Sunday, July 5, 2020
முகப்பு மறுகாலனியாக்கம் ஊழல் விதர்பா : தொடரும் விவசாயிகளின் வேதனை !

விதர்பா : தொடரும் விவசாயிகளின் வேதனை !

-

டந்த ஜூலை மாத துவக்கத்தில் பெய்த கடும் மழையினால் மகாராஷ்டிர மாநில பருத்தி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். விதர்பா பகுதியின் யவட்மால் மாவட்டத்தில் மாத்திரம் சுமார் 30 பேர் வரை அப்போது வெள்ளத்தில் சிக்கி இறந்துள்ளனர். ஏறக்குறைய 650 குடும்பங்கள் வீட்டை இழந்துள்ளன. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் சுமார் 24 விவசாயிகள் இம்மாவட்டத்தில் கடன் சுமை தாங்காமல் தற்கொலை செய்திருக்கின்றனர். இப்பகுதியில் இந்த ஆண்டு மட்டும் விவசாயிகள் தற்கொலைகளின் எண்ணிக்கை 604 என்கிறார்கள் விதர்பா ஜனந்தோலன் சமிதி என்ற விவசாயிகள் சங்கத்தை சேர்ந்தவர்கள்.

விவசாயிகள் தற்கொலைஉமர்கெட் நகரத்திற்கு அருகில் உள்ள குவாதி கிராமத்தை சேர்ந்த மஞ்சக் ஜாதவ் என்ற விவசாயி கடந்த மாதம் தற்கொலை செய்து கொண்டார். அவரது சகோதரி கூறுகையில், தற்கொலை நடந்த பிறகும் கூட எந்த அரசு உதவியோ அல்லது பயிர்க்கடனோ வழங்கப்படவில்லை என்று குற்றம் சாட்டுகிறார். கடந்த மாதம் வெள்ளப்பகுதியைப் பார்வையிட்ட முதல்வர் பிரித்விராஜ் சௌகான் ரூ 1,934 கோடிக்கான நிவாரணத் தொகையை அறிவித்திருக்கிறார். ஆனால் 2006-ல் ஏற்பட்ட வெள்ளத்திற்கு அறிவிக்கப்பட்ட நிவாரணத் தொகையே விவசாயிகளுக்கு இப்போதுதான் இங்கு வந்து சேர்ந்திருக்கிறதாம்.

விவசாயிகள் தமது கையில் உள்ள அனைத்தையும் தங்களது நிலத்தில் கொட்டி இருப்பார்கள். பயிர்கள் நீரில் மூழ்கி, அனைத்தும் சேதமடைந்து விட்டதால் விதர்பா பகுதி முழுக்க சோகத்தில் மூழ்கி இருக்கிறது. விதர்பாவின் மேற்கு மாவட்டங்களான யவட்மால், வாசிம் போன்றவற்றில் இலட்சக்கணக்கான மக்கள் குடியிருந்த வீடுகளையும் இழந்துள்ளனர்.

ஏறக்குறைய 80 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட நெல், பருத்தி, துவரை, சோயா போன்றவை நீரில் மூழ்கியதால் விவசாயிகளுக்கு பெருத்த நட்டம் ஏற்பட்டுள்ளது. யெவட்மால் மாவட்ட நிர்வாகம் பாதிக்கப்பட்ட நிலத்தை அளவிட்டதில் 43,000 ஹெக்டேர் மட்டும்தான் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. மாவட்ட ஆட்சியர் சேதங்களை குறைத்து மதிப்பிடுவதாகவும், நடந்த விவசாயிகள் தற்கொலை எல்லாம் வெள்ள சேதாரங்களால் நடக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

யெவட்மால் மாவட்டத்தை சேர்ந்த அனில் மரோப் என்ற 40 வயது விவசாயி தனது ஐந்து ஏக்கர் நிலத்தில் ஜூன் மாதம் பருத்தி விதைத்தார். இதற்காக ரூ 45 ஆயிரம் கடன் வாங்கினார். இருபது நாட்களில் கடுமையான மழை பெய்து விடவே முளைத்திருந்த பருத்திச் செடி தண்ணீரில் மூழ்கி நின்றது. தண்ணீர் வடிந்த பிறகு மறுவிதைப்பு செய்ய காத்திருந்த அனில் மரோப்-ன் நிலம் சரி செய்யப்படவே நீண்ட நாட்கள் ஆகும் என்றும், இன்னும் அதிகம் கடன் தேவைப்படும் என்றும் தெரிய வந்தது. மீண்டும் விதைத்து, விளைச்சலை எடுத்து கடனை அடைக்க முடியாது எனத் தெரிய வந்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டார். அவரது மனைவி ராதாபாயும், நான்கு குழந்தைகளும் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். இன்னும் அங்குள்ள விளைநிலங்களில் நீர் வடிய வைக்க அரசு எந்த முயற்சியையும் எடுக்காத காரணத்தால் மறு விதைப்பு செய்ய விவசாயிகள் இன்னும் இரண்டு மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்பது தான் எதார்த்தம்.

