மத்திய தாழ்த்தப்பட்டோர் ஆணையக் குழு இளவரசனின் உடல், அவருடைய வீடு, மற்றும் நத்தம் கிராமத்தை நேரில் பார்த்து ஆய்வு !
7.7.2013, தருமபுரி
கடந்த வருடம் நவம்பர் 7-ம் தேதி திவ்யா இளவரசன் சாதி மறுப்பு திருமண பிரச்சினையால் தருமபுரி அருகே உள்ள நாய்க்கன் கொட்டாய், நத்தம் காலனி, அண்ணாநகர், கொண்டம்பட்டி ஆகிய கிராமங்களில் பாமக சாதிவெறி வன்முறைகாரர்களால் 270-க்கும் மேற்பட்ட வீடுகள் அடுத்து நொறுக்கப்பட்டு, தீ வைத்து கொளுத்தி, சேதப்படுத்தப்பட்டன. இந்த சம்பவம் நடந்து 8 மாதங்களுக்குள் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட இளவரசன் 4.7.2013 அன்று மதியம் 3 மணி அளவில் தருமபுரி அரசு கலைக் கல்லூரி பின்புறம் உள்ள ரயில்வே தண்டவாளம் அருகே பிணமாகக் கிடந்தார். ரயில்வே காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தத் தகவலை அறிந்த மத்திய தாழ்த்தப்பட்டோர் ஆணையக் குழு உறுப்பினர் சிவண்ணா, தமிழக ஆணையக் குழு இயக்குனர் வெங்கடேசன் ஆகியோர் இளவரசனின் வீடு, அவருடைய கிராமமான நத்தம் மற்றும் மருத்துவமனையில் உள்ள இளவரசனின் உடலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பிறகு பத்திரிகையாளர் சந்திப்பில் இளவரசன் கொலை செய்யப்பட்டிருந்தால் குற்றவாளிகள் மீது கடுமையான சட்டம் பாயும் என்றும் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட நத்தம், அண்ணா நகர், கொண்டம்பட்டி காலனிகளில் மறுவாழ்வு பணிகள் 80% முடிவடைந்து விட்டன என்று மாவட்ட நிர்வாகம் சொன்னாலும் 20% பணிகளே முடிந்திருப்பதாகவும் தெரிவித்தார்.
முன்னதாக சிவண்ணா இளவரசனின் பெற்றோரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அருகில் உள்ள விருந்தினர் மாளிகையில் சந்தித்து பேசினார்.
[படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]
தகவல் : புதிய ஜனநாயகம் செய்தியாளர், தருமபுரி
இளவரசனின் சகோதரர் வி.சி. கட்சியினரிடம் ஆவேச வாக்குவாதம்!
Posted Date : 14:17 (09/07/2013)Last updated : 18:46 (09/07/2013)
தர்மபுரி: இளவரசன் மரணம் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி எங்களுக்கு என்ன உதவி செய்தது என்று இளவரசனின் அண்ணன் பாலாஜி அக்கட்சி நிர்வாகிகளுடன் காரசாரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
தர்மபுரி அரசு மருத்துவமனை வளாகத்தில் இருந்த இளவரசனின் அண்ணன் பாலாஜியிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சிந்தனை செல்வன் குழுவினர் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஆவேசம் அடைந்த பாலாஜி என் தம்பி மரணம் தொடர்பாக உங்கள் கட்சி ஆரம்பத்தில் இருந்து என்ன உதவி செய்தது. மறு பிரேத பரிசோதனை வேண்டும் என்று ஒரு முறையும், வேண்டாம் என்று ஒரு முறையும் மாற்றி மாற்றி பேசி குழப்பம் தான் ஏற்படுத்தினீர்கள். இளவரசனின் மரணத்தை தயவு செய்து அரசியலுக்கு பயன்படுத்தாதீர்கள். வேதனையில் தவிக்கும் எங்கள் குடும்பத்தாரை மேலும் காயப்படுத்தாதீர்கள் என்று ஆவேசமாக வாக்குவாதம் செய்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மேற்கொண்டு பேச முடியாமல் பின்வாங்கியதோடு மருத்துவமனை வளாகத்தைவிட்டு வெளியேறினர்.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
http://news.vikatan.com/article.php?module=news&aid=17011#.UdvkXE4Umg0.facebook
இது போன்ற ஆணையக்குழுவால் ஒன்றும் நடக்காது. எதோ பெயருக்கும் மக்களை திருப்திபடுத்தவுமே பயன்படும். நல்லது நடக்க வேண்டுமென்றால் “ஜாதி” வேண்டாம் என்பவர்கள் ஒன்று கூடி இதற்கு ஒரு முடிவு எடுக்க வேண்டும். அது ஜாதிகள் அற்ற நிலையாக இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர் என்று கூறுவதை தடை செய்யவேண்டும்.
அனைத்து “பட்டியல் வகுப்பினரையும்” பிறப்படுத்தாப்பட்டோர் பட்டியலுடன் இணைத்துவிடவேண்டும்.