Tuesday, May 6, 2025
முகப்புமறுகாலனியாக்கம்கல்விஉசிலையில் அரசுப் பள்ளி ஆதரவு ஆர்ப்பாட்டம் !

உசிலையில் அரசுப் பள்ளி ஆதரவு ஆர்ப்பாட்டம் !

-

அரசு பள்ளிகளைத் தரம் உயர்த்து!
தனியார்பள்ளி கல்விக் கொள்ளைகளை தடுத்து நிறுத்து!

என்ற அடிப்படையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தேனி ரோடு, முருகன் கோவில் அருகில் 30.8.2013 அன்று காலை 11 மணியளவில் மனித உரிமை பாதுகாப்பு மையம் (HRPC) சார்பில் தொடர் முழக்கப் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HRPC-ன் மாணவர் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் செயலாளர் தோழர். ஜெயப்பாண்டி தலைமையில் நடந்த இந்த தொடர் முழக்க ஆர்ப்பாட்டத்தில் HRPC-ன் மதுரை மாவட்ட செயலாளர் தோழர் லயனல் அந்தோனிராஜ், மகஇக மாநில செயற்குழு உறுப்பினர் தோழர். கதிரவன், உசிலை வட்டார விவிமு. செயலாளர் தோழர். குருசாமி மற்றும் வழக்கறிஞர்கள், விவிமு தோழர்கள் கண்டன உரை ஆற்றினார்கள். இந்தப் தொடர் முழக்க ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டார்கள். இந்த தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் உசிலம்பட்டி பகுதியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தோழர் ஜெயப்பாண்டி தனது தலைமை உரையில், “அரசு பள்ளிகளில் பெரும்பான்மையான ஆசிரியர்கள் தனியார் பள்ளி ஆங்கில வழி கல்விக்கு சாதகமாக பொறுப்பின்றி நடந்து கொள்கிறார்கள். உதாரணமாக பள்ளிக்கு தாமதமாக வருவது, பாடம் நடத்தாமல் இருப்பது, தங்கள் மீது நம்பிக்கையில்லாமல் தங்களது பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்ப்பது போன்ற பல செயல்களை செய்து மக்களுடைய வரிப்பணத்தில் சம்பளத்தை பெற்றுக்கொண்டு அந்த மக்களின் குழந்தைகளுக்கு பொறுப்பாக பாடம் கற்பிக்காத பொறுப்பற்ற தன்மையை” விளக்கி பேசினார்.

தோழர். லயனல் அந்தோனிராஜ் தனது உரையில், தாய்மொழி வழிக்கல்வியின் அவசியம் பற்றியும், ஆங்கிலத்தை மொழிப் பாடமாக மட்டும் ஏன் கற்பிக்க வேண்டும் என்றும் அரசு திட்டமிட்டே அரசு பள்ளிகளை ஒழிக்கவும், தனியார் முதலாளிகள் கொள்ளையடிக்கவும் வழிவகை செய்வதையும், அரசு பள்ளிகளின் இன்றைய நிலை, அதனை தரம் உயர்த்த வேண்டியதன் அவசியம் ஏன் என்பது பற்றியும் சிறப்பாக விளக்கிப் பேசினார்.

தோழர். கதிரவன் தனது உரையில், “மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டத்தைச் சேர்ந்த கொப்பிலிபட்டி, ஆரியபட்டி, பாப்பாபட்டி பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களது பிள்ளைகள் நல்ல உயர்ந்த வேலைக்கு போனால்தான் அவர்களின் எதிர்காலம் நல்லபடியாக அமையும் என்ற எண்ணத்தோடு ஆட்டோ மற்றும் தனியார் பள்ளி வாகனங்களில் ஏற்றி மெட்ரிக் கள்ளிக்கு அனுப்பி தனது உழைப்பையும், பணத்தையும் வீணாக்குகிறார்களே, மெட்ரிக் பள்ளிகளில் படிப்பவர்களெல்லாம் உயர்ந்த வேலைக்கு சென்று விடுகிறார்களா?

