privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காஇசுலாமிய மதவெறியருடன் சிரியாவை ஆக்கிரமிக்கும் அமெரிக்கா !

இசுலாமிய மதவெறியருடன் சிரியாவை ஆக்கிரமிக்கும் அமெரிக்கா !

-

டந்த சனிக்கிழமை அமெரிக்க அதிபர் ஒபாமா, சிரியா மீதான இராணுவத் தாக்குதலுக்கு அமெரிக்க நாடாளுமன்றத்திடம் ஒப்புதல் கேட்கப் போவதாக அறிவித்திருக்கிறார். அமெரிக்காவின் 4 நாசகாரி கப்பல்களும், 2 விமானம் தாங்கி கப்பல்களும் சிரிய கடல் எல்லைக்கு அருகில் மத்தியதரைக் கடலுக்கு அனுப்பட்டுள்ளன. அமெரிக்காவுக்கு ஆதரவாக தாக்குதலில் கலந்து கொள்வதற்காக பிரெஞ்சு விமானம் தாங்கி கப்பலும் மத்திய தரைக் கடலில் நிறுத்தப்பட்டுள்ளது. துருக்கியிலும் ஜோர்டானிலும் உள்ள அமெரிக்க விமானப் படை தளங்கள் ஆயத்த நிலையில் உள்ளன.

அமெரிக்க அதிபர் ஒபாமா
‘உலகின் மிகப் பழமையான அரசியல் சட்டத்தின் அடிப்படையிலான ஜனநாயகம்’ (அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா)

இந்நிலையில் அமெரிக்க படைகளின் தலைமை தளபதி பொறுப்பில் இருக்கும் ஒபாமா இராணுவத் தாக்குதலுக்கான இறுதி கட்டளை கொடுப்பதற்கு முன், ‘உலகின் மிகப் பழமையான அரசியல் சட்டத்தின் அடிப்படையிலான ஜனநாயகம்’ என்ற முறையில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் வாங்க முடிவு செய்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

ஆகஸ்ட் 21-ம் தேதி சிரிய தலைநகர் டமாஸ்கஸ் புறநகர் பகுதியில் நடந்த இரசாயன தாக்குதலில் 400 குழந்தைகள் உட்பட 1,500 பொது மக்கள் கொல்லப்பட்டனர். தன் நாட்டு மக்கள் மீதே இரசாயன குண்டுகளை வீசி கொலை செய்த சிரிய அரசை தண்டிக்க வேண்டியது அமெரிக்காவின் கடமை என்றும், இதை செய்யா விட்டால் இப்படிப்பட்ட கொலை பாதக அரசுகளுக்கு பயமே இல்லாமல் போய் விடும் என்றும் கூறி போர் தொடுக்கும் முடிவுக்கு ஒப்புதல் அளித்து விடும்படி அவர் அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார். ஆனால், அந்த இரசாயன ஆயுதத் தாக்குதலை நடத்தியது அதிபர் பசார் அல் அசாதை எதிர்த்து உள்நாட்டு போர் நடத்தி வரும் அமெரிக்க ஆதரவு சிரிய தேசிய இராணுவம்தான் என்று சிரிய அரசு குற்றம் சாட்டியிருக்கிறது.

இது தொடர்பான உண்மைகளை கண்டறிய ஐக்கிய நாடுகள் சபையின் ஆயுத ஆய்வாளர் குழு ஒன்று சிரியாவுக்கு சென்று தாக்குதல் நடந்த இடத்திலிருந்து ரசாயன மாதிரிகளை சேகரித்து வந்திருக்கிறது. எனினும் ஐநாவின் செயல்பாடுகளை வைத்தே அது அமெரிக்காவின் கைப்பாவை என்பது உலகறிந்த உண்மை. ரசியாவும் இந்த ரசாயன தாக்குதல் குறித்து அமெரிக்கா அளித்திருக்கும் ஆதாரங்கள் திருப்தி அளிக்கவில்லை என்று உறுதிபடக் கூறுகிறது.

