privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கார்ப்பரேட் முதலாளிகள்பன்னாட்டு கொள்ளையர்கள் கொண்டு செல்லும் இந்தியப் பணம் - பட்டியல் !

பன்னாட்டு கொள்ளையர்கள் கொண்டு செல்லும் இந்தியப் பணம் – பட்டியல் !

-

சென்ற 2012-13 நிதியாண்டில் இந்தியாவிலிருந்து வெளிநாட்டு நிறுவனங்கள் ராயல்டி தொகையாக தமது தலைமை நிறுவனத்துக்கு அனுப்பும் தொகை $4.4 பில்லியன் (சுமார் ரூ 24,000 கோடி) ஆக உயர்ந்திருக்கிறது. இது சென்ற ஆண்டில் இந்தியாவுக்கு வந்த மொத்த நேரடி அன்னிய முதலீடுகளின் ($22.4 பில்லியன்) மதிப்பில் 20% ஆகும்.

ராயல்டி
படம் : நன்றி எகனாமிக் டைம்ஸ்.

2009-ம் ஆண்டு ராயல்டி தொகை அனுப்புவதில் இருந்த கட்டுப்பாடுகளை மன்மோகன் சிங் அரசு நீக்கிய பிறகு பெரும்பான்மை அன்னிய நிறுவனங்கள் அனுப்பும் தொகையை கணிசமாக அதிகரித்திருக்கின்றன.

அன்னிய நிறுவனங்கள் புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வந்ததற்காகவோ அல்லது அவர்களது பிராண்ட் பெயரை பயன்படுத்துவதற்காக ராயல்டி தொகை எடுத்துச் செல்லப்படுகிறது. அன்னிய நிறுவனங்கள் பெரும்பாலும் தமது பெயரை பயன்படுத்துவதற்காகவே ராயல்டி தொகை வசூலிப்பதால், நமது நாட்டுக்கு எந்த புதிய தொழில்நுட்ப அறிவையும் கொண்டு வராமலேயே நமது பொருளாதாரத்தை அவை சுரண்டுகின்றன என்று தொழில்துறை கொள்கை மற்றும் வளர்ச்சி துறையின் அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

இந்துஸ்தான் யூனிலீவர், லீவர் என்ற பெயரை பயன்படுத்துவதற்கான கப்பமாக தனது விற்பனை மதிப்பில் 1.4 சதவீதத்தை (2011-12ல் மொத்தம் ரூ 309 கோடி) தலைமை நிறுவனத்துக்கு செலுத்தி வந்தது. இந்தக் கட்டணத்தை உயர்த்தி 2013-14 நிதியாண்டில் விற்பனை மதிப்பில் 1.9 சதவீதமாகவும், அடுத்தடுத்த ஆண்டுகளில் 0.3-0.7 சதவீதம் அதிகமாகவும் வசூலித்து, 2018ம் ஆண்டில் 3.15 சதவீதம் கப்பமாக அனுப்பப் போவதாக முடிவு செய்திருக்கிறது. இதன்படி 2012-13ம் ஆண்டில் ரூ 393.30 கோடியை யூனிலீவருக்கு அனுப்பியிருக்கிறது.

ஜப்பானின் சுசுகி நிறுவனத்துக்கு மாருதி அனுப்பும் ராயல்டி தொகை 2007-08ல் ரூ 495.2 கோடியிலிருந்து 2012-13ல் ரூ 2,454 கோடியாக (சுமார் 5 மடங்கு) உயர்ந்திருக்கிறது. இதே மாருதிதான் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு நடத்திய போராட்டத்தை கொடூரமாக ஒடுக்கி வருகிறது.

ஏபிபி நிறுவனத்தின் ராயல்டி தொகை ரூ 57 கோடியிலிருந்து ரூ 191 கோடியாக (சுமார் 3.5 மடங்கு) உயர்ந்திருக்கிறது.

மற்ற நிறுவனங்கள் 2007-08 ஆண்டிலும் 2012-13 ஆண்டிலும் அனுப்பிய ராயல்டி தொகை விபரங்கள்:

