privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்வடிவேலுவின் மூட்டைப் பூச்சி மிஷின் லண்டனில் அமோக விற்பனை

வடிவேலுவின் மூட்டைப் பூச்சி மிஷின் லண்டனில் அமோக விற்பனை

-

செப்டம்பர் 20, 2013 அன்று, இங்கிலாந்தைச் சேர்ந்த நீதிமன்றம் ஒன்று போலியான வெடிகுண்டு கண்டறியும் கருவியை பல்வேறு நாடுகளின் பாதுகாப்புத் துறைகளுக்கு விறபனை செய்த குளோபல் டெக்னிக்கல் எனும் தனியார் நிறுவனத்தின் அதிபர் கேரி போல்டனுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்துள்ளது. இந்த போலியான கருவிகளை பாதுகாப்புத் துறையின் எச்சரிக்கையையும் மீறி, இங்கிலாந்து அரசின் மூன்று முக்கிய துறைகளே ஊக்குவித்துள்ளன என்பது தான் இந்த மோசடியின் உச்சம்.

கேரி போல்டன்
கேரி போல்டன் – டுபாக்கூர் குண்டு கண்டறியும் கருவி

உலகின் பல்வேறு நாடுகளும் பயத்தின் காரணமாக பல்வேறு போர்க் கருவிகள், ஆயுதங்கள், பாதுகாப்பு கருவிகளை வாங்கிக் குவிக்கின்றன. முதலாளித்துவ நாடுகளில் உள்ள முதலாளிகள் இந்த சந்தையை அரசுகளின் உதவியுடன் ஆக்கிரமித்துள்ளனர். இதற்காக மக்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தவும் அவர்கள் தயங்குவதில்லை. 1997-ல் இத்தகைய சந்தையை குறி வைத்து கேரி போல்டன் பாதுகாப்பு கருவிகளைத் தயாரிக்கும் குளோபல் டெக்னிகல் எனும் நிறுவனத்தை ஆரம்பிக்கிறார்.

கோல்ஃப் விளையாடும் போது காணாமல் போகும் பந்துகளை கண்டுபிடிக்க உதவும் கருவியைக் காட்டி இதை வைத்து மறைத்து வைத்துள்ள வெடிகுண்டுகள் மற்றும் போதை பொருட்களை கண்டறியலாம் என்று சந்தைப் படுத்துகிறார். இங்கிலாந்து அரசின் முக்கிய துறைகளான ராணுவ அமைச்சகம், வெளியுறவு மற்றும் காமன்வெல்த் அலுவலகம், வர்த்தகம் மற்றும் தொழில்துறை, என மூன்று துறைகளும் போட்டி போட்டுக் கொண்டு குளோபல் டெக்னிகல் நிறுவனத்தை ஊக்குவித்துள்ளன.

ஒரு ப்ளாஸ்டிக் கைப்பிடி, ஒரு ஏரியல், ஒரு ஆன்டெனாவை கொண்டிருக்கும் இந்த சாதாரண கருவியை தயாரிக்க 1.83 பவுண்டுகள் (183 ரூபாய்) செலவாகும். வெறும் 183 ரூபாய்க்கு உற்பத்தி செய்த இந்த டுபாக்கூர் கருவியை பல்வேறு நாடுகளுக்கும் 15,000 பவுண்டுகள் (சுமார் 15 லட்சம் ரூபாய்) விலைக்கு விற்றிருக்கிறது க்ளோபல் டெக்னிகல் நிறுவனம். இந்த கருவியை பல்வேறு நாடுகள் தங்கள் பாதுகாப்புத் துறைக்கு வாங்கிக் குவித்துள்ளன. அந்த ஏமாளிகள் பட்டியலில் இந்தியாவும் உண்டு. அதே போல பாகிஸ்தான், எகிப்து, தாய்லாந்து, மெக்சிகோ போனற நாடுகளும் இதை வாங்கி ஏமாந்துள்ளன. குளோபல் டெக்னிகல் ஆண்டுக்கு 30 லட்சம் பவுண்டுகள் (சுமார் ரூ 30 கோடி) மதிப்பிலான கருவிகளை விற்பனை செய்திருக்கிறது.

தாய்லாந்தில் இந்தக் கருவியை உபயோகித்த போது போலியான கருவியின் தவறான சிக்னல்களால் பல அப்பாவிகள் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர். மனித உரிமை ஆர்வலர்களின் தொடர் போரட்டங்களால் இந்த போலிக் கருவி அம்பலத்திற்கு வந்தது.

