முகப்புகட்சிகள்இதர கட்சிகள்பீகாரில் அதிகார வர்க்கம் கொலை செய்த குழந்தைகள் !

பீகாரில் அதிகார வர்க்கம் கொலை செய்த குழந்தைகள் !

-

பீகார் மாநிலத்தில் சரண் மாவட்டம் தர்மசாதி கந்தமான் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் கடந்த செவ்வாய்க் கிழமை விஷம் கலந்த மதிய உணவை சாப்பிட்ட குழந்தைகள் 16 பேர் சாப்ராவிலும், 4 பேர் பாட்னா அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். புதன்கிழமை சாவு எண்ணிக்கை 22 ஆக உயர்ந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 48 குழந்தைகளில் பெரும்பான்மையினர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக தெரிகிறது.

கொல்லப்பட்ட குழந்தையின் தந்தை
தன் குழந்தையை இழந்த தந்தையின் கதறல்.

ஆர்கனோ பாஸ்பேட் வகை விஷம்தான் அதில் கலந்திருந்ததாகவும், அதனை மாணவர்களின் உடலிலிருந்து வெளியான நாற்றத்தின் மூலமாகவே மருத்துவர்களால் தெரிந்துகொள்ள முடிந்ததாகவும் மாநில கல்வி அமைச்சர் பி.கே.சகாய் கூறியுள்ளார். அமர்ஜீத் சின்கா என்ற கல்வித்துறை அதிகாரி இந்த விஷம் காய்கறி மற்றும் தானியங்களில் பயன்படுத்தப்பட்ட பூச்சிக் கொல்லிகளால் இருக்குமா என சந்தேகப்படுவதாக கூறியுள்ளார். பாட்னா மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் ஆர்.கே. சிங் கூறுகையில் கெட்டுப்போன எண்ணெய்தான் உணவு விஷமாக மாறியதற்கு காரணம் என்று கூறியுள்ளார். எனினும் தடயவியல் சோதனைக்காக காத்திருக்கும் கல்வி அமைச்சர் உணவை மாணவர்களுக்கு பரிமாறுவதற்கு முன் அதனை பரிசோதித்துப் பார்த்திருக்கவில்லை என்பதை ஒத்துக் கொண்டுள்ளார்.

தற்போது பாட்னா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நான்காம் வகுப்பு மாணவியான காந்தி குமாரி கூறுகையில் தாங்கள் உணவு சரியில்லை எனக் கூறிய போதும், தலைமையாசிரியை மீனா குமாரி பேசாமல் சாப்பிடுமாறு திட்டியதாக குறிப்பிட்டுள்ளார். சமைக்க ஆரம்பிக்கும்போதே சமையல் வேலை செய்யும் பெண்ணான மஞ்சு தேவி எண்ணெய் மாசுபட்டிருப்பதாகவும், துர்நாற்றம் வீசுவதாகவும் எடுத்துச் சொன்னபோதும் தலைமையாசிரியை கேட்காமல் அதனை பயன்படுத்த உத்திரவிட்டுள்ளார்.

தற்போது உணவை சாப்பிட்ட சமையற்கார பெண்ணும், அப்பள்ளியில் படித்த அவரது இரு குழந்தைகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இந்த இரு குழந்தைகளும் இறந்து போயிருக்கின்றனர். முதலில் மஞ்சுதேவிதான் பாத்திரம் கழுவ நச்சுத்தன்மையுள்ள திரவங்களை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டிக் கொண்டிருந்தனர். தலைமையாசிரியை மீனா குமாரி குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டார்.

300 சதுர அடி பரப்பளவு உள்ள சமூகநலக் கூடத்தில் நடந்த இந்த தொடக்கப்பள்ளி தற்போது மக்களது கோபத்தால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. பாட்னா நகரிலுள்ள சத்துணவுத் திட்ட மாநில அலுவலகமும் சூறையாடப்பட்டுள்ளது. போலீசு வாகனங்கள் உள்ளிட்ட 4 அரசு வாகனங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. குழந்தைகளை அநியாயமாக பறிகொடுத்த தாய்மார்களின் கோபத்தால் தொகுதி எம்.பியும் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தலைவரும் ஆன லல்லு பிரசாத் யாதவ் உள்ளே போகவே அஞ்சி அறிக்கைகளை மாத்திரம் கொடுத்துக் கொண்டிருக்கிறார். சமையல் பொருட்களை பாதுகாக்கும் பொறுப்பை மீனா குமாரியின் கணவரும், ஆர்ஜேடி கட்சியின் பிரமுகருமான அர்ஜூன் ராய் வைத்திருந்ததாக வேறு தகவல்கள் வருவதால் கூட அவர் அஞ்சியிருக்க கூடும். மாவட்ட அளவில் எதிர்க்கட்சிகள் புதன்கிழமை பந்த் நடத்தின. மாநில அரசு தலா ரூ.2 லட்சம் நட்ட ஈடும், வழக்கம்போல் விசாரணை கமிசனையும் மக்களுக்கு வழங்கியுள்ளது.

