privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கமணற் கொள்ளையன் வைகுண்டராஜன் : தெற்கத்தி வீரப்பன் !

மணற் கொள்ளையன் வைகுண்டராஜன் : தெற்கத்தி வீரப்பன் !

-

குறிப்பு: தற்போது ஜெயா அரசு தூத்துக்குடியைத் தொடர்ந்து திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களில் தாது மணல் எடுக்க ‘தடை’ விதித்துள்ளது. எனினும் துத்துக்குடி தவிர இதர மாவட்டங்களில் சிறப்புக் குழு ஆய்வு எடுக்கும் வரை தடை இருக்குமாம். ஸ்டெர்லைட் விவகாரத்தில் மாநில சுற்றுச்சூழல் அமைச்சகம் போட்ட இடைக்காலத் தடை குறுகிய காலத்திலேயே நீர்த்துப் போய் அந்த ஆலை தற்போது சுமூகமாக இயங்கி வருவது தெரிந்ததே. மதுரை பிஆர்பி கிரானைட் ஊழலும் இத்தகைய தடை என்னும் நாடகத்தால் மறைக்கப்பட்டதை வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். வைகுண்டராஜன் கொள்ளை முழுவதும் அம்பலப்பட்ட பிறகு அவர் மீது தடை என்பது வேறு வழியின்றி செய்யப்படும் நாடகம். முக்கியமாக அதிமுகவின் தேர்தல் செலவு, ஜெயா டிவியின் பங்குதாரர் என்ற அளவில் அவரது முக்கியத்துவம் எவ்வாறு இருக்கும் என்பதை வாசகர்கள் அறியலாம்.

– வினவு

ஜெயலலிதாவின் ஆட்சியில் அரசியல் குறுக்கீடுகள் அற்ற, திறமையான, நேர்மையான நிர்வாகம் நடப்பதாகவும், குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் கடுமையாகத் தண்டிக்கப்படுவதாகவும் பார்ப்பன ஊடகங்கள் உருவாக்கும் சித்திரம் எவ்வளவு மோசடியானது என்பதை கார்னெட் மணற்கொள்ளை விவகாரம் மீண்டும் நிரூபித்துக் காட்டி விட்டது.

வைகுண்டராஜனின் சூறையாடல்
வைகுண்டராஜன் கும்பலின் சூறையாடல் : இயற்கை அரணாக இருந்த மணற் குன்றுகளும், சவுக்கு மரங்களும் அழிக்கப்பட்டு தீவிரமாகி வரும் கடல் அரிப்பு

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களின் கடற்கரை முழுவதையும் கையில் வைத்துக் கொண்டு கார்னெட் மணல் ஏற்றுமதி செய்யும் தொழிலில் உலக அளவில் இரண்டாம் இடத்திலும், இந்திய அளவில் முதலிடத்திலும் இருந்து வருகிறார், வி.வி. மினரல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான வைகுண்டராஜன். ‘அம்மா’வின் ஆதரவோடு தொழில் நடத்திவரும் அவர், ஜெயா டி.வி.யின் பங்குதாரராக உள்ளதோடு, கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது ‘அம்மா’வுக்குப் பெரிதும் உதவியாக நின்றதை அனைவரும் அறிவர். அப்பேர்ப்பட்ட கோடீசுவர வைகுண்டராஜனின் நிறுவனம், அனுமதிக்கப்பட்ட இடத்தைத் தாண்டிச் சட்டவிரோதமாகத்  தாது மணலை அள்ளி ஏற்றுமதி செய்துள்ளதா என்று ஆய்வு செய்ய கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி உத்தரவிட்ட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஸ் குமார், அடுத்த 24 மணி நேரத்திற்குள் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

