Monday, May 17, 2021
முகப்பு கட்சிகள் அ.தி.மு.க மறதி வரும் நேரம் !

மறதி வரும் நேரம் !

-

நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்
அனில் அம்பானிக்கும் ஞாபக மறதி நோய் வந்திருக்கிறது.

“இங்க அடிபட்டிருக்கும், இங்கதான் மெடுலா ஆப்லங்கேட்டா இருக்கு. இங்க அடிபட்டா ஷாக்ல டெம்ப்ரரி மெமரி லாஸ் வரும்.” கிரிக்கெட் விளையாடி, கால் ஸ்லிப் ஆகி கீழே விழுந்து விட்ட “நடுவில கொஞ்சம் பக்கத்தக் காணோம்” நாயகனுக்கு இப்படியாக குறுகிய கால ஞாபக மறதி நோய் வந்து விடுகிறது. அதோ போல, அனில் திருபாய் அம்பானி குழும முதலாளி அனில் அம்பானிக்கும் நீண்ட கால ஞாபக மறதி நோய் வந்திருக்கிறது.

ஸ்வான் டெலிகாம் என்ற கம்பெனி இருப்பதே நினைவில்லை என்றும் தனக்குச்  சொந்தமான ரிலையன்ஸ் டெலிகாம் ஸ்வான் டெலிகாமில் முதலீடு செய்தது பற்றி எதுவும் தெரியாது என்றும் 2G அலைக்கற்றை ஊழல் வழக்கை விசாரிக்கும் சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் கூறியிருக்கிறார்.

இப்படி மெமரி லாஸ், அதாவது ஞாபக மறதி வரணும்னா, என்ன நடந்திருக்கணும்?

அதைப் புரிந்து கொள்ள இன்னொரு மெமரி லாஸ் நபரை பார்க்கலாம். திமுக தலைவர் கருணாநிதியின் மனைவியும், கலைஞர் டிவி இயக்குனருமான தயாளு அம்மாளுக்கு வயோதிகம் காரணமாக மறதி வியாதி வந்திருப்பதாகவும் அதனால் டெல்லிக்கு வந்து சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல முடியாது என்றும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 2G அலைக்கற்றை ஊழல் என்னும் பிரம்பை வைத்து திமுக-தலைமையை “ஆட்றா ராசா ஆடு”ன்னு ஆட வைப்பதற்கு காங்கிரஸ் சிபிஐயை பயன்படுத்துகிறது. ஆ ராசாவும், கனிமொழியும் திகார் சிறை நிரப்பி திரும்பிய பிறகு நாடகத்தில் அடுத்ததாக தயாளு அம்மாள் சாட்சி சொல்லும் படலம் நடத்தப்பட்டு வருகிறது.

தயாளு அம்மாள்
தள்ளாத வயதிலான தயாளு அம்மாள்தான் கலைஞர் டிவியில் முக்கிய பொறுப்பில் இருப்பவர் என்று கலைஞர் டிவி தொடர்பான ஆவணங்கள் சாதிக்கின்றன.

வயோதிகத்தால் ஞாபக சக்தியை இழந்து, ஆங்கிலத்தில் பேசக் கூட முடியாத தயாளு அம்மாள்தான் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக ஸ்வான் டெலிகாமிடமிருந்து நடந்த பணப் பட்டுவாடா தொடர்பாக விசாரிக்கப்பட வேண்டியவர் என்று சிபிஐ அடம் பிடிக்கிறது. அப்படிப்பட்ட தள்ளாத வயதிலான தயாளு அம்மாள்தான் கலைஞர் டிவியில் முக்கிய பொறுப்பில் இருப்பவர் என்று கலைஞர் டிவி தொடர்பான ஆவணங்கள் சாதிக்கின்றன.

