Saturday, September 21, 2024
முகப்புகட்சிகள்அ.தி.மு.கஅம்மா அருளாசியுடன் தமிழில் "தி இந்து" !

அம்மா அருளாசியுடன் தமிழில் “தி இந்து” !

-

ஜெயாவின் அவதூறு வழக்குகளால் விஜயகாந்தும், கருணாநிதியும் மட்டும் அரண்டு போயிருக்கவில்லை, பத்திரிகைகளும்தான். ஏற்கனவே தி இந்துவின் மாலினி பார்த்தசாரதியை கைது செய்தே ஆக வேண்டும் என்று ‘அம்மா’ ஓட, ஓட விரட்டியது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். இதையடுத்து இந்து ராம் தலைமைச் செயலகம் சென்று பூச்செண்டு கொடுத்து அம்மாவை குளிர வைத்து சமாதானம் செய்தார். அதன்பிறகு ஆங்கில இந்துவில் மறந்தும் கூட ஜெயலலிதாவைப் பற்றி விமரிசனங்கள், குறைகள் ஏதும் வருவதில்லை.

இந்து ராம், ஜெயலலிதா
இந்து ராம், ஜெயலலிதா

இருப்பினும் எதிர்க்கட்சி தலைவர்கள் ஜெயாவை விமரிசித்தார்கள் என்ற செய்தியை போட்டதற்கே ஆங்கில இந்துவின் மேல் தமிழக அரசு அவதூறு வழக்கு போட்டது. அதன்பிறகு அத்தகைய செய்திகளும் இந்துவில் வெளிவருவதில்லை. இந்தப் பின்னணியில் தமிழில் வெளிவந்திருக்கும் ‘தி இந்து‘வைப் பார்க்க வேண்டும்.

ஆங்கில இந்து போல தமிழிலும் நாளிதழைக் கொண்டு வரவேண்டும் என்பது நூறு ஆண்டு காலக் கனவு என்று தலையங்கத்தில் குறிப்பிடுகிறார் அதன் ஆசிரியர் அசோகன். அரசுப் பேருந்துகளில் ரூ.10க்கு ஒரு லிட்டர் குடிநீர் கொடுக்கும் அம்மாவின் திட்டமே நூறாண்டு கடந்து வந்திருக்கும் கனவு இந்துவின் தலைப்புச் செய்தி. பொதுவில் செய்திகளில் கருத்தோ, கண்ணோட்டமோ தருவது தவறு என்ற கொள்கையை கொண்டிருக்கும் இந்து நாளிதழ் இதில் ஒரு மெல்லிய விமரிசனத்தை அல்லது கருத்தை தூவி விட்டிருக்கிறது.

அது பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவது சுற்றுச் சூழலுக்கு கேடு என்று பிரச்சாரம் செய்யும் அரசு இந்தக் குடிநீரை பிளாஸ்டிக் பாட்டில்களில் பயன்படுத்துவது எங்ஙனம் என்று சுற்றுச் சூழலியவாதிகள் கேட்கின்றனராம். அதாவது இதைக்கூட தி இந்து கேட்கவில்லை. அதனால் அந்த பாட்டில்களை மீண்டும் மக்களிடமே ஒரு விலைக்கு வாங்கி மறுசுழற்சி செய்து பயன்படுத்தலாமே என்று பணிவாக முன்வைக்கிறது தி இந்து.

சரி, பிளாஸ்டிக்கை விட குடிநீரை காசு கொடுத்து வாங்குவது தனியார்மயத்தின் விளைவல்லவா, அதை ஊக்குவிப்பது போல அரசே செய்வது நியாயமா என்று இந்துவுக்கு தோன்றவில்லை. மேலும் அரசு கட்டிடங்கள், நிலையங்களில் இலவசமாக தரமான குடிநீர் வழங்க வேண்டிய அரசாங்கம் அதை காசுக்கு விற்பது எந்த விதத்தில் நியாயம் என்றும் அந்த அறிவாளிகளுக்குத் தோன்றவில்லை. இதெல்லாம் கருத்து வகைப்பட்டது என்றால் பிளாஸ்டிக் வேண்டாம் என்பது மட்டும் என்னவாம்? அம்மா என்றால் தி இந்துவுக்கும் பயம் பயம் எனும் போது அங்கே கருத்து, விமரிசனம், நடுநிலைமை எதற்கும் இடமில்லை. செப்டம்பர் 12 அன்று தண்ணீர் தனியார் மயம் குறித்து கட்டுரை வெளியிட்டிருக்கும் தி இந்து அதில் தண்ணீர் மக்களது அடிப்படை உரிமை என்று எழுதியிருக்கிறது. ஆனால் நான்கு நாட்களுக்குள் தலைப்புச் செய்தியில் அந்தக் கருத்து ஒளிந்து விட்டது.

