Saturday, May 10, 2025
முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்வேலை நிறுத்தம் முடிந்தாலும் பஜாஜ் பயங்கரவாதம் முடியாது !

வேலை நிறுத்தம் முடிந்தாலும் பஜாஜ் பயங்கரவாதம் முடியாது !

-

ந்தியச் சந்தையில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் பல்ஸர் பைக்குகளை உற்பத்தி செய்யும் பஜாஜ் தொழிற்சாலையில் 50 நாட்களாக நடைபெற்ற வேலை நிறுத்தம் புதன் கிழமை முதல் விலக்கிக் கொள்ளப்பட்டது. புனேவின் சக்கன் என்ற இடத்தில் உள்ள தொழிற்சாலையில் ஜூன் 25 முதல் விஷ்வ கல்யாண் காம்கார் சங்கடனா என்ற தொழிற்சங்கத்தின் தலைமையில் நடந்த இந்த வேலை நிறுத்தம் 50 நாட்களுக்குப் பிறகு முடிவுக்கு வந்திருக்கிறது.

பஜாஜ் நகர்மேடை
ஆண்டுக்கு ஆண்டு வேகம் பிடிக்கும் பஜாஜின் உற்பத்தி நகர் மேடை (அசெம்ப்ளி லைன்) தொழிலாளர்களின் உயிரை உறிஞ்சுகிறது.

வேலை நிறுத்தத்தை நீக்கிக் கொள்ளா விட்டால் உற்பத்தியை வேறு இடத்துக்கு மாற்றி விடுவதாக மிரட்டி ஆகஸ்ட் 5-ம் தேதி ஒரு வாரக் கெடு கொடுத்த பஜாஜின் நிர்வாக இயக்குனர் ராஜீவ் பஜாஜ் கெடு முடிந்ததும், அதை இன்னும் 4 நாட்களுக்கு நீட்டித்திருந்தார். இதற்கிடையில் நிர்வாகத்துக்கும், தொழிற்சங்கத்துக்கும் இடையே பிரச்சினைகளை தீர்க்க தொடர்ந்து பேச்சு வார்த்தை நடந்து வந்தது.

இந்து நாளிதழில் வெளியான அறிக்கையின்படி 2007-ம் ஆண்டு 42 விநாடிகளில் ஒரு பைக் உற்பத்தி என்ற வேகத்தில் இயக்கப்பட்டுக் கொண்டிருந்த அசெம்ப்ளி லைனின் (கார் உற்பத்தியின் அடுத்தடுத்த வேலைகளை தொழிலாளர்கள் வரிசையாக செய்ய உதவியாக நகரும் மேடை) வேகம் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு அடுத்த 6 ஆண்டுகளில் 28 விநாடிகளில் ஒரு பைக் உற்பத்தி என்ற மட்டத்துக்கு வந்திருந்தது. இந்த கணக்குப் படி 8 மணி நேர ஷிப்டில் சுமார் 700 பைக்குகள் என்ற உற்பத்தி எண்ணிக்கை 1000 பைக்குகள் என்று அதிகரித்திருக்கிறது. இதன் மூலம் பைக்குகளின் உற்பத்தியையும் விற்பனையையும் கணிசமாக அதிகரித்து லாபம் சம்பாதிக்கிறது பஜாஜ். கடந்த 5 ஆண்டுகளில் (2008-09 முதல் 2012-13 வரை) பஜாஜ் நிறுவனத்தின் அனைத்து வகை வாகனங்களின் மொத்த விற்பனை மதிப்பு ரூ 9,423 கோடியிலிருந்து ரூ 19,488 கோடியாகவும் (சுமார் 2 மடங்கு) வரிக்குப் பிறகான நிகர லாபம் ரூ 656 கோடியிலிருந்து ரூ 3,044 கோடியாகவும் (கிட்டத்தட்ட 4.6 மடங்கு) அதிகரித்துள்ளது.

இன்னொரு கோணத்தில் பார்த்தால் உற்பத்தி அணியில் வேலை செய்யும் ஒவ்வொரு தொழிலாளியும், ஒரு நாளைக்கு 2007-ம் ஆண்டில் செய்ததைப் போல 150% வேலை செய்ய கட்டாயப்படுத்தப்படுகிறார். இது தொழிலாளர்களின் உடல் நலத்திலும் வேலைச் சூழலிலும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அசெம்ப்ளி லைனில் கழிப்பறைக்கு செல்லவோ, தண்ணீர் குடிக்கவோ, சாப்பிடவோ ஒரு தொழிலாளர் போகும் போது அவரது இடத்தில் வேலை செய்வதற்கான மாற்று தொழிலாளர்களின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைக்கப்பட்டது. 72 தொழிலாளர்கள் கொண்ட ஒரு தொகுப்புக்கு 7 மாற்று தொழிலாளர்கள் இருக்க வேண்டும் என்ற வரையறையை 6,5,4 என்று குறைத்து 3 ஆக குறைத்து விட்டனர். இப்படி உழைக்கும் தொழிலாளர்களை சித்திரவதை செய்வது ஜப்பானிய கைசன் நிர்வாக முறை என்று பெருமைப் பட்டுக் கொள்கிறார் ராஜீவ் பஜாஜ்.