தயாளு அம்மாளின் உடல்நிலை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் சிறப்பு மனு தாக்கல், அதை அடுத்து அகில இந்திய மருத்துவக் கழகத்தின் (எய்ம்ஸ்) மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்ய வேண்டும் என்று நீதிமன்ற உத்தரவு, எய்ம்ஸ் மருத்துவக் குழு சென்னைக்கு வந்து தயாளு அம்மாளை பரிசோதனை செய்தது என்று ஊழல் ஒழித்தலை நோக்கிய சட்டத்தின் பயணம் வேகமாக நடை போட்டு வந்தது.

எய்ம்ஸ் மருத்துவர் குழு தயாளு அம்மாளின் வயோதிக நிலை குறித்தும் நீண்ட தூரம் பயணம் செய்ய அவரது உடல்நிலை ஒத்துழைக்காது என்றும் அறிக்கை கொடுத்தது. ஒரு முறை நீதிமன்றத்தில் எழுந்து நின்றாலே லட்சங்களில் கட்டணம் வாங்கும் வழக்கறிஞர்களின் கார சாரமான வாதங்களுக்குப் பிறகு தயாளு அம்மாளின் சாட்சியத்தை பதிவு செய்ய சென்னையில் ஒரு நீதிமன்ற குழுவை  நியமிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி எஸ் சிங்வி, கே எஸ் ராதாகிருஷ்ணன் அடங்கிய அமர்வு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

அரசியல் லாவணி சண்டைக்காக காங்கிரஸ் களத்தில் இறக்கியிருக்கும் சிபிஐயும், திமுக களத்தில் இறக்கியிருக்கும் தயாளு அம்மாளும் நடத்தும் இழுபறி, 2ஜி ஊழல் விசாரணை தேர்தல் கூட்டணி முடிவாகும் வரை தொடரும். ஊழல் செய்த கார்ப்பரேட் கம்பெனி கிரிமினல்கள் வழக்கம் போல தமது தொழிலை தொடர்வார்கள்.

அனில் அம்பானி
அனில் அம்பானி. (படம் : நன்றி தி இந்து)

இப்படிப்பட்ட சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த விசாரணைகள் மூலம் ஊழலை ஒழித்துக் கட்டிக் கொண்டிருக்கும் அதே சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில், அதே நீதிபதியின் முன்பு வழக்கு விசாரணைக்குப் போகும் போதுதான் அனில் அம்பானியை ஞாபக மறதி வியாதி தாக்கியிருக்கிறது. ஊழல் வழக்கில் சாட்சி சொல்ல வேண்டும் என்றதும் 54 வயதிலேயே அம்பானிக்கு ஞாபக மறதி நோய் வந்து விட்டிருக்கிறது.

சென்ற வியாழக் கிழமை சிபிஐ சிறப்பு நீதிபதி ஓ பி சைனி முன்பு 2 மணி நேரம் நடந்த விசாரணையில் ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனத்தின் இயக்குனராக தான் ஒரு காலத்தில் இருந்திருப்பது வரை அவருக்கு நினைவிருக்கிறது. ஆனால் அது எந்த கால கட்டத்தில் என்பது மறந்து போயிருக்கிறது. 2007-ம் ஆண்டில் அதன் இயக்குனராக இருந்தாரா என்பதும் நினைவில் இல்லை.

2007-ம் ஆண்டில்தான் ரிலையன்ஸ் டெலிகாம் ஷாகித் பால்வா என்பவருக்கு சொந்தமான ஸ்வான் டெலிகாம் என்ற பினாமி நிறுவனத்தில் ரூ 900 கோடி அளவுக்கு முதலீடு செய்து அதன்  மூலமாக 2G அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடாக கூடுதல் உரிமங்களை பெறுவதற்காக விண்ணப்பித்திருந்தது என்று சிபிஐ குற்றம் சாட்டியிருக்கிறது. இதே ஸ்வான்தான் அலைக்கற்றை ஒதுக்கலுக்கு கட்டணமாக தயாளு அம்மாளின் (மற்றும் கனிமொழியின்) கலைஞர் டிவிக்கு பணம் அனுப்பியது என்றும் சிபிஐ குற்றம் சாட்டியிருக்கிறது.

