Wednesday, June 7, 2023

மூடர் கூடம் : பழைய படம் !

-

ழமையில் போற்றுதலுக்குரியனவும், பின்பற்றத் தக்கனவும் உண்டு; வெறுத்து ஒதுக்கத் தக்கனவும் உண்டு; குறிப்பாக பழைய மரபுகள், புரிதல்கள், விளக்கங்கள் மாறுவதும் உண்டு. மூடர் கூடத்தில் கதையும், பாத்திரங்களும், திருப்பங்களும் நமக்கு ஏற்கனவே பழக்கப்படுத்தப்பட்டு பொதுப் புத்தியில் உறைந்திருக்கும் பழைய சமூக வழக்குகளை சற்று எளிமையாக உணர்த்துகின்றன. என்றால் இது பழமையில் என்ன வகை?

மூடர் கூடம்மூடர் கூடத்தில் குத்துப் பாடல் இல்லை, சந்தானம் பாணி ஓலைப் பட்டாசு நகைச்சுவை இல்லை, ஃபாரின் லோகேஷன் இல்லை என்பதோடு எளிமையான கதை, இயல்பான நகைச்சுவையான பாத்திரச் சித்தரிப்பு, ஒரு நேர்த்தியான சிறுகதைக்குரிய இலக்கணங்கள், ஏழ்மையின் நிலையை புரிந்து கொள்ள வைக்கும் உரையாடல்கள் என்பதாய் பாராட்டப்படுகின்றது.

ஒரு வகையில் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வெளிவந்த சார்லி சாப்ளின் படங்களை நினைவபடுத்துகிறது மூடர் கூடம். முதலாளித்துவ சமூகத்தில் தத்தளிக்கும் நகரத்து மக்கள் – குறிப்பாய் உதிரிப் பாட்டாளிகள், அனாதைகளின் அவலமும் அன்பும் கொண்ட உலகை மேட்டுக்குடியின் ஆடம்பரமும் திமிரும் கலந்த உலகோடு மோத விட்டு காலத்தால் மறையாத காட்சிகளாய், கதைகளாய் சிரிப்பாய் தந்திருப்பார் சாப்ளின். இங்கே நகைச்சுவையின் ஊற்று மூலம் முதலாளித்துவம் வழங்கியிருப்பதாக கூறப்படும் ஜனநாயகம், செல்வம், வாழ்க்கை, தொழிலின் யோக்கியதை.

இந்த முரண்பாட்டிலிருந்து மனித சமூகத்தை விடுவிக்கும் அரசியலை பேசியது மார்க்சியம் என்றால், அந்த முரண்பாடு மனித உணர்ச்சிகளை சிறுமைப்படுத்துவதை காட்டியது சாப்ளினது நகைச்சுவை.

சரி, சாப்ளின் இன்றைக்கிருந்தால் எப்படி படமெடுத்திருப்பார்? அதே கருதான், ஆனால் முதலாளித்துவம் குறித்த விளக்கம், பரிமாணம் இன்றைக்கு பிரம்மாண்டமாய் வளர்ந்திருக்கிறது. மூல முரண்பாடு மாறாதிருக்கும் போதே அதன் ஆழமும், பிரிவும் சமுத்திரமாய் விரிந்திருக்கிறது. இங்கேயும் மேட்டுக் குடிகளும், பாட்டாளிகளும் இருக்கிறார்கள். ஆனால் அவர்களது உலகம் முன்பு போல, மௌனப் படங்கள் போல எளிமையாக இல்லை. ஊழலும், இலாபமும், மறைமுகப் போர்களும், நேரடி ஆக்கிரமிப்புகளும், சுரண்டலும் செல்வமும் நம்முடைய நேரடி பார்வைக்கு எளிமையாக புரிந்து விடுவதில்லை. அவற்றின் சிக்கல்களை அவிழ்த்துக் காட்டுவதே படைப்பாளிகளுக்கு பெரிய சவால்.

வர்க்க முரண்பாட்டை எளிமையான கதை மூலம் சிரிக்க வைத்த இயக்குநர் நவீன் இந்த சவாலில் வெற்றி பெற்றிருக்கிறாரா?

