Wednesday, July 24, 2024
முகப்புஉலகம்அமெரிக்காரசியாவின் அகதியாய் ஸ்னோடன் !

ரசியாவின் அகதியாய் ஸ்னோடன் !

-

ரு மாத கால அலைக்கழிப்பிற்கு பின்னர் ஆகஸ்ட் 1-ம் தேதி ரஷ்ய அரசு எட்வார்ட் ஸ்னோடனுக்கு ஒரு வருட தற்காலிக குடியுரிமை (புகலிடம்) கொடுத்துள்ளது. ஸ்னோடனும் இதை ஏற்று ரஷ்யாவினுள் அகதியாக நுழைந்தார்.

குசரேனா
ஸ்னோடனின் புகலிட உரிமத்தை காண்பிக்கும் அவரது ரஷ்ய வழக்கறிஞர் குசரேனா. (படம் : நன்றி RT.com)

தன் நாட்டு மக்களையே உளவு பார்க்கும் அமெரிக்க அரசின் திட்டமான “ப்ரிஸம்” ஐ உலகிற்கு அம்பலப்படுத்தியவர் எட்வர்ட் ஸ்னோடன். பத்திரிகைகள் மற்றும் விக்கிலீக்ஸ் உதவியுடன் இதைச் செய்த ஸ்னோடன், அமெரிக்க அரசிடமிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள முதலில் சென்றது சீன பிரதேசமான ஹாங்காங் நகருக்கு.

ஆனால் அமெரிக்க அரசு ஹாங்காங்கையும் அதன் வெளியுறவுக் கொள்கைகளுக்கு பொறுப்பான சீன அரசையும் மறைமுகமாக கடுமையாக மிரட்டியதால், ஹாங்காங் அரசு ஸ்னோடனை வெளியேறும்படி கோரியது. ஜூன் 23-ம் தேதி ஸ்னோடன் ஹாங்காங்கிலிருந்து மாஸ்கோவிற்கு சென்றார். ரஷ்ய விமான நிலையத்தில் தங்கி இருந்தபடி ரஷ்யாவினுள் அகதியாக நுழைய விண்ணப்பித்தார்.

பத்திரிகைகளில் வெளி வந்த அமெரிக்காவின் மக்களை உளவு பார்க்கும் திட்டம் உலக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது. அமெரிக்காவை நட்பாக நம்பிய நாடுகள் கூட அமெரிக்காவும், பிரிட்டனும், கூட்டாக தம்மை உளவு பார்த்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்தனர். நமது நாட்டையும், நம் நாட்டு தூதுரக அலுவலகங்களையும் அமெரிக்க உளவு பார்த்த்தைப் பற்றி அதிர்ச்சியடையாமல், ”அப்படியெல்லாம் எங்களை யாரும் உளவு பார்க்கவில்லை” என அமெரிக்காவிற்கே ஒத்து ஊதிய பெருமை இந்தியாவிற்கு மட்டுமே உரியது. உலகம் முழுவதும் கடும் விவாதத்தை கிளப்பிய இந்தச் செய்தி, அமெரிக்க மேலாதிக்க அரசை  உலக மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தியிருந்தது.

தன்னுடைய அரசியல், ராணுவ வலிமை மூலம் உலக நாடுகள் மீது ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்கா, இதற்கு முன்பு சந்தித்த எவ்வளவோ தலைகுனிவுகளை போலவே இம்முறையும் முகத்தில் துப்பப்பட்ட எச்சிலை துடைத்துக் கொண்டு உடனே களத்தில் இறங்கியது. ஸ்னோடனை கைது செய்து அமெரிக்காவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை முடுக்கி விட்டது. ரஷ்யாவுக்கு மிரட்டல் விடுத்து பார்த்தது; ரஷ்யாவிடம் கெஞ்சி பார்த்தது; இறுதியில் நட்புறவை காட்டி பேரம் பேசியது.