இந்தக் குடிநீர் புரட்சி குறித்த படத்தை மட்டும் முதல் பக்கத்தில் போட்ட தினமணி, செய்தியை விரிவாக கடைசிப் பக்கத்தில் போட்டிருக்கிறது. இதனால் தினமணி விசுவாசி அல்ல என்பதல்ல. இன்று மோடிக்கு முதல் பக்கம் ஒதுக்கப்பட்டிருப்பதால் அம்மாவுக்கு கடைசி பக்கத்தில் ஒதுக்கப்பட்டிருக்கிறது. தினமணியைப் பொறுத்தவரை அம்மாவுக்கும் ஆர்.எஸ்.எஸ்க்கும் அடியாள் என்பதால் இந்த நிலைமை. அப்பேற்பட்ட அம்மா விசுவாசத்தில் தினமணியையும் விஞ்ச வேண்டும் என்று தி இந்து முடிவு செய்திருக்கும் போலும். இதனால்தான் பத்து ரூபாய் குடிநீர் செய்தி முதல் பக்கத்தில். அதுவும் முதல் நாள் செய்தியாக.

இது போதாது என்று “முதல் நாள் இன்று” என்று 16 பக்க இணைப்பு கொடுத்திருக்கும் தி இந்து அதில் “முதலிடத்தை நோக்கி” எனும் கட்டுரையில் ஜெயாவின் “தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் – 2023”-ஐ பரந்து, விரிந்து, குனிந்து 16 பக்கத்திலும் பாராட்டுகிறது.

“எதிலும் முதலிடம். வறுமை இல்லாத வளமான தமிழகம். இதுவே தமிழக அரசின் தாரக மந்திரம். தமிழகத்தை இந்தியாவின் முதலீட்டுத் தலைநகராக, தென் கொரியா, தாய்லாந்து, மலேஷியா போன்ற நாடுகளுக்கு நிகராக மாற்றிக் காட்டுவதே எனது லட்சியம் என்று முதலமைச்சர் ஜெயலலிதா உறுதிபடக் கூறியுள்ளார்” என்று ஆரம்பிக்கிறது அந்த சிறப்பு ஜால்ராக் கட்டுரை. ஆரம்பமே இப்படி என்றால் 16 பக்கங்களிலும் அது எப்படி கரைபுரண்டு ஓடுயிருக்கும் என்பதை நீங்களே ஊகிக்கலாம்.

அடுத்த வரும் பக்கங்களில் இந்த தொலைநோக்கு திட்டம் கல்வி, தொழில், காவல்துறை, பெண்மை, ஊராட்சி என்று தனித்தனி தலைப்புக்களில் போற்றப்படுகிறது. சரி, இது ஏதோ தமிழக அரசு விளம்பரங்களுக்காக போடப்பட்ட முன்னோட்டமோ என்று பார்த்தால் அதில் அரசு விளம்பரம் என்று குறிப்பு எதுவுமில்லை. ஒரு வேளை முதல் நாளே அம்மா கேட்காமலே இப்படி அசத்தினால் அருளாசி லம்பாக கிடைக்கும் என்று தொலைநோக்கும் கூடக் காரணமாக இருக்கலாம். தினமணியின் விழுப்புரம் பதிப்புக்கு வாழ்த்துச் சொன்ன அம்மா தி இந்துவுக்கும் சொன்னதாக வரும் நாட்களில் கண்டிப்பாய் வரும்.

இந்த வேளையில் தி இந்துவுக்கு – நீங்கள் எதாவது ஒரு செய்தியில் ஜெயலலிதாவை விமரிசக்க முடியுமா?, தில் இருக்கிறதா – என்று சவால் விட்டால் அவர்கள் என்ன சொல்வார்கள்? நோ நோ இதெல்லாம் எங்களது பத்திரிகை அறத்தில் வராது என்று பின்னங்கால் பிடதியில் அடிக்க ஓடி விடுவார்கள். நல்ல அறம்தான். என்ன ஜால்ரா சத்தம் கூட அறத்தில் சேர்ந்து விட்டதே என்று கொஞ்சம் அந்த தமிழ் வார்த்தை குறித்து பரிதாபம் வருகிறது.