வி.வி.மினரல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான வைகுண்டராஜன் தென் மாவட்டக் கடற்கரைப் பகுதிகளில் தனி அரசாங்கமே நடத்தி வருகிறார் என்பது நாடறிந்த உண்மை. கடற்கரைப் பகுதியிலுள்ள செந்நிற மணலில் கார்னெட், இல்மனைட், ரூட்டைல், சிர்கான், மோனசைட் முதலான விலைமதிப்பற்ற அரிய கனிமங் கள் கிடைக்கின்றன. மணலிலிருந்து அவற்றைப் பிரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதுதான் வைகுண்டராஜனின் தொழில். இந்திய சுரங்கக் கழகம் அனுமதி அளித்துள்ள 111 கார்னெட் மணல் குவாரிகளில் 96 அவருக்கும் அவரது பினாமிகளுக்கும் சோந்தமானது. மைய அரசால் அனுமதி தரப்பட்டுள்ள 44  இல்மனைட் குவாரிகள் அனைத்தும் அவருக்கே சொந்தமானது. மைய அரசின் சுற்றுச்சூழல் துறை, மாநில அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், கடலோரப் பாதுகாப்புச் சட்டம், வனத்துறை – எனப் பல்வேறு துறைகளின் விதிகள், கட்டுப்பாடுகளையெல்லாம் கிடப்பில் போட்டுவிட்டு, கடற்கரையையும் அதையொட்டியுள்ள பகுதிகளையும்  தனது பணபலத்தாலும் அதிகார பலத்தாலும் ஆக்கிரமித்து தாதுமணல் கொள்ளையை இக்கும்பல் நடத்தி வருகிறது.

தாது மணலிலுள்ள கனிமங்களைச் சேகரிக்கும், பிரிக்கும் நடவடிக்கைகளால் கதிரியக்கம் அதிகமாகிறது என்று ஆய்வுகள் நிரூபித்துள்ளன. ஏற்கெனவே குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் அரசின் அருமணல் தொழிற்சாலைகளில் பாதுகாப்பும் கட்டுப்பாடுகளும் இருந்த போதும், சுற்றுப்புற கிராமங்களில் ஏறத்தாழ 500 பேருக்குப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதம் ரூ. 1000 உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. ஆனால் எவ்விதக் கட்டுப்பாடுமில்லாமல், விளைவுகளைப் பற்றிய அக்கறையும்  இல்லாமல், ஒரு அந்நிய ஆக்கிரமிப்பாளனைப் போல வைகுண்டராஜன் கும்பல் இச்சூறையாடலை நடத்திக் கொண்டிருக்கிறது.

தென்மாவட்டக் கடற்கரைப் பகுதிகளில் கடல் அலைகளைக் கட்டுப்படுத்தும் வகையில் இயற்கையாகவே அமைந்திருந்த மணல் குன்றுகள் இக்கும்பலின் சூறையாடலில் தரைமட்டமாகி விட்டன. இதனால் பல ஊர்களில் கடல் நீர் புகுந்து, நிலத்தடி நீர் உப்பு நீராக மாறி, குடிநீருக்காக மக்கள் தவிக்கின்றனர். இங்குள்ள விவசாயிகளால் நடப்பட்ட ஆயிரமாயிரம் சவுக்கு மரங்களும், இயற்கையின் கொடையாகக் கருதப்படும் கடலோர அடையாளச் சின்னங்களாக நின்றிருந்த ஆயிரக்கணக்கான பனை மரங்களும் அழிக்கப்பட்டு விட்டன. கடலோர மணலிலிருந்து தாதுப் பொருட்களைப் பிரித்தெடுத்த பிறகு, கழிவு நீரையும் மணலையும் அதே பகுதியில் கொட்டுவதால், பல இடங்களில் கடல் நீரின் நிறமே சிவப்பாக மாறி விட்டது. கடலையொட்டி அதிக அளவில் மணல் எடுக்கப்படுவதால் மீன் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் அழிந்து மீனவர்களின் வாழ்வாதாரம் நாசமாக்கப்பட்டுள்ளது.