இதன் விளைவாக நேரத்துக்கு சிறுநீர் கழிக்காமல், தண்ணீர் குடிக்காமல் பலவிதமான நோய்கள் தொழிலாளர்களை தாக்க ஆரம்பித்தன. தொழிற்சாலையில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு ஒன்றில் 50 தொழிலாளர்களுக்கு சிறுநீரக கல் பிரச்சனை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தொழிலாளர்களுக்கு ஒரு நாள் சம்பளம் கொடுத்து விட்டு கூடுதலாக அரை நாள் உழைப்பைத் திருடும் பஜாஜ் நிர்வாகத்தின் பயங்கரவாதத்த்தை எதிர் கொள்வதற்காக தொழிலாளர்கள் தொழிற்சங்கம் அமைக்க முடிவு செய்தனர். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு மகாராஷ்டிரா மாநிர தொழிலாளர் நலத் துறையின் மூலம் ஆக்ருதி தொழிற்சாலையில் செயல்பட்டு வந்த விகேகேஎஸ் தொழிற்சங்கத்தில் சக்கன் தொழிலாளர்களும் இணைந்தனர்.

2010-ம் ஆண்டு தொழிற்சங்கம் அங்கீகாரம் பெற்ற பிறகு நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில் அடுத்த 3 ஆண்டுகளுக்கு 12%, 8%, 8% ஊதிய உயர்வு என்று ஒப்பந்தம் ஏற்பட்டது. இதற்கிடையில் உற்பத்தி வேகமாக்கலும், அதனால் தொழிலாளர் மீது ஏற்றப்படும் சுமையும் தொடர்ந்து அதிகரித்து வந்தன.

விற்பனை நிலையம்
தொழிலாளர் வாழ்வை சூறையாடும் பஜாஜ் விற்பனை கட்டமைப்பு

ஆகுர்தி தொழிற்சாலை மூடப்பட்டதை தொழிற்சங்கம் எதிர்த்த போதும், 2012-ல் பந்த் நகரில் தொழிற்சங்கம் ஏற்படுத்தும் முயற்சிகளின் போதும் நிர்வாகம் தொழிற்சங்கத்தின் மீதான நிலைப்பாட்டை கடுமையாக்கியது. சட்டவிரோதமான எண்ணிக்கையில் ஒப்பந்தத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியது குறித்து தொழிற்சங்கம் தொழிலாளர் துறைக்கு புகார் அளித்திருந்தது. இவற்றால் பஜாஜ் முதலாளிகள் கடும் ஆத்திரம் கொண்டனர்.

கேட்பாரற்ற உழைப்புச் சுரண்டல் மூலம் அளவற்ற லாப வேட்டை நடத்தத் தடையாக நிற்கும் தொழிற்சங்கத்தை உடைப்பதற்கான முயற்சிகளை ஆரம்பித்தனர். ஒப்பந்தப்படி 3-ம் ஆண்டுக்கான 8% சம்பள உயர்வை தராமல் இழுத்தடித்தனர். பணிச் சுமையை தாங்க முடியாமல் முறையீடு செய்து போராடிய தொழிலாளர்களை பழி வாங்க ஆரம்பித்தனர். 22 தொழிலாளர்கள், உற்பத்தியை குலைத்ததாக குற்றம் சாட்டப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்டனர். வரம்புக்கு மீறி உழைக்க வைத்து, தொழிலாளர்களின் உடலையும், வாழ்நாட்களையும் குலைத்து வந்த முதலாளிகளுக்கு தண்டனை என்ற பேச்சுக்கே இடம் இல்லை. மாறாக, கூடுதல் உற்பத்தி, கூடுதல் விற்பனை என்று கொழுத்து வந்த பஜாஜ் முதலாளிகளின் திமிர்தான் அதிகமாகி வந்தது.