காமெடித் திருடன் ஒருவன் தனது தொழிலில் உள்ள “ஜாப் எத்திக்ஸ்” குறித்து பேசுகிறான். இன்கமிங் அழைப்பு மட்டும்தான் செல்பேசியில் வரும் என்பது அந்த எத்திக்சில் ஒன்று. முதலாளித்துவ சமூகத்தின் பல்வேறு துறைகளும் தொழில் குறித்த ஒழுக்கங்களை பேசுகின்றன. மேல் தோற்றத்தில் இவை ஒழுக்கங்களாக விழுமியங்களின் அற ஆவேசமாக காட்சி அளித்தாலும் உண்மையில் இவை பரஸ்பர சந்தர்ப்பவாதங்களையே, தவறுகளை பாராமுகமாக கடந்து விடுவதையே விதிகளாக வைத்திருக்கின்றன.

சன் டிவி ராஜாவின் பாலியல் அத்துமீறல்களை புதிய தலைமுறை டிவி பேசாது என்பதில் ஒரு மீடியா எத்திக்ஸ் உண்டு. ஒரு ஊடக நிறுவனத்தின் குறைபாடுகள், பிரச்சினைகளை மற்றொரு ஊடக நிறுவனம் பேசக்கூடாதாம்.

இத்தகைய களங்களில் தொழிற்படும் ஒரு ஊழல் நடைமுறையை அவுட் கோயிங் கால் இல்லை என்று மட்டும் சிரித்தால் அது எந்த வகையில் சந்தானத்திடமிருந்து வேறுபட்டது?

சென்ட்றாயன் பேசும், நடிக்கும் காட்சிகளில் பார்வையாளர்கள் சிரிக்கிறார்கள். சாமுத்ரிகா இலட்சணங்கள் பொருந்தியவர்களே நாயக, நாயகி வேடம் தரிப்பார்கள், இல்லாதவர்கள் காமெடியன்கள் என்று இயல்பான தோற்றங்களை பிளாஷ் வெளிச்சத்தில் வேறுபட்டதாக காண்பிப்பது இந்திய சினிமாவின் மரபு. இது ஆண்டான் அடிமை, பண்ணையார், வேலையாள் சமூகம் உருவாக்கியிருக்கும் ஒரு அசிங்கமான அழகியல். முக்கோண முகத் தோற்றமும், கருப்பு நிறமும், அதீத முகபாவனைகளும் மட்டுமே சென்ட்றாயனை பார்த்து சிரிப்பதற்கு போதுமென்பது தேய் வழக்கின்றி வேறென்ன?

நாம் அழகானவர்கள் அல்லது அழகானவர்கள் வரிசையில் இருப்பவர்கள் என்பதை ஒத்துக் கொண்டே பார்வையாளர்கள் சென்ட்றாயனை பார்த்து சிரிக்கிறார்கள். மாறாக உழைக்கும் வர்க்கத்தின் வேறுபட்ட முகங்களே இயல்பான அழகு, மறுக்கும் ஒருபடித்தான பார்பி பொம்மைகளே அருவெறுப்பு என்று வந்திருந்தால் அது பொருத்தமான நகைச்சுவை. மேலும் ஒரு நகைச்சுவையாளன் எதிர்மறை ‘அழகு’ சார்ந்த கற்பித்தல்களோடு ரசிக்கப்படுவதை விட, அவனைச் சுற்றியிருக்கும் சமூகத்தின் இயல்புகளில் அவன் புகுந்து குலைத்து போடுவது சற்று தரமான நகைச்சுவை. அது இங்கே இல்லை.

தமிழ் சினிமாவில் விட்டேத்தியாக சுற்றிக் கொண்டு நாயகிகளை டார்ச்சர் செய்யும் நாயகர்கள் அனைவரும் ஆங்கிலம் பேசத் தெரியாதவர்கள் என்பது தனுஷ் படங்கள் உள்ளிட்டு வரும் ஒரு வழக்கமான படிமம். ஆங்கிலத்தை வீழ்த்தி காதல் போரில் வெல்லும் வசனங்களை பார்த்து உழைக்கும் வர்க்கம் சிரிப்பது ஆங்கிலத்தின் மீது உள்ள வெறுப்பினால் மட்டும் வந்ததல்ல. அதனால்தான் உழைக்கும் வர்க்கம் தான் தான் பேச முடியாத ஆங்கில வழிக் கல்வியில் தனது பிள்ளைகளை கடன் வாங்கியாவது படிக்க வைக்கிறது. வெல்ல முடியாத ஆங்கிலத்தின் பலம் அது அதிகார அமைப்புகளில் கோலேச்சுகிறது என்பதை  அநேக தமிழ் படங்கள் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. இந்தப் படமும்.