அம்மாவின் விசுவாசி என்பது தமிழ் இந்துவின் ஒரு முகம். முக்கிய முகம் என்னவென்றால் செய்திகளை டைம்பாஸ் பாணியில் அல்லது பேஜ் 3 வடிவில் சொல்வது என்பதே இவர்களது இலக்கு போலும். முதல் நாள் செய்திகளை அட்டை டூ அட்டை பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது. இதை ஓரிரு வாரங்களுக்கு பிறகு விரிவாக பார்க்கலாம்.

ஆங்கில இந்துவில் அசோகனது தலையங்கத்தை முதல் பக்க விளம்பரத்தில் போட்டிருக்கிறார்கள். இரண்டாவது பக்கத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களின் முதலாளிகள் அல்லது நிர்வாகிகளின் வாழ்த்துச் செய்திகளை விளம்பரங்களாக வெளியிட்டிருக்கிறார்கள். பதிலுக்கு அத்தனை நிறுவனங்களும் தி இந்துவின் தமிழ் நாளிதழில் விளம்பரங்களை குவித்திருக்கின்றனர். மற்றபடி தமிழ் அடையாளங்களைச் சுமந்த கட்சிகள், பிரமுகர்கள், அறிவாளிகள் யாரது வாழ்த்துச் செய்தியையும் அதில் காணோம். விளம்பரங்களில் வாழ்த்து கொடுத்தவர்களில் பச்சமுத்துவும், நல்லி குப்புசாமியும் உண்டு. தி இந்துவின் இணையத்தளத்தில் புதிய தலைமுறை ஆசிரியர் மாலனே வாழ்த்து தெரிவித்திருக்கிறார். முதலாளி விளம்பரத்தில் வாழ்த்து, ஆசிரியர் பின்னூட்டத்தில் வாழ்த்து!

இதிலிருந்து தி இந்துவை நிரப்பப் போகும் கார்ப்பரேட் விளம்பரங்களுக்கிடையில் நமக்கு சிலசெய்திகள் அதுவும் டைம் பாஸ் தரத்தில் கிடைக்கும் என்று தெரிகிறது.

சிறைக்குள் செல்போன் என்ற தலைப்பில் முதன்முதலாக புகைப்பட ஆதாரம் என்று வெளியிட்டிருக்கிறார்கள். அதில் சில கைதிகள் செல்பேசியில் பேசுவது, கேரம் போடு ஆடுவது, போஸ் கொடுப்பது எல்லாம் இருக்கிறது. ராஜீவ் கொலை வழக்கு முருகன் சந்தனப் பொட்டோடு இருக்கிறார் என்று ஒரு படமும் உண்டு. அவர் சந்தனப் பொட்டிலோ அல்லது சிலுவை டாலர் அணிந்தாலோ இவர்களுக்கு என்ன பிரச்சினை? மேலும் சிறையில் புழங்கும் இந்த தொழில் நுட்ப கருவிகளுக்கு காரணம் காக்கிச் சட்டை அணிந்த ரவுடிகளே என்பது கூட இவர்களுக்குத் தெரியாதா? அதை விடுத்து ஏதோ சிறையாளிகள் ஜாலியாக இருக்கிறார்கள் என்று மாபெரும் கண்டுபிடிப்பு போல காட்ட வேண்டிய அவசியம் என்ன? இல்லை போலீஸ் அதிகாரிகளது ஊழலையோ, ரவுடித்தனங்களையோ இது போல படங்களாக கொடுத்தால் போடுவார்களா?