சிரியா மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கு ஐநா பாதுகாப்பு சபையில் வீட்டோ அதிகாரம் வைத்திருக்கும் சீனாவும், ரஷ்யாவும் எதிர்ப்பு தெரிவிப்பதால், ஐக்கிய நாடுகளின் ஒப்புதலை பெற முடியாமல் போயிருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபை எல்லாம் தங்களை கட்டுப்படுத்தாது, ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரம் இருந்தாலும் இல்லா விட்டாலும் நாங்கள் எங்கள் போர் நடவடிக்கையை தொடர்வோம் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா ஏற்கனவே அறிவித்து விட்டிருக்கிறார். அதனால், அமெரிக்க நாடாளுமன்றத்திடமாவது ஒப்புதல் வாங்கி தாக்குதல் நடத்த முடிவு செய்திருக்கிறார். ஒருவேளை ‘தற்செயலாக’ அமெரிக்க நாடாளுமன்றமும் ஒப்புதல் மறுத்து விட்டாலும், ஏதாவது ஜனநாயகக் கடமை எனும் சாக்கில் தமது போருக்கான சட்ட ரீதியான ஒப்புதலை அமெரிக்க அரசு தேடிக் கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை.

டேவிட் கேமரூன்
சிரியா மீதான தாக்குதலில் இங்கிலாந்து கலந்து கொள்வதை பிரிட்டிஷ் நாடாளுமன்றம் நிராகரித்திருக்கிறது. (பிரிட்டிஷ் பிரதர் டேவிட் கேமரூன்)

ஒசாமா பின் லாடனுக்கு ஆதரவாக இருந்தார், பேரழிவு ஆயுதங்களை வைத்திருக்கிறார் என்று இராக் அதிபர் சதாம் உசைன் மீது குற்றம் சாட்டி அமெரிக்கா நடத்திய படையெடுப்பில் ஆயிரக்கணக்கான இராக்கிய மக்களும் குழந்தைகளும் கொல்லப்பட்டனர். இராக்கில் அத்தகைய பேரழிவு ஆயுதங்கள் எதுவும் இல்லை என்பது நிரூபணமானது அமெரிக்காவின் பயங்கரவாத செயலை உலக மக்கள் முன் அம்பலப்படுத்தியிருக்கின்றது. ஆயிரக் கணக்கான அப்பாவி இராக்கியர்களை கொன்ற போர்க்குற்றத்தை இழைத்த அமெரிக்க அரசு தண்டிக்கப்படாத நிலையில், அதே அமெரிக்கா சிரியாவின் இரசாயன தாக்குதல் தொடர்பாக உலகின் போலீஸ்காரனாக நடவடிக்கை எடுக்க தயாராகி வருகிறது.

10 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் நம்பகமான நட்பு நாடாக செயல்பட்டு, இராக் அரசிடம் பேரழிவு ஆயுதங்கள் குறித்து ஆதாரங்கள் இருப்பதாக மக்களிடம் பொய் சொல்லி இராக் மீதான படையெடுப்பில் இணைந்து கொண்டது பிரிட்டிஷ் அரசு. அந்த பொய் மக்கள் மத்தியில் அம்பலமாகி அரசு நம்பிக்கையை இழந்திருக்கும் நிலையில் இப்போது பிரதமராக இருக்கும் கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த டேவிட் காமரூன் சிரியா மீதான தாக்குதலுக்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் வாங்கப் போவதாக அறிவிக்க வேண்டி வந்தது. எதிர்பார்த்ததற்கு மாறாக அவரது சொந்த கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களே எதிர்த்து வாக்களிக்க 285-க்கு 272 என்ற கணக்கில் சிரியா மீதான தாக்குதலில் இங்கிலாந்து கலந்து கொள்வதை பிரிட்டிஷ் நாடாளுமன்றம் நிராகரித்திருக்கிறது. இருந்தாலும், சிரியா மீது அழுத்தம் கொடுப்பதற்கு தமது அமெரிக்க கூட்டாளிகளுடன் இணைந்து செயல்படப் போவதாக டேவிட் காமரூன் அறிவித்திருக்கிறார்.

