நமக்குத் தெரியவில்லை. பிரேதப் பரிசோதனை மற்றும் அடுத்த கட்ட விசாரணைகளில் அது உறுதியாகத் தெரியவரும். ஆனால் இளவரசனை அறிந்தவர்கள் அவர் தற்கொலை செய்திருப்பார் என்பதை பெருமளவு நம்பவில்லை.

திவ்யாவின் ஊரான செல்லங்கொட்டாய் மற்றும் அருகில் இருக்கும் பெரியார் மேட்டுப்பட்டி, அரியாகுளம் போன்ற ஊர்களில் இருக்கும் வன்னிய சாதி வெறியர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். இருசக்கர வாகனங்களில் சென்று அருகாமை வட்டாரங்களில் தகவலை தெரிவித்துவிட்டு கூடவே பட்டாசையும் வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

இளவரசனது உடல் தருமபுரி மருத்துவக் கல்லூரி கட்டிடத்தில் அமைதியாக உறங்குகிறது.

______________________________________________________________________
தகவல் மற்றும் படங்கள்: விவசாயிகள் விடுதலை முன்னணி, தருமபுரி.
______________________________________________________________________

யில்வே டிராக்குக்கு அருகில் இளவரசன் உடல் கிடந்த இடத்தில் மக்கள் கூடினர்.

ருமபுரி அரசு மருத்துவமனைக்கு வெளியில் இளவரசனின் உறவினர்களும் ஊர் மக்களும் கூடி நிற்கின்றனர்.

[படங்களை பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]