என்னிடம் ஒரு இளைஞன் தமிழும் ஆங்கிலமும் கலந்து பேசி ஒரு என்சைக்ளோபீடியா புத்தகத்தை இலவசம் என கொடுத்து இந்த இலவசப் புத்தகம் வேண்டுமானால் ரூ. 2,500/-க்கு வேறு தலைப்புகளில் 5 புத்தகங்களை வாங்க வேண்டுமென்றான். தம்பி உனக்கு தமிழ் தெரியுமா? என்று கேட்டேன் தெரியும் என்றான் அப்படியானால் தமிழிலேயே பேசு என்றேன். ஏன் இப்படி ஆங்கிலம் கலந்து கலந்து பேசுகிறாய் என்று கேட்டதற்கு கம்பெனியில் இப்படித்தான் பேசச்சொல்லி பயிற்சி கொடுத்துள்ளார்கள் என்றான். நீ எங்கே படித்தாய் என்று கேட்டதற்கு டி.வி.எஸ் மெட்ரிக் பள்ளியில் படித்தேன் என்றான். இந்த புத்தகங்களை தெருத்தெருவாக விற்பதற்கு எதுக்கு மெட்ரிக்குலேசன்ஸ் படித்தாய் என்று கேட்டேன். ஆக மெட்ரிக் பள்ளியில் படித்தவங்களெல்லாம் சிறப்பான வேலைக்கு சென்று விட முடியாது என்பதை உணர்ந்து, புரிந்து தெளிவாகப் படிக்க வேண்டுமென்றால் அதற்கு தமிழ் வழிக் கல்விதான் சிறந்தது” என்று எடுத்துரைத்தார்.

மனித உரிமை பாதுகாப்பு மையம் மதுரை மாவட்ட துணைத் தலைவர் வழக்கறிஞர் நடராஜன் தனது உரையில் தனியார் பள்ளிகளின் முதலாளிகள் எப்படியெல்லாம் கொள்ளையடிக்கிறார்கள் அரசு அவர்களுக்கு எப்படியெல்லாம் சாதகமாக செய்ல்படுகிறது என்று அரசை கண்டித்து பேசினார்.

வழக்கறிஞர் ராஜசேகர் (HRPC) தனது கண்டன உரையில் நமது கனிமவளங்கள், தண்ணீர், மருத்துவம், கல்வி அனைத்தும் தனியார் மயமாக்கப்பட்டு நமது அடிப்படை உரிமைகள் கொஞ்சம் கொஞ்சமாக பறிக்கப்படுவதை, நாடு மறுகாலனியாவதை விளக்கிப் பேசினார்.

தோழர். குருசாமி தனது உரையில், “அரசு பள்ளிகளில் படிப்பது ரேசன் கடைகளில் புழுத்த அரிசியை வாங்கி உயிர் வாழ்வது போலவும், தனியார் பள்ளிகளில் படிப்பது கடைகளில் பொன்னி அரிசி வாங்கி உயிர் வாழ்வது போலவும் என்று மக்கள் புரிந்து இருக்கிறார்கள். என்னதான் எப்படித்தான் படித்தாலும் நம்மில் மிகக் குறைந்த நபர்களே முதலாளிகளுக்கு வேலைக்கு தேவைப்படுகிறார்கள். கம்யூட்டர்களும், இயந்திரங்களுமே நமது வேலைகளை முடித்து விடும் காலத்தில் நாம் லட்ச லட்சமாய் பணம் செலவழித்தாலும் நமது பணமும் உழைப்பும் முதலாளிகளால் படிப்பின் மூலம் கொள்ளையடிக்கப்படிகிறது” என்றும், மோசமான ஆசிரியர்கள் இருப்பதைப் போலவே நிறைய நல்ல ஆசிரியர்கள் உண்மையாக உழைப்பதையும் விளக்கி பேசினார்.

தோழர் ஆசை (விவிமு) தனது உரையில், “அரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் சுதந்திரமாகவும், தன்னம்பிக்கையோடும் இருப்பதாகவும், மெட்ரிக் பள்ளியில் படிக்கும் பெரும்பாலான குழந்தைகள் மன இறுக்கத்துடன் வாழ்வதையும்” குறிப்பிட்டு விளக்கிப் பேசினார்.

