privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காஸ்னோடென் விவகாரம் : இந்தியாவின் அடிமைத்தனம் !

ஸ்னோடென் விவகாரம் : இந்தியாவின் அடிமைத்தனம் !

-

மெரிக்க அரசின் ஒட்டுக்கேட்பு மற்றும் இணையதளக் கண்காணிப்பு சதித்திட்டத்தை அம்பலப்படுத்திய ஸ்னோடெனை வேட்டையாடுகிறது அமெரிக்க ஏகாதிபத்தியம். ஸ்னோடென் ரசிய விமான நிலையத்தில் இருந்து கொண்டு, தனக்குத் தஞ்சம் கொடுக்க மறுத்த நாடுகளின் முகங்களை ஒவ்வொன்றாகத் தோலுரித்துக் கொண்டிருக்கிறார். இந்தியாவின் முகத்திலோ அமெரிக்க அடிமையின் சாயல் அப்பட்டமாகத் தெரிகிறது.

ஸ்னோடன்
ரசியாவில் தற்காலிகமாக தஞ்சமடைந்துள்ள ஸ்னோடன்

பிரிசம் என்னும் அமெரிக்காவின் இணையக் கண்காணிப்பு வளையம் உலக நாடுகள் அனைத்தையும் வேவு பார்க்கிறது என்ற உண்மையை ஸ்னோடென் அம்பலப்படுத்தியவுடன், “இந்தியக் குடிமக்களின் தனிப்பட்ட உரிமைகள் மீறப்பட்டிருப்பின், அதனை நம்மால் ஏற்றுக்கொள்ளவியலாது” என்று ஜூன் 12 அன்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கூறினார், இந்திய வெளியுறவுத் துறை அதிகாரி அக்பர்தீன். அமெரிக்காவால் அதிகம் வேவு பார்க்கப்படும் நாடுகளில் இந்தியா ஐந்தாவது இடத்தில் இருக்கிறது என்ற செய்தி அடுத்து வெளியானது. “இது கவலையளிக்கிறது. ஆச்சரியமளிக்கிறது. எனினும், அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வருவதற்கு இந்தியா தயாராக இல்லை” என்று நெளிந்தார் அந்த அதிகாரி.

அமெரிக்காவில் இருக்கும் இந்தியத் தூதரகம் உட்படமொத்தம் 37 தூதரகங்களில் இருந்து அனுப்பும் தொலைநகல்கள், அசாதாரண வேவு பார்க்கும் கருவிகளால் வேவு பார்க்கப்படுகின்றன என்று, ஜூன் 30 அன்று கார்டியன் நாளேடு (ஸ்னோடெனிடமிருந்து தகவலைப் பெற்று) அம்பலமாக்கியது. “அமெரிக்கா யாரையும் உளவு பார்க்கவில்லை, தொலைபேசி உரையாடல்கள் மற்றும் குறுந்தகவல்களின் வகைமாதிரியை மட்டுமே பகுப்பாய்ந்திருக்கிறது” என்று ஜூலை 1-ஆம் தேதியன்று வெட்கமே இல்லாமல் சப்பைக் கட்டினார் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித். இது அவருடைய சொந்தக் கருத்தல்ல; அமெரிக்க அரசுச் செயலர் ஜான் கெர்ரியின் கூறிய கருத்தையே இந்திய அரசின் கருத்தாக வாந்தியெடுத்தார் குர்ஷித்.

இதனைத் தொடர்ந்து இந்தியாவில் அரசியல் தஞ்சம் கேட்டு கோரிக்கை வைத்தார் ஸ்னோடென். இந்திய அரசின் மிச்சம் மீதியிருந்த மானத்தையும் வாங்கிவிட்டது இந்தக் கோரிக்கை. ஆத்திரம் தலைக்கேறிய குர்ஷித், “தஞ்சம் வேண்டுவோர்க்கெல்லாம் கொடுக்க இது ஒன்றும் திறந்த வீடல்ல” என்று சீறினார்.

