privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஇணைய ஊடகத்தின் சவால் - தமிழ் சசி

இணைய ஊடகத்தின் சவால் – தமிழ் சசி

-

என் பார்வையில் வினவு – 32 : தமிழ் சசி

றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் வினவு தளத்திற்கு முதலில் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

வினவு இணையத்தளத்தின் கடந்த ஐந்து ஆண்டு பயணம் தமிழ் வலைப்பதிவுகளில் மிகவும் முக்கியமானது என்றே நான் கருதுகிறேன். 2004ல் இருந்து வலைப்பதிவுகளில் இருந்து வருகிறேன் என்ற வகையிலும் தமிழ்மணம் வலைத்திரட்டியின் நிர்வாகி என்கிற வகையிலும் வினவின் பங்களிப்பு குறிப்பிடத் தகுந்த ஒன்று என்றே நான் கருதி வந்திருக்கிறேன்.

இணைய ஊடகம்
மாற்று ஊடகமாக இணையம்.

வலைப்பதிவுகள் என்ற ஊடக வெளி தமிழுக்கு அறிமுகமான பொழுது அது ஒரு மாற்று ஊடகமாகவே பார்க்கப்பட்டு வந்திருக்கிறது. வெகுஜன ஊடகங்களில் மிகுந்து காணப்படும் பொதுபுத்திக்கு வெளியே மாற்று கருத்துக்களை சாமானியனும் முன் வைக்கக் கூடிய ஊடகமாகவே வலைப்பதிவுகள் இருந்தன. வெகுஜன ஊடகங்களில் உள்ள பல்வேறு அரசியல் காரணமாக சிலர் தங்களை எழுத்தாளர்களாக முன் வைத்து தங்களைச் சார்ந்து கட்டமைத்த பிம்பத்தை வலைப் பதிவுகள் உடைத்தன. தங்களின் பிம்பங்களுக்கு நேரும் சறுக்கல்களுக்கு அஞ்சி பலர் வலைப்பதிவை விட்டு விலகி ஓடினர். அப்படி ஒரு மாற்று ஊடகமாக பார்க்கப்பட்ட வலைப்பதிவு வேகமாக பெருகியது.

ஆனால் வலைப்பதிவுகளின் பெருக்கம் “வலைப்பதிவுகள் ஒரு மாற்று ஊடகம்” என்ற கருத்திற்கும் வேட்டு வைக்கத் தொடங்கியது. வலைப்பதிவுகள் வெகுஜன ஊடகங்களில் இருந்து மாறுபடுவதற்கு பதிலாக வெகுஜன ஊடகங்களில் நுழையக் கூடிய நுழைவு வாயிலாக பலர் வலைப்பதிவுகளை பார்க்க தொடங்கினர். தங்களுடைய பெயர் வெகுஜன ஊடகங்களில் எங்காவது மூலையில் ஒரு வரி வந்தாலே பெருமிதம் படும் வலைப்பதிவர்கள் பெருகிய சூழலில் வெகுஜன ஊடகங்களுக்கும், வலைப்பதிவுகளுக்கும் பெரிய வேறுபாடு இல்லாமல் போய் விட்டது. அது தவிர வலைப்பதிவுகளில் தாங்கள் ஒரு பிரபல பதிவர் என்பதை முன்னிறுத்த பலர் முயன்றதால் மொக்கைகள் பெருகின. படிப்படியாக வலைப்பதிவுகள் மாற்று ஊடகம் என்ற சூழல் மாறத்தொடங்கியது.

ஆனால், அப்படியான தளங்களுக்கு மத்தியில் காத்திரமான மாற்று கருத்துக்களை முன்வைத்து இணைய வாசகர்கள் மத்தியில் வினவு ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை வினவு தளத்தை எதிர்ப்பவர்கள் கூட மறுக்க முடியாத சூழலே உள்ளது. வினவின் வெற்றி வலைப்பதிவுகளில் மாற்று கருத்துகளுக்கு கிடைத்த வெற்றி என்பதாகவே பார்க்க வேண்டியுள்ளது.

வினவு தளம் எனக்கு பல புதிய விசயங்களையும், மாறுபட்ட பார்வைகளையும் தொடர்ந்து கொடுத்திருக்கிறது. பல விசயங்களில் வினவின் கருத்தினை அறிய வேண்டும் என்ற ஆவலுடன் தளத்திற்கு நுழைந்திருக்கிறேன். அதே நேரத்தில் வினவின் அனைத்து கருத்துக்களிலும் எனக்கு உடன்பாடு இருப்பதாக கூற முடியாது. பல கருத்துக்களில் எனக்கு முரண்பாடு உண்டு. தமிழ்தேசியம் தொடங்கி முதலாளித்துவம் வரை பல கருத்துக்களில் முரண்பாடு உண்டு. சித்தாந்த ரீதியில் முரண்பாடு இருந்தாலும் சமூக அக்கறையிலும், ஒடுக்கப்பட்ட மற்றும் தலித் மக்களின் சமூக விடுதலையிலும், ஈழ மக்களின் விடுதலை போராட்டங்களிலும், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் நடக்கும் பழங்குடியின மக்களின் போராட்டங்களிலும் வினவின் கருத்துக்களையும், பல்வேறு பிரச்சனைகளில் மகஇக தோழர்களின் தொடர் போராட்டங்களையும் கண்டு வியந்திருக்கிறேன்.