தலையங்கத்தில் அநாகரிகமான அந்தரங்கச் செய்திகள் இடம்பெறாது என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். அதனால் ‘நாகரீக’மான அந்தரங்கச் செய்திகள் இடம்பெறும் என்று நம்பலாம். 3-ம் பக்கத்தில் அதற்கோர் சாட்சியம். “ஜெயலலிதாவுடன் சோ சந்திப்பு” எனும் செய்தியில் ஞாயிற்றுக்கிழமை அன்று இருவரும் சந்தித்தார்கள் என்பதைத் தாண்டி மற்றதெல்லாம் இவர்களே கற்பனையாக எழுதுவதுதான். இந்தச் சந்திப்பு குறித்து இருவரும் எதுவும் தெரிவிக்காத நிலையில் மோடி விவகாரம், தேர்தல் கூட்டணி குறித்து பேசியிருக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுவதாக தி இந்து  குறிப்பிடுகிறது. யார் அந்த அரசியல் நோக்கர்கள்? ஆந்தையாரா இல்லை கழுகாரா? இதுதான் அந்தரங்கத்தில் நுழையாத நேர்மையா?

4-ம் பக்கத்தில் தமிழக வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர் 82 இலட்சம் பேர் என்பதை செய்தியாக்கியிருக்கும் தி இந்து அதற்கு காரணமான ஜெயலலிதா அரசாங்கத்தை இலவச இணைப்பில் வளமான தமிழகம் காணும் முதலமைச்சர் என்று போற்றுகிறது. இந்த செய்தியிலும் பூவைப் போன்ற விமரிசனங்கள் எதுவுமில்லை. மாறாக இளைஞர்கள் சொந்தமாக தொழில் செய்து பிழைத்திருக்கட்டும் என்று உபதேசிக்கிறார்கள். வினாயகர் சிலை ஊர்வலம் கோலாகலம் என்ற செய்தியில் இந்து நிருபர் இந்து முன்னணி தொண்டர் போல தலைப்பு கொடுத்திருக்கிறார். மறந்தும் கூட இந்துமதவெறியர்களின் இந்த புது பாணி கலவர அணிதிரட்டல் குறித்து விமரிசனம் இல்லை. சோ பேசியதையெல்லாம் ஒட்டுக் கேட்பவர்களுக்கு இந்துமுன்னணி எதற்காக்க இந்த ஊர்வலம் நடத்துகிறது என்பது தெரியாதா? இல்லை பிளாஸ்டிக் பொருட்கள் சூழலுக்கு கேடு என்று உபதேசிப்பவர்கள் இந்த கலர் பிள்ளையார் பொம்மைகளை கடலில் கரைப்பது சூழலுக்கு நாசம் என்று கூடவா எழுத முடியவில்லை?

விழுப்புரம் அருகே ஒரு கோவில் மண்டபத்தில் நடந்த திருமணத்தில் சிக்கன் பிரியாணி பரிமாறப்பட்டதை அபச்சாரம் அபச்சாரம் என்று அதிர்ச்சி செய்தியாக வெளியிட்டிருக்கிறார்கள். போலீசும் இந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்திருப்பதாக அதிர்ச்சியை தணிக்கிறது தி இந்து. கிராம மக்கள் கோவிலில் சிக்கன் பிரியாணியோ இல்லை மாட்டுக்கறி வறுவலோ போட்டால் இவர்களுக்கு என்னய்யா பிரச்சினை? இதில் தலித்துக்கள் மேல் அதிக கரிசனம் உள்ளதாக காட்டிக் கொள்வது எந்த விதத்தில் நீதி? அசைவ உணவின் மீது வெறுப்பு உள்ளவர்கள் தலித்துக்களுக்காக கண்ணீர் வடிப்பது நாடகமில்லையா?

திருவரங்கம் தொகுதியில் இரட்டைக் குவளை முறை என்ற செய்தியிலும் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றால் இந்த தீண்டாமையை நீக்கலாம் என்று மக்கள் கருதுவதாக தி இந்து கூறுகிறது. முதல்வர் தொகுதியிலேயே இரட்டைக் குவளை என்றால் முழு தமிழகத்திலும் இது எத்தனை செல்வாக்கோடு இருக்கும் என்று ஒரு விமரிசனத்தைக் கூட அவர்களது பேனாவோ இல்லை கீ போர்டோ எழுதத் தயாரில்லை.