ரிலையன்ஸ் டம்மி நிறுவனங்களின் வலைப் பின்னல்களை உருவாக்கி அலைக்கற்றை உரிமம் வாங்க முயற்சித்தாலும், ரிலையன்ஸ் முதலாளி அனில் அம்பானி மீது குற்றம் சாட்டாமல் நிறுவன அதிகாரிகள் கௌதம் தோஷி, ஹரி நாயர், சுரேந்தர் பிபாரா ஆகிய 3 பேர் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறது சிபிஐ. அவர்கள் மீதான வழக்கில் சாட்சி சொல்வதை ஒட்டிதான் அனில் பாயின் மறதி இழப்பு நிகழ்ந்திருக்கிறது.

குற்றம் சாட்டப்பட்ட கௌதம் தோஷி  தன்னை சந்தித்து ஸ்வான் டெலிகாமின் ரூ 1 மதிப்புள்ள பங்குகளை ரூ 1000 விலையில் வாங்குவது குறித்து விவாதித்ததாக சிபிஐ விசாரணையில் அனில் அம்பானி கூறியிருந்தார். கௌதம் தோஷி மீதான வழக்கில் அரசுத் தரப்பு சாட்சியமாக அனில் அம்பானி அழைக்கப்பட்டிருந்தார்.

நீதிமன்றத்துக்கு வர முடியாது என்று பல முறை முரண்டு பிடித்து உச்சநீதி மன்றம் வரை மனு தாக்கல் செய்தார் அம்பானி. தயாளு அம்மாள் போல, வயது அவருக்கு சாதகமாக இல்லாத காரணத்தால் உச்சநீதிமன்றம் அவருக்கு சாதகமாக தீர்ப்பு சொல்ல மறுத்திருக்கிறது. அதைத் தொடர்ந்து தனது முன்னாள் ஊழியர்கள் மீதான வழக்கில் அரசுத் தரப்புடன் ஒத்துழைக்காமல், பிறழ் சாட்சியாக மாறியிருக்கிறார். ஒரு வேளை, மிரட்டல் அல்லது உயிருக்கான அச்சுறுத்தல் காரணமாக அவரது நினைவுத் திறன் குளறுபடி செய்கிறதோ என்று விசாரித்த நீதிபதியிடம் அப்படி எல்லாம் இல்லை என்று உத்தரவாதம் கொடுத்திருக்கிறார் அம்பானி. நீதிமன்றத்தில் தவறான வாக்குமூலம் கொடுப்பது தண்டனைக்குரிய குற்றம் என்பது தெரியுமா என்று நீதிபதி கேட்ட போது, அதையும் அம்பானி மறந்து விடவில்லை என்பது தெரிய வந்தது. ஆகவே இது குறுகிய கால நினைவு இழப்பு இல்லை, தேர்ந்தெடுக்கப்பட்ட நினைவு இழப்பு (செலக்டிவ் அம்னீசியா). தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை மறுப்பதற்கு ஜெயலலிதா டான்சி நிலபேரத்தில் உள்ளது தன கையெழுத்தையே நினைவில்லை என்று சொன்னவர். ஆனால் அத்வானிக்கு வந்ததாக அவர் சொன்னது செலக்டிவ் அம்னீசியா நோய் என்பது நல்லதொரு நகைமுரண்.

ஸ்வான் டெலிகாம் ரிலையன்சின் பினாமி கம்பெனி என்றோ, அந்த கம்பெனி 2007-ல் ஜம்மு&காஷ்மீர் சேவை வட்டாரத்தின் உரிமம் வேண்டி விண்ணப்பித்தது என்றோ, தனக்கு சுத்தமாக தெரியாது என்று கூறுகிறார் அம்பானி. முன்பு சிபிஐ-யிடம் கொடுத்த அத்தகைய தனது வாக்குமூலம் பற்றி எந்த நினைவும் இல்லை என்று சொல்லியிருக்கிறார்.

