privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஆசியாநிதாகத் மூலம் வெளிநாட்டு தொழிலாளிகளைத் துரத்தும் சவுதி அரசு !

நிதாகத் மூலம் வெளிநாட்டு தொழிலாளிகளைத் துரத்தும் சவுதி அரசு !

-

வுதி அரேபியா தன் மண்ணின் மைந்தர்களுக்கு வேலையில் முன்னுரிமை தர வேண்டும் என்று கொண்டு வந்துள்ள நிதாகத் சட்டத்தினால் சுமார் 65 ஆயிரம் இந்தியர்கள் வேலை இழந்து வீடு திரும்ப காத்துக் கொண்டிருக்கின்றனர். சவுதி அரசுக்கு தன் மக்கள் மீது உருவாகியிருக்கும் “குபீர்” கரிசனம் ஏன்? நாடு திரும்பிக்கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் எதிர்காலம் என்னவாக இருக்கும்?

இந்தியத் தொழிலாளர்கள்
சவுதி அரேபியாவில் இந்தியத் தொழிலாளர்கள்.

எண்ணெய் வளம் கொழிக்கும் சவுதி அரேபியாவிற்கு அறிமுகம் தேவையில்லை. எண்ணெய் வளத்தை பன்னாட்டு முதலாளிகளுக்கு திறந்துவிட்டு எண்ணெய் விலை சூதாட்டத்தில் உருவான ஷேக்குகளின் ஆடம்பரம், அமெரிக்க மோகம், இதை பயன்படுத்திக்கொண்ட அமெரிக்க அரசு, பின்பு அமெரிக்காவிற்கு விசுவாச அடிமைகளான கதை எல்லாம் நாம் அறிந்ததே.

ஒரு பக்கம் அல்லாவின் தேசம் என்று சொல்லி கடுமையான ஷரியத் சட்டங்களை நடைமுறை படுத்தி தன்னை இசுலாமிய மத அரசாக காட்டிகொண்டு, மறுபுறம் குடி கூத்துக்களோடு உல்லாசம் ஊதாரித்தனத்தில் திளைக்கும் ஷேக்குகளின் ராஜ தந்திரம் யாருக்கு வரும்?

வளைகுடா ஷேக்குகளுக்காக கட்டிடங்களை எழுப்ப கடும் சூட்டில் மூன்றாம் உலக நாடுகளில் இருந்து ஒப்பந்த தொழிலாளர்கள் வந்து உயிரை கொடுத்த கதையை வினவில் பல கட்டுரைகளில் பார்த்திருக்கிறோம். (மேலும் கட்டுரைகள் கீழே தொடர்புள்ள இடுகைகளில்).

சவுதி அரசு ஏற்கனவே 1991-ல் சவுதிமயமாக்கல் எனும் சட்டத்தை இயற்றியிருந்தது அதன்படி அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்புகளில் சவுதியின் மண்ணின் மைந்தர்கள் சுமார் 30 சதவீதத்தினர் வரை வேலைக்கு அமர்த்தப்பட வேண்டும். ஆனால் இந்த சட்டம் நடைமுறையாகவில்லை. நடைமுறைப்படுத்தவும் அரசு பெரும் அக்கறை காட்டவில்லை. மீண்டு எழுந்த பொருளாதாரம் அப்போதைக்கு இதையெல்லாம் தள்ளிப்போட்டது. குறைந்த செலவில் உழைப்பதற்கு ஏழை நாடுகளிலிருந்து தொழிலாளர்களை இறக்குமதி செய்வதை சவுதி ஷேக்குகள் ஊக்குவித்தார்கள்.

சவுதி ஊழியர்கள்
சவுதி ஊழியர்கள்

ஆனால் 2008-ல் ஏற்பட்ட உலக பொருளாதார பெருமந்தம் சவுதி அரேபியாவை காட்டமாக தாக்கியுள்ளது, மீண்டு எழுந்துவிடலாம் என்ற நம்பிக்கையும் மங்கத் தொடங்கியுள்ளது. இதனால் 2013-ம் ஆண்டில் பெருகி வரும் வேலையில்லா சவுதி அரேபியர்களின் எண்ணிக்கை சவுதி அரேபியாவின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 5.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது வரும் நாட்களில் 6.3 சதவீதமாக உயரும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது.