2009-ஆம் ஆண்டு இலண்டனில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொண்ட, ஜி-20 தலைவர்கள் கூட்டத்தின் போதும், அதே ஆண்டு செப்டம்பரில் நடந்த நிதி அமைச்சர்கள் கூட்டத்திலும் கலந்துகொண்ட அயல்நாட்டு உறுப்பினர்களை, பிரிட்டன் மற்றும் அமெரிக்க உளவு நிறுவனங்கள் சேர்ந்து வேவு பார்த்த செய்தியும் அடுக்கடுக்காக வெளிவந்தன. இதற்கு இந்திய அரசிடமிருந்து ஒரு எதிர்வினைகூட வரவில்லை. ஜெயலலிதாவின் அமைச்சர்களைப் போல கூச்சநாச்சமே இல்லாமல் அமெரிக்காவின் முன் இந்தியா வளைந்து நெளிவது அப்பட்டமாக அம்பலமாகவே, சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் காறி உமிழத் தொடங்கின. அதற்குப் பிறகுதான், “வரவிருக்கும் இணையப் பாதுகாப்பு கூட்டத்தில் அமெரிக்காவிடம் இவ்விசயம் பற்றிப் பேசப்படும்” என்று சமாளித்து ஒரு அறிக்கை விட்டார் சல்மான் குர்ஷித்.

ஈவா மோரேல்ஸ்
அமெரிக்காவின் மிரட்டலையும் மீறி ஸ்னோடனை ஆதரிக்கும் பொலிவியா அதிபர் ஈவா மோரேல்ஸ்

ஒரு நாட்டின் தூதரகத்தை வேவு பார்ப்பதென்பது அந்நாட்டின் மீதே போர் தொடுப்பதற்கு ஒப்பான செயலாகும். ஆனால் அரசியல்,பொருளாதாரம், இராணுவம் ஆகிய அனைத்துத் துறைகளிலும், அமெரிக்க அடிமையாகவும், ஓடும் பிள்ளையாகவும் ஆகிவிட்ட இந்தியா, அதைப் பற்றியெல்லாம் ஏன் கவலைப்படப் போகிறது? “தூதரகம் மட்டுமல்ல; விருந்தினர் விடுதிகள், கார்கள் உள்ளிட்ட அனைத்தையும் வேவு பார்ப்பது சகஜமான விசயம்” என்று கூறி குர்ஷித்துக்கு வக்காலத்து வாங்கினார் முன்னாள் அமெரிக்கத் தூதர் ரோனேன் சென். இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை விமர்சித்த அரசியல் கட்சிகளைத் “தலையறுபட்ட கோழிகள்” என்று தெனாவெட்டாகப் பேசியவர் ரோனேன் சென். தற்போது இவர் டாடா மோட்டார்ஸின் இயக்குநர். இந்திய ஆளும் வர்க்கம் மற்றும் அரசின் அமெரிக்க அடிமைத்தனத்துக்கு இதற்கு மேலும் விளக்கங்கள் தேவையில்லை.

உலக மேலாதிக்க சக்தியான அமெரிக்காவை எதிர்த்து நிற்க அஞ்சி, பல நாடுகளும் ஸ்னோடெனின் அடைக்கலக் கோரிக்கையை நிராகரித்திருக்கின்றன என்பது உண்மைதான். எனினும், இந்தியாவின் அடிமைத்தனம் விசேடமானது. “இது திறந்த வீடல்ல” என்ற குர்ஷித்தின் திமிர்த்தனமான பேச்சில், அடிமைத்தனத்தையே பெருமிதமாகக் கருதும் ஒரு அடியாளுக்குரிய அகம்பாவம் வெளிப்பட்டது. இந்திய நாட்டை மட்டுமின்றி, இந்தியக் குடிமக்களின் படுக்கையறையையும், இந்திய அரசின் தூதரகத்தையும் திறந்த வீடாகக் கருதி உள்ளே புகுந்து உளவு பார்க்கும் அமெரிக்க அரசிடம் “இது திறந்த வீடல்ல” என்று கூறும் துணிவு இந்திய அரசுக்கு இல்லை. தனியொரு மனிதனாக அமெரிக்க வல்லரசை எதிர்த்து நிற்கும் ஸ்னோடெனின் வீரத்தைக் கண்டு நடுங்கிக் குரைத்தது மன்மோகன் அரசு.