கழிவுகளால் நாசமான கடலோரம்
தாது மணலிலிருந்து கனிமங்கள் பிரித்தெடுக்கப்பட்ட பின்னர் வெளியேற்றப்படும் கழிவுகளால் நாசமாக்கப்பட்ட கடலோரப் பகுதி

தான் சார்ந்துள்ள நாடார் சாதியினரைச் சமூக அடித்தளமாகப் பயன்படுத்திக் கொண்டும், எல்லா ஊர்களிலும் பிழைப்புவாதிகளைக் கையாட்களாகக் கொண்டும் வைகுண்டராஜன் தனது மாஃபியா சாம்ராஜ்ஜியத்தை நடத்தி வருகிறார். இச்சூறையாடலை யாராவது எதிர்த்தால் அடுத்த நிமிடமே வைகுண்டராஜனின் அடியாட்கள் பயங்கர ஆயுதங்களுடன் வந்து தாக்குவதோடு, வீடுகளின் மீது வெடிகுண்டுகளை வீசுவதும் நடந்துள்ளன. இதனால் உயிருக்கு அஞ்சி பல குடும்பங்கள் ஊரை விட்டே ஓடி விட்டன. பண பலம், சாதிய பலம், அதிகார பலத்தைக் கொண்டு சூறையாடலை நடத்தி வந்த கிரானைட் கொள்ளையன் பி.ஆர்.பி. கும்பலைப் போலவே,  அதையும் விஞ்சும் வகையில் தாது மணற் கொள்ளையன்  வைகுண்டராஜன் கும்பலின் ஆட்சி கேள்வி முறையின்றித் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

தனி மாவட்டமாகப் பிரிக்கப்படாமல் நெல்லை மாவட்டத்தில் தூத்துக்குடியும் இருந்தபோது மாவட்ட ஆட்சியராக இருந்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான சுந்தரம், வைகுண்டராஜனுக்குப் போட்டியாக கார்னெட் மணல் அள்ளும் தொழிலில் உள்ள தயா தேவதாஸ் என்பவரது நிறுவனத்தில் ஆலோசகராகப் பணியாற்றுகிறார். வைகுண்டராஜனின் கொள்ளைக்கு அரசு அதிகாரிகளே உடந்தையாக இருப்பதைப் பற்றியும், சட்டவிரோதமாக அள்ளப்பட்டுள்ள கனிம வளமிக்க மணலின் மதிப்பு உத்தேசமாக ரூ. 96,120 கோடிகளாக இருக்கும் என்றும் கடந்த ஜனவரி 2013-ல் தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். தொழில் போட்டியின் காரணமாக வைகுண்டராஜனின் கொள்ளையையும் மோசடிகளையும் அவர் அம்பலப்படுத்தியுள்ள போதிலும், அவரது குற்றச்சாட்டுகள் மறுக்க முடியாதவை. மேலும், சமூக ஆர்வலர்களும் இப்பகுதிவாழ் மீனவர்களும் வைகுண்டராஜனின் சூறையாடலையும் அடாவடிகளையும் பற்றி அரசுக்குப் பலமுறை புகார் கொடுத்துள்ளனர்.

இத்தகைய புகார்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கணக்குக் காட்டும் நோக்கத்தில் கண்துடைப்பு விசாரணை, ஆய்வு  நடத்துவதென்பது வழக்கமான அதிகார வர்க்கச் சடங்கு. அதன்படியே, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்த ஆஷிஸ் குமார் கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி வேம்பார் பகுதியில் ஆய்வு செய்ய அதிகாரிகளை அனுப்பியதோடு,  அரசுக்கு ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பு குறித்த கணக்கீட்டிற்கு உத்தரவிட்டதும் அடுத்த நாளே அவர் பணிமாற்றம் செயப்பட்டுள்ளார்.