இதனால் சவுதி அரசு தன் பழைய சட்டத்தை தூசி தட்டி அதில் ஏற்பட்ட தவறுகளை களைந்து புதிதாக நிதாகத் எனும் சட்டதை இயற்றியுள்ளது. அதன்படி, மொத்த வேலை வாய்ப்பில் 10 சதவீதம் வேலைகள் சவுதி அரேபியர்களுக்கே கொடுக்கப்பட வேண்டும். அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் முதல் சிறு கடைகள் வரை இவை நிறைவேற்றப்பட வேண்டும்.

30 சதவீதம் என்று முன்னர் சொன்ன சவுதிமயமாக்கல் சட்டத்தை விட இது கொஞ்சம் விட்டுப் பிடிக்கும் சட்டம். காரணம் சவுதியில் தேவையான மற்றும் தகுதியான வேலையாட்களின் எண்ணிக்கை குறைவு, அதனால் உடனடியாக இத்தனை சதவீதம் பேர் வேலைக்கு வைக்க வேண்டும் என்று சட்டம் போடாமல், ஒவ்வொரு துறையாக பிரித்து மெல்ல ஒவ்வொரு துறைகளிலும் கணிசமானோரை சில ஆண்டுகளில் வேலைக்கு அமர்த்திவிட வேண்டும் என்கிறது நிதாகத் சட்டம்.

சவுதி அரேபியாவில் குடியேற்றம் பெற்று வேலை செய்பவர்களின் எண்ணிக்கை சுமார் 50 லட்சம் இருக்கும். இதில் கூலி வேலை, சாதாரண வீட்டு வேலைகள், உழைக்கும் தொழிலாளர்கள் கணிசமானோர். இவர்கள் பெரும்பாலும் இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், ஆப்ரிக்க நாடுகளிலிருந்து வந்தவர்கள். பெரும்பான்மையானோர் இந்தியர்கள் (சுமார் 20 லட்சம்). இந்தியர்களில் பெரும்பான்மையானோர் கேரளா மற்றும் ஆந்திராவை சேர்ந்தவர்கள்.

நிதாகத் சட்டதின் முதல் படியாக, முறையான வேலை பர்மிட் இல்லாதவர்களை சவுதி அரசு வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது. இதனால், சவுதியில் உள்ள இந்திய தூதரகத்தின் முன் சுமார் 65 ஆயிரம் இந்தியர்கள் நாடு திரும்ப காத்துக் கொண்டிருக்கிறார்கள், இதேபோல் 30 ஆயிரம் பாகிஸ்தானியர்களும் அவர்கள் நாட்டு தூதரகத்தின் முன் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

சவுதி அரேபியா - இந்திய ஊழியர்கள்
சவுதி அரேபியா – இந்திய ஊழியர்கள்

முதல் கெடுவாக மார்ச் மாதத்துக்குள் அனைவரும் வெளியேறிவிட வேண்டும் என கட்டளை இடப்பட்டது, ஆனால் ஆயிரக் கணக்கானோரை நாடு திரும்ப வைக்க கடினமாக இருந்ததால், அந்தக் கெடு ஜூலை மாதம் 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது, சொன்ன கெடுவிற்குள் இவர்கள் சவுதியை விட்டு வெளியேறவில்லை என்றால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள். இப்போதைக்கு முறையான வேலை பர்மிட் வாங்கி இருக்கும் தொழிலாளர்களுக்கு பிரச்சனை இல்லை.