ஸ்வான் கன்சல்டன்ட்ஸ் என்ற நிறுவனத்தின் ஐசிஐசிஐ வங்கிக் கணக்கு விண்ணப்ப படிவத்தில் ஒட்டப்பட்டுள்ள கணக்கை பயன்படுத்துபவர்களின் புகைப்படமும்,  கையொப்பமும் தன்னுடையதும், தனது மனைவி டினா அம்பானியுடையதும்தான் என்று அவர் ஏற்றுக் கொண்டார். இரண்டு பேரின் வருமான வரி கணக்கு அட்டைகளின் நகலையும் அவர் அடையாளம் கண்டு கொண்டார். ஆனால், ஸ்வான் கன்சல்டன்ட்ஸின் தலைமை நிறுவனம் ரிலையன்ஸ் எனர்ஜி என்றும், அதன் உரிமையாளர்கள் தானும் தன் மனைவியும் என்றும் பிரமாணம் செய்யும் வங்கி ஆவணத்தைப் பற்றி தான் கேள்விப்பட்டதே இல்லை என்று சொல்லியிருக்கிறார்.

ஸ்வான் டெலிகாம் கூடுதலாக 13 சேவை வட்டாரங்களின் 2G அலைக்கற்றை உரிமத்துக்கு விண்ணப்பித்திருந்ததும் அப்படி விண்ணப்பிக்க கூடுதல் முதலீடு தேவைப்பட்டதால்தான் ரிலையன்ஸ் ஸ்வான் நிறுவனத்தின் பங்குகளை வாங்கியதா என்றும் சட்டத்தை ஏமாற்றுவதற்காக அந்த பங்குகளின் அளவு 9.9 சதவீதத்தை தாண்டாமல் பார்த்துக் கொண்டோமா என்பதும் தனது நினைவில் இல்லை என்று சொல்லியிருக்கிறார் அனில் அம்பானி. ஸ்வான் டெலிகாம் உண்மையில் யாருக்கு சொந்தம் என்பதை மறைக்கும் வண்ணம் அதன் பங்குகள் பிரித்துக் கொள்ளப்பட்டனவா என்றும் தனக்குத் தெரியாது என்று சொல்லியிருக்கிறார். அனில் அம்பானி பல ஆண்டுகளாக இவ்வளவு மோசமான நினைவு இழப்பு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பது இதன் மூலம் தெரிகிறது.

டைகர் டிரேடர்ஸ் (புலி டிரேடர்ஸ்), ஜீப்ரா கன்சல்டன்ட்ஸ் (வரிக்குதிரை கன்சல்டன்ட்ஸ்), பேரட் கன்சல்டன்ட்ஸ் (கிளி கன்சல்டன்ட்ஸ்), ஸ்வான் கன்சல்டன்ட்ஸ் (அன்னம் கன்சல்டன்ட்ஸ்) போன்ற பல வகை விலங்கினங்கள் பெயர் கொண்ட தொழில் முனைவு நிறுவனங்கள் இருக்கின்றனவா என்பதும் அவற்றின் இயக்குனர் கூட்டங்களில் தான் கலந்து கொண்டோமா என்பதும் அவரது நினைவுப் பதிவுகளிலிருந்து மறைந்து விட்டிருக்கின்றன. நூற்றுக் கணக்கில் புதுப்புது கம்பெனிகள் ஆரம்பிக்க வேண்டியிருக்கும் போது அவற்றுக்கு பெயர் பஞ்சம் ஏற்படுவதும் இயற்கை, அப்படி புதுசு புதுசாக உருவாக்கிய பெயர்களை நினைவில் வைத்திருக்க செய்யும் முயற்சியில் மறதி வியாதி ஏற்படுவதும் இயற்கைதான் போலிருக்கிறது.

இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ அலுவலகத்துக்கு போய் பல மணி நேரம் சிபிஐ விசாரணை அதிகாரிகளுடன் பேசியது உண்மைதான் என்றாலும் அங்கு என்ன பேசினோம் என்பது மறந்து விட்டதாகவும், அவர் சொன்னதை சிபிஐ பதிவு செய்ததா என்பதும் நினைவில் இல்லை என்றும் அம்பானி சொல்லியிருக்கிறார். நல்ல வேளையாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரையும் அனில் அம்பானிக்கு நினைவு இருக்கிறது. அவர்களது புகைப்படங்களை காட்டிய போது அடையாளம் சொல்ல முடிந்திருக்கிறது. ஆனால், அவர்கள் என்ன பதவி வகித்தார்கள் என்பது மறந்து போயிருந்தது.

அனில் அம்பானி
தொழில் முனைவர்களான அனில் அம்பானி போன்றவர்கள் சாதாரண விபரங்களைக் கூட நினைவில் வைத்திருக்க முடியாத வெறும் டம்மி பீஸ்கள்தான்.

அதாவது, அனில் அம்பானியின் நிறுவனத்தில் வேலை செய்யும் இந்த மூன்று கிரிமினல்களும், அவருக்குத் தெரியாமல் அவரை ஏமாற்றி ஸ்வான் டெலிகாம் என்ற கம்பெனியில் முதலீடு போட்டு, அதன் மூலம் அகில இந்திய 2G அலைக்கற்றை உரிமங்கள் வாங்கி லாபம் சம்பாதிக்க முயற்சித்திருக்கிறார்கள். அனில் அம்பானி இதைப் பற்றியெல்லாம் தெரியாத ஏமாளியாக இருந்திருக்கிறார் அல்லது அவரது ஞாபக மறதி வியாதி அவ்வளவு கடுமையாக இருந்திருக்கிறது.

கூடவே, தம்முடைய கடும் உழைப்பால் இந்திய பொருளாதாரத்தையே தலை தெறிக்க வளரச் செய்து கொண்டிருப்பதாக விதந்தோதப்படும் தொழில் முனைவர்களான அனில் அம்பானி போன்றவர்கள் சாதாரண விபரங்களைக் கூட நினைவில் வைத்திருக்க முடியாத வெறும் டம்மி பீஸ்கள்தான் என்றும் இதை புரிந்து கொள்ளலாம். ஆனால், அத்தகைய  ‘தொழில் முனைவுகளின்’ ஆதாயங்களை பல ஆயிரம் கோடிகளாக அறுவடை செய்வதற்கு மட்டும் அவர்களது நினைவு தப்புவதில்லை.

அனில் அம்பானியைத் தொடர்ந்து அடுத்த நாள் (வெள்ளிக் கிழமை) சாட்சியம் சொல்ல வந்த அவரது மனைவி டினா அம்பானிக்கு இந்த சிக்கல்கள் எல்லாம் இல்லை. “நான் ஒரு குடும்பப் பெண், பல சமூக சேவைகள் செய்து வருகிறேன். ஒரு மருத்துவமனை நடத்தி வருகிறேன், எனக்கும் அனில் திருபாய் அம்பானி குழுமத்தின் செயல்பாடுகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை” என்று தெளிவாக சொல்லியிருக்கிறார்.

சாட்சி சொல்வதற்கு 1 மணி நேரத்துக்கு முன்பே நீதிமன்ற வளாகத்துக்கு வந்து விட்டார் முன்னாள் பாலிவுட் நடிகையும் இன்னாள் அம்பானியுமான டினா.  55 வயதான டினாவின் வருகையை முன்னிட்டு நீதிமன்றத்தின் முன்பு பெரும் கூட்டம் கூடியிருந்தது. ஆட்டோகிராஃப் கேட்டு முண்டிய வழக்கறிஞர்களுக்கும், நீதிமன்ற ஊழியர்களுக்கும் இல்லை என்று சொல்லாமல் ஆட்டோகிராஃப் போட்டுக் கொடுத்திருக்கிறார் டினா அம்பானி. அனில் அம்பானியைப் பார்க்க வந்த கூட்டத்தை விட டினா அம்பானிக்கு அதிக கூட்டம் கூடியதாக வணிகப் பத்திரிகைகள் புளகாங்கிதத்துடன் செய்தி வெளியிட்டுள்ளன.