டாஸ்மாக் பாரும், சிகரெட்டும் பல்வேறு சினிமாக்களில் புத்தரின் போதி மர விழிப்பு போலக் காட்டுவது மற்றுமொரு பிழையான தேய் வழக்கு. உண்மையில் இழுத்துச் செல்லும் வாழ்க்கையின் துன்பத்தை போதையால் மறக்க வேண்டியே அங்கு வருகிறார்கள். ஒளிமயமான எதிர்காலத் திட்டமெல்லாம் எந்த பாரிலும் சாத்தியமில்லை. ஒளிமங்கிய நிகழ்காலத்தை மறப்பதற்கான வெளி அது. ஆனால் ஒரு படத்தில் பாரும், புகையும் இருந்தால்தான் பார்வையாளர்கள் ஒன்றுகிறார்கள் என்பதற்காக தாங்க முடியாத படி பீரோடு நுரைக்குப் போட்டியாக பொங்குகிறார்கள், இயக்குநர்கள். உழைப்பாளியின் விழிப்புணர்வை அழித்து காயடிக்கும் போதையை அதற்குரிய இடத்தில் விமரிசிக்காமல் முகேஷின் மரண வாக்கு மூலத்தால் மட்டும் கடந்து விட முடியுமா என்ன?

கஞ்சா பொட்டலத்தை விற்பவன் உழைப்பினால் வாழும் நபரல்ல. போலீசின் மாமூல், மிரட்டலைத் தாண்டி அவனுக்கு கிடைக்கும் வருமானம் அளப்பரியது. அப்படி பழக்கப்பட்டவர்கள் எந்தக்காலத்திலும் உடல் உழைப்பின் மூலம் வாழ்வதை சகிக்க மாட்டார்கள். முக்கியமாக ஒரு ஏழைத்தாயின் குடும்பத்திற்காக ரூ 50,000 ரூபாயை கொடுக்கும் கருணையெல்லாம் அவர்களிடத்தில் இல்லை. பாஸ்வோர்டு கேட்டு, தேநீர் விலை உயர்வை வைத்து பொட்டலத்தின் விலையை சென்ட்றாயன் நியாயப்படுத்தும் போது பார்வையாளர்கள் சிரிக்கிறார்கள். அங்கே கஞ்சா விற்பனை மற்றுமொரு தொழிலாக பார்க்கப்படுகிறது. இந்த லாஜிக்கை மீறிய காமெடி கஞ்சாவின் போதையோடு பொருந்துகிறதோ?

பெட்டி கேஸ் தேவைகளுக்காக கைது செய்யப்பட்டு காவல் நிலைய ஆய்வாளரால் 500 ரூபாய் பாக்கெட் மணியோடு மூடர் குழு நண்பர்கள் விடுதலை செய்யப்படுவது வெரைட்டி என்ற வகையில் புதுமையாக இருக்கலாம். ஆனல் லாக்கப் கொலைகளின் களத்தின் மீது இத்தகைய புதுமைகள் கொண்டிருக்கும் பார்வையினை பார்த்து சிரிப்பதா, அழுவதா தெரியவில்லை. கல்லுக்குள் ஈரத்தை காவல் நிலையங்களுக்கு பொருத்துவது, பொது நியதியை மறுப்பது மட்டுமல்ல, பொது மக்கள் பட்டுவரும் காயங்களை மறைப்பதும் ஆகும்.

