privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திமோதலில் துவங்கிய எனது அறிமுகம் : ரிஷி !

மோதலில் துவங்கிய எனது அறிமுகம் : ரிஷி !

-

என் பார்வையில் வினவு – 14 : ரிஷி

வாசித்தல் என்பது எனக்கு மிக மிக பிடித்தமான ஒன்று. சிறு வயதிலிருந்தே நிறைய வாசித்திருக்கிறேன். நான் பேசுவது குறைவு; அவதானிப்பதும், சிந்திப்பதும் அதிகம். தமிழில் அதிக ஆர்வம் உண்டு. பணிக்கு சென்று விட்ட பின் வாசிப்பது குறைந்து விட்டது.

ஜனநாயகம்
ஜனநாயகம் என்பது இரண்டு ஓநாய்களும் ஒரு ஆடும் வாக்களித்து என்ன சாப்பிடுவது என்று முடிவு செய்வது. விடுதலை என்பது ஆயுதம் ஏந்திய ஆடுகள் அந்த முடிவை எதிர்த்து போராடுவது.

விளையாட்டுப் போக்கில் கட்டுரை ஒன்றிற்கு பிழை திருத்தம் செய்யப்போக, தொடர்ச்சியாக நிகழ்ந்த அனுபவங்கள் என்னையும் எழுதத் தூண்டின. மனதுக்குப் பிடித்த எல்லாவற்றையும் எழுதிக் குவித்து வந்த காலத்தில் நிறைய்ய்ய்ய நட்புகள் அறிமுகமாகின; அதிலொன்று கனிந்து காதலாகி அபரிமிதமாய் விரிந்தது. ஆயினும், எனக்குள் இருந்த பல்வேறு மனத் தடைகளாலும் சூழல் இடர்ப்பாடுகளாலும், பூவாய் விரிந்த காதல் கருகி வீழ்ந்தது; என்னவளும் மறைந்து போனாள்.

மனம் ஸ்தம்பித்ததில் உலகம் காலடியில் இருந்து நழுவியதுபோல இருந்தது. மனம் தனிமைக்குள்ளானது; சமூகத்தின் மீது கோபமும் அதிகமாகியது. அப்போது அறிமுகமானதுதான் வினவு.

2010 இறுதியிலிருந்து வாசிக்க ஆரம்பித்தேன். கோபத்தைக் கொட்ட வெளியிடங்கள் இல்லாததால் வினவின் மீதே கொட்டினேன். வினவின் பல கருத்துகளுக்கு எதிர்கருத்துகளும் குற்றங்களும் சுமத்தினேன். எல்லாம் சில காலம்தான். நான் காறி உமிழ வேண்டியது வினவின் மீதல்ல; சமூகத்தின் அர்த்தமற்ற கட்டமைப்புகள் மீதுதான் என்பதை படிப்படியாக உணர்ந்தேன். அந்த மாற்றம் எப்போது நிகழ்ந்தது என்பதே தெரியாமல் நிகழ்ந்தது.

ஜனநாயகம் பற்றிய பார்வை வினவின் மூலம் விசாலமாய்க் கிடைத்தது. சமூகத்தின் கட்டமைப்புகளில் இருக்கும் இறுக்கம் தளர வேண்டிய அவசியத்தையும் உணர முடிந்தது. பெயரளவில் ஜனநாயகம் என்று சொல்லிக்கொண்டாலும் உரிமைகள் பறிக்கப்படுவதை பொறுத்துக்கொண்டு கெஞ்சினால் மட்டும் கிடைக்கும் என்ற அளவிலேதான் ஜனநாயகம் இருக்கிறது. வலுத்தவன் வாழ்வான்; எளியவன் சாவான் என்ற கட்டமைப்புதான் இங்கே இருக்கிறது. அதை உடைத்தெறிய வினவு போன்று கொள்கை உறுதிப்பற்றும், எழுத்து வன்மையும் தேவையிருக்கிறது. வழவழா கொழகொழா என்ற சப்பை எழுத்துகளல்ல. காத்திரமான உங்கள் எழுத்துகள் பிரமிக்க வைக்கின்றன. அவற்றில் காணும் நுணுக்கங்கள் எந்தளவிற்கு நீங்கள் உழைக்கிறீர்கள் என்பதைக் காட்டுகிறது.

