முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்டாஸ்மாக் கடையை தடுத்து நிறுத்திய சுவரொட்டி !

டாஸ்மாக் கடையை தடுத்து நிறுத்திய சுவரொட்டி !

-

மக்கள் போராட்டத்தின் முன் மண்டியிட்டது அதிகாரவர்க்கம் !
HRPC போராட்டத்தை அறிவித்து போஸ்டர் ஒட்டியவுடனே டாஸ்மாக் திறக்கும் முயற்சியை கைவிட்டது அரசு !

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், கூத்தைப்பார் கிராமம், பர்மா காலனி, திடீர் நகர் பகுதியில் உள்ள TELC தேவாலயம் அருகே டாஸ்மாக் கடை அமைக்கப்படுவதாக தெரிந்துகொண்ட அப்பகுதி மக்கள் நம் அமைப்பின் தோழர்களை அணுகினார்கள்.

அப்பொதுமக்கள் நம்மிடம், டாஸ்மாக் கடை அமைக்க அரசு உத்தேசித்துள்ள இடம் பர்மா காலனி, திடீர் நகர், பெல்பூர், குமரேசபுரம், எழில் நகர், திருவேங்கடநகர், கணேசபுரம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் முக்கியமான சாலை என்றும், அருகில் முக்குலத்தோர் மேல்நிலைப்பள்ளி, செவிலியர் பயிற்சிப் பள்ளி உள்ளதென்றும் பெண்கள், குழந்தைகள் உள்பட அனைவருக்கும் தகராறுகளும், பிரச்சனைகளும் ஏற்படும் என்றும் தெரிவித்தனர்.

இது சம்பந்தமாக பேச திருச்சி கலெக்டரை போன் மூலமாக அணுகினோம். பிரதமர் மன்மோகன்சிங் வருகை காரணமாக பிசியாக இருந்த கலெக்டரிடம் மக்கள் பிரச்சனையைப் பற்றி பேசமுடியவில்லை. கலெக்டரின் உதவியாளர் அச்செல்போனில் டாஸ்மாக் அதிகாரிகளிடம் நம் பிரச்சனைப் பற்றி தெரிவிக்கச் சொன்னார். திருவெறும்பூர் தாசில்தாருக்கு பலமுறை போன் செய்தும் போனை எடுக்கவில்லை. பின்னர் டாஸ்மாக் நிர்வாகத்தை கவனித்துவரும் சப்-கலெக்டர்(கலால் பிரிவு) பரமேஸ்வரியிடம் நம் கோரிக்கையை தெரிவித்தற்கு, ”அந்த இடத்தில் டாஸ்மாக் திறப்பதற்கு எல்லா ஏற்பாடுகளும் முடிந்துவிட்டது. உங்களைப் போல யாரோ சிலர் எதிர்ப்பு தெரிவிக்கிறதையெல்லாம் நாங்கள் பொருட்படுத்த வேண்டியதில்லை”,என்று அலட்சியமாக கூறினார். நாம் அவரிடம், “இனிமேல் உங்களை போராட்டக் களத்தில் சந்திக்க வேண்டியதுதான்“, என அறிவித்துவிட்டு வந்துவிட்டோம்.

உடனே நம் அமைப்பும் பர்மா காலனி, திடீர் நகர் குடியிருப்போர் நலச் சங்கமும் இணைந்து, ”குடிகெடுக்கும் தமிழக அரசே, டாஸ்மாக் நிர்வாகமே, வீதிகள் தோறும் கடை திறந்து இளைஞர்களை சீரழிக்காதே!”, என்ற முழக்கத்துடன் 2.8.2013 வெள்ளியன்று காலை 10 மணியளவில் திருவெறும்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்து மாநகரம் முழுவதும் போஸ்டர் ஒட்டினோம்.

img016

பதறிப் போன காவல்துறையும், வருவாய்த் துறை அதிகாரிகளும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் என்று பலமுறை போன் மூலமாக நம் தோழர்களை அழைத்தனர். அவர்களிடம், ”அந்தப் பகுதியில் டாஸ்மாக் கடை ஆரம்பிக்கமாட்டோம் என்று தாசில்தார் எழுதித் தர வேண்டும். அப்போதுதான் நாங்கள் பேச்சு வார்த்தைக்கு வரமுடியும்”,என்று நாம் விதித்த முன் நிபந்தனையை ஏற்றுக்கொண்டார்கள். பின்னர்தான் திருவெறும்பூர் தாசில்தார் அலுவலகத்தில் அமைதிப் பேச்சுவார்த்தையில் HRPC திருச்சி மாவட்ட செயலாளர் ஆதி நாராயணமூர்த்தி, பர்மா காலனி, திடீர் நகர் குடியிருப்போர் நல சங்க தலைவர் ராஜமாணிக்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் 10 பேர் கலந்துகொண்டோம்.