மணற்கொள்ளையால் வெடித்த நிலம்
தாது மணற்கொள்ளையால் நாசமாகி வெடித்துக் கிடக்கும் நிலம்

மாவட்ட ஆட்சியர் திடீரென மாற்றப்பட்ட விவகாரம், தனது ஆட்சியின் மீதான அதிருப்தியாக மாறிவிடாதிருக்க,  தாது மணற்கொள்ளை குறித்து விசாரிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி ககன்தீப் சிங் பேடி தலைமையில் சிறப்புக் குழுவை அமைத்துத் தன்னை யோக்கியவானாகக் காட்டிக் கொள்கிறது ஜெயா கும்பல். ஆனால், வைகுண்டராஜனுக்குத் திட்டம் போட்டுக் கொடுத்துக் கொள்ளையடிக்கக் கற்றுக் கொடுத்தவர்களே இத்தகைய அதிகார வர்க்கக் கூட்டம்தான்.  கடந்த பல ஆண்டுகளாக இந்த ஊழல் கொள்ளையின் பங்காளிகளாக இருந்த அதிகார வர்க்கத்தைக் கொண்டே இப்போது ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்கப் போவதாக நாடகமாடுகிறது ஜெயா கும்பல். ஜெயலலிதா அமைத்துள்ள அதிகாரிகளின் சிறப்புக் குழுவைப் பற்றி எழுதிய கருணாநிதி, ”அந்தக் குழுவுக்குத் தலைவராக வைகுண்டராஜன் என்பவரை நியமிக்கலாம் என்று நம்முடைய ஆபீஸ் பையன் சிபாரிசு செய்கிறான்” என்று எள்ளி நகையாடுகிறார். இருப்பினும், ”ஜெயா கண் சிவந்தார், அ.தி.மு.க.வினர் உடந்தையாக இருப்பதை அறிந்ததும் அதிர்ந்தார்” என்று ஏதோ ஜெயலலிதாவுக்குத் தெரியாமல் தாது மணற்கொள்ளை நடந்திருப்பதைப் போலவும், அவர் கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளதைப் போலவும் பார்ப்பன ஊடகங்கள் பரபரப்பூட்டுகின்றன.

தனியார்மயம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னரே அரசிடம் குறிப்பிட்ட இடத்தில் தாதுமணல் அள்ள உரிமம் பெற்றுக் கொண்டு, அதைக் காட்டியே வைகுண்டராஜனின் நிறுவனம் பல இடங்களில் சட்டவிரோதமாகத் தாதுமணலைச் சூறையாடி வந்தது. மறுபுறம், 2002-ஆம் ஆண்டிலேயே அன்றைய ஜெயா அரசாங்கத்துக்கும் டாடா நிறுவனத்துக்குமிடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியிருந்தது. அதன்படி  சாத்தான்குளம், திசையன்விளை முதலான செந்நிற மணல் மிகுந்த தேரிக்காடுகளில் என்னென்ன அரிய உலோகங்கள் உள்ளன என்பதற்கான சோதனைகளை செய்து முடித்திருந்த டாடா நிறுவனம், தேரிக்காட்டில் கிடைக்கும் இல்மனைட் மணலைப் பிரித்தெடுத்து டைட்டானியம் டை ஆக்சைடு தயாரித்து, அதிலிருந்து டைட்டானியம் உலோகத்தை உற்பத்தி செய்யும் ஆலை தொடங்குவதற்கான அனுமதிக்கு விண்ணப்பித்து காத்திருந்தது. ஆண்டுக்கு 2 லட்சம் டன் இல்மனைட் தாதுவைப் பிரித்து 50 ஆயிரம் டன் தாதுவை டைட்டானியம் டை ஆக்சைடு தயாரிக்கப் பயன்படுத்திவிட்டு, மீதி 1.5 லட்சம் டன் தாதுவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய டாடா தீர்மானித்தது. ஆனால், ஜெயா கும்பலுக்கும் டாடா நிறுவனத்துக்குமிடையே திரைமறைவு பேரங்களில் உடன்பாடு ஏற்படாததால் இத்திட்டம் நிறைவேற்றப்படவில்லை. நாட்டின் அரிய கனிமங்கள் டாடா நிறுவனத்தின் மூலம் வெளிநாடு செல்வதைத் தடுக்க இத்திட்டம் கைவிடப்பட்டது என்று அறிவித்தார், அப்போதைய அமைச்சரான நயினார் நாகேந்திரன். வைகுண்டராஜன் கும்பலோ வழக்கம்போலவே தனது சூறையாடலைத் தொடர்ந்து கொண்டிருந்தது.