ஜான் கெர்ரி
‘பிரான்ஸ் அமெரிக்காவின் மிகப் பழமையான, நம்பத் தகுந்த நட்பு நாடு’ (அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி)

பிரான்ஸ் நாட்டு அதிபர் ஹாலண்டே, சிரிய அரசின் கிரிமினல் செயல்களை பிரான்ஸ் பொறுத்துக் கொண்டு இருக்காது, பலத்த பதிலடி கொடுக்கப்படும் என்று சவுண்டு கொடுத்திருந்தார். இப்போது அமெரிக்கா நாடாளுமன்ற ஒப்புதலுக்கு காத்திருக்கப் போவதாக சொல்லி விட்டதால், ஹாலண்டேவும், நான் தனியா எல்லாம் அடிக்க முடியாது. அமெரிக்க அண்ணன் ஆரம்பிக்கும் போது நானும் சேர்ந்து கொள்கிறேன் என்று ஜகா வாங்கியிருக்கிறார்.

இதே பிரான்ஸ் 2003-ம் ஆண்டு இராக் மீதான அமெரிக்க தாக்குதலில் கலந்து கொள்ள மறுத்ததால், பிரான்சை நடபு இல்லாத நாடு என்று அறிவித்து, உருளைக் கிழங்கு வறுவலை ஃபிரெஞ்சு ஃபிரை என்று அழைக்காமல் ஃப்ரீடம் ஃபிரை என்று அழைப்பது வரை என்று கொலைவெறியோடு கிண்டல் செய்தது அமெரிக்க அரசு. இப்போது தனது போர் வெறிக்கு ஆதரவு தெரிவிப்பதால் ‘பிரான்ஸ் அமெரிக்காவின் மிகப் பழமையான, நம்பத் தகுந்த நட்பு நாடு’ (அதாவது அமெரிக்க சுதந்திர போர் காலத்திலிருந்தே) என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி கூறியிருக்கிறார்.

சிரியாவை 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆண்டு வரும் பாத் கட்சியின் சர்வாதிகார ஆட்சியில் அல் பசார் ஆசாத் இப்போது அதிபராக இருக்கிறார். மதசார்பற்ற அவ்வரசின் கீழ் மக்களின் அடிப்படை அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்டு வந்தன.

அல் பசார் ஆசாத்
பாத் கட்சியின் சர்வாதிகார ஆட்சியில் அல் பசார் ஆசாத் (சிரியா)

சிரிய அரசு இரானை ஆதரிப்பதாலும், இஸ்ரேலை எதிர்க்கும் லெபனானைச் சேர்ந்த ஹெஸ்புல்லா போராளிக் குழுவையும், பாலஸ்தீன விடுதலைக்காக போராடி வரும் ஹமாசையும் ஆதரிப்பதாலும், இஸ்ரேல் சிரியாவின் கோலன் மலைக் குன்றின்  ஒரு பகுதியை ஆக்கிரமித்திருப்பதை விலக்கிக் கொள்ள கோருவதாலும், சிரியா அமெரிக்காவின் எதிரி ஆகியிருக்கிறது. சிரியாவின் மீதான அமெரிக்க கழுகின் குறி இன்று நேற்று வைக்கப்பட்டதல்ல. ஈரானை பலவீனப்படுத்தவும், இஸ்ரேல் எதிர்ப்பை மழுங்கடிக்கவும், எண்ணெய் வளங்களை கட்டுக் கொண்டு வரவும் சிரியாவில் ஆட்சி மாற்றம் வர வேண்டும் என்று முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் 2003-ம் ஆண்டிலேயே அறிவித்திருந்தார். அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய சக்திகளை சமாதானப்படுத்த அதிபர் அஸாத் பல அரசியல் சீர்திருத்தங்களை அறிவித்திருந்தாலும் அமெரிக்கா எனும் போர் வெறி ஓநாய் இரத்தம் குடிக்கும் தமது தாகத்தை அடக்கிக் கொள்வதாயில்லை.

அமெரிக்காவின் எதிரி சிரியாவை தாக்குவதற்கு இஸ்ரேலின் எதிரி சவுதி அரேபியா தனது வகாபியிச ஆதரவை சிரிய எதிர்ப்பு கலகக்காரர்களுக்கு வழங்கி வருகிறது. ஆப்கானிஸ்தான், ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் செயல்பட்டு வந்த கூலிப் படையினர், மத அடிப்படைவாதக் கட்சியான முசுலீம் சகோதரத்துவக் கட்சி, பயங்கரவாத கும்பலான அல் கொய்தா ஆகிய கூட்டணியினர்தான் சிரிய அரசுக்கு எதிராக அமெரிக்காவால் ஆதரிக்கப்படும் எதிர் தரப்பினரின் யோக்கியதை.