டினா அம்பானி
ஆட்டோகிராஃப் கேட்டு முண்டிய வழக்கறிஞர்களுக்கும், நீதிமன்ற ஊழியர்களுக்கும் இல்லை என்று சொல்லாமல் ஆட்டோகிராஃப் போட்டுக் கொடுத்திருக்கிறார் டினா அம்பானி. (படம் : நன்றி தி இந்து)

நிறுவன மேலாளர்கள் ஆவணங்களை தயாரித்துக் கொண்டு வந்தால் அவற்றில் கையெழுத்து போடுவதுதான் தன் வேலை என்றும், அவற்றை சந்தேகித்தது இல்லை என்றும், அதற்கு மேல் விபரங்கள் தெரியாது என்றும் அவர் ஒத்துக் கொண்டார். குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆறு நிறுவனங்களின் இயக்குனர்கள் குழு கூட்டத்தில் தான் கலந்து கொண்டதாக நினைவில்லை, ஆனால் தான் கலந்து கொண்டதாக கூட்டத்தின் குறிப்புகளில் (மினிட்ஸ்) எழுதியிருந்தால் அது உண்மையாகத்தான் இருக்க வேண்டும் இயக்குனர்கள் கூட்டங்களை தான் தலைமை ஏற்று நடத்தியதும், அவற்றில் பங்குகளை வினியோகிப்பது குறித்த முடிவுகள் எடுக்கப்பட்டதும், அது போலவே உண்மையாகத்தான் இருக்க வேண்டும், ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது குறித்து தனக்கு எதுவும் நினைவில்லை என்றும் சொல்லி விட்டிருக்கிறார்.

குற்றம் சாட்டப்பட்ட மூன்று ரிலையன்ஸ் அதிகாரிகளில் இரண்டு பேரை தெரியவே தெரியாது என்றும் கௌதம் தோஷியை மட்டும் தெரியும் என்று சொல்லியிருக்கிறார் டினா. அவருடன் நேரடியாக பழக்கம் இல்லா விட்டாலும், தன் வீட்டில் நடக்கும் தீவாளி விருந்துகளில் அவரை பார்த்திருப்பதாக கூறியிருக்கிறார்.

டினாவைப் பொறுத்த வரை அவர் எளிய குடும்பத் தலைவி, சமூக சேவைகளில் காலத்தைக் கழித்து வருபவர்.  அந்த சேவைகளின் ஒரு பகுதியாக அம்பானி குழுமம் பன்றிக் குட்டிகளைப் போல பெற்றுப் போடும் பினாமி நிறுவனங்களுக்கு இயக்குனராக பொறுப்பேற்றுக் கொண்டு நீட்டிய ஆவணங்களில் கையெழுத்து போட்டிருக்கிறார். டினா போன்ற முன்னாள் சினிமா நடிகையை, இன்னாள் எளிய குடும்பத் தலைவியை இயக்குனராக வைத்துக் கூட இந்தியாவின் முன்னணி நிறுவனங்கள் இயங்க முடியும் என்பது இதிலிருந்து தெரிகிறது

டினாவின் சாட்சியத்தைக் கேட்டு மன நிறைவு பெற்று விட்ட நீதிபதி சைனி “யே அம்பானி சாப் சே பெட்டர் ஹை (இவர் அம்பானி சாரை விட நல்லா பதில் சொல்றார்)” என்று டினாவை பாராட்டியிருக்கிறார். அவர்கள் சொல்லிக் கொடுத்த பாடம் நன்றாக வேலை செய்திருக்கிறது என்ற திருப்தியில் “அதனாலதான் அவங்க அவரோட பெட்டர் ஹாப்” என்று டயலாக் அடித்திருக்கிறார் அம்பானி தரப்பு வக்கீல்களில் ஒருவர்.