போராட்டம் நடந்தால் சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும், அதனால் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமாக தீர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை திருவெறும்பூர் காவல்நிலைய போலிசாரிடம் எழுதி வாங்கிக் கொண்டு தாசில்தார் அமைதிப் பேச்சுவார்த்தையை ஆரம்பித்தார். தாசில்தார் நம் செயற்குழு உறுப்பினர் தண்டபாணியைப் பார்த்து, ”நீங்கள் நேற்று மதியம் போன் செய்த போதே நான் பேசியிருந்தால் இந்த அளவுக்கு பிரச்சனை சென்றிருக்காது”,என்று தன்னைத் தானே நொந்துகொண்டார். வந்திருந்த டாஸ்மாக் மேலாளர் விஜய்,”நீங்கள் யாரிடமும் மனுக் கொடுக்கவில்லை. நீங்களாகவே திடீரென போராடினால் எப்படி?”, என்று கேட்டார். சப்-கலெக்டர்(கலால் பிரிவு) பரமேஸ்வரி அலட்சியமாக பேசியதை சுட்டிக்காட்டிய நாம், ”கோரிக்கை மனுவோடு பல நாட்கள் அலைய வைக்கும் அதிகாரவர்க்கத்தை போராட்டம்தான் உடனே பணிய வைக்கும். வேறு வழி எதுவுமில்லை”,என்று தெரிவித்தோம்.

மேலும் டாஸ்மாக் கடையை ஒருவரது சொந்த பட்டா நிலத்தில், அவரது அனுமதி பெற்றுத் தான் அமைக்க வேண்டும் என்ற விதி அப்பட்டமாக மீறப்பட்டுள்ளதையும் அவ்வாறு கடை திறக்க, மேற்படி இடத்தின் சொந்தக்காரர் என்று முத்தமிழ்செல்வன் என்பவர் வழங்கிய ஆவணம் போலியானது என்பதையும் அம்பலப்படுத்தினோம். இப்படி அரசாங்க அதிகாரிகளுக்கே முத்தமிழ்செல்வன் போலி ஆவணம் கொடுத்து அல்வா கொடுத்தது -அவரின் திறமை என்பதா? அல்லது அந்த போலி ஆவணங்களை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் ஒன்றுக்கும் லாயக்கில்லாதவர்கள் என்பதா?

அப்பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க மாட்டோம் என்று தாசில்தாரும், டாஸ்மாக் மேலாளரும், காவல்துறையினரும் எழுதி கையெழுத்துப் போட்டு கொடுத்தனர். அதே நேரத்தில் அத்துடன் நில்லாமல் மக்களின் எதிர்ப்பை அரசுக்கு பதிவு செய்யும் முகமாக அந்தப் பகுதியில் டாஸ்மாக் அமைக்கக்கூடாது என்று கோரிக்கை மனு எழுதி ஆயிரக்கணக்கான மக்களிடம் கையொப்பம் பெற்றுக்கொடுத்தோம். கடந்த மாதம் வீடுகளை காலி செய்துவிடுவதாக ரயில்வே துறையினரின் மிரட்டலுக்கெதிராக கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஏற்கனவே வெற்றி பெற்ற இப்பகுதி மக்களுக்கு மீண்டும் ஒரு வெற்றி கிட்டியுள்ளது.

போராட்ட அறிவிப்பு செய்த மாத்திரத்திலேயே இந்தப் போராட்டம், நெடுஞ்சாலை சாராயக் கடைகளை ஊருக்குள் கொண்டுவரும் முயற்சியை எதிர்த்து தமிழகமெங்கும் நடக்கும் மக்கள் போராட்ட பயணத்தில் ஒரு மைல் கல்லாய் தன் முத்திரையை பதித்துள்ளது. குடியிருப்போர் நல சங்கத்தினரும் பகுதி மக்களும் அமைப்பாய் திரண்டதன் பலனை மீண்டும் ஒருமுறை தன் சொந்த அனுபவத்தில் உணர்ந்து ஒவ்வொரு உறுப்பினரும் உணர்வுபூர்வமாக சங்கத்தை வலுப்படுத்திவருகின்றனர்.