அரசு இந்த முறை ரூ 30 கோடி மட்டும்தான் பாதிக்கப்பட்ட 3 மாவட்டங்களுக்கும் சேர்த்து நிவாரண உதவியாக தரத் திட்டமிட்டுள்ளது. இதற்குள்தான் நிலம், கால்நடைகள், வீடுகள் என எல்லாவற்றிலும் ஏற்பட்ட சேதாரங்களுக்கான நட்ட ஈட்டை மக்கள் பெற்றுக்கொள்ள வேண்டும்.

இதற்கிடையில் சந்தர்பூர் மாவட்டத்தில் மாத்திரம் நான்கு லட்சம் ஹெக்டேர் நிலம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், 1,000 கி.மீ தூரத்துக்கும் மேற்பட்ட சாலைகள் சீரமைக்கப்பட வேண்டியிருப்பதாகவும், 14 பாலங்களை பழுது பார்க்க வேண்டும் என்றும், சுகாதார முன்னெச்சரிக்கைக்காக நிதி ஒதுக்கீடு தேவை என்றும் செப்டம்பர் 2-ம் தேதி காங்கிரசு நாடாளுமன்ற உறுப்பினர் விலாஸ் முட்டம்வார் லோக்சபாவில் பேசியுள்ளார். நாக்பூரின் குடிசைப் பகுதிகளையும் சேர்த்து சீரமைக்க குறைந்தபட்சம் ரூ 1,000 கோடியாவது தேவை என்றும் கூறி உள்ளார்.

இந்த ஆண்டு விதர்பா பகுதியில் மழை விகிதம் அதிகம் என்றாலும் அரசு எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அதைவிடக் கொடுமை இரண்டு மாத காலமாக சேதார மதிப்பையும் அரசு நிர்வாகம் கணக்கிட்டு முடிக்கவில்லை. மாற்று ஏற்பாடுகள் ஏதுமில்லாத சூழலில் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்கள் வீடிழந்து, வளர்த்த ஆடு, மாடுகளை இழந்து, பயிர் செய்த நிலத்தை இழந்து, பயிரிட்ட விவசாயியை இழந்து நடுத்தெருவில் நிற்கின்றனர். அரசு சேதாரங்களை விவசாயிகள் கூட்டிச் சொல்கிறார்கள் என பிலாக்கணம் பாடுகிறது.

உலகமயமானது விதர்பா பருத்தி விவசாயிகளை கடன்சுமை தாளாமல் கடந்த இருபதாண்டுகளாக தற்கொலைக்கு தள்ளி வருகிறது. உலக முதலாளிகளின் உள்ளூர் கூட்டாளிகளான ஆளும் வர்க்கமோ விவசாயிகளை விவசாயத்திலிருந்து மட்டுமல்ல உலகத்திலிருந்தும் தன் பாராமுகத்தால் துரத்துகிறது.

மேலும் படிக்கற

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

  1. விவசாயிகளின் இறப்பும், விவரிக்க முடியாத சோகமும் இன்று வெறுமனே செய்திகளாகவே போய்க் கொண்டிருக்கின்றது. மரபணு மாறற விதைகள் மூலம் எதிர்கால இந்திய விவசாயம் யாரோ ஒரு தனிப்பட்ட நிறுவனத்தின் கையில் நாம் அனைவரும் சிக்கிக் கொண்டிருப்பதை உணரும் போது அப்போதும் அறிக்கைகள் தினந்தோறும் பத்திரிக்கைகளில் வந்து கொண்டிருக்கும். நாமும் அதை படித்துக் கொண்டே இருக்கப் போகின்றோம்.

    மரபணு மாற்ற விதைகள் — பயங்கரத்தின் கதை 4

    http://deviyar-illam.blogspot.in/2013/09/4.html

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க