சவுதியில் இத்தனை நாள் உழைத்து வந்த வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு சவுதி பணத்தில் சுமார் 900 ஆயிரம் முதல் 1000 ரியால்கள் வரை குறைந்தபட்ச சம்பளமாக கொடுக்கப்பட்டு வருகிது. இதுவும் பர்மிட் இல்லாத தொழிலாளிகளுக்கு சம்பளம் இன்னும் குறைவு. ஆனால் சவுதியின் நிதாகத் சட்டமோ உள்நாட்டைச் சேர்ந்த சவுதி அரேபிய தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியமாக சுமார் 3000 ரியால்கள் கொடுக்க வேண்டும் என தீர்மானித்துள்ளது. இப்படி சவுதி அரேபிய இசுலாமியர்களுக்கு அதிக சம்பளமும், வெளிநாட்டு இசுலாமியர்களுக்கு குறைந்த சம்பளமும் கொடுப்பதை அல்லா எப்படி அனுமதிக்கிறான், ஷரியத் எப்படி நியாயப்படுத்துகிறது என்பதை மார்க்க பேரறிஞர் பி. ஜெய்னுலாபிதீன் அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும்.

இத்தனை நாட்களாக தம் நாட்டு மக்கள் மீது இல்லாத கரிசனம் திடீரென சவுதி மன்னருக்கு பொங்கி வழிய அல்லாவின் அருள்தான் காரணமென்று நினைத்தால் அது இல்லை. அதன் காரணம் ‘அரபு வசந்தம்’.

கடந்த சில மாதங்களுக்கு முன், மக்கள் நலனை புறக்கணித்து ஆண்டு வந்த சர்வாதிகாரிகளை மத்திய கிழக்கு மக்கள் வீதிக்கு வந்து போராடி துரத்தியடித்த சம்பவங்கள் அவை. ஒரு பாரிய புரட்சி இல்லையென்றாலும், அதன்படி தன் எதிர்காலத்தையும் நினைத்துப் பார்த்திருக்கிறார் சவுதி அரசர். இப்போதைக்கு தன் மாளிகையை விட்டு ஓடத் தயாரக இல்லாத சவுதி மன்னர் உடனடியாக தன் மக்கள் மேல் கருணை மழை பொழிய தொடங்கியுள்ளார்.

என்ன தான் மக்களை மத நம்பிக்கை காட்டி ஒடுக்கி வைத்தாலும், யதார்த்தம் மக்களை போராட வைக்கும் என்பது தான் உண்மை. எகிப்திலும், துனிசியாவிலும், இசுலாமிய மக்கள், இசுலாமிய அதிபர்களை தான் துரத்தியடித்தார்கள். ”நானும் இசுலாமியன், உன் சகோதரன்” என்று அதிபர்கள் உருகியிருந்தால் உதைபட்டிருப்பார்கள், அதே தான் சவுதிக்கும் பொருந்தும், இது அல்லாவின் தேசமல்லவா ”ஏழைகளே பொறுங்கள், ரம்ஜான் மாதத்தில் கருணையுடன் நான் நோன்பிருந்து உங்கள் பசியை அறிந்து கொள்வேன், பின்னர் என்னால் முடிந்த சில ரொட்டிகளை உங்கள் பாத்திரங்களில் இடுவேன், நீங்கள் பசியாறலாம்” என்று சவுதி மன்னர் சொன்னால் அவர் அரண்மனை கைப்பற்றப்படும் என்று அவருக்கு தெரிந்திருக்கிறது. அதனால் நிதாகத் சட்டம் வந்தேவிட்டது.

சவுதியில் கணக்கு வேலை அல்லது மென்பொருள் வேலை பார்க்கும் இந்தியருக்கு கிடைக்கும் வசதிகள் இந்தியாவை விட சிறப்பாக இருக்கும்; சவுதி மக்கள் மெல்ல தொழில்நுட்ப அறிவு பெற்று, அலுவலக வேலைகளுக்கு தகுதியானவர்களாக உயர்த்திக் கொண்டதும் அத்தகைய வேலைகளிலும் அவர்கள் அமர்த்தப்படும் சாத்தியம் ஏற்படும். அப்பொழுது வேலை செய்வதற்கான உரிமை பெற்று இப்பொழுது தங்கள் சக சகோதரர்கள் வெளியேறுவதை பார்த்துக்கொண்டிருக்கும் நடுத்தர வர்க்க வெளிநாட்டு ஊழியர்களும் வெளியேற்றப்படுவார்கள்.