கூடங்குளம் பிரச்சனை, தருமபுரியில் தலித் மக்களுக்கு எதிராக வன்னிய சாதிவெறியர்கள் நிகழ்த்திய வெறியாட்டம், இளவரசன் மரணம் போன்ற பல சமகால பிரச்சனைகளில் கள நிலவரங்களை வினவு மூலமாக தெரிந்து கொண்டிருக்கிறேன். இளவரசன் மரணத்தை கூட இது தற்கொலையா, கொலையா என்ற துப்பறியும் கோணத்திலேயே பிரச்சனையை முடித்து விட ஊடகங்களும், அரசும் முயன்று கொண்டிருந்த நிலையில் வினவு மட்டுமே “இது தற்கொலையே என்றாலும் அது இந்த சாதிவெறி சமூகம் செய்த படுகொலை” என்ற கோணத்தில் பிரச்சனையை அணுகியது. தமிழகத்தின் அறிவுஜீவி பத்திரிக்கையாளர்கள் பெரும்பாலானோர் இந்தக் கோணத்தில் பிரச்சனையை அணுக மறுத்ததால் இளவரசன் மரணம் சார்ந்து நம்முடைய சமூகத்தில் நடைபெற வேண்டிய தொடர் விவாதம் நடைபெறாமலேயே போய் விட்டது.

வெகுஜன ஊடகங்களை விட பெரும்பாலும் நான் மாற்று ஊடகங்களில் சமகால நிகழ்வுகளை வாசிக்க விரும்புகிறவன். வெகுஜன ஊடகங்களை விட மாற்று ஊடகங்களிலேயே உண்மையான களநிலவரம் தெரியவரும் என்பது என்னுடைய அனுபவத்தில் நான் கண்ட உண்மை. அதற்கெல்லாம் நான் வினவு தளத்தையே நாடுகிறேன். கூடங்குளத்தில் காவல்துறையினர் நடத்திய வெறியாட்டத்தை வினவு தளமே தொலைபேசி உரையாடல்கள் மூலம் வெளியிட்டது. பல ஊடகங்களில் காவல்துறை மக்கள் மீது நடத்திய வெறியாட்டத்தை முழுமையான விவரங்கள் வெளிவரவே இல்லை. அது போல இளவரசன் மரணத்தில் களத்தில் இருந்து வினவு கொடுத்த தகவல்களை நான் தொடர்ந்து கவனித்து வந்திருக்கிறேன்.

ஈழம், ஒடுக்கப்பட்ட மற்றும் தலித் மக்களின் போராட்டங்கள், தமிழக மக்களின் வாழ்வுரிமைகள் சார்ந்த கருத்துக்களை அனைத்து தரப்பினரும் முன்வைக்க கூடிய ஒரு சுதந்திரமான வெளியாக தமிழ்மணம் இருக்க வேண்டும் என்பதே ஆரம்பகாலத்தில் இருந்து தமிழ்மணத்தின் நோக்கமாக இருந்து வந்திருக்கிறது. அப்படியான வலைப்பதிவுகள் பெருக வேண்டும் என்பதே எங்கள் நோக்கமாக இருந்து வந்திருக்கிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வினவு இணையதளம் தொடங்கப்பட்ட பொழுது எங்களுடைய நோக்கத்திற்கு வலுசேர்க்க கூடிய ஒரு தளமாக வினவு வளர வேண்டும் என்றே விரும்பினோம்.

ஒரு சாதாரணமான வலைப்பதிவாக தொடங்கப்பட்ட வினவு வலைப்பதிவு இன்று தமிழில் முக்கியமான இணையதளமாக விரிந்து நிற்கிறது. வினவு தளத்திற்கு என்றே ஒரு பெரிய வாசகர் வட்டம் உருவாகி இருக்கிறது. இணையத்தின் பயன்பாடும், தொழில்நுட்பமும் மாறிக் கொண்டே வரும் சூழலில் அதையும் வினவு சரியாக பயன்படுத்திக் கொண்டது. சமூகத்தளங்களை தன்னுடைய கருத்தை முன்னெடுக்க வினவு சிறப்பாக பயன்படுத்திக் கொண்டது. இணையத்திற்கு எண்ணிலடங்காத வாய்ப்புகள் எதிர்காலத்தில் உள்ளது. இணையம் இன்னும் பெரிய அளவில் விரியும். வாசகர் வட்டமும் இதை விட பன்மடங்கு அதிகம் பெருகும். அது வினவு போன்ற தளத்திற்கு பெரிய வாய்ப்பாக இருக்கும்.