சேட்டிடம் கடன் வாங்கி மக்களது சீட்டுப் பணத்தோடு துபாய்க்கு செல்ல இருக்கிறார் ஜெயப்பிரகாஷ். சர்வதேச அழைப்புக்களை உள்ளூர் அழைப்புகளாய் காட்டி மோசடி செய்த சின்ன அம்பானியும், இயற்கை எரிவாயுக்கு கள்ளக் கணக்கு எழுதிய பெரிய அம்பானியும் நாட்டை விட்டு வெளியேறாமல் சட்டப்படியே தொழிலை தொடர்கிறார்கள். 90-களின் ஆரம்பத்தில் மோசடி செய்த சீட்ஃபண்ட் கம்பெனிகளின் உரிமையாளர்கள் பலரும் வெளியே வந்து வாழத்தான் செய்கிறார்கள். ஏமாற்றுதல், மோசடி, ஊழல், சதி அனைத்தும் தற்போது சட்டப்படியே புனிதமாக்கப்படும் காலத்தில் ஜெயப்பிரகாஷ் ஏன் வெளி நாடு செல்ல வேண்டும்? காலம் வெட்கப்படக் கூடிய தேய் வழக்கு இது.

அத்தகைய ஜெயப்பிரகாஷிடம் ‘மார்க்சிய’ வகுப்பு எடுக்கிறார் நவீன். அனைவருக்கும் பொதுவான இயற்கையை ஒருவன் உரிமையாக்கி மற்றவர்களை கூலிக்கு வேலை செய்ய வைப்பது ஒரு எளிமையான விளக்கம். அந்த கூலி வேலை சட்டபூர்வமாக நிலை நாட்டப்பட்டிருப்பதும், அந்த சட்டபூர்வத்தை பாதுகாப்பு படைகள் பாதுகாப்பதும், எதிர்ப்பவர்கள் கொல்லப்படுவதும் கொஞ்சம் ஆழமான விளக்கம். முன்னது விளைவு என்றால் பின்னது அதன் மூல காரணம். ஏற்றத்தாழ்வான சமூகத்தின் விளைவுகள் மக்களுக்குத் தெரியும். காரணம் வர்க்க யதார்த்தம். ஆனால் அந்த யதார்த்தத்தை மாற்றுவது அவர்களுக்கு தெரியாது. அதற்கு தேவை மார்க்கிய அரசியல். அந்த வகையில் இந்தப் படத்தின் ‘மார்க்சிய’மும் கூட பழையதுதான்.

மூடர்கள் குழுவில் நவீனது நாகரீகமான புத்திசாலித்தனமான அணுகுமுறையும் இங்கே பெரிய நகைச்சுவையாக ரசிக்கப்படுகிறது. ஒரு வங்கியில் கணக்கு ஆரம்பிப்பதோ, பணத்தை தபால் துறை மூலம் அனுப்புவதோ, ஒரு ஆங்கில மாத்திரையின் பெயரோ இன்னபிறவெல்லாம் சாதாரண மக்களுக்குத் தெரியாது. இதெல்லாம் தெரிந்த நடுத்தர வர்க்கமோ அமெரிக்க ஜனநாயகத்தையோ, மோடியின் வளர்ச்சியையோ எதுவும் தெரியாமல் வியந்தோதிக் கொண்டு அதையே புத்திசாலித்தனம் என்றும் கருதுகிறது.

நடுத்தர வர்க்கத்தின் இந்த முட்டாள்தனத்தைத்தான் நாம் தொடர்ச்சியாக விமரிசிக்க வேண்டும். மாறாக அந்த வர்க்கத்தை சார்ந்த பார்வையாளர்கள் சாதாரண மக்களின் பிரதிநிதிகளான வெள்ளை, குபேரன், சென்ட்றாயன் போன்றோரை நெறிப்படுத்தும் நவீனோடு தங்களை இணைத்துக் கொண்டு புத்திசாலிகளாக உணர்கிறார்கள். உண்மை, பொய், சரி, தவறுகளை மிகவும் நேரடியாகவும், எந்தவிதமான சதியோட்டங்கள் இல்லாமலும் புரிந்து கொள்வதால்தான் எளிய மக்கள் முட்டாள்கள் போல பார்க்கப்படுகிறார்கள். இதையே சதித்தனத்தோடு பேசும் நகர்புறத்து நடுத்தர வர்க்கம் தன்னை புத்திசாலியாக கருதிக் கொள்கிறது. படமோ இந்த ‘புத்தி’ சாலிகளை விடுவித்து விட்டு ஏழைகளின் முட்டாள்தனங்களை காட்டி அதைத் திருத்தும் நவீனை வைத்து சிரிக்க வைக்கிறது.