சிரியாவில் அரசு மாற்றம் ஏற்பட்டால் மத்திய ஆசிய எண்ணெய் மீதான தனது கட்டுப்பாடு இன்னும் அதிகமாகும் என்ற கணக்கில் அமெரிக்கா இத்தகைய ‘ஜனநாயக’ சக்திகளுடன் இணைந்து தனது போர் எந்திரத்தை சிரியா மீது அவிழ்த்து விட்டிருக்கிறது. சிரியா மீது போர் தொடுக்கப் போகிறோம் என்று அமெரிக்கா அறிவித்த உடனேயே ஒரு பீப்பாய்க்கு ரூ 5,000 அளவில் இருந்த எண்ணெய் விலை ரூ 7,500 வரை உயர்ந்திருக்கிறது. பன்னாட்டு எண்ணெய் வர்த்தகத்தை கட்டுப்படுத்தும் அமெரிக்க-பிரிட்டிஷ் பெரு நிறுவனங்களுக்கு போர் மிரட்டல் சவடால்களின் மூலமாகவே பெரும் ஆதாயம் கிடைத்து விட்டது. ஆனாலும், போர் தளவாடங்களை வழங்கும் ஒப்பந்த நிறுவனங்கள் முதல் இராணுவ வீரர்களுக்கு இறைச்சி சப்ளை செய்யும் நிறுவனங்கள், சீருடை வழங்கும் நிறுவனங்கள், தொலை தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் என்று பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான காண்டிராக்டுகள் காத்திருக்கும் நிலையில் எப்படியாவது சீக்கிரம் போரைத் தொடங்கி விட அமெரிக்க அரச நினைக்கிறது.

சிரியாவின் ‘சுதந்திர சிரிய’ இராணுவத்தினருக்கு பயிற்சி அளித்தல், ஆயுதம் வழங்குதல் போன்ற பயங்கரவாத நடவடிக்கைகளின் மூலம் 20,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள்  கொல்லப்படுவதற்கும், 50,000-க்கும் மேற்பட்ட கிருத்துவர்கள் அகதிகளாக வெளியேறுவதற்கும் காரணமாக இருந்திருக்கிறது அமெரிக்கா. இசுலாமிய முறைப்படி தொழுகை செய்ய தெரியாத மக்களை கொடூரமாக சுட்டுக் கொல்வது, பொது மக்கள் மத்தியில் பயங்கரவாதத்தை அவிழ்த்து விடுவது, என்று இஸ்லாமிய அடிப்படைவாத போரை நடத்தி வருகின்றன சிரிய விடுதலை இராணுவத்தினர்.

அல்கைதா முதல் சவுதி வரையிலான சன்னி பிரிவு வகாபி தீவிரவாதிகள்தான் அமெரிக்காவின் காலை நக்கிக் கொண்டு அமெரிக்காவின் காசு, துப்பாக்கி சகிதம் சிரியாவின் விடுதலைக்கு போராடுகின்றனராம். இவர்கள் பேசும் இசுலாமிய சகோதரத்துவம் என்பது நடைமுறையில் ஷியா பிரிவு இசுலாமிய மக்களை அன்றாடம் கொல்வதாகவே இருக்கிறது. சிரியாவைப் பொறுத்தவரை இந்த இசுலாமிய அடிப்படை வாதம் ஏகாதிபத்தியத்தின் வேட்டை நாயாக செயல்படுகிறது.

பாத் கட்சியைச் சேர்ந்த அதிபரின் சர்வாதிகாரத்துக்கும், அமெரிக்க ஆதரவு இசுலாமிய பயங்கரவாதிகளின் கொடூரத்துக்கும் நடுவில் சிக்கிய சிரிய மக்களின் வாழ்க்கை ஈவு இரக்கமின்றி சிதறடிக்கப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க