டினா அம்பானி
நீதிபதி சைனி “யே அம்பானி சாப் சே பெட்டர் ஹை (இவர் அம்பானி சாரை விட நல்லா பதில் சொல்றார்)” என்று டினாவை பாராட்டியிருக்கிறார். (படம் : நன்றி எகனாமிக் டைம்ஸ்)

இறுதியாக “நீங்க எங்க ஆஸ்பத்திரிக்கு கண்டிப்பா வரணும். அது நல்ல ஆஸ்பத்திரி, 107 படுக்கைகள் இருக்கு. நான் மனசார உங்களை அழைக்கிறேன். நீங்க ஆஸ்பத்திரிக்கு சிறப்பு விருந்தினரா வரலாம்” என்று டினா நீதிபதிக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். அதைக் கேட்டு நீதிபதி சைனி புன்னகை மட்டும் செய்தாராம். சீக்கிரம் கை, காலை ஒடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு வாருங்கள் என்று டினா அழைத்ததாக யாரும் தப்பாகப் புரிந்து கொண்டு விடக் கூடாது என்று,  “டினா, நீதிபதியை சிறப்பு விருந்தினராகத்தான் வரச் சொன்னார்” என்று ரிலையன்ஸ் சார்பாக ஆஜராகும் மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே விளக்கம் அளித்திருக்கிறார். நாட்டின் தலை சிறந்த வழக்கறிஞரின் அறிவு, அனில் அம்பானி போன்ற கிரிமினல்களின் ஊழல்களை சட்டப்படி நியாயப்படுத்துவதோடு, ஒரு முன்னாள் பாலிவுட் நடிகையின் உளறல்களுக்கு கோனார் உரை எழுதுவதற்கும் பயன்படுகிறது.

தனக்கு செலக்டிவ் அம்னீசியா ஏற்பட்டிருப்பதாக வாதிட்டு ஊழல் வழக்குகளிலிருந்து தப்பிக்க முயற்சித்த ஜெயலலிதா மீதான டான்சி நில வழக்கில் குற்றம் நடந்திருப்பது தெரிந்தாலும், சட்டப்படி நிரூபிக்கப்படாத காரணத்தால் வழக்கை தள்ளுபடி செய்ததை உச்ச நீதிமன்றமே உறுதி செய்தது. அது போல சிபிஐ விசாரணை, சிறப்பு நீதிமன்றம், உச்சநீதி மன்ற கண்காணிப்பு அனைத்தும் அம்பானி போன்ற கார்ப்பரேட் தரகர்களின் நலன்களை எப்போதுமே பாதுகாத்து நிற்கும் என்பது இன்னும் ஒரு முறை தெளிவாகிறது.

– பண்பரசு

மேலும் படிக்க

  1. டா டா வும் அம்பானிகளும் நீதிக்கு அதுவும் இந்தியநீதிக்கு அப்பாற்பட்டவர்கள் என்ற என்பதை கனம் அரசு வக்கீல் மறந்து போனதுதான் இவர் மறதிக்கு காரணம்!

  2. இதையெல்லாம் காமெடி படம் போல் பார்க்க வேண்டும்போல் இருக்கிறது……….. சீரியசாக எடுத்துக்கொண்டால் பைத்தியம் பிடித்துவிடும்…………. இந்த ndtv பர்கா தத் இதையெல்லாம் விவாதிக்க மாட்டார்கள் ………. அப்பறம் விளம்பரம் கொடுக்கமாட்டார்கள்………… அட போங்கடா மொக்க காமெடி படமா இருக்கு……….. ஆனா பாக்க சொல்லி கட்டாய படுத்துரானுவோ .

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க