Friday, May 2, 2025
முகப்புஉலகம்ஆசியாதென்கொரியா ஹூண்டாய் தொழிலாளர் போராட்டம் !

தென்கொரியா ஹூண்டாய் தொழிலாளர் போராட்டம் !

-

தென்கொரியாவைச் சேர்ந்த ஹூண்டாய் கார் தொழிற்சாலையின் 46,000 தொழிலாளர்கள் இந்த வாரம் இரண்டு நாட்களில் 4 மணி நேரம் அடையாள வேலை நிறுத்தம் செய்யவிருக்கிறார்கள். நிர்வாகத்துடன் நடத்திய ஊதிய உயர்வு பேச்சு வார்த்தைகளில் உடன்பாடு ஏற்படாததால் தொழிற்சங்கம் இந்த முடிவை அறிவித்திருக்கிறது.

South Korea Hyundai Strike-2ஆண்டு தோறும் நடக்கும் மூன்று மாத கால பேச்சு வார்த்தைகளில் போது மாதச் சம்பளத்தில் $116 (சுமார் ரூ 7,200) உயர்வு, கூடுதல் ஊக்கத் தொகை (போனஸ்), தொழிலாளர்களின் குழந்தைகள் மேற்படிப்புக்கு போகாமல் வேலை தேட முடிவு செய்தால் அதற்கான உதவித் தொகையாக $8,900 (சுமார் ரூ 5 லட்சம்) வழங்குதல், மருத்துவச் செலவுகளை முழுமையாக கொடுத்தல் ஆகிய கோரிக்கைகளை முன் வைத்து தொழிற்சங்கம் போராடி வருகிறது.

ஆனால் இந்த கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வது மிகவும் சிரமமானது என்று ஹூண்டாய் கூறியிருக்கிறது. வியாழக் கிழமை நடக்கவுள்ள பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படுவதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவு என்று தொழிற்சங்க செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் தொழிலாளர்கள் 3 வாரங்களாக ஓவர்டைம் செய்ய மறுத்து போராடினர். அதனால் 83,000 கார்கள் உற்பத்தி குறைந்து $150 கோடி (சுமார் ரூ 9,600 கோடி) இழப்பு ஏற்பட்டது என்று ஹூண்டாய் தெரிவித்திருந்தது. 2012-ம் ஆண்டில் 92 மணி நேர வேலை நிறுத்தங்களின் காரணமாக 82,000 கார்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டு $150 கோடி இழப்பு ஏற்பட்டது என்றும் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. இந்த வாரத்தில் 4 மணி நேர வேலை நிறுத்தத்தால் 2,100 கார்கள் உற்பத்தி குறைந்து $3.9 கோடி (சுமார் ரூ 240 கோடி) இழப்பு ஏற்படும் என்றும் புலம்பியிருக்கிறது.

South Korea Hyundai Strikeஹூண்டாயின் ஸ்ரீபெரும்புதூர் ஆலைத் தொழிலாளர்கள், தமது தொழிற்சங்க உரிமைகளை மறுத்து ஒடுக்கும் நிர்வாகத்தை எப்படி எதிர் கொள்வது என்பதை தென் கொரிய தொழிலாளர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். மேலும் ஹூண்டாயின் இருநாட்டுத் தொழிலாளர்களும் ஒன்றுபட்டு போராடும் தேவையும் இருக்கிறது.

தென்கொரியாவின் இன்னொரு கார் உற்பத்தி நிறுவனமான கியா மோட்டார்ஸ் தொழிற்சாலையின் 34,000 தொழிலாளர்கள் புதன் கிழமை 2 மணி நேரம் வேலை நிறுத்தம் செய்தார்கள்.

இதற்கிடையே டாடா குழுமத்துக்குச் சொந்தமான இங்கிலாந்தில் உள்ள ஜாகுவார் லேண்ட் ரோவரின் வெஸ்ட் மிட்லாண்ஸ் மற்றும் ஹேல்வுட் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கும் எல்லஸ்மேர் துறைமுகத்தில் உள்ள உதிரி பாக வினியோக மையத்துக்கும் இடையே வினியோக சேவை வழங்கும் டிஎச்எல் நிறுவனத்தின் ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரி ஆகஸ்ட் 28-ம் தேதி வேலை நிறுத்தம் செய்யவுள்ளார்கள். இது தொடர்பாக ஜேஎல்ஆர், டிஎச்எல்லுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக டாடா குழும தலைவர் சைரஸ் மிஸ்திரி கூறியிருக்கிறார்.

எந்த நாடாயிருந்தாலும், கோடிக்கணக்கான டாலர்கள் வருமானத்தை ஈட்டித் தரும் தொழிலாளர்கள் தமது அடிப்படை உரிமைகளை பாதுகாத்துக் கொள்ள போர்க்குணத்துடன் தொடர்ந்து போராடுவதுதான் ஒரே வழி என்று இதன் மூலம் தெளிவாகிறது. உலகமயமாக்கத்தின் காலகட்டத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் உலகம் முழுக்க தொழிற்சாலைகள் துவங்கி மலிவாய் உழைப்பைச் சுரண்டுகின்றன. இன்னொரு புறம் ஏழைநாடுகளின் வளங்களும் கொள்ளையடிக்கப்படுகின்றன. இரண்டையும் முறியடிக்க தொழிலாளர் வர்க்கம் விழிப்புணர்வு பெறுவது அவசியமானது. இந்தப் போராட்டங்கள் அந்த திசையில் வளரட்டும்.

படங்கள் : நன்றி வாஷிங்டன் போஸ்ட்

மேலும் படிக்க

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க