இரக்கமற்ற தாவுத் பாய் கும்பல் ரவுடிகளை சிரிப்பதற்கு பயன்படுத்த வேண்டுமென்றால் அவர்களோடு தொழில் உறவு கொண்டு திளைக்கும் இந்துத்துவ மற்றும் காங்கிரசு கும்பலோடு உள்ள கதைகளை உணர வேண்டும். மருத்துவர் சுப்பையாவை கொன்ற கூலிப் படையினர் போல உலாவரும் தொழில் முறை ரவுடிகளை, அவர்களை பயன்படுத்திக் கொள்ளும் ஆளும் வர்க்கத்தை கேலி செய்வது மூலம் சிரிக்க வைத்தால் அது யதார்த்தத்திற்கு தேவையானது. மற்றதெல்லாம் வாழ்விலிருந்து துண்டித்துக் கொண்டு வார்த்தைகளை வைத்து மட்டும் செய்யப்படும்  ‘நகை’ அலங்காரங்கள்தான்.

கரித்துக் கொட்டும் தந்தையை விட பொறுப்புக் கொடுக்கும் குபேரனை வைத்து அந்த சிறுவனது இயல்பு காட்டப்படுகிறது. ஆனால் கேட்டது கிடைத்தபடி வாழும் நடுத்தர வர்க்கத்து சிறுவர்களுக்கு மற்ற சிறுவர்களை விட நாம் மேம்பட்டவர்கள் என்ற மேட்டிமைத்தனமும், சமூகத்தை துச்சமாக கருத்தும் பொறுப்பின்மையுமே அடிநாதமாக இருக்கும் போது அந்த உண்மையான ‘பொறுப்பை’ எப்படி கற்றுக் கொடுப்பது என்பது வேறு. அவர்களுக்கு ஆடம்பரமும், நவீன நுகர்வு பொருட்களுமே சுய மரியாதையை விட முக்கியம். அத்தகைய சிறுவர்கள் திட்டப்படுவதற்கும், நச்சரிக்கப்படுவதற்கும் குலைந்து விடுவதில்லை.

வெள்ளையின் பிளாஷ் ஃபேக்கில் முசுலீம் பெண்ணை காதலித்து மண முடிப்பது நடக்காமல் தோல்வியாக காட்டப்படுகிறது. அதனால் ஓவியா எனும் ‘இந்துப்’ பெண் ஒரு முசுலீம் இளைஞனை காதலித்து மணமுடித்து வீட்டை விட்டு வெளியேறுவதை நெகிழ்ச்சியாக காட்டுகிறார் இயக்குநர். ஆர்.எஸ்.எஸ் மற்றும் தவுகீத் ஜமா அத் இருவரையும் கடுப்பேற்றும் இந்தக் காட்சிதான் நாம் கவலைப்படும் தேய் வழக்கின்றி பொருத்தமாக வந்து போகிறது. இந்த ஒன்றைத் தவிர இந்தப் படத்தின் நகைச்சுவையும், கதைக் களனும், பாத்திர சித்தரிப்பும் பழையவை மட்டுமல்ல, காலத்தால் பொருத்தமற்று தேங்கியவையும் கூட.

சுருக்கமாகச் சொன்னால் எமலோகத்து கிங்கரர்களின் தொப்பை, கொம்புகளை வைத்து சிரிக்க வைக்கிறது இந்தப் படம். ஆனால் சாமுத்ரிகா இலட்சணப்படி வடிக்கப்பட்ட சொர்க்க லோகத்தில் தலைவன் இந்திரனே முனிவர்களின் பத்தினிகளை கடத்தியவன் என்று சொர்க்க லோகத்தை கிண்டல் செய்வதே நமக்குத் தேவையான நகைச்சுவை. எமலோகம் என்பது ஏழைகளையும், சொர்க்கலோகம் என்பது முதலாளித்துவத்தையும் குறிக்கிறது என்பதை புரிந்து கொண்டால் மூடர் கூடம் எதனால் மூடுண்டது என்பது புரிய வரும்.

ஏழைகள் குறித்து தமிழ் சினிமா உருவாக்கியிருக்கும் ஃபார்முலாவை விட்டு விட்டு இயக்குநர் எங்கேயும் பயணிக்கவில்லை.