வல்லரசு கனவில் இருக்கும் ரஷ்யா இந்த நிலையை தனது நலன்களுக்கு பயன்படுத்திக் கொள்ள முனைந்தது. ஸ்னோடனை ரஷ்யாவின் செரம்டியேவ் விமான நிலையத்தில் முடக்கிப் போட்டது. அவரது புகலிடத்திற்கான விண்ணப்பத்தை பரிசீலனையில் எடுத்துக் கொண்டாலும் முன்னுக்கு பின் முரணாகப் பேசிக் கொண்டிருந்தது. விண்ணப்பத்தின் மீது முடிவெடுப்பதை கால தாமதப்படுத்தியது. ஸ்னோடனை ஜனநாயக வீரர் என்று சொல்லும் அதே நேரத்தில் ஸ்னோடன் இனிமேல் அமெரிக்காவை பற்றி எந்த ரகசியத் தகவலையும் வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையையும் வைத்தது.

ஸ்னோடனின் உரிமைகளை பாதுக்காக்கவும், அவரைக் காப்பாற்றவும், உலகெங்கிலும் உள்ள ஜனநாயக சக்திகள் தமது ஆதரவை அறிவித்தன. அமெரிக்க எதிர்ப்பு கொண்ட வெனிசுவேலா, பொலிவியா, ஈக்வேடார் ஆகிய தென் அமெரிக்க நாடுகள் ஸ்னோடனுக்கு புகலிடம் வழங்கத் தயாராக இருப்பதாக அறிவித்தன. அமெரிக்கா அந்த நாடுகள் மீது மீது பொருளாதாரத் தடை கொண்டு வரப்படும் என மிரட்டியது.

ஜூலை 2-ம் தேதி, மாஸ்கோவிலிருந்து நாடு திரும்பிக் கொண்டிருந்த பொலிவியா அதிபர் ஈவா மோரேல்ஸின் விமானம் தம் நாட்டு எல்லைக்குள் பறப்பதற்கு ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி, போர்ச்சுகல் நாட்டு அரசுகள் அனுமதி மறுத்தன. அவரது விமானத்தை ஆஸ்திரியாவில் தரை இறக்கி, அதில் ஸ்னோடன் பயணம் செய்யவில்லை என்று உறுதி செய்த பிறகு அவர் வெளியேற அனுமதிக்கப்பட்டார். இந்த நிகழ்வு தென் அமெரிக்க நாடுகள் மத்தியில் கடும் கண்டனத்தை சந்தித்தது. இந்த நாடுகள் அமெரிக்காவின் வற்புறுத்தலின் பேரில் இவ்வாறு நடந்து கொண்டதாக மோரேல்ஸ் குற்றம் சாட்டினார்.

ஸ்னோடன் ஜனநாயக நாடுகள் பலவற்றுக்கு புகலிடம் கோரி விண்ணப்பித்தார். கருத்துரிமையும், தனிமனித உரிமையும் நிலவும் ஜனநாயக நாடுகள் என்று பீற்றப்படும் நார்வே, ஸ்வீடன் போன்ற நாடுகள் ஸ்னோடனின் அகதிக்கான கோரிக்கையை நிராகரித்து தாங்கள் அமெரிக்காவின் அடிமைகள் என்பதை உலகிற்கு காட்டின.

ஸ்னோடன்
ரஷ்ய விமான நிலையத்திலிருந்து வெளியேற காரில் ஏறும் ஸ்னோடன்.

இதனிடையே அமெரிக்காவின் போர்க் குற்றங்களை உலகிற்கு அம்பலப்படுத்திய ராணுவ வீரர் பிராட்லி மேனிங் மீதான 150 ஆண்டுகள் வரை சிறை தணடனை அளிக்கப்படக் கூடிய வழக்குகளில் அமெரிக்க நீதிமன்றம் அவரைக் குற்றவாளி என்று தீர்ப்பளித்தது. பிராட்லி மேனிங்கை தன் வழிகாட்டியாக கொண்டிருந்த ஸ்னோடன், மற்றும் உலகின் கருத்துரிமை காவலர்களை இந்தத் தீர்ப்பு கவலையடைய செய்தது. தான் அமெரிக்கா திரும்பினால் என்ன நடக்கும் என்பதை ஸ்னோடன் தெரிந்து கொள்ள முடிந்தது.