இறுதியாக மனித உரிமை பாதுகாப்பு மையம் செயற்குழு உறுப்பினர் தோழர். ரவி நன்றி உரை கூறி தொடர் முழக்க ஆர்ப்பாட்டத்தை 2 மணிக்கு நிறைவு செய்தார்.

ஆர்ப்பாட்டம் தொடங்க வேண்டிய 10 மணியளவில் அருகில் உள்ள முருகன் கோவிலின் மண்டல பூஜை என மந்திரங்கள் ஓதிக்கொண்டிருந்தனர்.

நமது ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்துள்ளதாகவும், கலைந்து செல்லும்படியும் காவல்துறை சொல்லிக் கொண்டிருந்த சமயம் அனுமதி மறுக்கப்பட்டது நமக்கல்ல தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணிக்கு என மேலிருந்து தகவல் வர மன்னிப்பு கேட்டு நமது ஆர்ப்பாட்டம் தாமதமானதால் கேட்ட நேரத்தை விட கூடுதலாக எடுத்துக் கொள்ளுங்கள் என கூறி சென்றார்கள்.

அதே சமயம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டனியினர் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்கு! பழைய முறைப்படி ஓய்வூதியம் வழங்கு! என அவர்களின் பொருளாதார நலன்களுக்காக ஆர்ப்பாட்டம் செய்து கைதானார்கள். அடுத்து நமது ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆக ஒரே சமயத்தில் மக்களின் பொது எதிரி யார் என மக்கள் பார்க்காத வண்ணம் முருகன் கோவில் மண்டல பூஜை நடத்திக் கொண்டிருந்தனர்.

மக்கள் எக்கேடு கெட்டால் என்ன? கல்வி தனியார்மயத்தைப் பற்றி துளியும் பேச மாட்டேன் எனும் விதமாய் பொருளாதார நலன்களை மட்டும் வலியுறுத்தி ஒரு போராட்டம், ஆனால் நமது போராட்டம் மட்டும்தான் மக்களின் பொது எதிரி பன்னாட்டு நிறுவனங்களும் அரசும்தான், மறுகாலனியாகிறது இதற்கு புதிய ஜனநாயகப் புரட்சியின் மூலம்தான் தீர்வு காண முடியும் என தெளிவாக எடுத்துக்காட்டியது.

ஆர்ப்பாட்ட முழக்கங்கள்!

ஆர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டம்!
தொடர்முழக்க ஆர்ப்பாட்டம்!
HRPC ஆர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டம்!
பெற்றோர் சங்க ஆர்ப்பாட்டம்!
கல்விக்கான ஆர்ப்பாட்டம்!
தனியார் கல்வி வியாபாரிகளின்
கட்டணக் கொள்ளையை எதிர்த்து நடக்கும் ஆர்ப்பாட்டம்!

தரம் உயர்த்து! தரம் உயர்த்து!
அரசு பள்ளிகளைத் தரம் உயர்த்து!

நியமனம் செய்! நியமனம் செய்!
ஆசிரியர்களை நியமனம் செய்!

தடுத்து நிறுத்து! தடுத்து நிறுத்து!
தனியார் பள்ளிகளைத் தடுத்து நிறுத்து!
கட்டணக் கொள்ளையைக் கட்டுப்படுத்து!

தூண்டாதே! தூண்டாதே!
ஆங்கில மோகத்தை தூண்டாதே!

திணிக்காதே! திணிக்காதே!
அடிமை மோகத்தை திணிக்காதே!

கட்டாயமாக்கு! கட்டாயமாக்கு!
அனைத்துப் பள்ளிகளிலும்
தமிழ்மொழியைக் கட்டாயமாக்கு!

தமிழ் நாட்டில் தமிழ்க்கல்விக்கு
தடையா? தடையா?

வெட்கக்கேடு! வெட்கக்கேடு!
மானக்கேடு! மானக்கேடு!