நிறுவனம் 2007-08 2012-13 அதிகரிப்பு
கோல்கேட் பால்மாலிவ் ரூ 47.7 கோடி ரூ 167.86 கோடி 3.5 மடங்கு
போஷ் ரூ 28.65 கோடி ரூ 147.70 கோடி 5 மடங்கு
அம்புஜா சிமென்ட் ரூ 74.69 கோடி ரூ 142.29 கோடி 1.9 மடங்கு
ஏசிசி ரூ 84.95 கோடி ரூ 131.39 கோடி 1.5 மடங்கு
கிளாக்சோ ஸ்மித்கிளைன் ரூ 54.31 கோடி ரூ 105.61 கோடி 1.9 மடங்கு
எச்சிஎல் ரூ 117.18 கோடி ரூ 87.18 கோடி 1.3 மடங்கு
சவிதா ஆயில் டெக் ரூ 20.53 கோடி ரூ 75.11 கோடி 3.7 மடங்கு
காஸ்ட்ரோல் இந்தியா ரூ 37.76 கோடி ரூ 66.22 கோடி 1.8 மடங்கு
கும்மின்ஸ் இந்தியா ரூ 36.48 கோடி ரூ 65.02 கோடி 1.8 மடங்கு
பி&ஜி ரூ 27.03 கோடி ரூ 63.42 கோடி 2.3 மடங்கு
உஷா மார்ட்டின் ரூ 1.61கோடி ரூ 55.37 கோடி 34 மடங்கு
அக்சோ நோபல் ரூ 6.51 கோடி ரூ 51.60 கோடி 7.9 மடங்கு
அல்ஸ்டோம் ரூ 18.89 கோடி ரூ 51.58 கோடி 2.7 மடங்கு
லார்சன் & டியுப்ரோ ரூ 13.04 கோடி ரூ 49.36 கோடி 3.7 மடங்கு
பேஜ் இண்டஸ்ட்ரீஸ் ரூ 9.25 கோடி ரூ 42.62 கோடி 4.6 மடங்கு
முன்ஜி ஷோவா ரூ 19.03 கோடி ரூ 41.41 கோடி 2.1 மடங்கு
ஹோண்டா சீல் பவர் ரூ 10.52 கோடி ரூ 34.04 கோடி 3.2 மடங்கு

இந்தியாவின் தொழில், வணிகத் துறையின் வளர்ச்சி என்பது இது போன்று அன்னிய நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து, அன்னிய நிறுவனங்களுக்கு தரகு வேலை பார்க்கும் தரகு முதலாளிகளை சார்ந்தே இருக்கிறது. உள்நாட்டு தொழில்நுட்பம், உள்நாட்டு மூலதனம், சுதேசி வணிக முத்திரை இவற்றைப் பயன்படுத்தி வணிகம் செய்யும் தேசிய முதலாளிகளின் நிறுவனங்கள் அளவில் சிறியவையாகவும், தரகு முதலாளிகளின் தயவில் இயங்குபவையாகவும் மாற்றப்பட்டு வருகின்றன. இதன் மூலம், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி என்பது மேலும் மேலும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு லாபம் ஈட்டிக் கொடுக்கும் திசையிலேயே நடப்பதாக மாற்றப்பட்டு வருகிறது. இத்தகைய பொருளாதார கொள்கைகள் இந்தியாவின் அன்னிய செலாவணி பற்றாக் குறையையும், நிதி நெருக்கடியையும் மேலும் மேலும் மோசமான நிலைக்கு தள்ளும் என்பது தெளிவாகிறது.

இதற்கிடையில், இந்தியாவின் நடப்புக் கணக்கு பற்றாக் குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.8% ஆக உயர்ந்திருப்பதாலும், இந்திய ரூபாயின் மதிப்பு இந்த ஆண்டில் 11% வீழ்ச்சியடைந்திருப்பதாலும் அன்னிய முதலீட்டை ஊக்குவிக்க வேண்டும் என்று ஆளும் வர்க்கங்கள் வைக்கும் தீர்வு எதிர் காலத்தில் பெரிய சுருக்காக மாறி நாட்டின் கழுத்தை இறுக்கும் என்பதை புரிந்து கொள்ளலாம்.

நீங்கள் பயன்படுத்தும் பற்பசை, சோப்பு துவங்கி நாட்டின் அனைத்து கட்டுமானம் மற்றும் பொருட்கள் அனைத்திலிருந்தும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு பணம் போகிறது. அந்த வகையில் இந்திய மக்களின் உழைப்பும், வருமானமும் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஏகாதிபத்தியங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் இந்தியா மீண்டும் அடிமையாகிறது, மறுகாலனியாகிறது என்பதை நாம் மறுக்க முடியுமா? இந்த அடிமை நிலையிலிருந்து விடுதலை பெறாத வரை நாம் சுதந்திரம் பெற்றதாகவோ இறையாண்மை உள்ள நாடாகவோ கருத முடியாது. என்ன செய்யப் போகிறோம்?

ராயல்டி செலுத்தும் நிறுவனங்கள்
ராயல்டி செலுத்தும் நிறுவனங்கள் (படம் : நன்றி எகனாமிக் டைம்ஸ்)

மேலும் படிக்க