2001-ல் இந்த கருவிகளை சோதனை செய்த பிரிட்டிஷ் உள்துறை அமைச்சகத்தின் நிபுணர் இந்தக் கருவியின் செயல்பாடுகள் மீது சந்தேகம் தெரிவித்தார். சுமார் 30 சதவீதம் தான் இந்தக் கருவி செயல்படுவதாக சோதனையின் முடிவில் தெரிவித்தார். இந்தக் கருவியை அனுமதிக்க முடியாது என்று எச்சரிக்கும் ஓர் சுற்றறிக்கையை ராணுவம், பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் காவல் துறையின் 1000 அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தார்.

ஆனால் அந்த சுற்றறிக்கையை புறம் தள்ளிவிட்டு, ராணுவ பொறியாளர்கள் குழு இந்த போலியான கருவியை பல்வேறு நாடுகளில் நடைபெற்ற ஆயுத கண்காட்சிகள், மற்றும் சிறப்பு விற்பனை கண்காட்சிகளில் வைக்க க்ளோபல் டெக்னிகல் நிறுவனத்திற்கு முழு உதவியையும் செய்துள்ளது.

இங்கிலாந்து அரசின் வர்த்தகம் மற்றும் தொழில் துறை தன் சொந்த செலவில் பல கண்காட்சிகளுக்கு குளோபல் டெக்னிக்கல் நிறுவனத்தை அழைத்துச் சென்றுள்ளது. மெக்சிகோ நாட்டில் உள்ள இங்கிலாந்து தூதரகத்தில் குளோபல் டெக்னிக்கல் நிறுவனத்தின் பல வர்த்தக சந்தைப்படுத்தும் நிகழ்வுகள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

போலி வெடிகுண்டு கண்டறியும் கருவி
போலி வெடிகுண்டு கண்டறியும் கருவி

1999-ம் ஆண்டு கேரி போல்டன் தன் போலியான கருவியை ராணுவ பாதுகாப்பு கருவிகள் சோதனை செய்யும் துறையிடம் 500 பவுண்டுகள் கட்டி சோதனை செய்யக் கோரியிருக்கிறார். இப்போழுது விற்பனை செய்யப்பட்டுள்ள ஜிடி 200 எனும் கருவியின் முன்னோடியான மோல் எனும் கருவியை தான் அவர் சோதனை செய்யக் கோரினார். சோதனை முடிவுகள் கருவியை அடாசு என்றன. ஆனால் போல்டன் அந்த சோதனை அறிக்கையை திருத்தி இந்த கருவியை சந்தைப்படுத்தியுள்ளார்.

இந்த வழக்கு விசாரணையின் போது இங்கிலாந்து அரசின் வர்த்தகம் மற்றும் தொழில் துறை குளோபல் டெக்னிகல் நிறுவனத்திற்கு ஆதரவளித்ததை ஒப்புக்கொண்டுள்ளது. பெரும் சர்ச்சையையும் இங்கிலாந்து நாட்டிற்கு அவமானத்தையும் கொடுத்திருக்கும் இந்த செயல் நாடாளுமன்றத்திலும் கடுமையான விவாதத்தை கிளப்பியுள்ளது.

ஒரு தனியார் நிறுவனம் லாபமீட்ட மக்கள் வரிப் பணத்தை ஏன் வீணடிக்க வேண்டும் என்ற கேள்விக்கு விடை இல்லை. மறுபுறம் இந்த போலிக் கருவிகளை வாங்கிய இந்தியா மாதிரியான நாடுகளின் நிலை வெட்கக் கேடானது என்றால், இந்த கருவியினால் பாதிக்கப்பட்ட அப்பாவிகளின் நிலை சோகமானது. இத்தகைய டுபாக்கூர் கருவிகளை வைத்துக் கொண்டு தான் நம் நாட்டு ராணுவமும் போலீசும் வெடிகுண்டு சோதனைகளை நடத்தி தீவிரவாதிகளை பிடித்திருக்கின்றன என்றால் அவர்கள் அனைவரும் குற்றவாளிகளாக இருக்க முடியாது. போலிக் கருவிகளைக் கொண்டு போலி தீவிரவாதிகளை தான் பிடிக்க முடியும், அதாவது நிரபராதிகளை.

வடிவேலு மூட்டைப் பூச்சி ஒழிப்பு மிஷனை விற்பனை செய்த போது வயிறு குலுங்கிச் சிரித்தவர்கள் அதே மெஷினை குண்டு கண்டுபிடிப்பதற்கும் பயன்படுத்திய இங்கிலாந்து முதலாளிகளை நினைத்து என்ன சொல்கிறீர்கள்?

பார்க்க

மேலும் படிக்க