பின்னர் மாநில சட்டமன்றத் தேர்தல் நடந்து தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன், மீண்டும் டாடாவுடன் ஒரு புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் 2007 ஜூன் மாதத்தில் போடப்பட்டது. இதன்படி, தாது மணல் நிறைந்த 10,500 ஏக்கர் நிலத்தை அரசே கையகப்படுத்தி டாடா நிறுவனத்துக்கு வழங்குவதென்றும், நிலம் வழங்கியவர்களுக்கு டாடாவின் டைட்டானியம் ஆலையில் வேலை கொடுப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டது. இதற்கெதிராக, தென்மாவட்ட கடலோரப் பகுதிவாழ் மக்களின் விவசாய நிலங்களைப் பறித்து டாடாவுக்குத் தாரை வார்க்கும் திட்டம்தான் இது என்று ஜெயா கும்பலும், அதன் கூட்டணிக் கட்சிகளும், வைகுண்டராஜன் வகையறாக்களும் போராட்டங்களை நடத்தத் தொடங்கின. இதனால், மக்களின் கருத்தறிந்த பின்னரே ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் என்று தி.மு.க. அரசு பின்வாங்கியது. டாடா நிறுவனமும் இத்திட்டத்திலிருந்து விலகிக் கொண்டது. வைகுண்டராஜன் கும்பலோ கேள்வி முறையின்றி சூறையாடலைத் தொடர்ந்தது. ”கார்னெட் கனிமத்தைத் திருட்டுத்தனமாக எடுத்து, சட்டவிரோதமாக நாட்டு நலனுக்கு எதிராகக் கடத்தி விற்பனை செய்து கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கும் ஒரு‘தாதா’வுடன் ஜெயலலிதா செய்து கொண்ட ஒப்பந்தமே, இத்திட்டத்தை ஜெயலலிதா எதிர்ப்பதற்குக் காரணம்” என்று வெளிப்படையாக அறிக்கை வெளியிட்டார் அன்று முதல்வராக இருந்த கருணாநிதி. ஆனாலும் அந்த தாதாவைக் கைது செய்து தண்டிக்கவோ, தாது மணற்கொள்ளையைத் தடுத்து நிறுத்தவோ அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இவ்வளவுக்கும் பின்னர், கார்னெட் மணல் கொள்ளை பற்றி இப்போதுதான் தெரிய வந்துள்ளதைப் போல ஜெயா அரசு ஆய்வுக் குழுவை அமைத்து சோதனை நடத்துவதே அயோக்கியத்தனமானது. இன்று நேற்றல்ல, பத்தாண்டுகளுக்கும் மேலாகவே இப்பகற்கொள்ளை பற்றி பல்வேறு தரப்பினரும் அரசிடம் முறையிட்டுள்ள போதிலும்,  தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பல நிறுவனங்கள் அனுமதிக்காகக் காத்திருக்கும் போது, வைகுண்டராஜனின் வி.வி. மினரல்ஸ் நிறுவனத்துக்கு 72 நாட்களில் அனுமதி தரப்பட்டுள்ள முறைகேட்டையும், அந்நிறுவனத்தின் சட்டவிரோதச் செயல்பாடுகளையும்  அம்பலப்படுத்தும் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியான சுந்தரம், வைகுண்டராஜனை ”மணல் மாஃபியா” என்று வெளிப்படையாகச் சாடுவதோடு, அவரது அரசியல் சார்புதான் அவரைச் சட்டத்தின் பிடியிலிருந்து பாதுகாக்கிறது என்றும் குற்றம் சாட்டுகிறார். பாபா அணு ஆராச்சி நிலையத்தின் முன்னாள் இயக்குனரான டாக்டர் சி.எஸ்.பி. அய்யர் என்பவர், ”இந்திய கனிமவளக் கழகம் மற்றும் அணுசக்தித் துறை உயரதிகாரிகள் இத்தகைய தனியார் நிறுவனங்களின் ஆலோசகர்களாக இருப்பதோடு, அரசாங்கம் தரும் சம்பளத்தைவிடப் பத்து மடங்கு அதிகமான சம்பளத்தை இந்நிறுவனங்களிடமிருந்து பெறுகிறார்கள்” என்கிறார்.