நடுப்பக்கத்தில், ‘இவ்வளவு செய்திகள் எதற்கு‘ என்று ஆவேசப்படுகிறார் ஜெயமோகன். ஆவேசம் அளவுக்கு கட்டுரையில் சரக்கு எதுவுமில்லை. எனினும் 44 பக்கங்களில் வந்திருக்கும் தி இந்து இந்தக் கட்டுரை மூலம் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டதாகவும் கருதலாம். தனது தரப்பை உறுதி செய்யும் அளவுக்குத்தான் செய்திகளுக்கு அதுவும் ஒரு நாள் படிப்பில் 5 சதவீதம் மட்டும்தான் ஒதுக்கியிருக்கிறாராம் ஜெயமோகன். அண்ணா ஹசாரே குறித்து தேசிய ஊடகங்கள் உருவாக்கிய மயக்கத்தில் முக்குளித்தவர் செய்திகள் குறித்து நமக்கு வகுப்பெடுப்பது காலக்கொடுமை.

the-hindu-tamilபொருளாதாரப் பக்கத்தில் “ரகு வர, ரூபாய் எழ” என்று ஒரு தலைப்பில் கட்டுரை. ரூபாய் மதிப்பு சரிந்ததற்கு அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி சில முடிவுகளை அறிவித்த பிறகு இந்திய ரிசர்வ் வங்கி தன்னுடைய பணக்கொள்கையை அறிவிப்பதாக ரகுராம் ராஜன் கூறியிருக்கிறாராம். இது சிந்தனைத் தெளிவு என்று பேராசிரியர் இராம. சீனிவாசன் மூலம் பாராட்டுகிறது தி இந்து. அமெரிக்க அடிமைத்தனம்தான் சிந்தனைத் தெளிவு என்பதை ஒத்துக் கொண்டதற்கு நாமும் பாரட்டத்தான் வேண்டும்.

இவை எல்லாவற்றையும் விட “எண்ணெமெல்லாம் எண்ணெய் – சிக்கல் புகழ் சிரியா” என்ற பத்தியை எழுதியிருக்கும் பா.ராகவனது GLOBE-ஜாமூன் பகுதிதான் தி இந்துவில் நமக்கு ஆத்திரத்தையும் அருவெறுப்பையும் அதிகம் தோற்றுவித்த பகுதி. எதுவானாலும் இனிப்பான நடையில் அளிக்கும் முயற்சிதான் இந்த பகுதி என்று அடை மொழி வேறு. பல ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டு அமெரிக்காவின் வேட்டைக்காக காத்திருக்கும் அந்த அவல தேசத்தை இத்தகைய இனிப்பு நடையில் எழுதுவதென்பது மன வக்கிரம் கொண்டவர்கள் மட்டுமே செய்ய முடியும். இதிலும் அமெரிக்காவிற்கு ஆதரவாக அயோக்கியத்தனமான கிளு கிளு நடையில் எழுதியிருக்கும் பா. ராகவனையும் அந்த ஆளை எழுதச் சொன்ன தி இந்துவையும் நினைத்தால் இரத்தம் கொதிக்கிறது.

ஒட்டு மொத்தமாக பார்த்தால் தினத்தந்திக்கு இருக்கும் சீரியஸ்னெஸ் கூட தி இந்துவுக்கு இல்லை. பேஜ் 3 பாணி செய்திகள் மூலம் இன்றைய இளம் தலைமுறையை அறிவுரீதியாக மேலும் ஊழல் படுத்தும் வண்ணம்தான் இவர்களது செய்திகள் அமைந்திருக்கின்றது. ஆள்வோரிடம் அடிமைத்தனம், வாசகர்களிடம் டைம் பாஸ் பாணி செய்திகள் தருவது இரண்டும் சரியான சேர்க்கையில் இருந்தால் தி இந்து. அல்லது குமுதம், விகடன், டைம்பாஸ், ஜூவி இந்த பத்திரிகைகளின் பக்கங்களை ஆங்காங்கே கிழித்து தினசரியின் வடிவமைப்பில் தொகுத்தால் அது இன்றைய தி இந்துவைப் போலத்தான் இருக்கும்.

தமிழால் இணைவோம் என்பதை முத்திரை வாக்கியமாக வைத்திருக்கும் தி இந்துவின் பெயரில் தமிழ் இல்லை. உண்மையில் நொறுக்குத் தீனி வாசிப்பில் இணைவோம் என்பதே சரியான முத்திரை வாக்கியமாக இருக்கும்.

இனி தினமணி, தினமலரோடு தி இந்துவையும் படித்து விமரிசிக்க வேண்டியிருக்கிறதே என்ற துக்கத்தைத் தாண்டி தி இந்துவின் தமிழ் நாளிதழில் மகிழ்ச்சியாக எதுவுமில்லை.