மன்மோகன் சிங், சவுதி மன்னர் அப்துல்லா
மன்மோகன் சிங் சவுதி அரேபியாவில்

இனி இந்தியாவின் நிலைமை. ஆயிரக்கணக்கில் நாடு திரும்பிக்கொண்டிருக்கும் இந்த தொழிலாளர்களின் நிலை?

சவுதி கனவென்பது அமெரிக்கக் கனவை போன்றதல்ல. விவசாயத்தை இழந்த எண்ணற்ற விவசாயிகள் உதிரிகளாக ஆக்கப்பட்டு, தங்கள் வாழ்வாதாரத்திற்காக ஒரு லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை கடன்பட்டு ஏஜென்டுகளிடம் கொடுத்து சவுதி வெயிலில் அவதிப்பட்டு பணம் சேர்க்க நினைத்த கனவு. பெரும்பான்மையான உதிரித் தொழிலாளர்கள் அடிப்படை தேவைகள் கூட கிடைக்காமல் மிருகங்களை போல் நடத்தப்படுகிறார்கள். அவர்கள் படும் துன்பங்களில் இருந்து பார்த்தால், அவர்களின் கடவுள் நம்பிக்கை என்பது அப்பாவித் தனமானது மட்டுமே. அதுதான் அவர்களை போராடவிடாமல் ஷேக்குகளின் முன் அடிமைகளாக இருப்பதற்கு உதவி செய்கிறது.

இப்பொழுது நாடு திரும்பி இருக்கும் இவர்கள் வெளிநாடு சென்றதற்கான கடனை அடைக்க வேண்டும், தன் குடும்பத்தினரின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டும். இவர்களுக்கு மறு வாழ்வளிக்க அரசு ஏற்பாடு செய்யும் என இந்திய அரசு சொல்லியுள்ளது எல்லாம் பச்சையான ஏமாற்று மட்டுமே. நாட்டில் பல கோடி மக்களின் வாழ்வாதாரங்களை அழிக்கும் பொருளாதாரக் கொள்கைகளை அமல்படுத்திக் கொண்டிருக்கும் இந்திய அரசு இவர்களை காப்பாற்றிவிடும் என்பதை ஆண்டவனே கூட நம்பமாட்டான்.

உலகம் முழுவதிலும் முதாளித்துவத்தின் தோல்வியால் வேலை இல்லாமல் திண்டாடும் கோடிக்கணக்கான உழைக்கும் மக்கள் உபரியான, உதிரியான தொழிலாளர்களாக உருவாக்கப்பட்டு வருகிறார்கள். முதலாளிகளுக்கு குறைந்த கூலிக்கு வேலை செய்ய, உபரி கூலிப் பட்டாளம் தேவை. அவர்களை திட்டமிட்டு உருவாக்கும் முதலாளித்துவம், தேக்க நிலை வரும் போது அவர்களை பராமரிக்க முடியாமல் தவிக்கிறது.

இதே நிலை தான் இப்பொழுது உலகம் முழுவதும் உருவாகி இருக்கிறது. உழைக்கும் மக்கள் போராட்டம், ஆர்ப்பாட்டம் என இறங்கினால் ஆளும் வர்க்க அரசுகளுக்கு ஆபத்து என்பதால் போர்கள், இனக் கலவரங்கள், மதக் கலவரங்கள், சாதி கலவரங்கள் போன்ற மக்களை பிளவுபடுத்தும் திசையில் கோபத்தை திசை திருப்ப ஆளும் வர்க்கங்கள் முயற்சிக்கின்றன.

அப்படித்தான் சவுதி அரசும் தனது நெருக்கடியை மறைக்க வெளிநாட்டு தொழிலாளிகளை விரட்டி உள்நாட்டு தொழிலாளிகளை ஊக்குவிப்பதாக நாடகமாடுகிறது. பார்க்கலாம், இந்த நாடகம் இன்னும் எத்தனை காலமென்று!

-ஆதவன்

மேலும் படிக்க