இப்பூமியிலுள்ள கனிம வளங்கள் அரசுக்கு – அதாவது சமுதாயத்துக்குச் சொந்தமானது என்பது நேற்று வரை இருந்த பொது நியதி. ஆனால் அரிய வகைக் கனிமங்கள் குறித்த விதிகள், தனியார்மயமாக்கலுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டன. கனிம வளமிக்க பகுதிகளை விலைக்கு வாங்கியோ, குத்தகைக்கு எடுத்தோ கார்னெட் மணலைப் பிரித்தெடுத்து ஏற்றுமதி செய்வது தனியார்மயத்தின் கீழ் சட்டபூர்வ நடவடிக்கையாக அங்கீகரிக்கப்பட்டது. ஏற்கெனவே சட்டவிரோதமாக தாது மணற்கொள்ளையில் ஈடுபட்டு வந்த வைகுண்ட ராஜன் கும்பல், இதைச் சாதகமாக்கிக் கொண்டு இச்சூறையாடலைப் பல மடங்கு விரிவாக்கியுள்ளதோடு, திடீர் பணக்கார கிரிமினல் மாஃபியாவாக வளர்ந்து கொட்டமடிக்கிறது.

வைகுண்டராஜனின்  நிறுவனம் தூத்துக்குடி மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட எல்லையைத் தாண்டி தாதுமணலை அள்ளியுள்ளதா? அனுமதிக்கப்பட்ட ஆழத்தை விட அதிகமாக அள்ளப்பட்டுள்ளதா? முறைகேடுகள் நடந்துள்ளதா – என்பதுதான் இப்போது நடக்கும் ஆய்வும் விசாரணையும். அனுமதி பெறாத இடத்தில் நடந்துள்ள சூறையாடல்களைப் பற்றியோ, சட்டவிரோத கடத்தல் பற்றியோ எவ்வித விசாரணையுமில்லை.

மணற்கொள்ளையன் வைகுண்டராஜன்
தாது மணற்கொள்ளை மாஃபியா தலைவன் வைகுண்டராஜன் : ‘அம்மாவின்’ ஆதரவோடு தொழில் நடத்தும் ‘மண்ணாதி’ மன்னன்

குறிப்பாக நெல்லை மாவட்டத்தில்தான் வைகுண்டராஜன் கும்பல் மிகப் பெரிய சூறையாடலை நடத்தியுள்ளது. ஆனாலும் நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் நடந்துவரும் சூறையாடலைப் பற்றி எந்த விசாரணையும் இல்லை.

இருப்பினும், தூத்துக்குடியில் இந்த சிறப்பு ஆய்வுக் குழு கறாராக விசாரணை நடத்துவதாகவும், பல பகுதிகளில் திடீரென ஆய்வு நடத்துவதாகவும் ஊடகங்கள் பரபரப்பூட்டுகின்றன. கார்னெட் மணல் உள்ளிட்டு, பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள நாட்டின் பொதுச் சோத்துக்களை ஏன் தனியாரிடம் கொடுக்க வேண்டும் என்ற மையமான கேள்வியை விட்டுவிட்டு, அதில் அம்பலமாகும் ஊழல் – முறைகேடுகளை மட்டும் பெரிதாக்கிக் காட்டியும், அரசு நடவடிக்கை எடுப்பதாகப் பரபரப்பூட்டியும் மக்களைத் திசை திருப்பும் பணியைத்தான் ஊடகங்கள் செய்து கொண்டிருக்கின்றன.