  1. ///டைம் பாஸ் பாணி செய்திகள்//

    னீர் எடுத்து எழுதும் பல செய்திகள் “தி இந்து”விலிருந்து தான் என்பதை மறந்து விடக்கூடாது வினவு சார்….அப்ப நீங்களும் டைம் பாஸ் பாணி செய்திகளைத்தான் மொழிமாற்றம் செய்து வினவில் வெளியிடுகிறீரோ???

  2. ஜால்ரா அதிகமாக இருந்தால் கேரளா அடி (பெரிய ஜால்ரா அவர்களின் ஜண்டை மேளத்துடன் பயன்படுத்துவார்கள் என்பதால்) என்று சொல்வதுண்டு. அந்த வகையானதாகத்தான் இன்றைய தி இந்து தமிழ் நாளிதழை பார்க்க முடிந்தது. RISING INTOLERENCE தலையங்கத்தை எழுதிய இந்து குழுமம் இன்று தலைகீழாக மாறியிருப்பதை மிக நச்சென்று விமர்சித்திருக்கிறீர்கள்.

  3. வினவுவின் பல கட்டுரைகள் தி இந்துவின் கட்டுரைகள் தானே.. சாய்நாத்தின் ஆங்கில கட்டுரையை வினவு இனி பிரசுரிக்க முடியாத கோபம்தான் உங்களிடம் தெரிகிறது

  4. சரியாக விமர்சனம்.. ஒரு புண்ணாக்கு செய்தி கூட இல்லை… சவுக்கு இணைய தளத்தில், இந்த பத்திரிக்கை பற்றிய செய்தி வந்த போதே, இதன் தரம் என்ன என்பதை ஓரளவு தெரிந்தது…கலுசடை மலம், மணியை விட மோசம்… பார்கலாம்…

  5. இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
    கெடுப்பா ரிலானுங் கெடும் – அய்யன் வள்ளுவர்

    இந்துவில் வெளியாகும் சில கட்டுரைகளை தமிழாக்கம் செய்து பிரசுரிப்பதால், அந்த பத்திரிக்கையை விமர்சனம் செய்யக் கூடாது என அர்த்தம் கொள்ளக் கூடாது. தேர்தல் காலத்தில் வளமான தமிழகம், வளமான இந்தியா, வளமான குஜராத் போன்ற 2 நிமிட விளம்பரப்படத்தில் நாடு முழுவதும்- மாநிலம் முழுவதும் சுபிட்சமாக மக்கள் விலைவாசி உயர்வுகளால் சிரமப்படாமல், நன்றாக இருபபது போன்ற இமேஜ் காண்பிக்கப்படும். அது போல் இன்றைய தமிழ் இந்து இருந்தது என்பதை பகுதி வாரியாக சிறப்பான விமர்சனம் முன்வைக்கப் பட்டுள்ளது.

  6. // இனி தினமணி, தினமலரோடு தி இந்துவையும் படித்து விமரிசிக்க வேண்டியிருக்கிறதே என்ற துக்கத்தைத் தாண்டி தி இந்துவின் தமிழ் நாளிதழில் மகிழ்ச்சியாக எதுவுமில்லை. //

    அப்படி ஒன்றும் கட்டாயம் இல்லையே. தி ஹிந்துவை படித்தே தீரவேண்டும் என்று யாரும் உங்களை நெற்றிப்பொட்டில் துப்பாக்கி வைத்து மிரட்டவில்லையே. தி ஹிந்து-வை படிக்காமல் இருக்கும் முழு சுதந்தரமும் உங்களுக்கு உண்டே, தாங்கள் அறியாததா ?

  7. // இனி தினமணி, தினமலரோடு தி இந்துவையும் படித்து விமரிசிக்க வேண்டியிருக்கிறதே என்ற துக்கத்தைத் தாண்டி தி இந்துவின் தமிழ் நாளிதழில் மகிழ்ச்சியாக எதுவுமில்லை. //

    சரியாகச் சொன்னீர்கள். நமக்கு வேலைப் பளுவை இன்னும் அதிகப் படுத்தியிருக்கிறார்கள்.
    காலையில் இந்த ‘தி இந்து ‘வைப் பார்த்ததும், ஏதோ காமெடி பத்திரிக்கை பார்ப்பதுபோல இருந்தது. உள்ளே போக -போக, கருமம் என எரிச்சல் பட வேண்டியதாயிற்று. ஞாநி சொல்வதைப் போல, தமிழில் பெயர்வைக்க கூட வக்கற்று இருப்பவர்களுக்கு, தமிழின் மேல் என்னே கரிசனம்!

