Wednesday, October 16, 2024
முகப்புவாழ்க்கைகாதல் – பாலியல்உச்சநீதிமன்றத்தின் உத்தரவு அமில வீச்சை நிறுத்தி விடுமா ?

உச்சநீதிமன்றத்தின் உத்தரவு அமில வீச்சை நிறுத்தி விடுமா ?

-

னிமேல் அமில விற்பனையை கடுமையாக கண்காணிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமிலத்தை வாங்கி வைத்திருக்கும் நிறுவனங்கள் அதன் பயன்பாடு குறித்த பதிவேட்டை பராமரிக்க வேண்டும் என்றும், அமிலத்தின் பொறுப்பாளராக ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும் ஆர் எம் லோதா மற்றும் இப்ராஹிம் கலிஃபுல்லா அடங்கிய அமர்வு ஒன்று விதிமுறைகளை வகுத்துள்ளது. இந்த பதிவேட்டை உள்ளூர் காவல் நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும். அமிலம் பயன்படுத்தப்படும் ஆய்வகங்களுக்கு வந்து போகும் மாணவர்களையும், மற்ற நபர்களையும் கண்டிப்பாக சோதனை செய்து அனுப்ப வேண்டும். இந்த விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மீது வட்டார மாஜிஸ்ட்ரேட் ரூ 50,000 அபராதம் விதிக்கலாம் என்றும் வழிகாட்டல் அளித்துள்ளது.

Supreme-courtஅமில விற்பனை செய்யும் கடைகள் வாங்குபவரின் புகைப்பட அடையாள அட்டையையும், பெயர், முகவரி விபரங்களையும், எதற்காக வாங்குகிறார் என்ற விபரத்தையும் பதிவு செய்து பராமரிக்க வேண்டும். விற்பனை நடந்த மூன்று நாட்களுக்குள் விபரங்களை உள்ளூர் காவல் நிலையத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். 18 வயதுக்குட்பட்ட யாருக்கும் அமிலம் விற்கப்படக் கூடாது.

நாடு முழுவதும் பெண்கள் மீது நடத்தப்படும் அமில தாக்குதல்களை தடுப்பதற்கு இந்த வழிமுறைகளை உச்ச நீதிமன்றம் உருவாக்கியுள்ளது. ஏற்கனவே இது தொடர்பான சட்டங்கள் இயற்றியுள்ள மாநிலங்கள் அவற்றை பின்பற்றலாம் என்றும் சட்டங்கள் இயற்றத் தவறிய மாநிலங்களில் இந்த வழிமுறைகள் பின்ப்பற்றப்பட வேண்டும் என்றும், இது தொடர்பான அடுத்த விசாரணை நான்கு மாதங்களுக்குப் பிறகு நடைபெறும் என்றும் அறிவித்திருக்கிறது உச்சநீதிமன்றம்.

அனைத்து மாநிலத் தலைமை செயலர்களும் இந்த உத்தரவை அந்தந்த வட்டார மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட வேண்டும் என்றும் நச்சுக்கள் சட்டத்தின் கீழ் அமில பயன்பாட்டை முறைப்படுத்தும் சட்டத்துக்கான வரைவை மத்திய அரசு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

கூடவே அமிலத் தாக்குதலில் பாதிக்கப்படும் பெண்களுக்கு 17 மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணம் அற்பமானது என்று முடிவு செய்த நீதிமன்றம் மாநில அரசுகள் கண்டிப்பாக ரூ 3 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், தாக்குதல் நடந்த ஒரு வாரத்துக்குள் ரூ 1 லட்சமும் மீதித் தொகை இரண்டு மாதங்களுக்குள்ளும் வழங்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

அமில வீச்சுக்கு ஆளாகும் பெண்களை காப்பதற்கு உச்சநீதிமன்றம் தன்னாலான தீர்வுகளை முன்வைத்திருக்கிறது, நல்ல விசயம்தான். எனினும் இந்த உத்தரவு அமில வீச்சின் விளைவுகளுக்கு சில நிவாரணங்கள் தருவதை மட்டுமே பேசுகிறது. சட்டப்படி கடைக்காரரிடம் ஏதாவது காரணங்களைச் சொல்லிக் கூட அமிலம் வாங்கலாம். மேலும் இதுவரை அமில வீச்சுக்களை வீசிய குற்றவாளிகள் அனைவரும் போலிசிடம் பிடிபட்டே உள்ளனர். எனவே இதன் மூலம் குற்றவாளிகள் குறைந்து விடுவார்கள் என்பதற்கு உத்தரவாதமில்லை.

acidஏனெனில் பெண்களை போகப்பொருளாகவும், ஆணுக்கு அடங்கிக் கிடக்கும் அடிமையாகவும், குடும்பத்தின் கௌரவமாகவும் சித்தரிப்பதோடு அதையே பொது சமூக நீதியாக இளைஞர்களிடம் கற்றுத் தரும் சினிமா, டிவி, ஊடகம், விளம்பரங்களை என்ன செய்வது? அமிலம் வாங்கியவரைக் கூட கண்டுபிடித்து தண்டனை வாங்கியும் கொடுக்கலாம். ஆனல் கருத்து அமிலத்தால் சமூகத்தை சிதைக்கும் இந்த பண்பாட்டு முதலாளிகளை எப்படி தண்டிப்பது?

