privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஎன் பார்வையில் வினவு - மயூரன்

என் பார்வையில் வினவு – மயூரன்

-

என் பார்வையில் வினவு – 5 : மயூரன்

வினவுக்கு ஆறு வயது. 2002-லிருந்து தமிழ் இணையத்தை அக்கறையுடன் கவனிப்பவன் என்ற வகையில் என்னால் உறுதியுடன் கூறமுடியும், வினவு என்பது தமிழ் இணையத்தின் ஒரு முக்கிய நிகழ்வு. தொழில் நுட்பக் கண்ணோட்டத்துடனோ, மொழி வளர்ச்சி என்ற கண்ணோட்டத்துடனோ தமிழ் இணையத்தினைப் பார்ப்பதற்கு மேலதிகமாக, அதன் அரசியல் பற்றிய கண்ணோட்டத்துடன் பார்ப்பவர்களுக்கு இந்த உண்மை தெள்ளெனத் தெரியும்.

மக்கள் விரோத ஊடகங்கள்
மக்கள் விரோத ஊடகங்கள்

மக்களைச் சார்ந்திராத, அதிகாரங்களுக்குச் சார்பாக நின்று மக்களைத் திசை திருப்பும் தன்மை கொண்ட ஊடகங்களே எமது சூழலில் நீண்டகாலமாக ஆதிக்கம் செலுத்தி வந்தன. அத் தொலைக்காட்சிகளையோ, வானொலிகளையோ, பத்திரிகைகளையோ மீறி பரந்து பட்ட மக்கள் மத்தியில் மக்கள் சார்பு அரசியற் கருத்துக்களைக் கொண்டு செல்லக்கூடிய நவீன மாற்று ஊடகங்களை உருவாக்க முடியாதிருந்தது. இணையமே அதற்கான வாய்ப்பினைத் திறந்துவிட்டது. அந்த வாய்ப்பினைக் காலத்தோடு மிகச்சரியாக உணர்ந்து கொண்டு, இணையத்திலொரு சக்தி வாய்ந்த மாற்று ஊடகத்தினை எவ்வாறு உருவாக்க வேண்டும் என்கிற நுணுக்கங்களை உணர்ந்து கொண்டு வினவு உருவாக்கப்பட்டது.

இன்று வரை வினவு தனதந்த இடத்தினைச் சரியாகப் புரிந்து கொண்டு இயங்கி வருகிறது.

வினவின் வெற்றி பற்றிப் பேசும் போது, அதனை வெறுமனே ஒரு வலைத்தளமாக, வெறுமனே அரசியற் கட்டுரைகளைப் பிரசுரித்து விளம்பரப்படுத்தும் செயற்பாடாகக் குறுக்கி விட்டோமானால், வினவின் வெற்றியினையும் வினவு என்கிற இணைய நிகழ்வினையும் எம்மால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாமற் போகும். வினவினை ஒரு வலைத்தளமாக மட்டும் பார்த்தலாகாது. அவ்வலைத்தளத்தின் பின்னால் உறுதியான அரசியல் நிலைப்பாடொன்றுடன் தீவிரமாக இயங்க முனையும் அரசியல் இயக்கம் ஒன்று உள்ளது. அது மக்கள் மத்தியில் இறங்கி இயங்குகிறது. அந்த இயக்கம் தான் வினவு என்கிற இணைய ஊடகத்தின் வெற்றி.

vinavuஈழத்தமிழர்களால் நடத்தப்பட்டு வந்த “தமிழரங்கம்” போன்ற சிற்சில இணையத்தளங்கள் நீண்டகாலமாக இடதுசாரிக் கருத்து நிலையை இணையத்தில் உறுதியுடன் முன்னெடுத்தவையாக இருந்தன. வினவின் வருகை அக்கருத்து நிலைக்கு இணையத்தில் ஒரு ஜனரஞ்சகத் தன்மையை ஏற்படுத்திக்கொடுத்தது. (தமிழரங்கத்திற்தான் முன்னர் ம.க.இ.கவின் செய்திகளும் ஆவணங்களும் வெளிவந்தன). நான்காம் அகிலத்தின் தத்துவச்சார்புடன் தொடர்ச்சியாகத் தமிழ் இணையத்தில் இயங்கிவரும் உலக சோசலிச வலைத்தளத்தின் தமிழ்த் தளத்தினையும் இவ்விடத்தில் குறிப்பிட்டே ஆகவேண்டும்.

இணையத்தில் அக்காலகட்டத்தில் எழுதி வந்த இடதுசாரிகளுக்கு (குறிப்பாக மார்க்சிஸ்ட்-லெனினிஸ்டுக்கள், மாவோவாதிகளுக்கு) வினவின் வருகை புதிய உற்சாகத்தினையும் ஒன்றுகூடுவதற்கான தளத்தினையும் கொடுத்தது.

கருத்தியல், செயற்பாடு, கட்டுரைகளை இணையத்தில் பகிர்தல் என்பவற்றுடன், அதற்கான தொழில் நுட்பத்தினைச் சீராகப் பயன்படுத்துவது பற்றி வினவு கொண்டிருக்கும் அக்கறை பாராட்டத்தக்கது. சமூக வலைத்தளங்களின் காலம் உருவானவுடன் அதற்கேற்பவும் வினவு தன்னைத் தகவமைத்துக்கொண்டது.

இனிவரும் காலங்களில் ஒளி/ஒலி வடிவில் கருத்துக்களைக் கொண்டு சேர்க்கும் சாத்தியங்களை வினவு கையிலெடுக்கவேண்டும்.

வினவுக்கு எனது மனம் நிறைந்த புரட்சிகர வாழ்த்துக்கள். தொடர்ந்து செயற்படுவோம். இன்னும் தீவிரமாக.

மு. மயூரன் | මු. මයූරන් | M. Mauran
http://mauran.blogspot.in/