  8. // மேலும் அரசு கட்டிடங்கள், நிலையங்களில் இலவசமாக தரமான குடிநீர் வழங்க வேண்டிய அரசாங்கம் அதை காசுக்கு விற்பது எந்த விதத்தில் நியாயம் என்றும் அந்த அறிவாளிகளுக்குத் தோன்றவில்லை //

    சரியான கருத்து. அரசு இடங்களில் சுத்தமான இலவச தண்ணீர் கிடைக்க வழி செய்ய வேண்டும். (அமெரிக்காவில் அப்படித்தான்).

    // இனி தினமணி, தினமலரோடு தி இந்துவையும் படித்து விமரிசிக்க வேண்டியிருக்கிறதே என்ற துக்கத்தைத் தாண்டி தி இந்துவின் தமிழ் நாளிதழில் மகிழ்ச்சியாக எதுவுமில்லை //

    பொன். முத்துக்குமார் சொன்னது போல இவற்றை படிக்க வேண்டிய அவசியமில்லை. சீரியஸ் பத்திரிகையான தினத்தந்தி, திராவிட பாரம்பரியத்தில் வந்த தினகரன் ஆகியவற்றை படிக்கலாம். கூடவே ஆன்மீக மலரும் இலவசமாக கிடைக்கும். நான் கூட தினகரன் ஆன்மீக மலர் மூலமாகத்தான் இன்று வாமன ஜெயந்தி என அறிந்து கொண்டேன். யாரும் பெரிதாக சட்டை செய்யாத தினுசு தினுசான பண்டிகைகளுக்கு குறிப்பு தருகிறார்கள்! வாமன பூஜை முறைக்கு குறிப்பு தந்தவர்கள், கிருஷ்ண ஜெயந்திக்கு சீடை செய்வது போல, வாமன ஜெயந்திக்கு என்ன பக்ஷணம் செய்ய வேண்டும் என சொல்லாமல் விட்டு விட்டார்கள். ஓம், பால ஜோதிடம் போன்ற பத்திரிகைகள் நடத்தும் பெரியார் விருது பெற்ற நக்கீரன் கோபாலை கேட்டால் தெரியுமோ என்னவோ! (நன்றி: http://oosssai.blogspot.com/2011/05/blog-post_06.html)

  9. இந்து வின் தமிழ் நாளிதழை முழுவதும் படித்தப்பின் நான் ட்விட்டரில் பதிவு செய்த என் கருத்து.

    நமது எம்ஜிஆர் நாளிதழின் மேம்பட்ட வடிவம் தி இந்து தமிழ் நாளிதழ்

    இனி நமது எம்ஜிஆர் இதழினை வெளியிட வேண்டியா அவசியமில்லை…
    இந்து நாளிதழ் அந்த வேலையை செவ்வனே செய்யும்.

    நடுநிலை என்ற பத்திரிக்கை தர்மத்தை கடைப்பிடிக்க பயப்படும் நீங்கள் எல்லாம் ஏன் ஒரு பத்திரைக்கை நடத்தி தமிழ் நாட்டை கேவலபடுத்துகிறீகள்.

    இரா.சி

    • சரிதான் ரா.சி சார்..என்ன ஒன்னு..பக்கத்துக்கு பக்கம்
      அம்மாவின் ஆனைப்படின்னு போடணும்…
      போடலைன்னா…உள்ளே “போட்டுருவோம்”

  10. பத்திரிக்கைத்துறை நண்பர்கள் சிலர் “தி இந்து” தமிழ் நாளிதழில் சேர்ந்திருப்பதாக குறுஞ்செய்தி அனுப்பினர்.”கவர்” ஸ்டோரிகள் வெளியிடும் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் புரட்சிகர அமைப்புகளின் செய்திகளையும் கொண்டுவர முயற்சிக்கும் அந்த நண்பர்களுக்கு மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களையும் பதிலுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பினேன்.
    16.09.2013 காலையில் “உங்களுக்கு தரமான செய்திகளுக்காக இன்னுமோர் பத்திரிக்கை” என்று தனது வியாபார யுக்தியுடன் “தி இந்து” முதல் இதழை கடைக்காரர் கொடுத்தார்.வாங்கிப் பிரித்தவுடன் முதல் பக்க செய்தியே அருவருப்பூட்டியது.