கர்நாடகத்தில் ரெட்டி சகோதரர்கள் எனும் மாஃபியா கும்பல் இரும்புக் கனிமங்களைச் சூறையாடியதைப் போலவே, மதுரையில் மலைக்கள்ளன் பி.ஆர். பி. கும்பல் கிரானைட் கொள்ளையை நடத்தியதைப் போலவே, மண்ணாதி மன்னன் வைகுண்டராஜன் கும்பல் தாதுமணற் கொள்ளையை நடத்தி வந்துள்ளது. பொதுச் சொத்தான கனிம வளங்களையும் பொதுத்துறை நிறுவனங்களையும் இத்தகைய மாஃபியாக்களின் – கார்ப்பரேட் முதலாளிகளின் தனிச்சொத்தாக மாற்றும் தனியார்மயக் கொள்கைதான் இத்தகைய ஊழல்கள் அனைத்துக்கும் அடிப்படை.

தனியார்மயம்  என்பதே ஊழல்மயம்தான். ஊழலற்ற தனியார்மயம் என்பதே இல்லை. இந்த உண்மையை மக்கள் புரிந்துகொண்டு போராடுவதன் மூலமே வைகுண்டராஜன் வகையறாக்களையும், இக்கிரிமினல் மாஃபியாக்களின் கூட்டாளிகளான ஆட்சியாளர்களையும் தண்டிக்க முடியும்; தனியார்மயக் கொள்ளையைத் தடுத்து நிறுத்திடவும் முடியும்.

– மனோகரன்.
__________________________

பெட்டிச் செய்தி :

அரிய வகை கனிமங்களின் பயன்பாடுகள்

கார்னெட் என்பது கனசதுர உருவில் உள்ள உறுதியும் பளபளப்புமிக்க கனிமம்.  உறுதியான தரை அமைப்பதற்கும், கண்ணாடி – சலவைக்கல் முதலானவற்றைத் துண்டிப்பதற்கும், பளிங்குக் கற்களைப் பாலீஷ் செவதற்கும்,மோதிரம் முதலான அணிகலன்களில் முத்துக்களாகப் பதிக்கவும் கார்னெட் பயன்படுகிறது.

இல்மனைட் என்பது அரிதாகக் கிடைக்கும் கனிமம். பெயிண்ட், பிளாஸ்டிக் ஆலைகளிலும், உலைகளின் உள்கட்டமைப்பு, விளையாட்டு, மருந்து பொருட்கள் தயாரிப்பு ஆலைகளிலும் பயன்படுகின்றது.

ரூட்டைல் என்ற கனிமம் இலேசானதாக இருப்பினும் வைரத்தைவிட உறுதியானது. பெயிண்ட், பிளாஸ்டிக், அதிக உறுதி தேவைப்படும் கட்டுமானங்களில்வெல்டிங் செவதற்கான வெல்டிங் ராடுகள் தயாரிக்க, விண்வெளி உபகரணங்கள், விளையாட்டுப் பொருட்கள் முதலானவற்றில் இது அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

சிர்கான் என்பது கண்ணாடி போன்ற தோற்றம் கொண்ட உறுதியான கனிமம். வெப்பத்தைத் தாங்கும் திறன் கொண்டது. இதன் உறுதித் தன்மை காரணமாக பீங்கான் தரை ஓடுகள், பீங்கான் தட்டுகள் – கோப்பைகள் தயாரிப்பிலும், உருக்கு – வார்ப்பு தொழிற்சாலைகளிலும்  பயன்படுத்தப்படுகிறது.
______________________________________
புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2013
______________________________________