வினவில் நடக்கும் விவாதங்கள் எனக்கு பிடித்தமான ஒன்று. நாமும் இணைந்து விவாதிக்கும்போது பல விஷயங்களில் தெளிவு கிடைக்கிறது; தொடர்ச்சியான பங்கேற்புகள் நம் சிந்தையை வளப்படுத்துகின்றன. கட்டுரைகளில் இருக்கும் எள்ளல், கேலி, கிண்டல் நகைச்சுவை ரசிக்கத்தக்கதாகவும், வியப்பூட்டுவதாகவும் இருக்கிறது. இருப்பினும் எதிர்கருத்துகளுக்கு சில தோழர்களது கன்னாபின்னாவென்ற பதிலுரைகள் சகிக்க முடிவதில்லை. அவை கட்டுரையின் நோக்கத்தையும், விவாதத்தின் தரத்தினை சீர்குலைப்பதாயும் அமைகிறது. எதிர்கருத்துகள் வரும்போது உணர்ச்சி வயப்படுதலைத் தவிர்க்க வேண்டும் என எண்ணுகிறேன்.

முதலாளித்துவத்தை ஒட்டுமொத்தமாய் எதிர்த்தாலும் சோஷலிச, கம்யூனிச சித்தாத்தங்கள் மீது இன்னும் முழுமையான ஈடுபாடு வரவில்லை. தற்போதைய நடைமுறை பல காலமாய் அமிழ்த்து வைத்திருப்பதால் உடைத்து வெளிவர முடியாத இயலாமை காரணமாக இருக்கலாம்.

தனிநபர் சாகசங்களால் நிச்சயம் இக்கட்டுப்பாட்டினை உடைக்க முடியாது. ஒட்டுமொத்தமாய் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டு அவரவர் மனங்களில் இருந்து இந்த உடைப்பு சாத்தியப்பட வேண்டும். இன்று எனக்கு எவ்வித மனத்தடையும் இல்லை. எனக்குள் இருந்த கட்டுப்பாடுகள் பலவற்றை தகர்த்தெறிந்துவிட்டேன். பல விஷயங்களுக்கு இதில் தொடர்பிருந்தாலும் வினவிற்கு மிக முக்கிய இடம் உண்டு. வினவின் விளைவு சமூகத்தில் நிச்சயம் எதிரொலிக்கும்.

கட்டுரையாளர்கள் பெயர் ஏன் கட்டுரையில் இடம்பெறுவதில்லை? பலரின் பங்களிப்பு ஒரு கட்டுரையில் இருப்பதனாலா? தோழர்களை அடையாளங்காண இது உதவுமென நினைக்கிறேன்.

மெய்ஞானம் பற்றிய கட்டுரைகள் வினவில் அதிகம் வரவேண்டும். அதிக விவாதம் தேவைப்படும் பகுதியாக அது அமையக்கூடும்.

அடுத்ததாக, சாதி பற்றிப் பேசும்போது வினவு தலித்தியம் தாண்டியும் வெளிவரவேண்டுமோ என எண்ணத் தோன்றுகிறது. முற்றிலும் வேறுபாடுகள் களையும்போது சாதிக்கூறுகள் மறைந்துவிடுமெனினும் அவற்றை இப்போதிருந்தே அகற்ற முயற்சிப்பதில் தடையென்ன என்ற கேள்வி எழாமலில்லை.

வினவு ஆயுதப் புரட்சியை ஆதரிப்பதாக உணர்கிறேன். அதிகார வர்க்கத்தின் ஆயுதமேந்திய ஓநாய்களை ஒழித்துகட்ட அது நிச்சயத் தேவையாக நான் நினைக்கவில்லை. ஆயுதமற்ற புரட்சியும் சாத்தியப்படும்; அதை சாத்தியப்படுத்த வேண்டும். எதிரிக்கும் நமக்கும் வித்தியாசம் வேண்டுமல்லவா!

மேலும் சில கருத்து வேறுபாடுகள் இருப்பினும், தற்சுதந்திரம் பெற்றுவிட்டு அமைதியாக ஓரமாய் நிற்கும் என்னைப் போன்றோருக்கு, களத்தில் நிற்கும் தோழர்களிடம் அவற்றை முன்வைக்கும் தகுதி இருக்கிறதாவெனத் தெரியவில்லை.

வினவு மென்மேலும் வளர்ந்து மகிழ்ச்சியுணர்வும், கொண்டாட்டமும் மட்டும் நிறைந்த உலகை உருவாக்க என் வாழ்த்துகள்! என்னால் இயன்ற பங்களிப்பை சரியான நேரத்தில் தர முடியும் என்ற எண்ணமும் நம்பிக்கையும் இருக்கிறது. சந்திப்போம்.

தோழமையுடன்

ரிஷி