    உண்மைதான்

    “இனி தினமணி,தினமலரோடு தி இந்துவையும் படித்து விமர்சிக்க வேண்டியிருக்கிறதே என்ற துக்கத்தைத் தாண்டி ‘தி இந்து’தமிழ் நாளிதழில் மகிழ்ச்சியாக எதுவுமில்லை”.

    “அம்மா அருளாசியோடு தமிழில் “தி இந்து” “பதிவோடு பண மூட்டைகள் உருவாக்கும் செய்திகள்” பதிவையும் சேர்த்து நகலெடுத்து நண்பர்களிடம் விநியோகிக்கும் வேலையை கூடுதல் சுமையானாலும் மகிழ்ச்சியோடு துவங்கிவிட்டேன்.

  11. ஆகா….
    இனிமேல் பூணூல்(தினமலம்.தினமனி,தி இந்து) உராயும் சத்தம்…
    தாங்கமுடியிலடா இந்த கொசுத்தொல்லை,,, நாராயனா

  12. தமிழ்நாட்டில் காய்கறிகள் விலை உயர்வு…
    ஆனாலும் கக்கூசு காகிதம்(டாயிலெட் டிழ்யு) ரூபாய் 4க்கு (அதுவும் அச்சடிச்சது) கிடைக்குதாமே?

  13. No one prevent a non poonool wearing person to start a magazine. If they are the only educated several centuries earlier how they learnt ? all self taught ? Dr. B.R Ambedkar bar at law before independence . His teacher is a poonool. Our thol. thiruma is M.Litt . all learnt in home. Who is beating the poor dalits is well known. Its the poonool wearing U.Ve.Sa who wandered tamilnadu to preserve certain old sanga ilakkiyam. Parithimal kalaignar only first wrote urai to Thiruvalluvar. the world knows who has served and tamil and its literature more.

  14. தம்மை சுற்றி இருப்பதிலெல்லாம் குறை கண்டால் அது சரியான விமர்சனமாகாது.

  15. தி இந்து உண்மையில் நல்ல வரவேற்ப்பை தமிழ்நாட்டில் பெற இன்னும் நடுநிலையான செய்திகள் வரும்படியும் குறிப்பாக அதிகமான சாவுச்செய்தி வராதபடியும் பார்த்துக்கொண்டால் நல்ல தரமான பத்திரிகையாக இருக்கும் மலிவான போலி விளம்பரங்கள் இல்லாதபடியும் பார்த்துக்கொள்ளவும் வாழ்த்துக்கள் ….

  16. ஐயா, வினவு ஆசிரியரே…

    எதிலும், யாரையும் குறை கண்டுபிடிப்பது எளிது, ஆனால், ஒவ்வொருவரும் அதை செய்து பார்த்தால் தான் அதிலுள்ள கஷ்டங்கள் புரியும். என்னமோ வினவு மட்டும் தான் உலகிலேயேயே தரமான செய்திகளை அளிப்பது போலவும், மற்ற பத்திரிகைகள் குப்பைகள் என்பது போலவும் தான் உங்களது விமர்சனம் அமைந்துள்ளது.
    ஒரு விமர்சனம் என்பது நியாயமாக இருக்க வேண்டும். மாற்றுக் கருத்துடையோரும் அதனை ஏற்றுக் கொள்ளும் வகையில் இருப்பது தான் விமர்சனம். ஆனால் இது தி இந்து தமிழ் நாளிதழின் விமர்சனம் போல் அல்ல. உங்களுக்கு பிடித்தார் போல் பத்திரிகை இருக்க வேண்டுமென்றால், அதற்கு நீங்கள் தான் ஆசிரியராக இருப்பீர்கள். ஆனால் வாங்கிப் படிக்கத் தான் யாரும் இருக்க மாட்டார்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். தங்களது தடாலடி விமர்சனம், தாங்கள் ஆங்காங்கே குறிப்பிட்டுள்ளது போல 3-ம் பக்க டைம்பாஸ் போன்று தான் உள்ளது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க