தங்களது வாழ்க்கையை சிறுகச் சிறுக திருடுவதோடு நில்லாமல் சக தொழிலாளர்கள் 22 பேரை அநியாயமாக வேலை நீக்கம் செய்ததையும் கண்டித்து வேலை நிறுத்தம் செய்ய முடிவெடுத்தனர் தொழிலாளர்கள். கூடவே அதிகரித்து வரும் வேலைப் பளுவுக்கேற்ற நியாயமான ஊதியம் கோரியும், முதலாளி அப்படி கொடுக்க மறுக்கும் நிலையில் நிறுவனத்தின் பங்குகளை தொழிலாளர்களுக்கு வினியோகிக்கச் சொல்லியும் வேலை நிறுத்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது

வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர மகாராஷ்டிரா தொழிலாளர் நலத் துறையின் உதவியுடன் பல முறை பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன. ஜூலை 12-ம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் தற்காலிக பணி நிறுத்தம் செய்யப்பட்ட அனைத்து 21 ஊழியர்களும் வேலையில் அமர்த்தப்பட வேண்டும் என்றும் ஊதிய உயர்வு, பங்கு வழங்குதல் தொடர்பான கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும் என்று தொழிற்சங்கம் வலியுறுத்தியது. ஆனால், இருசக்கர வாகனங்களின் விற்பனை மந்தமடைந்திருந்த நிலையில் நிர்வாகம் திமிராக இந்த நியாயமான கோரிக்கைகளை பரிசீலிக்க மறுத்தது.

பைக்
தொழிலாளர்களின் உழைப்புச் சுரண்டலின் மூலம் வெளிவரும் பளபளக்கும் பைக்குகள்.

வேலை நிறுத்தத்தால் பாதிப்பு இல்லை என்றும் பயிற்சி தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் தொழிலாளர்கள் உள்ளிட்ட 900 தொழிலாளர்கள் வேலைக்கு வருகிறார்கள் என்றும் சவடால் அடித்தது நிர்வாகம். 2,000 பைக்குகள் சக்கன் ஆலையில் தினமும் உற்பத்தி ஆவதாகவும், கூடுதல் 1,000 பைக்குகள் உற்பத்தியை பந்த்நகர் தொழிற்சாலைக்கு மாற்றியிருப்பதாகவும் சொன்னது. பல்சர், அவெஞ்சர், கேடிஎம் பிராண்டுகளின் 100% தேவையை நிறைவு செய்ய முடிகிறது என்று நிறுவனம் கூறியிருந்தது. ஆனால், இப்போது வேலை நிறுத்தத்தின் காரணமாக 20,000 பைக்குகள் விற்பனை இழப்பு ஏற்பட்டதாக தெரிவித்திருக்கிறது.

இப்படி ஒன்றுக்கு ஒன்று முரணாக பிரச்சாரம் செய்து தொழிலாளர் போராட்டத்தை கொச்சைப் படுத்தவும் முறியடிக்கவும் முயன்று வந்தது பஜாஜ் நிர்வாகம். ஆகஸ்ட் 12-க்குள் வேலைக்குத் திரும்பா விட்டால் பாதி உற்பத்தியை சக்கன் தொழிற்சாலையிலிருந்து மாற்றி விடப் போவதாக மிரட்டியிருந்தும் 12-ம் தேதி அன்று வேலை நிறுத்தம் முடிவுக்கு வராத போது காலக்கெடுவை நீட்டித்து தமக்கு லாபம் சொரியும் தொழிற்சாலையை தக்க வைக்க ஏற்பாடு செய்து கொண்டனர்.

இறுதியாக செவ்வாய்க் கிழமை தொழிலாளர்கள் நடத்திய கூட்டத்தில் வேலை நிறுத்தத்தை முடித்துக் கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது. இப்போது, விகேகேஎஸ் தொழிற்சங்கம் நிபந்தனையின்றி வேலை நிறுத்தத்தை விலக்கிக் கொண்டுள்ளதாகவும், பெரும்பான்மை தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை ஆதரிக்கவில்லை என்றும் அடித்து விடுகிறார் ராஜீவ் பஜாஜ்.

இரண்டு மடங்கு விற்பனை அதிகரிப்பு, 4.5 மடங்கு லாப அதிகரிப்பு கிடைத்தாலும், தொழிலாளர்களின் நியாயமான ஊதிய கோரிக்கைகளை கூட நிறைவேற்ற மறுப்பதுதான் முதலாளித்துவ அறம். எல்லாப் பிரிவு தொழிலாளர்களும் தொழிலாளி வர்க்கமாக ஒருங்கிணைந்து மறுகாலனியாக்க அடக்குமுறையை எதிர்ப்பதுதான் முதலாளித்துவ பயங்கரவாதத்தை வீழ்த்துவதற்கு ஒரே வழியாகும். மாருதி மானேசர் முதல் பஜாஜ் சக்கன் வரை நடந்து வரும் உழைப்புச் சுரண்டலை முறியடிப்பதற்கு இதுதான் ஒரே வழி.

மேலும் படிக்க

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க