அவமானம்! அவமானம்!
தமிழுக்கு அவமானம்!
தமிழனுக்கு அவமானம்

ஆசிரியர் இல்லை! வகுப்பறை இல்லை!
மரத்தடியில் மாணவர்கள்!

ஆரம்பக்கல்வியில் மாணவர் இல்லை!
ஆங்கில மோகம் ஆதிக்கம் செலுத்துது!
அரசுப் பள்ளியோ சாகக் கிடக்குது!

கழிப்பறை இல்லை! குடிநீர் இல்லை!
கட்டிடம் இல்லை! நூலகம் இல்லை!
காம்பவுண்டும் இல்லை! காவலும் இல்லை!
துரோகம் இது! துரோகம் இது!
தமிழக அரசின் துரோகம் இது!
ஜெயலலிதாவின் துரோகம் இது!

கல்வி எனும் கோவிலிலே!
சமூக விரோதிகள் கூட்டம்!
கேவலம் அவமானம்!

ஏன் இந்த அவலம்! ஏன் இந்த அவலம்!
அரசாங்கத்தின் பாரமுகமே காரணம்!

ஓராசிரியர் பள்ளியை ஒழிக்கவில்லை!
மாறாக ஓராசிரியருக்கு மூன்று பள்ளி!
இதுதான் அரசு கல்வி வழங்கும்
லட்சணமா? லட்சணமா?
கேவலம் அவமானம்!

திட்டமிட்டு திணிக்குது!
ஆங்கிலவழிக் கல்வியை!

துரோகம் இது! துரோகம்!
ஜெயலலிதாவின் துரோகம்!

அன்னைத் தமிழை அழிக்கத் துடிக்கும்
அம்மாவின் துரோகம்!

தாய்மொழிக்கல்வியே!
தலைசிறந்த கல்விமுறை!

உலகம் முழுதும் சொல்லுது!
ஏற்று அமல்படுத்தது!

தமிழகத்தில் மட்டும் மறுக்குது!
ஆங்கிலத்தை திணிக்குது!

அரசு பள்ளி மாணவர்கள்
அள்ளிக் குவிக்கிறான் மார்க்குகளை!

அதிகம்பேர் படிக்கிறான்!
ஆசிரியரும் உழைக்கிறார்!

ஒத்துழைக்க மறுக்குது!
ஓரங்கட்ட பாக்குது!
மானங்கெட்ட அரசுகள்!

ஆலைகள் எல்லம் தனியார்மயம்!
சாலைகள் எல்லாம் தனியார்மயம்!
தண்ணிகூட தனியார்மயம்!

எல்லாம் தனியார் என்றால்?
யாருக்காக அரசாங்கம்!
தனியாருக்குத்தான் அரசாங்கம்!

உரிமைகளைப் பறிக்கும் அரசாங்கமே!
ஓட்டுக் கேட்டு வராதே!
வந்தால் பிய்யும் விளக்குமாறு!
எச்சரிக்கை! எச்சரிக்கை!
தனியார் கல்வியைக் கைவிடு!
அரசு கல்வியை உயர்த்திடு!

பெற்றோர்களே! பெற்றோர்களே!
ஆங்கில மோகத்தை கைவிடுங்கள்!

நம்பி மோசம் போகாதே!
நடுத்தெருவில் நிற்காதே!

ஆங்கிலம் படித்தால் வேலை!
இல்லை என்றால் வெட்டி!
என்று சொல்வது ஏமாற்று!

தாய்மொழிக் கல்வியே!
கண் போன்றது!
ஆங்கிலவழிக் கல்வி
புண் போன்றது!

ஆதலினால் பெற்றோரே
தாய்மொழிக் கல்வியை ஆதரிப்பீர்!
அரசுப் பள்ளியில் பிள்ளையைச் சேர்ப்பீர்!

வாழ்வில் வெற்றி நிச்சயம்!
காண்பீர் இந்த அதிசயம்!

மனித உரிமைப் பாதுகாப்பு மையம் வாழ்க!
மாணவர் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் வாழ்க!!

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் :
விவசாயிகள் விடுதலை முன்னணி, உசிலை