குழப்பங்கள் அனைத்தும் ஆகஸ்ட் 1-ம் தேதி முடிவுக்கு வந்தன. ரஷ்ய அரசு ஸ்னோடனுக்கு ஒரு வருட தற்காலிக நுழைவுச் சீட்டை அளித்தது. ஸ்னோடனும் ரஷ்யாவினுள் நுழைந்துவிட்டார். பாதுகாப்பு காரணங்களுக்காக அவரது இருப்பிடம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

இந்த ஒரு வருட காலகட்டத்தில் அமெரிக்க அரசு சட்டப்படி கோரிககை வைத்தாலும் ஸ்னோடனை ரஷ்ய அரசு அமெரிக்காவிடம் ஒப்படைக்காது. ரஷ்யாவில் ஸ்னோடன் தங்கி வேலை தேடிக் கொள்ளலாம். அவராக விருப்பப்பட்டால் அமெரிக்காவிற்கோ அல்லது வேறு நாடுகளுக்கோ செல்லலாம். ஆனால் அமெரிக்காவைப் பற்றி எந்த ரகசிய தகவலையும் இனி வெளியிடக்கூடாது. செயின்ட் பீட்டர்ஸ்பர்கைச் சேர்ந்த வீ-கோன்டாக்ட் என்ற ரஷ்ய சமூக வலைத்தள நிறுவனம் ஸ்னோடனை ஐடி நிபுணராக சேருவதற்கு அழைப்பு விடுத்துள்ளது.

“ஸ்னோடன் மிகச் சோர்வாக இருக்கிறார், அவரது குடும்பத்தினரின் நினைவாக உள்ளார் ” என ஸ்னோடனின் ரஷ்ய வழக்கறிஞர் அனடோலி குசரேனா கூறுகிறார். பிராட்லி மேனிங் தீர்ப்பைத் தொடர்ந்து ஸ்னோடனின் தந்தை தன் மகனுக்கு அமெரிக்காவில் நீதி கிடைக்காது என உறுதியாக கூறியுள்ளார்.

ஸ்னோடனுக்கு புகலிடம் அளிக்கும் ரஷ்யாவின் முடிவுக்கு அமெரிக்காவின் வெள்ளை மாளிகை கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. வரும் மாதத்தில் ஒபாமா மாஸ்கோவில் கலந்து கொள்வதாக இருந்த அதிபர்கள் சந்திப்புக்கான திட்டமும், அமெரிக்க-ரஷிய உறவுகளும் பாதிக்கப்படும் என அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜே கார்னீ எச்சரித்துள்ளார். அமெரிக்க அரசியல்வாதிகள் ”ரஷியாவின் இந்த செயல் அமெரிக்க மக்கள் முகதில் விழுந்த அடி என கருத்து தெரிவித்துள்ளனர்”. இவர்கள்தான் அமெரிக்க அரசு தன் சொந்த நாட்டு மக்களையே உளவு பார்த்த்தை ஆதரிக்கிறார்கள்.

ஸ்னோடனின் ரஷ்ய நுழைவை பற்றி ‘இது ஒரு முக்கிய வெற்றி. ஆனால் வெளிப்படைத் தன்மைக்கான போர் தொடரும், அடக்கு முறை மக்கள் விரோத அரசுகள் இருக்கும் வரை இந்த மாதிரியான வீரம் மிகுந்த நபர்கள் முளைத்துக்கொண்டே தான் இருப்பார்கள்.” என விக்கிலீக்ஸ் கருத்து தெரிவித்துள்ளது.

இவ்வளவு இன்னல்களுக்கு பின்னும் ஸ்னோடன் உறுதியாகவே இருக்கிறார். அமெரிக்க அரசு மக்களை உளவு பார்த்தது பற்றிய தகவல்களை வெளிப்படுத்திய நிறைவில் அவர் இருக்கிறார். அப்படி தங்களை உளவு பார்க்கும் உலக ரவுடியான அமெரிக்காவை என்ன செய்வது என்று மக்கள் தான் முடிவெடுக்க வேண்டும்.

மேலும் படிக்க

  1. போபால் விச வாயு கொலைகாரன் வாரன் ஆன்டெர்சனை பாதுகாக்கும் அமெரிக்கநாய்கள் ஷ்னொடனை பிடிக்க கொலைவெறியுடன் திரிவதை பார்த்து இந்திய மாமாக்களுக்கு கொஞசம் கூட ரோசம் வரவில்லை.சி.ஐ.எ ஏஜென்ட் சு.சாமி அய்யர் இருக்கும் போது இந்தியாவில் அடைக்கலம் கேட்டது ஆபத்தானது,

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க