இந்தியாவைப் போன்ற ஒதிய மரங்களுக்கு இல்லாத துணிவை சின்னஞ்சிறிய தென்னமெரிக்க நாடுகள் வெளிப்படுத்தின. பொலிவியா, நிகரகுவா மற்றும் வெனிசுலா போன்ற நாடுகள் ஸ்னோடெனுக்கு அரசியல் தஞ்சம் தருவோம் என்று கூறி அமெரிக்க மேலாதிக்கத்தினை எதிர்த்து தலைநிமிர்ந்து நிற்கின்றன. இதனால் ஆத்திரம் கொண்ட அமெரிக்க அரசு, ரஷ்யாவில் நடந்த எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதி செய்யும் நாடுகளின் மாநாட்டில் பங்கேற்றுத் திரும்பும் பொழுது, பொலிவிய அதிபர் ஈவா மோரேல்ஸ் தன்னுடைய தனி விமானத்தில் ஸ்னோடெனை ஒளித்து வைத்திருக்கிறார் என்று வதந்தியைப் பரப்பியது. அமெரிக்க அரசின் கட்டளைக்குப் பணிந்து பல ஐரோப்பிய நாடுகள் தங்கள் வான் வழியே அவ்விமானத்தை அனுமதிக்க மறுத்தன.

11-cartoonஆஸ்திரியாவில் விமானம் இறங்கியவுடன், அமெரிக்க உளவுத்துறையின் தூண்டுதலின் பேரில், சர்வதேச விதிமுறைகளுக்கு விரோதமாக விமானத்துக்கு உள்ளே புகுந்து சோதனை நடத்தப்பட்டது. ஐரோப்பிய நாடுகளின் அமெரிக்க அடிவருடித்தனத்தை அம்பலப்படுத்தியிருப்பதோடு, ‘பேரரசர்’ அமெரிக்காவோடு கைகோர்த்துக் கொண்டு தென்னமெரிக்க நாடுகளை இன்னும் தங்கள் காலனிகளாக நடத்தும் ஐரோப்பிய நாடுகளின் முகத்திரையையும் கிழித்தார் மோரேல்ஸ். அமெரிக்கத் தூதரகத்தைத் தன் நாட்டிலிருந்து வெளியேற்றவும் தயங்கப் போவதில்லை எனவும் எச்சரித்தார்.

ஐரோப்பிய நாடுகள், ஈவா மோரேல்ஸை அவமானப்படுத்தியதைத் தென்னமெரிக்க நாடுகளின் கூட்டமைப்பும் கடுமையாக கண்டித்தது. வர்த்தக ஒப்பந்தங்களைக் காட்டி ஸ்னோடெனுக்கு புகலிடம் கொடுக்கக் கூடாது என அமெரிக்கா மிரட்டியபோது, “மனித உரிமைகள் வர்த்தக நலன்களுக்கும் மேலானவை” என்று கூறி மனித உரிமைக் காவலன் வேடமிடும் அமெரிக்காவின் முகத்தில் கரிபூசின தென்னமெரிக்க நாடுகள்.

அமெரிக்க போர்வெறி எந்திரத்தின் உதிரி உறுப்பாக மாறிவிட்டது இந்தியா. அரசியல், பொருளாதாரம், இராணுவத் துறைகள் அனைத்திலும் இறையாண்மையையும் சுயேட்சைத் தன்மையையும் இழந்த முழு அடிமையாக நடந்து கொள்வதே தனது நலனுக்கு உகந்தது என்று இந்திய ஆளும் வர்க்கம் கருதுகிறது. அமெரிக்காவுடன் முரண்படாதிருப்பதே நல்லது என்று கருதும் ஐரோப்பிய வல்லரசுகளும்கூட அமெரிக்காவின் இந்த மேலாதிக்க நடவடிக்கையைச் சம்பிரதாயமாக மட்டுமே எதிர்க்கின்றன. சொந்த நாட்டு மக்களின் நலனை முன்னிறுத்தி தமது அரசியல் பொருளாதாரக் கொள்கைகளை வகுக்கும் நாடுகள், அவை எவ்வளவு சிறியவையாக இருந்தாலும், அவை மட்டும்தான் தமது இறையாண்மையையும் தமது மக்களின் ஜனநாயக உரிமையையும் பாதுகாக்கும் பொருட்டு அமெரிக்காவை எதிர்த்து நிற்கின்றன. ஒரு தனி மனிதனும்கூட அவ்வாறு எதிர்த்து நிற்க முடியும் என்பதைக் காட்டியிருக்கிறார் ஸ்னோடென்.

– சுப்பு
________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2013
________________________________________________________________________________