சினிமா நாயகர்கள் அனைவரும் காதலிக்கும் இலட்சணத்தை பாருங்கள். ஒரு பெண்ணை சுற்றி வந்து வம்படியாக தன்னை காதலித்தே ஆகவேண்டும் என்று டார்ச்சர் செய்து வெற்றி பெறுவார்கள். இதுதான் இன்றைய இளைஞர்களின் காதல் வேதமாக உள்ளது. அப்படி கொடுமைப்படுத்தியும் காதலிக்கப்படும் பெண்கள் மறுத்து விட்டால் இவர்களில் சிலர் அமிலத்தை கையில் எடுக்கிறார்கள். ஒரு ஆண் ஒரு பெண்ணைக் காதலித்தால் அதை ஏற்றுக் கொள்ளும் உரிமைதான் ஒரு பெண்ணுக்கு உள்ளது, அதை மறுக்கும் உரிமை இங்கில்லை. இப்படி காதலில் ஜனநாயக உரிமை இல்லாத பெண்கள் அமிலவீச்சினை எதிர் கொள்ளும் நிலையினை எப்படி மாற்றுவது?

இவை குறித்து ஒரு சட்டமோ, நீதிமன்றமோ எப்படி நடவடிக்கை எடுக்க முடியும் என்று சிலர் கேட்க முடியும். ஆனால் காஷ்மீரத்திற்கு ஆதரவாகவோ, ஈழத்தமிழருக்கு ஆதரவாகவோ இங்கு திரைப்படம் எடுக்க முடியாது என்ற உண்மையினை பார்த்தால் ஆணாதிக்க கருத்துக்களை தடை செய்வது கடினம் என்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? இதே உச்சநீதிமன்றத்தில் பெண் குழந்தை கொல்லப்படுவதை விட ஆண் குழந்தை கொல்லப்பட்டால் அந்த குடும்பத்தின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும் என்றும் தீர்ப்பு சொல்லியிருக்கிறார்கள். நீதிபதிகளே இப்படி ஆணாதிக்க சமூகத்தின் பிடியில் இருக்கும் போது சில இளைஞர்கள் அமிலத்தின் பிடியில் இருப்பது என்ன ஆச்சரியம்?

ஆகவே அமில வீச்சுக்களை நிறுத்த வேண்டுமென்றால் அம்பை மட்டும் தண்டித்து பயனில்லை. எய்தவனையும் தண்டிக்க வேண்டும்.

  1. சீப்பை எடுத்து ஒளித்து வைத்தால், திருமணத்தை நிறுத்திவிடலாம்’ என்ற சொலவடை உண்டு. இந்த கருத்தை அந்த அளவுக்கு கீழிறக்க முடியாது என்றாலும், பெண்கள் மீதான தாக்குதலுக்கு காரணம் இப்படி பட்ட பல காரணங்களை பல சமயங்களில் பட்டியலிடுவது அயர்ச்சியை தருகிறது.

    நிலவுகிற சமூக அமைப்பிற்குள்ளேயே தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கைகளை இப்படிபட்ட பட்டியல் மறைமுகமாக உதவி செய்கிறது.

    “நிலப்பிரத்துவ தந்தை வழி சமூக அமைப்பு, மறுகாலனியாதிக்கம் – இந்த இரண்டையும் கட்டி காத்து வருகின்ற இன்றைய சமூக, பொருளாதார, அரசியல், கலாச்சார அமைப்பை அடியோடு மாற்றியமைக்கும் திசையில், குடும்பம் உள்ளிட்டு சமூகத்தின் சகல அரங்குகளிலும் ஜனநாயகத்தை நிலைநாட்டும் போராட்டங்களை கட்டியமைப்பதும், இன்றைய அரசியலமைப்பு முறையை வீழ்த்திவிட்டு புதிய ஜனநாயக அரசியலமைப்பை நிறுவும் திசையில் போராட்டங்களை வளர்த்தெடுப்பதுமே ஒடுக்கப்பட்டுள்ள பெண்ணிணத்துக்கு விடுதலையையும் உரிமைகளையும் பெற்றுத்தரும்’ என புதிய ஜனநாயகம் இதழில் படித்தது தான் நினைவுக்கு வருகிறது.

  2. ஊற்றை மறைத்துவைத்துக்கொண்டு ஓடைக்கு குறுக்கே கை நீட்டி என்ன பயன்?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க