அதனால் இதை பார்க்கக் கூடாத படமென்றோ, மோசமான படமென்றோ கூறவில்லை. இது நிச்சயமாக எளிமையான படம்தான்; சாதாரண மாந்தர்களைப் பேசும் படம்தான்; வாழ்க்கையின் குறுக்குவெட்டை ஒரு நல்ல சிறுகதைக்குரிய ஆற்றலோடு காட்டும் பாடம்தான். ஆனால் நவீன வாழ்க்கையை மிகவும் எளிமைப்படுத்தி விட்டு சில சூத்திரங்கள் வழியாக சமூகத்தை பார்க்கிறது இப்படம்.

ஒரு கதையை சமூக உலைக்களத்தில் புடம் போட்டு பட்டை தீட்டுவதற்குப் பதில் அந்தக் கதையை எப்படி எடுக்க வேண்டும் என்பதை மட்டும் செதுக்கி செதுக்கி உழைக்கிறார்கள் இத்தகைய இயக்குநர்கள். ஒரு சரியான உள்ளடக்கம் பொருத்தமான வடிவத்தை தெரிவு செய்யும். ஆனால் ஒரு தவறான உள்ளடக்கத்திற்கு எத்தகைய அழகுணர்ச்சி கொண்ட வடிவம் இருந்தாலும் பலன் ஏதுமில்லை.

கிச்சு கிச்சு மூட்டி சிரிக்க வைப்பது சுலபமென்றாலும், கூரிய சிந்தனையில் சிரிக்க வைப்பது எப்படி என்பதையே நாம் பயில வேண்டும். நவீன் போன்ற இயக்குநர்களுக்கும் அதையே வலியுறுத்துகிறோம்.

 1. நல்ல பதிப்பு கூட படமும், சைலண்டான நடிப்பு படத்தினை ரசிக்க நகைச்சுவையும் வேண்டும், சமூக த்தில் ஒருவன் பொய் திரும்ப திரும்ப சொல்லும்போது உண்மையாகும் என்பதை படத்தில் அழகாக கூறி உள்ளனர். அது மோடி கதைக்கும் பொருந்தும் அவர்களும் அப்படிதானே அவரை தானாத் தலைவர் என்று பொய் கூறி வருகின்றன. இந்திய ஊடஙகளுக்கும் அது பொருந்தும் காசு வாங்கி கொண்டு பொய் உரைக்கும் மத்தியில் வினவு போன்ற பத்திரைக்கியின் புள்ளிவிபர மொழி பெயர்ப்பு கட்டுறைகள் அருமை

 2. ஒன்னும் புரியல…. ஒரு விமர்சனத்தையே புரியுற மாதிரி எழுத முடியல. அவன் எடுத்த படத்த

  கொற சொல்ற…. …… (கோவப்படாத…நீ

  சப்போர்ட் உழைக்கும் மக்கள் சாதரணமா பேசுறதுதான்)…. நீ எடுக்குற படத்த ஆவலுடன்

  எதிர்பார்க்குறேன்.

 3. ஒரு படத்தை விமர்சனம் பண்றதுக்கு முன்னாடி அது என்ன படம் இது உண்மையா நம்ம ஆளுங்க யோசிச்சு சுயமா எடுத்த படமா அப்படினு பாத்துட்டு அப்புறம் பாராட்டற வேலைய செய்யவும் நவீன் ஒரு கொரியா படத்தை இன்ச் மாறாம காப்பி அடிச்சு தமிழ்ல எடுத்து இருக்கான் அத வேற கேன பசங்க மாதிரி நம்ம அதிமேதாவிங்க பாராட்டி தள்ளுரானுங்க

 4. Attack the gas station படம் பார்த்தேன்! கதைக்களம் மட்டும் தான் வேறு. வரும் கேரக்டர்கள் மற்றும் காட்சிகள் அப்படியே மூடர் கூடத்தை நினைவு படுத்தியது! சென்ட்ராயனின் கதாபாத்திரம் அதில் புல்டோசர் என்ற‌ பெயருடன்!

  அந்தப் படத்தை பார்த்துதான் மூடர்கூட நடிகர்கள் பயிற்சி பெற்று இருக்க வேண்டும்! அப்படி ஒரு காப்பி உடல் மொழியில்! தலைகீழாக நிற்பது, பேட் வைத்து அடிப்பது என எல்லாமே காப்பிதான்!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க