துவக்கத்திலிருந்தே இதே பகுதியில் குடியிருந்துவரும் சிபிஎம்-ன் விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் மாசிலாமணியிடம் இக்கோரிக்கையை மக்கள் கொண்டு சென்ற போது, ”இது அரசாங்க திட்டம். இதை எப்படி தடுக்க முடியும்?” என்றாராம். மக்களுக்கு உண்மையையும், போலிகளையும் பிரித்துப் பார்க்க இப்போராட்டம் உதவியுள்ளது.

இடையில் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் திருச்சி மாவட்ட செயற் குழு உறுப்பினர் தண்டபாணியை தொடர்பு கொண்டு டாஸ்மாக் பார் வைக்க ஏற்பாடு செய்திருந்த ஒரு நபர் பேரம் பேசினான். இது போன்ற கீழ்த்தரமான வேலைகளில் ஈடுபடக் கூடாது என்று அவனை எச்சரித்துள்ளோம்.

தகவல்
மனித உரிமைப் பாதுகாப்பு மையம்-தமிழ்நாடு
திருச்சிக் கிளை.

  1. சி,பி.எம் காரன் கடைவாசலில் சாக்கனான் கடை போட்டு இருப்பன்!அதுவும் போச்சே!!

    • குரு சார்….எனக்கும் இதே பிரச்சனைதான்…னான் காங்கேயம் அருகில் உள்ள ஓலப்பாளையதில் ஸ்.M.Pநகர் எனும் பகுதியில் வசித்து வருகிறேன்…என் வீட்டுப்பகுதியில் அதிகமான வீடுகள் இல்லை ஆனால் வெட்டவெளியான காடு…இந்த பிரச்சனையில் என் ஒரு வீடு மட்டுமே உண்டு…எனவே நான் ஒருவன் மட்டும் தனியே போராட முடியாது…என் வீட்டிற்கு பாதுககாப்பு இல்லை…வீடு கட்டியதில் எனக்கு கடன் சுமை 400000 இருக்கிரது..எனவே என் குடும்பதில் உள்ள நான் என் தந்தை தாய் மூன்று பேரும் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம்….இந்தநிலையில் எனக்கு என் கம்பெனியிலிருந்து சில காரணங்களுக்காக வேலையை விட்டுநின்று விட்டேன்….இதன் சில நாட் களுக்கு பிறகு என் வீட்டின் அருகில் ஒரு கட்டிடம் கட்டப்பட்டது அப்பொழுது அந்தநிலதின் உரிமையாளர் அஙுகு காலோபிரிக்ச் ஆரம்பிப்பதக சொன்னர்ர் ஆனால் இன்று அது மது பானக்கடை…னானும் வேலை தேட வெளியூர் செல்ல வேண்டும் என்பதால்…வீட்டின் பாதுகாப்பு மற்றும் வருமானதின் தேவையை உண்ர்ந்து என் தாய் ஒரு பெட்டிக்கடை ஆரம்பிதார்…ஆனால் போலிசின் தொந்தரவால் கடையை எங்கள் வீட்டிலிருந்து 400 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு கடையை வைத்தோம் இப்பொழுதும் சில பிரச்சனைகளால் கடையைநிறுத்த வேண்டிய சூழல்….னான் இப்பொழுது என் வாழ்க்கைக்கான எல்லா வற்றையும் இழந்து திக்கற்று நிற்க்கிறேன்….எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை……

  2. போராடுகிற மக்களும், சமரசமில்லாமல் தலைமை தாங்குகிற அமைப்பும் இணைந்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை நடைமுறை மீண்டும் நிரூபித்திருக்கிறது.

    அதிகார வர்க்கத்தை பணிய வைக்க‌ போராடிய மக்களுக்கும். மனித உரிமை பாதுகாப்பு மைய தோழர்களுக்கும் வாழ்த்துக்கள்!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க