அமெரிக்கா போன்ற நாடுகளில் அனைவருக்கும் இணைய இணைப்பு சுலபமாக கிடைக்ககூடியதாக இருக்கும் சூழலில் வலைத்தளங்கள் தனியார் நிறுவனங்களின் தளங்களுக்கு சவால் விடும் வகையில் வளர்ந்து நிற்கின்றன. தமிழகத்திலும் இணையம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. வினவு போன்ற தளங்களுக்கு தங்களுடைய வாசகர் பரப்பினை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருந்தாலும் அது சுலபமானது அல்ல. சவால் நிறைந்தது.

இணையத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை பெருகிய சூழலில் வணிக ஊடகங்களும் இணையத்தை வணிக நோக்கத்துடன் பயன்படுத்த தொடங்கி விட்டன. தமிழ்மணம் இணையத்திரட்டி தொடங்கப்பட்டு வலைப்பதிவுகள் வளர்ந்த ஆரம்ப காலங்களில் விகடன் போன்ற வணிக நிறுவனங்கள் இணையம் பக்கவே வரவே விரும்பவில்லை. காரணம் இணையத்தில் வணிக லாபம் இல்லை. ஆனால் இன்று விகடன் கட்டண சேவையை தொடங்கி வெற்றிகரமாக இயங்கி வருகிறது. அது போல பல வணிக ஊடகங்கள் இணையத்தை தொடர்ந்து ஆக்கிரமித்து அதையும் மற்றொரு அச்சு ஊடகமாகவோ, தொலைக்காட்சி ஊடகமாகவோ மாற்றி விட முனைகின்றன.

ஆனால், இணையம் சாமானியனுக்கு பல வாய்ப்புகளை வழங்குகிறது. கொஞ்சம் முனைந்தால் விகடன் போன்ற மற்றொரு தளத்தை உருவாக்குவது மிக மிக சுலபமானது தான். ஆனால் ஒரு கூட்டு முயற்சி தேவை. அது தான் நாம் எதிர்கொள்ளும் சவால். வினவு எதிர்கொள்ள போகும் சவால். இணையத்தின் ஆரம்ப காலங்களில் வேகமாக வளர்ந்த மாற்று ஊடகங்கள் வணிக ஊடகங்களின் பண பலம் காரணமாக, நம்முடைய இயலாமை காரணமாக சிற்றிதழ்களாக சிறிது சிறிதாக மாறிக் கொண்டிருக்கிறோம் என்பதே என் கவலை. மைக்ரோசாப்ட் போன்ற மிகப் பெரிய நிறுவனங்களுக்கே சவாலிட்டு வளர்ந்த லினக்ஸ், பயர்பாக்ஸ் போன்ற வகையிலான முயற்சிகள் தமிழ்ச்சூழலில் முன்னெடுக்க முடியாமல் போனது நம்முடைய சமூகத்தின் பின்னடைவு என்றே கருதுகிறேன்.

ஆனால் இவ்வளவு தூரம் வளர்ந்த வினவு இது போன்ற சவால்களையும் எதிர்கொண்டு, புதிய வடிவமைப்புடன் மென்மேலும் வளர வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். அப்படி வளர்ந்தால் அது தமிழ் இணையத்தில் சிறப்பான மாற்று தளமாக தொடர்ந்து இருக்க முடியும்.

வினவில் நான் இன்னும் எதிர்பார்க்கும் சில

  • வரலாறு – முள்ளிவாய்க்கால் தோல்விக்கு பிறகு நான் பல வரலாறுகளை படிக்கிறேன். பல வரலாறுகள் படிக்கும் பொழுது இப்படி நாம் செய்திருந்தால் நம் மக்களை காப்பாற்றியிருக்கலாமோ என்று தோன்றியிருக்கிறது. உலக வரலாறு பல பாடங்களை நமக்கு கொடுக்கிறது. வரலாற்றினை அணுகும் போக்கு நம் சமூகத்தில் அதிகம் இல்லை. அதன் காரணமாக நாம் இழப்பது அதிகம். எனவே தனியாக ஒரு வரலாற்று பக்கம் தொடங்கி வினவில் வரலாற்று பக்கங்களை கொடுக்கலாம்.
  • புதிய தலைமுறைக்கான அறிமுகங்கள் – இன்றைக்கு இருக்கிற புதியதலைமுறைக்கு மொன்னையான கருத்துக்களையே ஊடகங்கள் வழங்கி வருகின்றன. வளர்ந்து வருகின்ற தலைமுறையை தமது தேவைக்கு ஏற்ப மூளை சளவை செய்வதில் ஆளும் வர்க்கம் முனைப்பாக இருக்கிறது. அப்படியான சூழலில் புதிய தலைமுறைக்கும் புரியும் வகையில் எளிதாக மாற்று கருத்துக்களை முன்வைக்க தனிப்பகுதி.

வினவு தளத்தின் ஆறாம் ஆண்டு தொடக்கத்திற்காக என்னுடைய கருத்தை நாடியமைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

– தமிழ் சசி