பாதிக்கப்பட்ட குழந்தை
பாட்னா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள, பாதிக்கப்பட்ட தன் குழந்தையின் அருகில் உட்கார்ந்திருக்கும் தாய்.

நாட்டின் 12 கோடி குழந்தைகளின் மதிய உணவே சத்துணவுத் திட்டத்தை நம்பிதான் உள்ளது. இறந்த குழந்தைகள் பலரும் பத்து வயதுக்குட்பட்டவர்கள். அவர்களை சாப்பிட வைப்பதற்கு முன் இரண்டு ஆசிரியர்கள் சாப்பிட்டுப் பார்த்து உறுதி செய்ய வேண்டும். (ஓராசிரியர் பள்ளிகளின் கதை இன்னும் கொடுமை) ஆனால் இதெல்லாம் எங்கும் பின்பற்றப்படுவதில்லை. ஏழைக் குழந்தைகளது பள்ளி வருகையை உறுதி செய்யவும், ஊட்டச்சத்துக்காகவும் உலக வங்கி உதவியுடன் துவங்கப்பட்ட சத்துணவுத் திட்டம் மக்கள் தொகையும், ஏழ்மையும் அதிகமாகவுள்ள பீகார் போன்ற மாநிலங்களில் ஓரளவு குழந்தைகளது மரணத்தை தள்ளிவைக்க உதவுவதாகத்தான் இதுவரை அரசால் பிரச்சாரம் செய்யப்பட்டது. ஆனால் உணவே விஷமாக மாறுமளவுக்கு ஊழலும் முறைகேடும் மிகுந்து காணப்படும் சத்துணவுத் திட்டம் இன்று மரணத்தை குழந்தைகளுக்கு விரைவுபடுத்தியது கண்கூடாகத் தெரிகிறது.

இந்திய உணவுக் கழகத்தின் சேமிப்பு கிடங்குகளிலிருந்து  கிளம்பும் போதே 50 கிலோவுக்கு பதிலாக 35 கிலோதான் வருமாம். 22,102 பள்ளிகளில் செயல்படும் மதிய உணவுத் திட்டத்தில் 7,235 பள்ளிகளில்தான் சமையலறையே உள்ளதாம். எல்லோருமே இந்த திட்டத்தை பயன்படுத்தி எப்படி பணம் சம்பாதிக்கலாம் என்றுதான் பார்க்கிறார்களாம். ஆசிரியர்கள் மட்டுமின்றி ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வரை இந்த ஊழல் நீண்டிருக்கிறது. பெரும்பாலும் நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த இளம் தளிர்கள் என்பதால் எதிர்த்து கேட்க மாட்டார்கள் என்ற தைரியத்தில் அளவு, தரம் என எல்லாவற்றிலும் விளையாடியிருக்கிறது அதிகார வர்க்கம்.

இனி உணவின் தரத்தை கண்காணிக்க புதிய அமைப்பு உருவாக்கப்படும் என்று மத்திய மனிதவளத்துறை அமைச்சர் பல்லம் ராஜூ கூறியுள்ளார். ஏற்கெனவே தரமற்ற உணவு பற்றி வந்த குற்றச்சாட்டுக்களை கவனிக்க மாநில அரசு தவறிவிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். தலைமையாசிரியையின் கணவரான அர்ஜூன் ராய் நடத்திய கடையில் இருந்தே உணவுப்பொருட்கள் மதிய உணவுத்திட்டத்திற்கு வழங்கப்பட்டதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. ராஷ்டிரிய ஜனதா தள் கட்சியின் நெருக்குதல் காரணமாகவே அந்த ஊரில் மீனா தேவிக்கு வேலை கிடைத்த்தாகவும் செய்திகள் வந்துள்ளன. லல்லு கட்சியினரோ உணவுப்பொருட்களை வழங்கும் தொண்டு நிறுவனத்திற்கும், மாநில அமைச்சர் ஒருவருக்கும் உள்ள உறவை குற்றம்சாட்டியுள்ளனர்.

மாநில கல்வி அமைச்சரோ தற்செயலாக அல்ல திட்டமிட்டுதான் விஷம் கலக்கப்பட்டுள்ளது என்று சொல்லி உள்ளார். உண்மைதான், ஏழைக் குழந்தைகளின் நலன் மீது அக்கறையில்லாத அதிகார வர்க்க அலட்சியம்தான் பீகார் குழந்தைகளின் மரணம். அரசுப்பள்ளிகளில் பாதுகாப்பில்லை என்ற தோற்றத்தை உருவாக்கி மக்களை தனியார் பள்ளிகளை நோக்கி ஓட வைக்கவும், இயலாதவர்களை கல்வியை விட்டே துரத்தியடிக்கவும் நடந்து கொண்டிருக்கும் தனியார்மயத்தின் குள்ளநரி ஊளைகளையும் இப்போது கேட்கலாம்.